2014ல் படித்தவை

திசெம்பர் 31, 2014

பதின்ம வயதில் மிகச் சிரத்தையாக ஒரு நாட்குறிப்பேட்டில் நான் படித்த எல்லாப் புத்தகங்களின் பெயர்களையும் குறித்துவைத்திருந்தேன். ஒரு மிதிவண்டிப் பயணத்தின்போது பின்பக்கம் கேரியரில் வைத்திருந்த அந்த நாட்குறிப்பைத் தவறவிட்டேன். அப்போது விட்ட பழக்கத்தை ஐந்தாண்டுகளுக்கு முன்புதான் மீட்டெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் படித்த புத்தகங்களின் பட்டியலைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன்.

எந்தப் புத்தாண்டுத் தீர்மானங்களையும் நான் செய்துகொள்வதில்லை. மிக அரிதாகவே எந்த ஒரு பழக்கத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்கமுடிந்திருக்கிறது. இதுவும் அப்படியானதொன்றாகிவிட்டதில், மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு மகிழ்ச்சி. நான் என்ன படித்தேன் என்பதை ஆண்டிறுதியிலாவது அமர்ந்து ஆவணப்படுத்திக்கொள்கிறேனே. இணையமும் முகநூலும் நிறையப் படிப்பது போன்ற ஒரு மயக்கத்தை உருவாக்கித்தந்தாலும், புத்தகங்களை முழுக்கப் படித்து முடிப்பதில் கிடைக்கும் நிறைவு அவற்றில் கிடைப்பதில்லை.

இந்த ஆண்டு சென்னையிலிருந்து கோவைக்கு இடம்பெயர்ந்த பின் நான் கண்டுகொண்ட முக்கியமான மூன்று நண்பர் குழுக்கள் : தியாகு புத்தக நிலையம் (நூலகம்), அருவி அமைப்பு, கோணங்கள் திரைப்படச் சங்கம். இந்த நண்பர்களின் மூலமாக நிறைய கலை, இலக்கிய ஆளுமைகளோடு உரையாடுவதற்கும் பழகுவதற்கும் கிடைத்த வாய்ப்புகள், பல புத்தகங்கள் படிப்பதற்கிணையான உணர்வினை அளித்தன. விட்டல் ராவ், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், சுகுமாரன், யுவன் சந்திரசேகர்,  இசை, பாவண்ணன், ராமானுஜம், எஸ்.என்.நாகராஜன், நாஞ்சில நாடன், அ.கா.பெருமாள், ஜெயமோகன் என்று நீளும் ஒரு தனிப் பட்டியல் இடலாம்.

தியாகு நூலகத்தில் புத்தகங்கள் பற்றித் தொடர்ந்து உரையாட நண்பர்களும் களமும் காலமும் அமைந்தது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். அரசாங்க நூலகத்தில் புத்தகம் எடுத்துவந்து படிக்கும் பழக்கத்தையும் பல்லாண்டுகளுக்குப் பின் புதுப்பித்துக் கொண்டேன். இறைந்து கிடந்தாலும் அங்கும் சில அரிய புத்தகங்கள் கிடைத்தன – முக்கியமாக, The Revolutionary Gandhi என்ற அற்புதமான புத்தகம்.

இனி, நான் படித்தவற்றின் பட்டியல்:

  1. The Revolutionary Gandhi – Pannalal Dasgupta
  2. Towards New Education – Gandhi
  3. The Economy of Permanence – JC Kumarappa
  4. The Beautiful Tree – Dharampal
  5. The Montessori Method – Maria Montessori
  6. Gandhi Before India – Ramachandra Guha
  7. Panorama – A Selection of Poems (Editor : JW Peterson)
  8. மரங்கள் – நினைவிலும் புனைவிலும் – தொகுப்பு : மதுமிதா
  9. மேகதூதம், ருதுசம்ஹாரம் – காளிதாசன் (தமிழில் – மதுமிதா)
  10. காலம் தோறும் தொன்மங்கள் – அ.கா.பெருமாள்
  11. கொரில்லா – ஷோபா சக்தி
  12. கோவேறு கழுதைகள் – இமையம்
  13. கள்ளம் – தஞ்சை பிரகாஷ்
  14. நிலமென்னும் நல்லாள் – சு.வேணுகோபால்
  15. மணற்கடிகை – எம்.கோபாலகிரூஷ்ணன்
  16. காம்ரேடுகள் – விட்டல் ராவ்
  17. வெட்டுப்புலி – தமழிமகன்
  18. மிளிர்கல் – இரா.முருகவேள்
  19. முதற்கணல், நீலம் – ஜெயமோகன்
  20. உச்சிவெயில், வேஷங்கள் – இந்திரா பார்த்தசாரதி
  21. கமலாம்பாள் சரித்திரம் – பி.ஆர்.ராஜமையர்
  22. பூமியை வாசிக்கும் சிறுமி – சுகுமாரன்
  23. முதல் 74 கவிதைகள் – எம்.யுவன்
  24. என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்
  25. கிரூஷ்ணன் நிழல் – முகுந்த் நாகராஜன்
  26. 38 கவிதைகள் – பேயோன்
  27. என்றுதானே சொன்னார்கள் – சாம்ராஜ்
  28. கல்வெட்டுக்கலை – நடனகாசிநாதன்
  29. கீழை மார்க்சியச் சிந்தனையாளர் நாகராசன் (75ம் பிறந்த நாள் மலர் – கட்டுரைகள்) – எஸ்.என்.நாகராஜன்
  30. இந்திய இலக்கியம் (கட்டுரைகள்) – க.நா.சுப்ரமண்யன்

கடைசியாகக் குறிப்பிட்ட புத்தகத்தில், க.நா.சு. கூறும் ஒரு வரி, கிடைத்திருக்கும் நேரத்தையும் வாய்ப்பையும் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஏங்கவைத்தது : ‘Dante என்கிற மகாகவியின் காவியத்தைப் படிப்பதற்காக இத்தாலிய மொழியைக் கற்றுக்கொண்டேன்; Cervantes எழுதிய Don Quixote என்கிற நாவலைப் படிப்பதற்காக நான் ஸ்பானிஷ் கற்றுக்கொண்டேன்.’

க.நா.சுப்ரமண்யம்

தெரியாத மொழிகளைக் கற்றுக்கொள்ளாவிடினும் தெரிந்த ஆங்கிலத்திலும் தமிழிலும் பெருகிநிற்கும் சமுத்திரத்தின் ஒரு துளியையாவது அள்ளிப் பருகிவிடவேண்டும்.

எம்.யுவன், இசை, தேவதேவன், ஞானக்கூத்தன், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன், சாம்ராஜ், போகன் சங்கர், வண்ணதாசன் கவிதைகளில் மூழ்கித்திளைத்த இரண்டு வாரங்களுடன் 2014 இனிதே நிறைவடைகிறது. புத்தாண்டு புதிய புத்தகப் புதையல்களுடன் எனக்கும் உங்களுக்கும் மலரட்டும்.

தொடர்புடைய பதிவுகள் :

2013ல் படித்தவை

2012ல் படித்தவை


தோற்றமயக்கம்

திசெம்பர் 31, 2014

மாடுகளுக்கு அமைத்திருந்த தகரக்கொட்டகையில், கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி, தோப்புக்காரரோடு சாவகாசமாய்ப் பேசிக்கொண்டிருந்தேன். நீண்ட நாளாகக் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டேன். தோற்றத்தைப் பார்த்து எடைபோட்டு, என் மகளுக்கு அவரைத் தாத்தா என்றழைக்கச் சொல்லிக்கொடுத்திருந்தாலும், அந்தளவுக்கு அவருக்கு வயது இல்லையோ என்று கணக்கு இடித்தது. அவரது மகள் இப்போதுதான் கல்லூரியில் மூன்றாமாண்டு பொறியியல் படிக்கிறாள். மகன் இரண்டாண்டு இளையவன்.

‘உங்களுக்கு என்ன வயசாகுதுங்க?’
‘இந்த வருஷத்தோட அறுபது முடியுது.’
‘ரொம்பத் தாமதமாத்தான் கல்யாணம் செஞ்சீங்களோ,’ என்று அவரது சொந்த வாழ்வில் என் பெரிய மூக்கை நுழைத்துத் துழாவினேன்.
‘ஆமாங்க. முப்பத்தஞ்சு வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டேன். குடும்பத்துல நிறையப் பிரச்சனை. எல்லாம் முடிஞ்சு வர்றதுக்கு அத்தனை வருஷம் ஆயிடுச்சு. அப்புறம் அஞ்சு வருஷத்துக்குக் கொழந்த இல்ல. நாற்பது வயசிலதான் பொறந்துச்சு.’

ஆற்றின் மறுகரையில் கோயில் நிலங்களைப் பரம்பரையாகக் குத்தகைக்கு எடுத்துப் பராமரிக்கும் பெரியவர் வந்தார். பெயர் தெரிவதற்கு முன் நம் கிராமங்களில் சாதியை அறிவித்துவிடுகிறார்கள். அவர் பண்டாரம் என்று சொல்லியிருந்தார் தோப்புக்காரக் கவுண்டர். முன்பொருமுறை சந்திருக்கிறேன். குறுகிய வெண்தாடி வைத்திருந்தார். இரண்டு பொடியன்கள் உடனிருந்தார்கள். சின்னவன் வெற்றுடம்போடு துடியாய் இருந்தான். இடுப்பில் மட்டும் ஒரு சிறிய கருப்பு வேட்டித்துணி. முடி ஒட்டவெட்டிய தலை. சபரிமலை செல்ல மாலை போட்டிருக்கிறான். இரண்டாவது படிக்கிறான். பெரியவன் ஐந்தாவது படிக்கிறான். 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆரம்பப் பள்ளிக்கு இரண்டு பஸ் மாறிச்செல்லவேண்டும். நடக்கவைக்கச் சங்கடமாக இருக்கிறதாம்.

‘சீக்கரம் சைக்கிள் வாங்கித்தாங்க’

இந்த விசாரிப்புகளோடு என் வாய் சும்மாயிருந்திருக்கலாம். அன்றுதான் நாக்கின் மீது மூக்கு ஏறி அமர்ந்துகொண்டிருந்ததே.

‘பசங்க உங்க பேரங்களா?’

‘காலாகாலத்துல கொழந்தை பிறந்திருந்தா எனக்கும் இந்த வயசில பேரம்பேத்தி இருந்திருக்குந்தான். இல்லீங்க தம்பி – இவங்க எம் பிள்ளைக.’
வெறுமையாக என்னைப் பார்த்தார். வருத்தம் எதையும் வெளிக்காட்டவில்லை. இந்தக் கேள்வி அவருக்குப் பழகியிருக்கவேண்டும்.

‘மொத சம்சாரத்துக்குக் கொழந்தை இல்லை. அதனால ரொம்ப வருஷத்துக்கப்புறம் ரெண்டாங்கலியாணம் பண்ணிக்கிட்டேன்.’

‘கொழந்தை இல்லாதப்போ சாதிசனம் எல்லாம் ஒதுக்கிவைச்சிட்டாங்க. ஜாஸ்தி பேச்சுவார்த்தை யாருகிட்டயும் கிடையாது. இப்ப இதுக பொறந்த பின்னாடித்தான் அண்ணன் தம்பின்னு உறவெல்லாம் மறுபடியும் ஒட்டத்தொடங்கியிருக்காங்க.’

பெரியவன் செய்தித்தாளைச் சத்தமாய்ப் படித்துக்கொண்டிருந்தான்.

‘என்ன நீ, இன்னும் எழுத்துக்கூட்டிப் படிக்கிற. இங்க வா…எப்படி எழுத்துக்கூட்டாம அப்படியே படிக்கிறதுன்னு சொல்லித்தர்றேன். உம் பேரென்ன?’

கட்டிலுக்கடியில் ஓடி ஒளிந்துகொண்டு பெயரை மட்டும் சொன்னான்.
‘நவீன் குமார்’
‘அட, ரொம்ப நவீனமாகத்தான் பேர் வைச்சிருக்கீங்க.’

‘உம் பேர் என்னடா,’ என்றேன் இளையவனிடம்.
‘சந்தியா,’ என்றாள்.
‘ஆத்துலேயே எந்நேரமும் குதிச்சு வெளையாடிகிட்டிருக்கறதாச்சு. தலைல ஈறும்பேனுமா இருக்குன்னு முடிய்ய ஒட்ட வெட்டிவிட்டிருக்கங்க,’ என்றார் அவள் தந்தை.

பின்னர் ஆற்றோரம் நடந்து சென்றபோது, அக்கரையில் அவர்களது தாயோடு சேர்ந்து ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். என் கண்படாத இடத்திற்கு தாய் அவசரமாக நகர்ந்துவிட்டார். இளம்பெண்ணாகத்தான் தெரிந்தார்.

‘அண்ணா, வாங்க, காப்பி சாப்பிடலாம்,’ என்று கூவினாள் சந்தியா.


வாய்மையால் காணப் படும்

திசெம்பர் 31, 2014

அந்தச் சிலையை வைத்துவிடுங்கள்.
அந்தச் சிலையை வைக்கவேண்டும்
என்பதற்குச் சொல்லப்படும் பசப்புவாதங்களைவிட
அந்தச் சிலை எதையும் குலைத்துவிடப் போவதில்லை.

அந்தப் புத்தகத்தை எரித்துவிடுங்கள்.
அந்தப் புத்தகத்தை எரிக்கவேண்டும்
என்பதற்குப்பின் பொதிந்த நோக்கங்களைப் பொசுக்க
அந்தப் புத்தகத்தின் சாம்பல் பயன்படக்கூடும்.

எல்லாம் விரைவாகவே நடக்கட்டும்.
துவேஷங்கள் வெளிச்சத்துக்கு வரட்டும்.
வேஷங்களோடு மன்றாடுவதைவிடச்
சலிப்புதரும் செயல் வேறில்லை.

நீங்கள் கட்டியும்வெட்டியும்ஒட்டியும்எரியூட்டியும்
பொய்மையைக் கொண்டு
வாய்மையின் வாயை அடைக்கமுடியுமானால்
வாய்மை எனப்படுவதுதான் எதற்கு?


ஆவி பறக்க

திசெம்பர் 30, 2014

இதயத்தில் அரும்பியதும்
அவரசரமாய்
விரல்வழி வெளியேறியது.
இன்னும் கொஞ்ச நாள்
இதயத்திலேயே
அடைகாத்திருக்கலாம்.
மடிகணினியின் வெப்பத்திலாவது
பத்திரப்படுத்திச் செப்பனிட்டிருக்கலாம்.

தன்னிச்சையாய்
முகநூலுக்குள் துள்ளிக்குதித்தது.
சூடு ஆறிவிடுமாம்.

இப்போது குறைப்பிரசவமாய்
உங்கள் விழிகளுக்குள்
வழிந்தோடிக் கொண்டுள்ளது.


போதை

திசெம்பர் 17, 2014

இந்த போதை

இத்தோடு தெளியட்டும்.

உன் கோப்பையில்

வேறு கள்

என்று மட்டும்

ஏமாந்துவிடாதே.