என் வாக்கு

ஏப்ரல் 21, 2014

இன்னும் மூன்று நாட்களில் வாக்களிக்கப் போகிறேன் – எனது வாக்கின் முக்கியத்துவம் இம்முறையைவிட அதிகமாய் முன்னெப்போதும் இருந்ததில்லை என்ற உணர்வோடு. 

பலநூறு மக்களின் கொலைகளுக்குக் காரணமாகவோ, ஆதரவாகவோ, தடுக்கும் திறனற்றோ இருந்துவிட்டு, இன்னும் வருத்தம் தெரிவிக்காத, மன்னிப்புக் கோராத ஓர் ஆட்சியாளரின் பிரதிநிதி, தமிழகத்தில் வெல்லக்கூடிய சிறுசாத்தியம் உள்ள தொகுதிகளில் ஒன்றில், எனது வாக்கை அவருக்கு எதிராய் அளிக்கப்போகிறேன்.

குஜராத்தைவிடப் பல துறைகளிலும் உயர்வான வளர்ச்சி அடைந்துள்ள தமிழகத்தை, குஜராத் போல ஆக்குகிறேன் என்று சொல்லப்படும் அபத்தத்திற்கு எதிராக வாக்களிக்கப்போகிறேன்.

அமார்தயா சென் போன்ற வல்லுனர்கள் சொல்வதை வைத்துமட்டுமன்றி – குஜராத்தில் ஒரு பயணம் மேற்கொண்ட பிறகு, தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அண்மையில் சென்ற பிறகு, கண்கூடாய்க்கண்டு பெற்ற தெளிவோடு, குஜராத்தின் மேலான வளர்ச்சி என்கிற அப்பட்டமான பொய்க்கு எதிராக வாக்களிக்கப் போகிறேன். 
இதைத் தம் சுயநலத்திற்காக மக்களிடம் திடமாய் எடுத்துச்சொல்லாத நம் தமிழக அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கை நிந்தித்தவாறு வாக்களிக்கப்போகிறேன்.

முன்பே வளர்ச்சிப் பாதையில் இருந்த ஒரு மாநிலத்தின் இயல்பான வளர்ச்சியில், காலங்காலமாய் தொழில்முனைப்பு கொண்ட ஒரு சமுதாயத்தின் நிழலில் குளிர்காய்பவர்களுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறேன்.

வெகுசில செல்வந்தர்களின் செயற்கையான அசுர வளர்ச்சியை ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சியாகச் சித்தரித்துக்காட்டும் பிம்பத்திற்கு எதிராக வாக்களிக்கப் போகிறேன்.

ஒரு பெண்ணைப் பின்தொடர்வதற்காக (என்ன காரணத்திற்காக இருந்தாலும்), ஓர் அரசாங்கத்தின் அத்தனை சக்தியையும் ஒருங்கிணைத்து ஏவக்கூடய ஒரு சர்வாதிகாரி எனது பிரதமராகக்கூடாது என்பதற்காக எனது வாக்கினை அளிக்கப்போகிறேன். அந்தச் செயலை நியாயப்படுத்தச் சொல்லப்படும் நகைப்பூட்டும் சாக்குகளை நம்பக்கூடிய அளவிற்கு நிலைகுலைந்திருக்கும் அவரது ஆதரவாளர்களைக் காப்பாற்றவும் எனது வாக்கினை இடப் போகிறேன்.

தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் பழிகளையும் வழக்குகளையும் சுமத்தி அழித்தொழிக்க நினைக்கும் ஒருவரின் ஆட்சியில் வாழ்ந்திடும் அவலநிலையில் வீழ்ந்துவிடாதிருக்க எனது வாக்கினை அளிக்கப்போகிறேன்.

பெரும்பான்மை மக்களின் மதவெறியைத் தூண்டி, இந்த நாட்டின், இந்தப் பண்பாட்டின் சகிப்புத்தன்மையைச் சிதைத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்தாக்கத்திற்கு எதிராக வாக்களிக்கப்போகிறேன். தேசம், தேசபக்தி என்ற சொற்கள் அர்த்தமிழந்து, மார்தட்டிக் கொள்வதற்கும், வசைபாடுவதற்கு மட்டுமே பயன்படுபவையாய் குறைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து வாக்களிக்கப் போகிறேன்.

தீயவற்றில் குறைந்த தீயதைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்கிற நிலையைத் தாண்டி, ஒரு சிறு நம்பிக்கையின் கீற்று நம் கண்முன் எழுந்துள்ளது. என் வாக்கு அந்த நம்பிக்கையை விதைத்துள்ள ஆம்ஆத்மி கட்சிக்கு. உங்கள் தேர்வில் நீங்கள் என்னோடு முரண்படலாம்; உங்கள் வாக்கு யாருக்கானதாகவும் இருக்கலாம் – ஆனால் உங்கள் வாக்கையும் அளித்து, உரிமைகளையும் அடகு வைத்துவிடாதீர்கள்.

என் கருத்துகளைச் சுதந்திரமாய்க் கூறமுடிந்து, அந்தச் சுதந்திரத்தைத் தக்கவைக்க முடிகிற கடைசி வாய்ப்பு இதுவாக இருக்கக்கூடும் என்கிற அக்கறையோடு வாக்களிக்கப் போகிறேன்.
என் வாக்கு உங்களையும் மீட்கும் என்கிற நம்பிக்கையோடு.