கோவேறு கழுதைகள் – இமையத்தின் சுமையேற்றும் எழுத்து

செப்ரெம்பர் 27, 2014

(ஆம்னிபஸ் தளத்தில் வெளிவந்தது.)

அய்ன் ராண்ட எழுதிய ‘Atlas Shrugged’, பல இளைஞர்களின் ஆதர்ச நூலாக இருந்தது; இருப்பது. முதலாளிகளும், அறிவு ஜீவிகளுமே உலகத்தையும் அதன் சுமையையும் சுமப்பது போன்ற ஒரு சித்திரத்தை அளித்த நாவல் அது. அதற்கு முற்றிலும் எதிரான ஒரு சித்திரத்தை வரைகிறது இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’. சமூகத்தின் அடிநிலை மக்களின் முதுகில் ஒய்யாரமாய் அமர்ந்தே இந்தச் சமூகம் தன் சுகமான பயணத்தை மேற்கொள்கிறது. பலசமயங்களில் சுமையென்று கருதாமலே அவர்கள் இயல்பாகச் சுமக்கவும் செய்கிறார்கள்.

கோவேறு கழுதைகள் தலித் இலக்கியம் என்ற வகைமைகளுக்குள்ளெல்லாம் அடைபடாமல், என் பார்வையில், ஒரு மகத்தான இலக்கிய நூலாக மிளிர்கிறது.

படித்த, நடுத்தர, நகரத்து மக்களின் பார்வைக்கும் எட்டாத ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. ஆரோக்கியம் என்கிற ‘பற வண்ணாத்தி’தான் நாயகி. மேல் சாதியினர்க்கும் கீழ்ச்சாதியினர்க்குமான உரசல்களைப் பற்றியதல்ல இமையத்தின் இப்படைப்பு. இந்தியச் சமூக அடுக்கின் அடிநிலையிலும், மேலும் பல அடுக்குகள் இருப்பதை இந்நாவல் வெளிக்கொணர்கிறது. (அதனாலேயே இது வெளிவந்த காலத்தில் விமர்சிக்கப்பட்டது என்பதையும் அறிகிறேன்.) அடிநிலை மக்களின் முதுகில்தான் மேற்சாதியினர் பயணிப்பது என்பது ஒரு பொதுப்புரிதல். ஆனால, அந்தப் பொதுப்புரிதலைத் தாண்டி, அந்த அடிநிலை மக்களுக்கும் சுமைதாங்கியாய் இன்னுமொரு சமூகம் இருப்பதை நம் மூடிய கண்களுக்குள் காட்சியாக்குகிறார் இமையம். அடக்குமுறைக்கு ஆளானவர்களுக்கும், ‘முண்டப் பயலே’ என்றழைத்து அதட்ட யாராவது இருக்கிறார்கள்; யாராவது தேவைப்படுகிறார்கள்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »


காந்தியக் கல்வி : காந்தியத்தின் ஆதாரம்

செப்ரெம்பர் 3, 2014

காந்தி இன்று இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் மீள்பதிவு இது.


காந்தியின் கல்விச்சிந்தனைகள் அவரது பிற கருத்துகள் அளவுக்கு அதிகம் கவனம் பெறாதவை. பல காந்தியர்களாலேயே முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாதவை. ’ஆதாரக் கல்வி’/ ‘அடிப்படைக் கல்வி’ (Basic education) என்றும், பின்னர் நயி தாலீம் (Nai Talim – புதிய கல்வி) என்றும் காந்தி தனது கல்விச் சிந்தனைகளைத் தொகுத்துக் கொண்டார்.   இன்றைக்குப் பல்வேறு நவீனக் கல்விமுறைகள் பின்பற்றப்படும் நிலையில், காந்தியின் ‘நயி தாலீம்’ முறையைப் புதிய பார்வையுடன் அணுகிப் பார்த்தால் அது இன்றும் நவீனத் தன்மையுடன் மிளிர்கிறது; பல வகைகளில் இன்றைய சூழலுக்கும் புரட்சிகரமானதாகத் தென்படுகிறது. காந்தியின் தாக்கம் நிறைந்த பிற எல்லாத்துறைகளையும் போலவே, காந்தியின் கல்வி பற்றிய சிந்தனைகளும் கல்வி என்ற தளத்தில் தனித்து இயங்கவில்லை. அவை சமூகம் முழுவதையும் தொட்டுப் பரவி நின்றன. வரலாற்றுப் பார்வையும், சமூக அக்கறையும், தனி மனித உயர்வும் இணைந்து அவரது கல்விமுறையை தனித்துவம் மிக்கதாகச் செய்கின்றன.

இந்தியக் கல்வியின் வரலாற்றுப் பின்னணியும் காந்தியின் கல்வி சார்ந்த சிந்தனைகளைச் செதுக்கியிருக்க வேண்டும்-

“எனது புள்ளிவிபரங்கள் மறுக்கப்படமுடியாதவை என்கிற நம்பிக்கையோடு சொல்கிறேன் – ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய இந்தியாவில் படிப்பறிவு  குறைந்துள்ளது; பர்மாவிலும் அவ்வாறே; பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியா வந்தபோது, அங்கிருக்கும் முறைகளை ஏற்றுக்கொள்ளாமல், வேரறுக்கத் தொடங்கியதே இதற்குக் காரணம். மண்ணைத் தோண்டி, வேரைப் பார்க்கத் தொடங்கினர்; அப்படியே விட்டனர்; அழகிய மரம் மரித்தது,”

என்று 1931ல் லண்டனில்  சத்த்தம் ஹவுஸ் என்ற இடத்தில் காந்தி பேசினார். அதன்பிறகு சர் வில்லியம் ஹர்தோக் என்பவர் – டாக்கா கல்லூரியில் முதல்வராக இருந்தவர் – காந்தியின் கருத்துடன் முரண்பட்டு வாதாடினார். காந்தி அளித்த ஆதாரங்களைத் தொடர்ந்து நிராகரித்தார். அவர்களது விவாதம் 8 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது. இருவரும் தத்தம் நிலைகளிலிருந்து விலகவேயில்லை. காந்தியின் கல்வி சார்ந்த கருத்துகளுக்கு இருந்த வரலாற்றுப் பார்வையை இந்த விவாதம் வலுப்படுத்தியது. இந்த விவாதத்தை மையமாக வைத்துத்தான், தரம்பால்(Dharampal)  ‘அழகிய மரம்’ (The Beautiful Tree) என்ற நூலை எழுதினார்.

வரலாற்றுப் பின்னணி

“இந்தியாவில் நீண்ட காலமாய் நிலைபெற்று வளர்ந்திருந்த பண்பாட்டின் மூலமாக நாம் உணர வேண்டிய உண்மை இதுதான்: முன்பு இந்தியாவுக்கென்று ஒரு கல்விமுறை இருந்திருக்கிறது; அதுதான் ‘தேசிய’ என்ற அடைமொழியோடு குறிக்கக்கூடிய ஒரே அம்சம்.”
– காந்தி, யங் இந்தியா, 20-3-1924.

சிந்து சமவெளி காலம் முதலே இந்தியாவில் எழுத்துமுறை என்று ஏதோவொன்று இருந்திருக்கவேண்டும். அதற்கான ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன. ஆனால், அந்த எழுத்துமுறையைப் படிக்கும் வழியை இன்னமும் அறிந்துகொள்ள முடியவில்லை. பல நூற்றாண்டுகளாய் வேதங்கள் வாய்மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. புத்த, சமண கல்வி மரபுகளும், பிற்காலத்தில் இஸ்லாமியக் கல்விமரபும்  உருவாயின. தக்சசீலம், நளந்தா போன்ற இடங்களில் ஆதி பல்கலைக்கழங்கள் அமைந்தன; மதுரை, காஞ்சி போன்ற நகரங்கள் கல்விக்குப் பெயர்பெற்றன. இலக்கியம், இலக்கணம், கலை, மதம், தத்துவம் என்று பலதுறைகளிலும், தமிழ், சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் என்று பல மொழிகளிலும் நூல்கள் படைக்கப்பட்டன.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.’

என்று கூறும்படியான உயர்ந்த நிலை கல்விக்கு வழங்கப்பட்டது.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்புவரை இந்த நிலை ஓரளவு நீடித்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியாவின் கல்விநிலை குறித்து ஆராய்ந்த பல பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியாவில் ஆரம்பக் கல்வி பரவலாக இருந்ததைப் பற்றி உயர்வாக எழுதியுள்ளனர்.

சென்னை மாகாணத்தின் ஆளுனராக இருந்த ஸர் தாமஸ் மன்றோ, ‘ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்தது,’ என்று எழுதியுள்ளார். அவர் சேகரித்த புள்ளி விபரங்களின்படி, மூன்றில் ஒரு ஆண்பிள்ளை ஆரம்பக் கல்வி பெற்றுக் கொண்டிருந்துள்ளனர். இந்து, இஸ்லாமிய சமூகங்கள் இரண்டுக்கும் இப்புள்ளிவிவரம் பொருந்தும். தொடக்கக்கல்வி 5 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துள்ளது. வீட்டிலேயே படித்தவர்களின் எண்ணிக்கயை அவர்களால் அளவிடமுடியவில்லை. ஆனால், பெண்கள் மிக அரிதாகவே படித்திருக்கின்றனர். சோதிடம், வானவியல், மருத்துவம் தவிர பிறதுறைகளில் உயர்கல்வி பெரும்பாலும் பிராமணர்களுக்கே கிடைத்திருக்கிறது. தீண்டாமையின் காரணமாய் தலித்களுக்குப் பெரும்பாலும் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிராமணர்கள் அல்லாத வேறு பிற சாதியினரும் (வைசியர்களும் சூத்திரர்களும்) பெருமளவில் ஆரம்பக் கல்வி பெற்றதை மன்றோவின் ஆய்வுகளின் சில பகுதிகளில் காணலாம்.

இதே போல, வங்காளம், பஞ்சாப், பம்பாய் மாகாணங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களும் ஆய்வுகள் செய்து ஒத்த முடிவுகளை அடைந்துள்ளனர். வங்காளத்தில் ஒரு லட்சம் பள்ளிகள் இருந்ததாக வில்லியம் ஆதாம் என்பவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் பெரும்பாலும் சூத்திர சாதிகளைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். டாக்டர் ஜி. டபில்யூ. லீட்னர் பஞ்சாபில் 1850களில் 3,30,000 மாணவர்கள் இருந்ததாகவும், 1882ல் 1,90,000க்குக் குறைந்துவிட்டதாவும் எழுதியுள்ளார்.

அன்றைய கல்வியின் தரம் குறித்தும், ஆசிரியர்கள் தரம் குறித்தும் முரணான கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். எனினும் குறைந்தபட்சமாக எழுத்துத்திறன், இலக்கணம்,  நீதி போதனைகள், வணிகத்துக்குத் தேவையான அடிப்படைக் கணிதம் கற்றுத்தரப்பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

இந்த ஆய்வுகள் நடந்தபோதே, இந்தியக் கல்விமுறை சரிந்து கொண்டிருந்துள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். 1813ல் நிறைவேற்றப்பட்ட சார்ட்டர் ஏக்ட் (Charter Act), இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தியது; ஒரு லட்சம் ரூபாய் நிதி கல்விக்காக ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் ஆங்கிலேயர்களின் தலையீடு கல்வித்துறையில் அதிகரிக்கவும், இந்தியக் கல்விமுறை மேலும் சிதைந்துள்ளது.

18ம் நூற்றாண்டுக்கு முன் மதபோதகர்களின் செயல்பாடுகள் பெருமளவு இந்திய மொழிகளிலேயே இருந்துள்ளன. தங்கள் மொழியைத் திணிக்க அவர்கள் முயலவில்லை. மாறாக மக்களின் பேசுமொழி மூலமாக மதபோதனைகள் செய்வதன் சாதகங்களை அறிந்திருந்தனர். பிற போதகர்களின் பயன்பாட்டுக்காக இந்திய மொழிகளில் அகராதிகள், இலக்கண நூல்கள் ஆகியவற்றை எழுதினர். கிழக்கிந்தியக் கம்பெனியும் ஆரம்ப காலங்களில் இந்திய மொழிக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். கல்கத்தா மதராஸா, பெனாரஸ் சமஸ்கிருதக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்கினர். பின்னர் ராஜாராம் மோகன்ராய், மெக்காலே ஆகியோரின் தாக்கத்தில் ஆங்கிலத்துக்கான முக்கியத்துவம், குறிப்பாக உயர்கல்வியில், பெருகத்தொடங்கியது.

ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியப் பள்ளிகளை முனைப்புடன் மூடியதாகத் தெரியவில்லை. அரசின் ஆதரவு இல்லாமலும், வருவாய் போதாமலும் அவை தாமாகவே அழிந்துள்ளன.  ஆங்கிலேயர்களின் கடுமையான நிலவரிக் கொள்கைகள் கிராமங்களின் தற்சார்பினைச் சிதைத்ததும், குடும்பங்களை கல்விக்கென நிதி ஒதுக்க இயலாத ஏழ்மைக்குத் தள்ளியதும் இந்திய சுதேசப் பள்ளிகள் படிப்படியாக அழிவதற்குக் காரணமாயின.

இந்தியக் கல்விநிலை சரிந்த அதே காலகட்டத்தில்தான், நேர்மாறாக, இங்கிலாந்தின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் ஆகிய பல்கலைக்கழகங்கள் 13/14ம் நூற்றாண்டுகளில் தொடங்கபட்டிருந்தாலும், மிகக்குறுகிய அளவில், உயர் வகுப்புகளுக்கு மட்டுமே உரித்தாயிருந்தன. ‘உழவன் மகன் உழவை மேற்கொள்ள வேண்டும்; கைவினையாளரின் மக்கள் அவர்களது பெற்றோர் தொழிலையே மேற்கொள்ள வேண்டும்; சீமான்களின் குழந்தைகள் அரசாங்கத்தையும் சாம்ராஜ்யத்தையும் நிர்வகிக்கும் அறிவினைப் பெறவேண்டும். மற்ற எல்லா நாடுகளைப் போலவும் நமக்கும் உழவர்களின் தேவை உள்ளது: எல்லா வகையான மக்களும் பள்ளி செல்ல வேண்டியதில்லை,’ என்னும் கொள்கைதான் இங்கிலாந்திலும் நிலவியது.

1792ம் ஆண்டில், 40000 மாணவர்கள்தான் பள்ளி சென்றுகொண்டிருந்தனர். அந்த எண்ணிக்கை, அடுத்த அரை நூற்றாண்டில் பன்மடங்கு பெருகி, 1851ல் 21,44,337 ஆக உயர்ந்தது. 1801ல் 3363 பள்ளிகளே இருந்துள்ளன; 1851ல் 461114 பள்ளிகள் உருவாகியிருந்தன. ஆனால் அப்போதும் தொடக்கக்கல்வி சராசரியாக ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்துள்ளது.

இங்கிலாந்து இவ்வளவு பெரும் மாற்றத்தைக் குறுகிய காலத்தில் அடைந்ததற்குப் பல காரணங்கள் கூறலாம். இந்த மாற்றத்தை நிகழ்த்திய முக்கியமான இருவர், ஆண்ட்ரூ பெல் மற்றும் ஜோசப் லான்கெஸ்டர். ஆண்ட்ரூ பெல் மதராஸ் முறை (Madras System) என்ற கல்வி முறையை, இந்தியக் கல்விமுறையைக் கவனித்து உள்வாங்கி, சென்னையில்தான் உருவாக்கினார். பின்னர் அதே முறையை இங்கிலாந்தில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தினார். அந்த முறையை மேலும் வளர்த்தெடுத்து, ஜோசப் லான்கெஸ்டர் பெரிய அளவில் தனது ‘மாணவர் தலைவர் முறை’ (Monitorial method) மூலம் எடுத்துச் சென்றார். இங்கிலாந்திலிருந்துதான் இந்தியா நவீனக் கல்விமுறையை இறக்குமதி செய்தது என்கிற பொதுபுரிதலுக்கு முற்றிலும் மாறானது, இங்கிலாந்து தனது கல்வி மலர்ச்சிக்கு இந்தியாவிற்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது என்கிற செய்தி.

தரம்பால், தனது ‘அழகிய மரம்’ நூலில் இச்செய்திகளைத் தொகுத்துத் தருகிறார். சுதந்திரத்திற்கு முன்பு எழுதிய ஜே.பி. நாயக், மேஜர் பி.டி.பாசு, ஃப்.இ.கீய் (Rev.FE Keay) ஆகியோர் தமது நூல்களிலும் இதே தரவுகளைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். அவர்களுக்கும் முன்பே, பல்வேறு அறிஞர்களால், இக்கருத்துகள் பல ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்தன. அவற்றின் தாக்கம் காந்தியின் மீதும் இருந்தது என்பதையும், அது மேலும் வலுப்பட்டதையும், சர் வில்லியம் ஹர்தோக் உடனான விவாதத்தின் மூலம் நாம் காணலாம்.

இத்தகையதொரு வரலாற்றுப் பின்புலத்தில்தான் காந்தி அன்றைய கல்விமுறையை முற்றிலும் நிராகரித்து, புதிய பாதையைத் தேடத் தொடங்கினார்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »