கேள்வியால் தோட்கப்பட்ட செவி

ஜனவரி 15, 2013

கடந்த ஓரிரண்டு மாதங்களில், சில நல்ல உரைகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வப்போது எழுதத் தவறிவிட்டாலும், இப்போதும் என் மனதில் நிற்கும் நினைவுகளைத் தொகுத்து ஒரு சிறு குறிப்பாக எழுதலாம் என்று இந்தப் பதிவு.

ஞாநி சென்னையில் மாதந்தோறும் நடத்தும் கேணி கூட்டங்கள், இலக்கிய, சமூக, அரசியல் உரையாடல்களுக்கான ஓர் அரிய களத்தை அமைத்திருக்கின்றன. கேணி கூட்டங்களில் கேட்ட இரண்டு பேச்சுகள் மனதைக் கவர்ந்தன.

1. பொ. வேல்சாமி.

சரித்திரம் பற்றிய நமது புரிதல்கள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார். பல சிறிய கூட்டங்களின் தலைவர்கள் இலக்கியங்களிலும், நாட்டுப்பாடல்களிலும் இடம்பெற்றுள்ளபோது, ஏன் ராஜராஜச் சோழன் போன்ற மாமன்னர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டார்கள், அல்லது அவர்களைப் பற்றிய இலக்கியங்களும் கதைகளும் பொதுநினைவில் நிலைக்கவில்லை என்பது அவர் எழுப்பிய பல கேள்விகளில் முக்கியமான ஒன்று. பதில்களைத் தேடும் பணியை ஆய்வாளர்களுக்கு விட்டுவிடுகிறார். இப்படிப்பட்ட சிந்திக்கத்தூண்டும் கேள்விகளை எழுப்புவதுதான் அவர் பலம்.  அவரது கட்டுரை நூல் ஒன்றை வாங்கிப்படித்தேன். அதிலும் இது போன்ற பல கேள்விகள் எழுந்தன.

2. ராஜ் கௌதமன்

இவர் எழுதிய ‘தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்’ படித்திருந்தேன். அறத்தை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகியிருந்தார். அறக்கோட்பாடுகள் அதிகாரத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டன என்பதை மறுக்கமுடியாது. ஆனால்,  அதிகாரத்தை நிறுவுதற்காக திருக்குறள் உட்பட பல நூல்கள் எழுந்தன என்பது போன்ற ஒரு அணுகுமுறை நூலின் சிலபகுதிகளில் இருந்ததாய் நான் புரிந்துகொண்டது எனக்கு அப்போது ஏற்புடையதாக இல்லை.  ஒரு சீரியஸான பேச்சை எதிர்பார்த்துச் சென்றேன். மனிதர் பார்பதற்கும் ரொம்ப சீரியஸாகத்தான் தெரிந்தார். ஆனால், தன் வலிகளைப் பற்றிப் பேசும்போதுகூட வலிக்க வலிக்கச் சிரிக்க வைத்தார்.  He is a master of dark humor. தன்னைப் பற்றிய கதையின் மூலம் ஒரு சமூகச்சித்திரத்தை உருவாக்கினார். தான் தலித் என்கிற அடையாளத்தைப் புறந்தள்ளி மேலெழுந்து, எவனுக்கும் சளைத்தவன் அல்ல என்கிற இறுமாப்பு சிறுவயது முதலே இருந்திருக்கிறது.  அந்த அடையாளத்தால் கிடைத்த சலுகைகளைக்கூடத் தனக்கு அவமானமாகவும், தன் தகுதிக்காகவே கிடைத்திருக்கவேண்டிய மரியாதை மறுக்கப்பட்டிருப்பதுமாகவே கருதுகிறார். [இது தனது தனிப்பட்ட தன்னம்பிக்கையின் வெளிப்பாடே அன்றி, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாடல்ல என்பதையும் தெளிவுபடுத்தினார்].

இந்த ஆண்டு சிலுவைராஜ் சரித்திரம் கட்டாயம் படிக்க வேண்டும்.

———————-

3.  முனைவர் ரகுராமன்

சென்னையில், தொடர்ந்த உரையாடல்களுக்கான இன்னொரு களத்தை  அமைத்தருப்பது முனைவர் சுவாமிநாதன், கிழக்கு பத்ரி போன்றவர்கள் நடத்தும் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை.

இம்மாதம் முனைவர் ரகுராமன் கூத்தநூல் பற்றி உரையாற்றினார். அற்புதமான உரை. தொல்காப்பிய காலத்தில் எழுதப்பட்ட கூத்தநூலின் பல பகுதிகள் எஸ்.டி.எஸ்.யோகியாரால் 1968ல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் இன்றுவரை பெரும் கவனம் பெறாமல் இருப்பது ஆச்சர்யம்தான். ரகுராமன், கூத்தநூல் பரதரின் நாட்டிய சாஸ்த்திரத்துக்கும் முந்தையது, முன்னோடியானது என்கிறார். தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை, உ.வே.சா.வின் குறிப்புகள் என்று பலவற்றையும் சரளமாக இணைத்துப் பேசினார்.

உ.வே.சா. தான் இளவயதில் கண்ட வளையாபதி, குண்டலகேசி ஆகியவை பின்னாட்களில் காணாமற் போனது என்று சொன்னது போல் தனக்கேற்பட்ட ஓர் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். யோகியார் வீட்டுக்கு அண்மையில் சென்ற போதுதான் தெரிந்ததாம் – வைக்க இடமில்லை என்று, 3000ம் அதிகமாய் அவர் சேர்ந்திருந்த அரிய புத்தகங்களை, எடுக்கவோ வாங்கவோ ஆளின்றி, அவர் அங்கு செல்வதற்குச் சிலநாட்களுக்கு முன் பழைய பேப்பர்காரனுக்குப் போட்டார்களாம்.

நல்ல நடை, வசீகரமான பேச்சு – கவனிக்கப்பட வேண்டிய பங்களிப்பு.

அவரது முழுப் பேச்சின் ஒளிவடிவம்  ; http://blog.tamilheritage.in/2013/01/blog-post_10.html

கூத்தநூல் பற்றிய விரிவான ஒரு பதிவு இங்கே.

——————

மார்கழி மாத இசை விழாக்களுக்கு மத்தியில் ‘சங்கம் 4’ என்கிற இலக்கிய விழாவை 21 நாள்களுக்கு ஜகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பு நடத்தியது. இதில் ஒரு சில நல்ல உரைகளைக் கேட்டேன்.

5. ரவிக்குமார்

ரவிக்குமார் அம்பேத்கார் பற்றி ஆழமாகப் பேசினார். அம்பேத்கர் பல துறைகளிலும் பங்களித்திருந்தாலும், அவர் ஒரு தலித் தலைவராக மட்டுமே அடையாளம் காணப்படுவதன் அபதத்தைச் சுட்டிக்காட்டினார். அமர்த்தியா சென் ஆற்றிய ‘Justice’ பற்றிய உரையில் ஒரு முறைகூட அம்பேத்கரைக் குறிப்பிடாமல் எப்படி பேச முடிந்தது என்கிற நியாயமான கேள்வியை வைத்தார்.

6. பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், தான் அரசு அதிகாரியாக இருந்தபோது, அசாமின் முன்னாள் முதல்வர் சரத் சந்திர சின்ஹாவுடனான அனுபவகங்களைப் பற்றி எழுதியதை சில ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன். அப்போதிருந்தே அவரது புலி நகக் கொன்றையும், பின்னர் கலங்கிய நதியும் படிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். சங்கம் 4ல் அவர் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.  ‘அக்கிரகாரத்தில் பெரியார்’ என்கிற தலைப்பில் பி.ஏ.கிருஷ்ணன் முக்கியமான சில பார்வைகளை முன்வைத்தார். பெரியாரின் பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என்ற இரண்டு மையக்கொள்கைகளின் மீதும் கடும் விமர்சனங்களை வைத்தார். அதே சமயம், மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் அனைத்து சமூகங்களும் ஓரளவு முன்னேறியிருப்பது பெரியாரின் பங்களிப்பினால்தான் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார்.

கிழக்கு பத்ரி அந்த உரையைப் பற்றிய விரவான குறிப்பினை இங்கே எழுதியுள்ளார்.

நேர்ப்பேச்சில் பி.ஏ.கே.வின் உரை இன்னமும் கூட balanced ஆக இருந்ததாக உணர்ந்தேன். பெரியார் மீதான மரியாதையை வெளிப்படுத்திய அவரது தொணியும்,  இப்பதிவில் விடுபட்டுப்போன அவரது வேறுசில தன்னிலை விளக்கங்களும் காரணங்களாக இருக்கலாம்.

தான் பிராமணனாகப் பிறந்திருந்தாலும், மிஞ்சியிருக்கும் வெகுசில பாதிப்புகள் தவிர, எவ்வகையிலும் தன்னைப் பிராமணனாகக் கருதமுடியாது; கடவுள் நம்பிக்கைத் தனக்கு இல்லை, ஆனால் அதை மற்றவர்கள் மீது திணிப்பதில் ஆர்வமில்லை என்றெல்லாம் முதலிலேயே தெளிவுபடுத்திவிட்டதால், ஒரு நடுநிலையான விமர்சகரின் பேச்சாகவே என்னால் பார்க்கமுடிந்தது.

பெரியாரைக் கண்மூடித்தனமாகப் போற்றவோ தூற்றவோ மட்டுமே செய்பவர்கள் மத்தியில், அவரது கணிசமான பங்களிப்பையும், குறைபாடுகளையும் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் இத்தகைய ஆழ்ந்த வாசிப்புகள் அரிதாக இருப்பது பெரும் குறைதான்.

7. R.பாலகிருஷ்ணன்

சங்கம் 4ல் கேட்ட இன்னொரு சுவையான உரை, R.பாலகிருஷ்ணன் சிந்து சமவெளிக்கும், கொங்கு வேளாளர்களுக்கும், நாட்டுச் செட்டியார்களுக்குமான தொடர்பைப் பற்றி பேசியது. இதற்கு முன்பே ஆஸ்கோ பார்ப்போலா, ஐராவதம் மகாதேவன் ஆகியோர் சிந்து சமவெளிக்கும் திராவிட/தமிழ் மக்களுக்குமான இணைப்பினைப் பற்றி எழுதியுள்ளனர். ஆயினும், சிந்து சமவெளி நாகரிகமும், மக்களும், அவர்களுது எழுத்துமுறையும், அவர்களின் வீழ்ச்சியும் பல்வேறுவிதமான ஆய்வுகளுக்கும் மாற்றுக்கருத்துகளுக்கும் களமாக உள்ளன. புதியதொரு கோணத்தில் இதை அணுகுகிறார் பாலகிருஷ்ணன்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான முதல் தமிழ் மாணவர், பாலகிருஷ்ணன். அவர் தமிழைத் தேர்தெடுத்ததனால், ஆறு மாதங்கள் இவர் தந்தை இவருடன் பேசாமல் இருந்திருக்கிறார். தமிழ்மீது மிகுந்த பற்றுள்ள ஒருவர் இத்தகைய ஆராய்ச்சியைச் செய்யும்போது, அந்தப் பற்றின் காரணமாக அவர் அடைய நினைக்கும் முடிவுகளை நோக்கி ஆய்வினைச் செலுத்துகிறாரோ என்கிற ஐயம் எழத்தான் செய்யும். அதற்கு இடம்கொடாமல் நம்பகத்தன்மையை உருவாக்குவது இவருக்கு கூடுதல் பொறுப்பு.

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், பண்பாடுகள் மாறினாலும் ஊர்ப்பெயர்கள் மாறாமல் மறுவி நிலைத்திருக்கும் என்பது இவர் முன்னிருத்தும் கருதுகோள். கண்டிப்பான புள்ளியியல் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கொங்குநாட்டு செட்டிநாட்டு ஊர்ப்பெயர்களுக்கும், இன்றைய சிந்துநதிப்பரப்பின் பல ஊர்ப்பெயர்களுக்கும் உள்ள தொடர்பினை நிறுவிக்காண்பிக்கிறார். உலகின் வேறு எந்தப்பகுதியிலும் இத்தகைய பொருத்திப்பார்த்தல் சாத்தியமில்லை என்பதை நிலைநிறுத்தி, இது வெறும் தற்செயல் நிகழ்வல்ல என்கிறார். சங்கப்பாடல்களிலுள்ள பல ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இன்றில்லாவிடனும், சிந்துப்பகுதியில் இப்போது இருப்பது அவர் முன்வைக்கும் இன்னொரு சான்று.

தமிழ்த் தேர்ச்சியையும் அறிவார்ந்த அணுகுமுறையையும் இணைத்து வந்தடைந்த ஆய்வு முடிகளை, நல்ல பேச்சுத்திறனோடு முன்வைத்த இவரது உரை வித்தயாசமானது. தமிழகத்துக்கு வெளியில் எந்த அளவுக்கு இவர் ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதில்தான் இவரது வெற்றி அடங்கியிருக்கும்.

8. எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ரா. பேசியைதை முதன்முதல் உயிர்மை நடத்திய உலக சினிமாப் பேருரையின் போதுதான் கேட்டேன். சத்யஜித் ரே பற்றி நன்றாகப் பேசினார். ஆயினும், திரைப்படத்தை நானாய்ப் பார்த்து ரசிக்க நினைப்பவன் என்பதால், அவரது மற்ற பேருரைகளுக்குச் செல்லவில்லை. பின்னர் சங்கம் 4ல், பயணங்களின் பரவசம் என்ற தலைப்பில் பேசினார். நிறையப் பயணம் செய்திருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு எப்போதும் ஒரு பொறாமை உண்டு. அவரது பயணங்களைப் பற்றி பரவசமாய் விவரித்தபோது, அந்தப் பொறாமை மேலும் வலுப்பட்டது. ஒன்று தெளிவாய்ப் புரிந்தது – பயணங்களுக்குப் பணம் தேவையில்லை; வசதிகளை எதிர்பார்க்காமல், வருவதைச் சந்தித்து ஏற்றுக்கொள்ளும் எளிமைதான் வேண்டும். அப்படியொரு மனநிலை வாய்க்கும்போது, நானும் பயணப்படுவேன்.

——————

9. ஜெயமோகன்

பல ஆண்டுகளாய், புத்தகங்கள் மூலமாகவும், இணையத்தின் மூலமுமாகவே கண்டிருந்த ஜெயமோகனை, விஷ்ணுபுரம் விருது விழாவின் போது நேரில் சந்தித்து உரையாடவும், அவரது உரையைக் கேட்கவும் வாய்ப்புகிடைத்தது. ‘காந்தி இன்று’ தளத்தை நடத்தும் நண்பர் சுனில் கிருஷ்ணன் அழைக்க, அவர்கள் தங்கியிருந்த மண்டபத்துக்குச் சென்றேன். அங்கிருந்தவரை, ஜெயமோகன் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருந்தார். பல்வேறு தலைப்புகளைப் பற்றியும், ஏதாவது மாறுபட்ட கோணத்தில் பேசுவதற்கு அவரிடம் ஏதேனும் செய்திகள், கருத்துகள் உள்ளன. காந்தியையும், பெரியாரையும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாய்க் கருதும் மனநிலை பற்றியும், காந்தியைப் புறக்கணித்துவிட்டு நாம் முன்வைப்பது எதை/யாரை என்பதைப் பற்றியும் உரையாடினோம். ‘கமலா சடகோபன்’ என்பவர் மறைந்தபோது ஹிந்து நாளிதழ், அவரைப் பெரும் இலக்கியவாதியாக முன்னிருத்தியதே’ என்று கேட்ட ஒரு கேள்விக்கு, கலைமகள் எழுத்தாளர்கள், வணிக எழுத்து என்று எங்கள் நான்கைந்து பேருக்கு ஓர் உடனடிப் பேருரையே சுவையாக நிகழ்த்தினார்.

இளையராஜா போன்ற பிரபலங்களை ஓர் இலக்கிய விழாவிற்கு அழைப்பது அவசியமற்றது என்ற எண்ணம் அன்று வலுத்தது. இளையராஜாவுக்காக அந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள் இளையராஜாவுக்காக மட்டுமே வந்திருந்தார்கள்; பரவச நிலையில் ‘ஐயோ, ஐயோ, இளையராஜா!’ என்று கூவி, கைதட்டிக் குதித்தார் அருகிலிருந்த பக்தர்; இங்குமங்குமாய்த் தடுமாறி ஓடிக்கொண்டிருந்தார் 70-80 வயதிருக்கும் ஒரு பெரியவர்; அவர்கள் கவனம் முழுவதும் ராஜாவின் மீது; அவர்கள் மற்றவர்கள் பேசிய எதையுமே பொருட்படுத்திவில்லை; அவர்களால், இலக்கியத்துக்காக வந்த என்னைப் போன்றவர்களும் வேறு எதையுமே பொருட்படுத்த முடியவில்லை.


2012ல் படித்தவை

ஜனவரி 5, 2013

கடந்த இரண்டு ஆண்டுகளாய் இத்தகைய பட்டியல்களைப் பதிவிட்டுள்ளேன். முன்னெப்போதையும் விட (கல்லூரி முடித்தபின்) அதிகம் படித்தது 2012ல்.  புனைவுகள் மட்டுமின்றி, வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், மேலாண்மை தொடர்பான நூல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், ஏன், சில ஆன்மீக நூல்கள் என்று என் வாசிப்புத்தளம் விரிந்துள்ளது. அனைத்து நூல்களைக் குறித்தும் இப்போது குறிப்பெழுதுவது சாத்தியமானதாகவும், சரியானதாகவும் தெரியவில்லை. எனவே என் மனதுக்கு நெருக்கமான சில புத்தகங்களின் பட்டியலை மட்டும் இங்கே தருகிறேன்.

 1. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
 2. கடலுக்கு அப்பால் – ப.சிங்காரம்
 3. ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்திரன்
 4. இருவர் (குறுநாவல் தொகுப்பு) – அசோகமித்திரன்
 5. கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்
 6. என் பெயர் ஆதிசேஷன் – ஆதவன்
 7. ரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்
 8. கடல்புறத்தில் – வண்ணநிலவன்
 9. அன்பின் வழியது (சிறுகதைத் தொகுப்பு) – வண்ணதாசன்
 10. அபிதா – லா.ச.ரா.
 11. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
 12. நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்
 13. குள்ளச் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்
 14. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முஹம்மது மீரான்
 15. பொய்த்தேவு – க.நா.சு.
 16. கோரா – தாகூர்
 17. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகன்
 18. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்
 19. பொய்யும் வழுவும் – போ.வேல்சாமி
 20. என் சரித்திரம் – உ.வே.சா.
 21. அருந்தவப் பன்றி – பாரதி கிருஷ்ணகுமார்
 22. சித்திர பாரதி – ரா.அ.பத்மநாபன்
 23. வள்ளுவரின் அறிவியலும், அழகியலும் – கோவை ஞானி
 24. திருக்குறள் : வள்ளுவர் கண்ட தத்துவம் (தெ.பொ.மீ.களஞ்சியம் – காவ்யா) – தெ.பொ.மீனாட்சிசுந்தரம்
 25. காந்தியும் தமிழ்ச் சனாதிகளும் – அ.மார்க்‌ஸ்
 26. தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ்கௌதமன்
 27. பகவத் கீதை (பாரதி, ஜெயமோகன், அரவிந்தர் மொழியாக்கங்களில்)
 28. அர்த்த சாஸ்திரம்
 29. தம்மபதம் (டாக்டர்.ராதாகிருஷ்ணன், ஏக்நாத் ஈஸ்வரன் மொழியாக்கங்களில்)

பட்டியலிட்டபின், கடந்து வந்த பாதையைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. கடக்க முடியாமல் நீண்டிருக்கும் பாதை அதைவிட மலைக்கச் செய்கிறது. இவற்றில் எல்லா படைப்புகளுமே ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்தவை. மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கத் தயங்காதவை.

ஒரு சில படைப்புகளைக் குறித்து முகநூலில் அவ்வப்போது எழுதியுள்ளேன். இவற்றுள் ப.சிங்காரத்தின் இரண்டு நூல்களும் நாம் என்றென்றும் கொண்டாட வேண்டியவை; உலக இலக்கியங்கள்; தனிப் பதிவாக எழுதுவேன். இன்னும் பல நூல்கள் தனிப் பதிவுகளில் கவனப்படுத்தப்பட வேண்டிவை. 

இந்த ஆண்டு என்னை மிகவும் பாதித்த நூல்கள்:

 • Mohandas : A True story of A Man, his People and an Empire – Rajmohan Gandhi
 • Ghaffar Khan, Non-violent Badshah of the Pakhtuns – Rajmohan Gandhi
 • My days with Gandhi – Nirmal Kumar Bose
 • மகாத்மாவுக்குத் தொண்டு  (மொழிபெயர்ப்பில்) – நாராயண் தேசாய்
 • சின்ன சங்கரன் கதை (முழுமையாய்ப் பதிப்பிக்கப்படாதது – அதன் சாத்தியங்களுக்காக) – பாரதி
 • என் சரித்திரம் – உ.வே.சா.
 • Essential writings of B.R.Ambedkar – Valerian Rodrigues
 • புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்
 • Gora – Rabindranath Tagore
 • Dhammapada – Buddha
 • Martin Luther King, Jr – Marshall Frady
 • பெரியார் களஞ்சியம் – (பாகம் 7ல் படித்த சில பகுதிகள்)

என்னை அசர வைத்த கதை  : பிராயாணம் – அசோகமித்திரன். ஓர் ஆங்கிலக் கதையின் முடிவோடு ஒத்த முடிவுள்ளதுதான் என்றாலும், அதைக் காட்டிலும் பல பரிமாணங்களில் விரிந்து ஆழ்ந்து செல்லும் கதை.

என்னை மிரள வைத்த நூல்  : Notes from the Underground – Dostoevsky. படித்த சில பக்கங்கள் நான் செல்ல விரும்பாத ஏதோ ஆழ்ந்த குகைக்குள் அழைத்துச் சென்று, பார்க்க விரும்பாத ஒரு கண்ணாடியை நீட்டத் தொடங்கியதால் படிப்பதை நிறுத்திக்கொண்டேன்.

நான் படித்த புத்தகங்களை விடவும் அதிகம் கற்றுக்கொண்டது, நான் சந்தித்த மனிதர்களிடமிருந்து – நாராயண் தேசாய், கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன், நம்மாழ்வார், முனைவர் மார்க்கண்டன், குத்தம்பாக்கம் இளங்கோ, பொள்ளாச்சி நா.மகாலிங்கம், சாந்தி ஆசிரமத்தின் மினோட்டி அறம், வினு அறம், அஸீமாவின் தேவிகா, காந்தி அமைதி மையத்தின் குழந்தைசாமி என்று இன்னொரு பெரும் பட்டியலிட வேண்டும். இவர்கள் ஒவ்வொருவரோடும், மேலும் பலரோடும், தனித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது 2012ல் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு.

தொடர்புடைய பதிவுகள் :

2011ல் படித்தவை

2010ல் படித்தவை