ஊரடங்கும் காவல்துறையும்

மார்ச் 27, 2020

ஒவ்வொரு சிக்கல் வரும்போதும் நாம் ஒரே தவறைச் செய்கிறோம். காவல்துறையினருக்கு சர்வ அதிகாரத்தையும் வழங்கி அச்சிக்கலைத் தீர்த்துவிடலாம் என்று நம்புகிறோம். ஒவ்வொரு முறையும் இது புதிய சிக்கல்களுக்கே இட்டுச்செல்லும். இட்டுச்சென்றிருக்கிறது.

வெளியில் வருபவர்களையெல்லாம் காவல்துறையினர் அடித்து நொறுக்கவேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை?

விவசாயிகள் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சவும் ஆடு மாடுகளுக்குத் தீவனம் வைக்கவும் மேய்க்கவும் பால்கறக்கவும் அவரவர் நிலங்களுக்குச் சென்றுதான் ஆகவேண்டும். மருத்துவம் போல், காவல்துறை போல் இதுவும் அத்தியாவசியப் பணிதான். உணவுப்பொருள் விற்பனை அத்தியாவசியம் எனில் உணவு உற்பத்தி எப்படி அத்தியாவசியமாகமற் போகும்.

இவ்வார இறுதிக்குள் எல்லாருக்கும் காய்கறிகள் தீர்ந்துவிடும். கிராமங்களில் ஓரளவு சமாளிக்கலாம் என்றாலும் கூட இன்றைய சூழலில் சந்தைக்கும் நகரத்துக்கும் சென்றுதான் காய்கறிகள் வாங்கவேண்டிய நிலை பல இடங்களிலும் உள்ளது. பலருக்கும் மருந்துகள் தீர்ந்துவிடும். வாங்குவதற்கு வெளியில் சென்றுதான் ஆகவேண்டும். கிராமங்களுக்கெல்லாம் வீட்டு சேவை வந்துசேர்ந்துவிட்டதா?

இன்று பராக்குப் பார்க்கச் செல்பவர்களை அடித்துக் கொல்லுங்கள் என்று நீங்கள் காவல்துறைக்குக் கொடுக்கும் அதிகாரம்தான் பால் வாங்கச் சென்றவரையும் கொன்றிருக்கிறது.

ஒரு காவலர் மனமுடைந்து கண்ணீர் வடித்ததைக் காண நாமெல்லாம் துடித்துப்போகிறோம்.

இன்று பல மாநிலங்களில் இருக்க இடமின்றித் தமது ஊர்களுக்கு நடைபயணமாகவே சென்றுகொண்டிருக்கும் தொழிலாளிகளைக் காவலர்கள் பல்வேறு நூதனமான முறைகளில் துன்புறுத்திக்கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

காய்வண்டிகளை அடித்து நொறுக்கிக்கொண்டிருப்பதையும் காண்கிறோம்.

எங்கள் பகுதியில் ஒரு சின்ன தேநீர் கடைக்காரர் கடையைத் திறந்துவிட்டாரென்றும், காவல்துறையினர் வந்து அவரைச் சூழ்ந்து லத்திகளால் அடித்து, கதறக்கதற இழுத்துச் சென்றதாகவும் கேள்விப்படுகிறோம்.

அமைதிக்காலமானாலும் நெருக்கடி நிலையானாலும் காவல்துறையினருக்கு அத்துமீறும் அதிகாரத்தை ஒருபோதும் நாம் வழங்கக்கூடாது.

தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதை மட்டும் அவர்கள் எடுக்கட்டும்.

மக்கள் சட்டத்தை மதித்து எவ்வளவு பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதைவிட அதிகப் பொறுப்புடனும் பொறுமையுடனும் காவல்துறையும் நடந்துகொள்ள வேண்டும்.

கொரோனா சென்ற பிறகும் இந்த தேசத்தில் நாம் உயிர்வாழத்தான் வேண்டும். நம் எல்லா உரிமைகளையும் நாமே தாரைவார்த்துத் தந்துவிடவேண்டாம்.


கொரோனா குறித்த குறிப்புகள்

மார்ச் 27, 2020

18, மார்ச், 2020

பள்ளிகளை மூடியாயிற்று. மாணவர்களுக்கு மகிழ்ச்சி. எங்கள் பயிலகத்துக்கும் மாணவர்களின் விருப்பத்துக்கு எதிராக விடுப்பு கொடுத்தாயிற்று.

ஆனால் பக்கத்து கிராமத்தில் டாஸ்மாக் கடை எப்போதும் போல் ஜெகஜோதியாய்க் காட்சியளித்தது.

இரு வாரங்கள் முன்பு, பயிலக மாணவர்கள் சிலரது வீடுகளுக்கு இரவு வகுப்பு முடிந்த பிறகு சென்றிருந்தேன். ஏனோ சில வாரங்கள் மாணவர்கள் வராமல் பயிலகம் தடைபட்டிருந்தது. அன்றுதான் வந்திருந்தார்கள். ஒவ்வொரு வீடாகச் சென்றதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ஒருவனது வீட்டில், நடுக்கூடத்தில் அவன் அப்பா மல்லாந்து படுத்துக்கிடந்தார். வாசலில் நாற்காலியிட்டார்கள். அங்கேயே அமர்ந்து கொண்டேன். சத்தமில்லாமல் அந்த மாணவன் வாயிற்கதவைச் சாத்திவைத்தான். பக்கத்து வீட்டிலிருந்தோ கடையிலிருந்தோ தேனீர் கொண்டு வந்தார்கள். பிறரது தந்தையர் அன்று தெளிவாகவே இருந்தார்கள். தாங்கள் படிக்கவில்லை, பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைக்க வேண்டும் என்பது பற்றியே மிகுந்த அக்கறையுடன் பேசினார்கள்.

அடுத்த நாள், “அண்ணா, நேத்து எங்கப்பாவப் பார்த்தீங்களாண்ணா?” என்றான் அவன். “நேத்து ஹால்ல படுத்துட்டிருந்தாரில்ல, அவர்தானே” என்றேன் சங்கடமாக. “ஆமாங்கண்ணா. தினமும் இப்படித்தான்,” என்றான் கூச்சத்துடன். பல சமயங்களில் அவன் வீட்டில் இருந்தால் அவனது அம்மாவை அதிகமாக அடிக்கமாட்டார் என்பதாலேயே அவன் பயிலகத்துக்கு வராமல் இருந்துவிடுவதுண்டு என்று பிற மாணவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்குமேல் என்ன பேச. “சரி, பரவால்ல விடு. நீ தினமும் ஒழுங்கா இங்க வந்துடு.”

சென்ற வாரம் இன்னொரு மாணவன் தனது 5 வயதுத் தங்கையையும் 6 வயது அத்தை பெண்ணையும் அழைத்து வந்திருந்தான். அவனது அம்மா இரு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போயிருந்தார். அத்தை பெண் விருந்துக்கு வந்திருக்கிறாளா என்று கேட்டேன். இல்லை, இனிமேலே அத்தையும் அவரது இரண்டு குழந்தைகளும் இங்கேதான் இருக்கப்போகிறார்கள் என்றான்.
அவனது தங்கை தன் மழலை மொழியில் மேலும் விவரங்கள் தந்தாள். “அண்ணா, அண்ணா, அவங்க அப்பா தினமும் குடிச்சிட்டு வந்து அவங்க அம்மாவப் போட்டு அடிஅடின்னு அடிக்கிறாராம்மா. இந்தப் பொண்ணு ‘இனிமே எங்க அம்மாவ அடிச்சேன்னா நான் இங்க இருக்கவே மாட்டேன்’னு சொல்லிட்டா. இங்கயே வந்துட்டாங்கண்ணா. இனிமே எங்க ஸ்கூல்லதான் படிக்கப்போறா.’

சொல்லிவைத்தாற்போல், இவ்வாரமே இன்னொரு குடிக்கதையையும் கேட்க நேர்ந்தது. ‘எங்க சித்தப்பா எங்க அப்பா வேனை எடுத்துப்போயிருந்தாருங்கண்ணா. லேசா குடிச்சிருந்தாரு. எங்கயோ பலமா மோதி வேன்ல முன்பக்கமெல்லாம் உடைஞ்சு போச்சு. ஈவில்லாம இப்படிப் பண்ணிட்டாரேன்னு எங்கப்பா ரெண்டு நாளா தூங்கவே இல்ல. மில்லுக்கு எப்படி எல்லாரையும் கூட்டிட்டுப் போறது? இனிமே எங்ககூட இருக்கக் கூடாதுன்னு அவங்கள பொள்ளாச்சிக்கே அனுப்பிட்டாங்க.’ கூடவே முன்பு இங்கு வந்துகொண்டிருந்த அவர்களது குழந்தைகளும் சென்றுவிட்டனர்.

கிராமத்தில், (நண்பரின்) தோட்டத்தின் நடுவே, காற்றோட்டமான, சுவரற்ற கூடத்தில் என்ன ஆகிவிடப்போகிறது, பயிலகத்தைத் தொடர்ந்து நடத்தலாமா என்றுகூட ஒரு சபலம் எழத்தான் செய்கிறது. இங்கே வராவிட்டாலும் சிறுசிறு குழுக்களாகச் சேர்ந்துதான் விளையாடப்போகிறார்கள். எனினும், யாருக்கும் நம்மால் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு மேலோங்கி, விடுமுறை விட்டுவிட்டோம். விடுமுறை அறிவித்த பிறகும் நேற்று மாலை எல்லாரும் வந்துவிட்டார்கள். நேற்றைய வகுப்பை மட்டும் எட்டு மணிவரை நடத்திவிட்டு, இன்றுமுதல் கட்டாயம் விடுமுறை, வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று அனுப்பிவைத்தோம்.

பள்ளிகளை மூடலாம்; ஆனால் அரசுக்கும் குடிமக்களுக்கும் டாஸ்மாக் இன்றியமையாதது என்றாகிவிட்டது. குடிகாரத் தகப்பன்களோடு பல குழந்தைகள் முழுநேரமும் இருக்க நேர்ந்திருப்பதை நினைத்தால் கலக்கமாகத்தான் இருக்கிறது.

[நீண்ட பள்ளி விடுமுறையோ பயிலக விடுமுறையோ புதிதல்லதான். பெற்றோர்களின் பங்கை ஆசிரியர்களின் பங்கு விஞ்சிவிடப்போவதில்லைதான். இருப்பினும் இம்முறை இக்கட்டாய விடுப்பால், இவ்விரு வார நிகழ்வுகளால் இந்த உணர்வே மேலோங்குகிறது.

பயிலகம் வருவதை வீட்டிலிருந்து கிடைக்கும் விடுதலையாக நினைப்பவர்கள் எல்லாரும் பள்ளிகளை ஏன் அப்படிக் கருதுவதில்லை என்பதையும் சிந்திக்கவேண்டியுள்ளது.]


20-மார்ச்-2020

சுவரில் எந்த ஆணியும் அசைக்கப்படாமல் பத்திரமாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே, மித்ர.


22-மார்ச்-2020

இன்று கிராமத்தில் இருக்கிறோம். நேற்றிரவு ஓரளவு நல்ல மழை. மின்சாரம் துண்டிக்கப்பட்டது இன்னும் வரவில்லை. இன்று இனி வரும் என்று தோன்றவில்லை. எனது கைபேசியும் மடிகணினியும் விரைவில் அணைந்துவிடும். எனது நேரலைப் பதிவுகளிலிருந்து நீங்கள் தப்பிவிடலாம்.

மழைக்குப் பின்னான அதிகாலைகள் அழகானவை. பறவைகளும் அணில்களும் ஆர்ப்பாட்டமாய் ஒலியெழுப்புகின்றன. கதிரவன் மெல்ல மேலெழுகிறான். நாங்கள் நான்கு சுவர்களுக்குள் இருக்கவேண்டியதில்லை. ஓரெட்டெடுத்து வாசலுக்கு வந்தால், சுவர்களற்ற நிலம் எங்களைச் சூழ்கிறது. நாய்க்குட்டிக்கள் பொன்னனும், பாங்கோவும் கால்மீது தொற்றுகிறார்கள். வெயிலேறியதும், விரைவில் வியர்த்துக் கொட்டப்போகிறது. மின்சாரம், மின்விசிறி இருக்கப்போவதில்லை. மாமரத்து நிழலை நாடிப்போகலாம். கொஞ்சம் படிக்கலாம்.

இன்று நாங்கள் குடியிருக்கும் தோட்டத்தில் நாராயணன் வேலைக்கு வந்துவிட்டார். அவருக்குக் காது கேட்காது; ஆனால் ஊரடங்கைப் பற்றி அறிந்திருந்தார். அதையெல்லாம் பார்த்தால் வேலையாகுமா. ஆடுமாடுகளுக்கு தீவனம் வைக்கவேண்டும். மேயவிடவேண்டும். அதிகாலையிலேயே பால் எடுக்கவருவதாக பால்க்காரர் கூறியிருக்கிறார். அதனால் காலை ஐந்து மணிக்கே வந்து, மாட்டுக்கொட்டகையில் அவரது கயிற்றுக்கட்டிலில் சிறிது நேரம் படுத்திருந்திருக்கிறார். வழியில் பொள்ளாச்சியில் இருந்து வரும் இன்னொரு விவசாயி, அவரது தோட்டித்திலிருந்து பாலெட்டுத்துச் செல்வதற்கு வரும்போது சந்தித்ததாய்க் கூறினார். ‘அவருக்கு 30 லிட்டர் பால் கிடைக்கும் – அத்தனையும் எப்படி வீணாப் போக விடறது. எடுத்துட்டுப் போய் பொள்ளாச்சில எல்லாருக்கும் ஏழு மணிக்கு முன்னாடி குடுத்துருவார்.’ கிராமத்தில் பிறருக்கு அந்த நல்வாய்ப்பு இல்லை…அவர்களது பால்க்காரர்கள் பால்கறக்க வர இயலாது என்று கூறிவிட்டார்கள். கிராமத்தில் மற்ற வீடுகளுக்குப் பாலை இலவசமாக வழங்கிவிடுவார்கள்.

நமது நற்தலைவர்கள் இந்தியாவின் பாதிக்கும் மேலானோர் இன்னும் கிராமங்களில் இருப்பதை மறந்துவிட்டார்கள். கிராமங்களுக்கென்று தனித்த அணுகுமுறைகள் தேவைப்படும். வீட்டில் குடிகாரப் மகனோடோ தந்தையோடோ அடைந்துகிடப்பதைவிட தோட்டத்தில் தனியே வேலைசெய்யும்போது நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கக்கூடும்.

என் மனைவியும் எங்கள் தோட்டத்துக்கு நடந்து சென்றுவிட்டாள். மழைக்கு அடுத்த நாளை அவள் ஒருபோதும் தவறவிடவிரும்புவதில்லை – கொஞ்சம் களையெடுக்கலாம், எங்கள் தொல்லையின்றி அவளது பறவைகளோடு காலங்கழிக்கலாம். நீங்களென்னவோ நான்தான் எங்கள் வீட்டின் கலகக்காரன் என்று நினைத்திருக்கிறீர்கள்.

(இது ஊரடங்கை மீறுவதற்கான அழைப்பெல்லாம் இல்லை. எங்கள் வழியில் எங்களை நாங்கள் தனிமைப்படுத்திவிட்டோம். எல்லாரும் எச்சரிக்கையாக இருங்கள். இன்று மட்டுமன்றி, இனி வரும் வாரங்களிலும் இயன்றவரை தனித்திருங்கள். எனது எச்சரிக்கையின்மையால், கரோனாவைத் தாங்கிச்சென்றுப் பிறருக்குப் பரப்பிவிட்டால், ஒருபோதும் என்னை நான் மன்னிக்கமாட்டேன். மளிகை, காய்கறி வாங்க வெளியில் செல்லவேண்டியிருக்கும்போது, இந்த அச்சம்தான் மிகவும் தொந்தரவு செய்கிறது.)


24-மார்ச்-2020

மறுபடியுமா/மீண்டுமா/அடக் கடவுளே/once again?/not again/OMG போன்ற சொற்களும் உணர்வுகளும் இன்று எத்தனை பேர் மனதில் தோன்றின?



அரசியல் குறள்

மார்ச் 27, 2020

நீண்ட நாள்களுக்குப் பிறகு சமகாலக் கட்சியரசியல் பற்றி எதுவும் குறிப்பிடாமல் திருக்குறள் குறித்து இவ்வாரம் ஒரு நீண்ட உரையாற்றினேன். வள்ளுவன் அரசியல் பற்றிச் சொன்ன சில குறள்களை மட்டும் சொல்லிவைத்தேன்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். (546)

இயற்றலு மீட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. (385)

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம். (386)

முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும். (388)

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கு முலகு. (389)

எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்ததாற் றானே கெடும். (548)

தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. (444)

இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். (448)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். (113)

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து. (551)

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்கும் படை. (555)

குடிதழிக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கு முலகு. (544)