எஸ்.என்.நாகராசன் : காந்தியமும் மார்க்சியமும் சந்திக்கும் புள்ளி

ஜூன் 29, 2015

28-6-2015 அன்று, எஸ்.என்.நாகராசன் குறித்த கருத்தரங்கு கோவையில் நடந்தது. அவரைத் தமது ஆசானாகக்கருதும் கோவை ஞானி, பாமயன், சுந்தரராமன், பொன் சந்திரன் ஆகியோரை, கடந்த ஓராண்டில் வெவ்வேறு தருணங்களில் சந்தித்திருந்தேன். எஸ்.என்.நாகராசனையும் சிலமுறை சந்தித்திருக்கிறேன்; பல மணிநேரம் கட்டிப்போடும் வகையில் செறிவாக உரையாடக் கூடியவர். 88 வயதிலிலும், எல்லோரையும் ஒருங்கிணைத்து ஆயுதங்களை ஒழிக்கவும் இயற்கையைப் பாதுகாக்கவும் ஓர் உலகளாவிய இயக்கம் நடத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை தெறிக்கப் பேசுபவர். இரண்டு வாரங்கள் முன்பே இந்நிகழ்ச்சிக்கு வருமாறு பேரார்வத்தோடு அழைப்புவிடுத்திருந்தார். அதே ஆர்வத்தோடு நானும் சென்றிருந்தேன்.

காலை 10 மணிமுதல் இரவு 9 வரை அரங்கு நிறைந்திருக்கும் அளவிற்கு பல நல்ல, ஆழமான உரைகளைக் கேட்க முடிந்தது. நாகராசனின் கீழை மார்க்சியத்தில் மார்க்ஸ் மிகக் குறைவாகவே தெரிகிறார் என்று கோவை ஞானி கூறினார். எனக்கென்னவோ மார்க்ஸ் விட்ட இடத்தைப் பெருமளவு காந்தி நிரப்பிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. பேசியவர்களில், ஈரோடு ஜீவானந்தத்தைத் தவிர காந்தி-குமரப்பாவின் கருத்துகளோடான ஒப்புமை குறித்து வேறு எவரும் அதிகம் கவனப்படுத்தவில்லை.

எஸ்.என்.நாகராசனைச் சந்தித்தபோதெல்லாம், அவர் காந்தியை வசைபாடாமல் இருந்ததில்லை. “Gandhi was a traitor,” என்பதுதான் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டதும் அவர் சொன்ன முதல் வாசகம். டாட்டா, பிர்லா, பிரிவினை, சுபாஷ் என்று பழகிய சங்கதிகள்தாம். ஆனால், காந்தியின் அரசியலை நிராகரிக்கும் நாகராசனின் பல கருத்துகள் பெருமளவு காந்தியத்தையே ஒத்திருக்கின்றன. முந்தைய சந்திப்பில், அதைக் குறிப்பிட்டபோது ஒரு புன்னகையோடு அவர் ஏற்றுக்கொண்டார். உரையின் போதும், சில கட்டுரைகளிலும் “Industrialize and perish”, “Production by masses” போன்ற காந்தியின் கருத்துகளை மேற்கோள் காட்டவும் செய்தார்.

– கிராமங்களுக்கும், விவசாயத்துக்கும் இயற்கைக்கும் தரும் முக்கியத்துவம்
– மனித நேயமற்ற அறிவியல், நவீன வேளாண்மை, தொழில்நுட்பம் குறித்த எதிர்மறைப் பார்வை
– போராட்டங்களில் பெண்கள், இஸ்லாமியர்கள், தலித்களை முன்னிலைப் படுத்தும் நோக்கு
– ஆயுதப் போராட்டத்தின் மீதான அவநம்பிக்கை, ஆயுத ஒழிப்பு
– உழைப்பவரை அந்நியப்படுத்தாத உற்பத்தி முறைகள்
– தன்னலமற்ற சேவை மனப்பான்மை சார்ந்த அரசியலை வலியுறுத்தல்
– வைணவ மரபு
– தாய்மொழியில் கல்வி, பிற செயல்பாடுகள்
– (காந்தி உள்ளிட்ட) வழக்கறிஞர்கள் மீதான ஏளனம்

மார்க்ஸையும் மாவோவையும் விட காந்தியைக் கூடுதலாகப் படித்தவன் என்கிற முறையில், நாகராசன் முன்வைக்கும் இவற்றிலெல்லாமே எனக்கு காந்தியின் குரலே (குமரப்பாவின் குரலும்) கேட்கிறது. நாகராசனின் இன்றைய கருத்துகளில் அதிகம் தெரிவது மார்க்ஸா, மாவோவா, காந்தியா என்று ஒரு பட்டிமன்றம் வைத்திருந்தால், நான் காந்தி என்றே வாதாடியிருப்பேன். காந்தியிடமிருந்து அவர் மாறுபடும் புள்ளிகளும் (தேசிய இன விடுதலை போன்றவை) இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் அவர் மார்க்சிய அணுகுமுறை மூலமும் தனது அசலான சிந்தனை வாயிலாகவும் தமிழ் வைணவ மரபின் வழியாகவும் காந்தியத்தை அடைந்து, விரிவுபடுத்தி, மார்க்சிய மொழியில் புத்துருக் கொடுத்திருப்பதாகவே கருதுகிறேன்.

சென்ற வாரம், மதுரையிலுள்ள மூத்த காந்தியவாதியான K.M.நடராஜன், அலைபேசியில் அழைத்து நாகராசனின் கருத்தரங்குக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்; அடிக்கடி அவர் நாகராசனைப் பற்றி என்னிடம் பேசுவதுண்டு. தமிழ் தேசியத்தை முன்வைக்கும் அய்யநாதன், தியாகு போன்றவர்களும் நாகராசனைக் கொண்டாடினார்கள்; குணா மீதான அவரது தாக்கம் குறித்தும் பொன் சந்திரன் குறிப்பிட்டார். இந்திய ஒருமைப்பாட்டையும் பண்பாட்டு ஒருமையையும் வலியுறுத்தும் ஜெயமோகன் பட்டியலிட்ட தமிழின் மூன்று ‘முதல் சிந்தனையாளர்’களில் நாகராசன் ஒருவர். ஆஷிஸ் நந்தி அசலான இடதுசாரி சிந்தனையாளர்கள் என்று கருதும் இருவரில் நாகராசன் ஒருவர் என்று ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டார். நாள் முழுவதும் இருந்த பார்வையாளர்களில் ராஜன் குறையும் இருந்தார். இப்படி முரண்பட்ட சிந்தனையுள்ள பலரும் ஒருசேர உரிமை கொண்டாடி மதிக்கும் அபூர்வ சிந்தனையாளர் எஸ்.என்.நாகராசனாகத்தான் இருப்பார்.