நித்திரைதேவி பீடத்தில்

திசெம்பர் 24, 2010

இரவுநேரச் சாலையில்

மரணத்தின் கரங்களை

உரசிப்பார்த்த பின்பும்

உறக்கத்தின் தழுவலை

விரட்ட முடிவதில்லை.

நித்தரைதேவி பீடத்தில்

கருத்தரிக்குமுன்பே

பலியாகிக்

கலைந்திருக்கக்கூடும் இந்தக்

கவிதை.


சிதறாத் தேங்காய்

திசெம்பர் 22, 2010

தேங்காய் உடைக்கையில்
ஏன் இத்தனைமுறை
அடிக்கவேண்டியுள்ளதெனச்
சிந்தித்தபோது புரிந்தது,
பலமாய் அடித்தால்
ஒரே அடியில்
உடைந்து விடுமோவெனப்
பாங்காய்
அடித்துக் கொண்டிருந்தேன்.


அடுக்குமாடி அநாதைகள்

திசெம்பர் 20, 2010

ஞாயிற்றுக் கிழமை, என்

பெற்றோர்க்கு விடுமுறைதான்.

ஆனால், ஏனோ, என்

செவிலித்தாய்க்கு இன்றுமில்லை

விடுமுறை.

———————————————

ஜாதிஜாதி என்கிறார்களே!

எந்த யுகத்தில் இருக்கிறார்கள்?

என் சுத்த பிராமணப் பெற்றோர்கள்

செவிலித்தாய் வைக்கும்போது

பார்க்கிறார்களா ஜாதியை?

அவர்களுக்குத் தெரியுமா

அவளோடு செல்கையில்

எத்தனை ஜாதியினர்

என்னைக் கொஞ்சி

விளையாடுவ ரென்று?

——————————————————

ஆணாதிக்கம் அழிந்து

பெண்ணாதிக்கம் மலர்ந்ததா

தெரியாது.

அமரத்தெரிந்த நாளிலுருந்து

எனக்குத்தெரிந்த

ஆதிக்கம்

அரவணைப்பு

கைச்சுவை

என்

செவிலித் தாயினுடையதுதான்.

———————————–

ஊதியம் தேடி

என்னைப் பார்த்துக்

கொள்ள வந்திவிட்ட

அவள் குழந்தைகளை

யார் பார்ப்பார்?

——————————–

[எங்கள் அடுக்குமாடி இல்லத்தில், ஒரு ஞாயிறு உலாவின் போது கண்ட காட்சிகள், கேட்ட மழலைக் குரல்கள்]


நத்தங்கள் எத்தனையோ?

திசெம்பர் 14, 2010

நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது. [235]

இதுவரை நான் மொழிபெயர்த்ததில் என்னைப்பெரிதும் தடுமாறச்செய்த குறள் இது.  இறுதியில் எழுதயது இது:

Growth (of fame) amidst adversity and survival (of name) after death, are possible only for the smartest. [235]

இது எளிய உரையாகத்தான் அமைந்துள்ளதே ஒழிய, நல்ல மொழிபெயர்ப்பாகவல்ல. இதற்கு சரியான மொழியாக்கம் சாத்தியமே இல்லை என்றே நினைக்கிறேன்.

வள்ளுவர் ‘நத்தம்’ என்கிற மாயச்சொல்லைப் பயன்படுத்தியிருப்பது அற்புதம்.

நத்தம் என்பதை ஆக்கம் என்று பரிமேலழகரும், மணக்குடவரும் உணர்ந்து உரை கூறுகின்றனர். (பரி: ‘நந்து’ என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் ‘நத்து’ என்றாய் பின் ‘அம்’ என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று ‘நத்தம்’ என்று ஆயிற்று. ‘போல்’ என்பது ஈண்டு உரையசை.)

நந்தல் என்பதற்கு நேர் எதிராய் ‘கேடு ‘என்ற பொருளும் உள்ளது!! (Miron Winslow அகராதி, சென்னைப் பல்கழகத் தமிழ்ப் பேரகராதி இரண்டிலும்)

மேலும் ‘நத்தம்’ என்ற சொல் நத்தை, சங்கு, வாழை, இடம், இருள், கடிகார முள் என்று பல பொருள்கள் கொண்டது. இவற்றுள் எந்தப் பொருளையும் இந்தக்குறளில் பொருத்தி ஒருவகையான பொருள் கொள்ளமுடியும் என்று தோன்றுகிறது.

ம.ர.பொ.குருசாமியும் ‘இக்குறள் உரையாசிரியர்களைத் திகைக்கவைத்த குறள்’ எனக்கூறி, ‘வாழைபோல் கேடும் [தாய் வாழை அழிந்தாலும், சிங்கம் வெடித்தல் எனப்படுகின்ற பக்கக் கன்றுகளின் தோற்றத்தால் வாழை அழிவதில்லை]’ என்ற பொருளில் உரைதருகிறார்.

நான் சற்றே மலைப்போடு இணையத்தில் தேடியபோது, ‘உரையாசிரியர்கள்’ நூலில் மு.வை.அரவிந்தனும் இதுகுறித்து விரிவாய் எழுதியிருப்பது தெரிந்தது. (நான் இதற்கு முன்பு மலைத்த ‘இலனென்னு மெவ்வ முரையாமை‘ குறளுக்கும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.)

குறளுக்குள் இன்னும் எத்தனை நத்தங்கள் காத்திருக்கின்றனவோ?


மகிழ்மலர் – 2

திசெம்பர் 13, 2010

மகிழ்க்குட்டி.

நான் இதுவரை

எழுதியது ஒரே கவிதைதான்.

அந்தக் கவிதை

நித்தமொரு

குட்டி போடுகிறது.

———————————

வெயில்நேரப் பனி

துயிலெழுங் கனவு

உதிர்கால இலை

மழைவிழும் அழுக்கு

புயல்படுஞ் சுடராகக்

கடலோரத்தில்

அவள்​ சுவடுகள்.

சட்டென்று

மின்சுருளில் படம்பதித்தேன்

அடுத்த

அலைவந்து கலைக்குமுன்.


இலனென்னு மெவ்வ முரையாமை

திசெம்பர் 13, 2010

இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள. [223]

இந்தக் குறளில் வருகிற எளிய தொடரான ‘இலனென்னு மெவ்வ முரையாமை’, எத்தனை அர்த்தங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது! பரிமேலழகரின் உரை இந்தக் குறளின் ஆழத்திற்குள் நம்மை அழகாக இழுத்துச்செல்கிறது.

1. கொடுப்பவன் இரந்தவனின் வறுமையைப் பற்றிப் பிறரிடம் கூறாமலிருப்பது. (பரிமேலழகர்)

2. இரப்பவன் கொடுப்பவனிடம் தன் வறுமையை உரைக்காமுன் கொடுப்பது.  (மணக்குடவர்)

3. இரந்தவன் மறுபடி இரக்க நேராவண்ணம் அள்ளிக் கொடுப்பது. (பரிதியார்)

4. கொடுப்பவன் வறுமையுற்ற போதும் தன் வறுமையை வெளிக்காட்டாது கொடுப்பது (தருமர் நச்சர் தாமத்தர் ஆகியவர்களில் யாரேனும ஒருவர் கூறியதாக இருக்கலாம்)

(மு.வை.அரவிந்தன் எழுதிய உரையாசிரியர்கள் என்ற ஆய்வுநூல் இணையத்தில் உள்ளது. அதிலிருந்து மாறுபட்ட ஒவ்வொரு கருத்துக்கும் ஆசிரியர் யாரென அறிந்துகொள்ளமுடிந்தது)

பரிமேலழகர் உரைக்கு, வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சார்யரின் விளக்கவுரையின் துணையோடு திருக்குறளைப் படித்து மொழிபெயர்க்க நேர்ந்தது ஓர் அற்புதமான நிகழ்வு என்று மறுபடியும் நினைத்துக் கொள்கிறேன். இது எனக்குக் கேளாமல் கிடைத்த பெருங்கொடை.

பரிமேலழகர் உரை இதோ:

‘இலன் என்னும் எவ்வம் உரையாமை – யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், ஈதல் – அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன் உடையான் கண்ணே- இவை இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே.

(மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்’ எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் ‘எனக் கரப்பார்’ சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.)

இக்குறளுக்கு Facebook பக்கத்தில் என் மொழிபெயர்ப்பு:

Charity, without mention of the distress of poverty, is present only in those from a good family. [223]

Charity, without mention of the distress of poverty, is the mark of noble birth. [223] V2

[பரிமேலழகர் உரையோடு, மணக்குடவர் உரையும் இங்கு காணலாம். உடன் மு.வ., தேவநேயப் பாவாணர், கலைஞர் உரைகளும் உள்ளன – அவை பெருமளவு பரிமேலழகர் உரையை ஒட்டியே எழுதப்பட்டுள்ளன. ]


Þôªùù¢Â ªñõ¢õ º¬óò£¬ñ ò¦îô¢
°ô¬ìò£ù¢ èí¢«í à÷.

வாடியவுயிரைக் கண்டபோது

திசெம்பர் 12, 2010

 

 

 

 

 

 

 

 

 

மழை யோய்ந்தும்

கதிரவ னுதிக்கமறுத்

தொளிமட்டுங் கசிந்த

குளிர்காலை வேளையில்

கடலோரத்தில் ஒருமனிதன்.

மனிதனா பிணமா?

நனைந்து நைந்த

மெல்லிய கீழாடையை

மேலிழுத்துக் குளிர்காக்கப்

போர்த்தி ருந்தான்.

அசைவற்றுச் சாய்வாய்

ஈரத்தரையிற் கிடந்தான்

மழைக்கொ திங்கிய

வல்லது மயங்கிவீழ்ந்த

சிறுமரத் தடியில்.

அருகிற் சென்ற

இருநாய்கள் முகராமல்

நகர்ந்ததாற் தெரிந்தது

உயிர் இருந்தது.

சகியாமற் படம்பிடித்துக்

கவிதை யெண்ணி

விரைவாய் அவ்விடம்விட்டு

மனங்கனக்க நகர்ந்தேன்.

ஏன் விழுந்தான்

முடியாமல் விழுந்தானா

குடியாலே விழுந்தானா?

 

மறுபடி வந்தபோது

அம்மனிதனைக் காணாததாற்

கனங் களைந்தேன்.


கவிதைக்கு முன்

திசெம்பர் 12, 2010

முடிவு செய்துவிட்டேன்.

கவிதை எழுதிப்

பதிப்பிக்க வேண்டும்.

கவிதை எழுதுவதொன்றும்

பெரிய காரியமில்லை.

நயமாய்ப் புதிராய்

நாலு வார்த்தைகளை

மடக்கிப் போட்டால்

கவிதையாகி விடும்.

என்கீழ் எனக்குமேல்

வேலை செய்கிறவர்களிடம்

வார்த்தைகளை விற்றுவித்தாக்கி

வாழ்க்கை யோட்டு​கிறவனுக்குக்

கவிதை யெழுதுவதொன்றும்

பெரிய காரியமில்லைதான்.

ஆனால் அதற்குமுன்

நானொரு கனமான

புனைப்பெயர் பூணவேண்டும்.

சிக்க மாட்டேனென்கிறது.