எங்கள் மகளுக்கு இரண்டு குழந்தை மருத்துவர்களிடம் தடுப்பூசி போட்டிருக்கிறோம். பெங்களூரில் சில முறைகள் சந்திக்க நேர்ந்த மருத்துவர், அவளைப் படுக்கையில் கிடத்தி அவள் கண் முன்னாலேயே உதவியாளரை ஊசியில் மருந்தேற்ற வைத்து, விரிவான ஆயத்தங்களுக்குப் பிறகு மெதுவாக ஊசி போடுவார். படுக்கையில் கிடத்தப் படும் போதே அவள் கதறத் தொடங்கியிருப்பாள். நாங்கள் கிலுகிலுப்பை ஆட்டிக்கொண்டிருப்போம். அன்றைய தினம் முழுவதும் அதே வேலைதான்.
ஆனால் கோவை மருத்துவர் வேறு ரகம். ஊசி போடுவதில் ஒரு கலைநேர்த்தி இருக்கும். இரண்டு மூன்று பேரை ஒரே சமயத்தில் அறையில் அமர்த்தியிருப்பார். எங்கள் முறை வரும் போது, சிரித்தவாறே வரவேற்பார். குழந்தையை என் மடியில் வைத்துக்கொண்டு அவரருகில் அமரச்செய்வார். அவளது பாதங்களுக்கு முத்தம் கொடுப்பார். என்னோடு பேசிக் கொண்டிருப்பார். நானே எதிர்பார்க்காத ஒரு நொடியில், ஊசி அவளைத் துளைத்திருக்கும். பெரும்பாலும் அவளுக்கு அழவேண்டும் என்கிற உணர்வே வந்ததில்லை. இரண்டாவது ஊசியும் போட வேண்டியிருந்த சமயங்களில் மட்டும் உஷாராகி முன்கூட்டியே அழத்தொடங்கியிருப்பாள். ஆனால், விரைவில் சமாதானமாகி விடுவாள்.
எதையோ சொல்லவந்து நானும் எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன். அயன் ராண்ட் பற்றி சாருவின் இந்த பதிலைப் படித்தபோது ஏனோ இந்த ஊசிக்கதை நினைவுக்கு வந்தது.