உலகின் ஆதிகாவியமாகக் கருதப்படும் கில்காமெஷ் (c. 2100 BCE) தமிழில் க.நா.சு. மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது (சந்தியா பதிப்பகம்). சுமேரிய மொழியில், குனிப்பார்ம் எழுத்துகளில் பொறிக்கப்பட்ட பல கற்கள் கிடைத்து, அவற்றிலிருந்து பலரது பங்களிப்பால் புரிந்துகொண்டு தொகுக்கப்பட்டது இக்காவியம்.
அதிலேயே சமகாலச் சிக்கல்கள் பலவற்றின் வேர்களைக் காணலாம்.
இதன் நாயகன் கில்காமெஷ். ‘எந்தக் கன்னிப் பெண்ணையும் அவள் காதலுக்கு அவன் விட்டு வைப்பதில்லை. பிரபுவின் மனைவியானாலும் சரி, போர் வீரனின் பெண்ணானாலும் சரி – எல்லாரும் அவன் பௌருஷத்துக்குப் பலியாகிவிடுகிறார்கள். ஆனால் இவன் மன்னன். நாட்டுக்குக் காவலன்; அறிஞன்; ஞானி; அழகன்; தீர்மானமுள்ளவன்.’
கில்காமெஷ் பெண்களிடம் அத்துமீறுவதைப் பொறுக்கமுடியாமல், தேவர்கள் அவனுக்குச் சமமான வலிமையுடன் எங்கிடுவைப் படைக்கிறார்கள். ஆனால், எங்கிடுவை ஒரு பெண் மூலமாகவே மயக்கி நகரத்து ஈர்க்கிறான் கில்காமெஷ். எங்கிடுவைத் தோற்கடிக்கிறான். எங்கிடு அவனது உற்ற நண்பனாக மாறுகிறான். ஆனால் அதன் பிறகு கில்காமெஷ் பெண்களிடம் எப்படி நடந்துகொள்கிறான் என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.
கில்காமெஷும் எங்கிடுவும் சேர்ந்து, கிருஷ்ணன்-அர்ச்சுனனை நினைவுபடுத்தும் வகையில், செடார் மரங்கள் நிறைந்த ஒரு காட்டினை அழிக்கிறார்கள். அந்த காட்டின் ரட்சகனாக இருக்கும் ஹம்பாபா ஒரு ராட்சசனாகக் காட்டப்படுகிறான். கில்காமெஷ் ஹம்பாபாவை வீழ்த்த சூரியக்கடவுளான காமாஷின் உதவியைக் கோருகிறான்.
கில்காமெஷ் நூலின் இப்பகுதியில் சில கவித்துவமான வரிகள் உள்ளன.
‘காமாஷ் இரவு உறங்கப் போய்விட்டான். அவன் தாயின் மடியில் வெளிச்சம் நிறைந்த தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு அவன் உறங்குகிறான்.’
காமாஷிடம் கில்காமெஷ்,
“ஹம்பாபாவின் இருப்பிடம் நோக்கி நான் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டேயாக வேண்டும். இந்தக் காரியத்தை என்னால் செய்து முடிக்கமுடியாவிட்டால் ஏன் நீ இந்த எண்ணத்தை என் மனதில் தோற்றுவித்தாய்? நீ எனக்கு உதவி செய்ய மறுத்தால் நான் எப்படி என் காரியத்தில் வெற்றி பெற முடியும்?”
என்று முறையிடுகிறான். காமாஷ் உதவுகிறான். நண்பர்கள் இருவரும் செடார் மரங்களை வெட்டத் தொடங்குகின்றனர்.
/செடார் மரம் விழுகிற சப்தம் கேட்டு விழித்துக்கொண்ட ஹம்பாபா கோபத்துடன் உரத்த குரலில் காடு அதிர, “யாரடா அவன் என் இருப்பிடம் வந்து என் செடார் மரத்தை வெட்டுவது? யாரடா அவன்?” என்று கத்தினான்./
ஹம்பாபா கில்காமெஷுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் சரணடைந்தபோதும், நண்பர்கள் இருவரும் அவனை கொன்றுவிடுகின்றனர். செடார் மரங்களை வெட்டி, வேர்களை எரித்து, எடுத்துச்செல்கின்றனர். மரத்தைக் காக்கப்போரிடும் ‘ராட்சசன்’ நகரங்களைக் கட்டமைக்கும் வீர மனிதர்களிடம் தோற்கிறான்.
பின்னர் இங்கிடுவின் மரணத்துக்குப் பிறகு, கில்காமெஷ் மரணமிலா வாழ்வினை நாடிப் பெரும்பயணம் மேற்கொள்கிறான். மரணத்தை வென்று வாழும் உத்னபிஷ்டிம் என்பனைச் சந்திக்கிறான். உத்னபிஷ்டிம் நோவாவைப் போலவே ஒரு பெரும் பிரளயத்தைச் சந்தித்தவன். கடவுள் எச்சரிக்கை செய்ததால், அவனும் ஒரு படகினைக் கட்டி, அதில் விலங்குகளோடு குடியேறி பிரளயத்திலிருந்து தப்புகிறான்.
உத்னபிஷ்டிம், ‘மரணத்தை வெல்வதிருக்கட்டும்; முதலில் உன்னால் உறக்கத்தை வெல்லமுடிகிறதா பார்’ என்று கூறுவதுபோல், கில்காமெஷை ஏழு இரவுகள் உறங்காமலிருக்கச் சொல்கிறான். அவனோ ஏழ நாட்களையும் உறங்கியே கழிக்கிறான்.
மரணத்தை வெல்வதில் தோல்வியுற்ற கில்காமெஷுக்கு, உத்னபிஷ்டிம் மூப்பினை வெல்லும் ஒரு மலர் கடலுக்கடியில் இருப்பது பற்றிக் கூறுகிறான். அந்த மலரை கடலுக்கடியில் மூழ்கித் தேடி எடுத்துச் செல்கிறான் கில்காமெஷ். ஆனால், அவன் ஏமாந்த வேளையில், அதையும் ஒரு பாம்பு உண்டுவிடுகிறது.
மரணத்தையும் மூப்பையும் வெல்லமுடியாமல் தனது ஊரான ஊருகி திரும்பிய கில்காமெஷ் இந்தக் கதையை கல்லில் பொறிக்கிறான். பின்னர் இறந்துபோகிறான். ‘அவன் மகாபலசாலி – அவன் கைகளில் வீரம் செயல்பட்டது. அவன் செய்யாத தீரச் செயல்கள் இல்லை. ஆனாலும் அவன் மீண்டும் வரமாட்டான்.’
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதன் இயற்கையோடும் நிலையாமையோடும் பொருது கொண்டிருக்கிறான்.