காந்தி, கள், வெறி

(இதுவும் முகநூலிலிருந்து)

காந்தி கள் விற்பனையை ஒரு கிராம சுயராஜ்யச் செயல்பாடாக ஒப்புக்கொண்டிருப்பார் என்பதிலோ, அது காந்தியத்தின் நீட்சி என்பதிலோ, அதை மறுப்பவர்கள் இறுக்கமான காந்திய-மதவாதிகள் என்பதிலோ எனக்கு உடன்பாடு இல்லை. கிராம சுயாட்சியும் கதர் நூற்றல் போன்ற சுதந்திரமான தொழில்களும், மனம் ஒன்றமுடியாத அடிமை உழைப்பிலிருந்து விடுதலை கொடுத்து, கள் உண்பதற்கான தேவையை நீக்கிவிடும் என்றுதான் காந்தி கருதினார். நானும் அவ்வாறுதான் நினைக்கிறேன். எங்கள் தோப்பிலிருந்து கள் இறக்குவதையோ, நாங்களே கள் விற்பதையோ சாத்தியமானவையாகக் கருத இயலவில்லை. கள் ஊட்டச்சத்துக்காக மட்டுமே அருந்தப்படும் ஆரோக்கிய பானம் என்று நிறுவி காந்தியை ஏற்றுக்கொள்ள வைப்பதில் சில சிரமங்கள் இருந்திருக்கும்.

நிற்க. ஒன்று மட்டும் என்னால் உறுதியாகக்கூறமுடியும். ஏதோ லத்தீன் அமெரிக்க நாடுகளில் இப்படி ஏற்கனவே நடப்பதாகக்கூட எங்கோ படித்த ஞாபகம். சாலையில் முந்திச்செல்ல வாய்ப்பே இல்லாத போதோ, சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும் போதோ அல்லது பச்சை வந்தவுடனேயோ தொடர்ச்சியாக ஹார்ன் அடிப்பவர்களை லேசாய்ச் சுட்டுத்தள்ளுவதற்கு காந்தி கட்டாயம் ஆட்சேபித்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். அகிம்சையை விட உண்மை அவருக்கு முக்கியம். ஹிட்லரைக்கூட அகிம்சைக்குத் திருப்பி விடலாம் என்று நம்பி மடலெழுதிய மாமனிதர்தான் அவர்; ஆனால், தொடர்-ஹார்ன் வெறியர்களைச் சமாளிக்க அகிம்சையால் சாத்தியப்படாது என்கிற அசைக்கவியலாத எளிய உண்மையைப் புரிந்துகொள்ளாமலா போயிருப்பார்? காந்தியை விடச் சிறந்த நவகாந்தியர் வேறு யார் இருந்துவிட முடியும்?

 

பின்னூட்டமொன்றை இடுக