தமிழனுக்குத் தமிழனே சாலும்

ஜூன் 29, 2011

தமிழன் மடிந்தான்.

தமிழன் பிடிவாதமாய்த்
தப்பவிடாமற் தடுக்கத்
தமிழன் மடிந்தான்.
தமிழன் கைகாட்டித்
துணைபோகத்
தமிழன் மடிந்தான்.
தமிழன் கைகட்டி
வாளாவிருக்கத்
தமிழன் மடிந்தான்.
சில தமிழர் மாற்றான்
கைப்பாவையாய்ச் சுழலத்
தமிழன் மடிந்தான்.
சில தமிழர் கை மையில்
கருத்தாயிருக்கத்
தமிழினம் மடிந்தது.
தமிழனுக்குத் தமிழனே சாலும்.
ஒன்னார் வழுக்கியும் கேடுறுவான்.

கெடுப்பார் கெடுக்கக்
கேட்கவும் வேண்டுமோ
நம்மிடரின் கொடுமையை?

கண்டோம் நாம்.

கண்ணீரும் கவிதையும்
குற்றவுணர்வின் குறுகுறுப்பும்
இயலாமையின் ஆற்றாமையும்,
முழுவதும் அறியாமையின் ஆறுதலும்
மட்டும் நம் கைவசம்.


திட்டு

ஜூன் 29, 2011

வீட்டுக்குள்

சைக்கில் ஓட்டும்போது

எச்சில் துப்பினாள்

புதிதாய் பள்ளிசெல்லத்

துவங்கியிருக்கும் மகள்.

“என்ன பழக்கமிது?”

கோபமும் செல்லமுமாய்

எப்போதையும்விடக் கடினமாய்க்

கடிந்து கொண்டேன்.

அலுவலக அலுப்பு.

பாவம்,வீறிட்டழுதாள்.

“அம்மா! அப்பா திட்றாங்க.

சைக்கில் ஓட்டறேன்னு…”


பிழைத்தவரை எண்ணிப் பரிதாபப்படுகிறேன்

ஜூன் 20, 2011

பேருந்து விபத்தில்

37 பேர் மரணம்.

ஏனோ,

மடிந்து போனவர்களைவிட

பிழைத்தவரை எண்ணிப் பரிதாபப்படுகிறேன்.

பயணிகள் வரக் காத்திருந்தவர்களை.

சாவின் கறையைக்

கழுவமுடியாமற் தவிக்கும்

அந்த ஓட்டுனரை…


மறந்துபோன கவிதை

ஜூன் 20, 2011

அன்றிரவு
உறக்கத்தோடு உறவாடிக்கொண்டிருந்தபோது
ஒரு கவிதை படைத்தேன்.
ஆழ்மனதில்.
விடிந்ததும் பதிந்து கொள்ளலாமென்று
உறங்கிப் போனேன்.
எழுந்ததும்
கவிதை எண்ணியது
நினைவுக்கு வந்தது.
என்ன கவிதை
எதைப்பற்றிய கவிதை
எதுவுமே நினைவிலில்லை.
எவ்வளவு பாய்ந்தும் தேடியும்
உள்ளவானில் ஒரு மின்னல்கீற்றும்
கிட்டவில்லை.
என் மிகச் சிறந்த கவிதை அது.
சிறந்த கவிதை எப்படி
மறந்து போகும்?
குதர்க்கம் வேண்டாம்.
மிகச் சிறந்த கவிதை அது.

—————-

பின்னொரு நாள்
மறந்து போன கவிதை
நினைவுக்கு வந்தது.
நினைவுக்கு வராமலே
இருந்திருந்தால்
மிகச் சிறந்த கவிதையாகவே
இருந்தருக்குமோ?


விசிறி

ஜூன் 20, 2011

ஒரு தெள்ளிய இரவில்
மரம் நிலம்நோக்கித்
தனக்காக மட்டும்
விசிறி வீசுவதைக்கண்டு
வருந்தி
விண்மீன்களுக்குத் தன்
விரல்களால் விசிறினாள் அவள்.
எதிர்பாராமல் காற்றுபட்டதும்
சட்டென்று கண்சிமிட்டிற்று
ஒரு நட்சத்திரம்.
ஐ!


மகிழ்மலர் – ஓர் அரும்பெயரின் சிறுபயணம்

ஜூன் 20, 2011

‘மகிழ்மலர்’ என்று பெயர் வைத்ததென்னவோ வைத்துவிட்டோம். அவள் பிறந்தவுடன், ‘அவள்’ என்றறிந்தவுடன்.
பின் எத்தனை கேள்விக்குறிகள், ஆச்சர்யக் குறிகள்!
பெயர் கேட்டு நான் சொன்னவுடன், “oh, what else should I have expected from you”, என்றான் நீண்ட நாட்களுக்குப்பின் சந்தித்த தமிழ் நண்பன்.
பொருள் கேட்டு நான் சொன்னவுடன், அற்புதம் என்றனர் தமிழறியாத நிறைய நண்பர்கள்.
“ஏதோ சமஸ்கிருதச் சொல்லோடு ‘ழ’ சேர்த்து தமிழாக்கியாக்கியிருக்கிறார்கள்” என்று ஆணித்தரமாய் அடித்துச்சொன்னார் ஒரு மலையாள நண்பனின் தந்தை.
“After growing up, she is going to curse you for keeping such a complex name”, என்றனர் பெயரை உச்சரிக்கமுடியாத சில நண்பர்கள்.

இத்தனைக்கிடையிலும், ஆனந்தம் தருவன:

என் இரண்டரை வயது மகளிடமிருந்து வரும் இந்தச் சொற்கள்:
“My name is Mahirl Malar KN”.  (”zh’ என்பது ‘ழ்’ என்பது யாருக்குப் புரியும்?)

“உன்னை மகிழ்னு கூப்பிடலாமா, வேறபேரு வைச்சுக் கூப்பிடலாமா?”
என்ற கேள்விக்கு, அவள் கோபமாய்த்தரும் பதில்:
“இல்லம்மா! மகிழ்னே வைச்சுக்கலாம்”.

மலர் மலர் என்றழைத்துக்கொண்டிருந்த
அவளது பஞ்சாபித் தோழி,
(அவள் அன்னைக்கு வாயில் நுழையாததால்)
ஒரு நாள் நாவை மடித்து ‘மகிழ்’ என்றழைத்தபோது.

அவளது பள்ளிப்பையில் அவள் பெயருக்கருகில் smiley போட்டு மலர் போட்டதும்
அவளால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தபோது.

சமஸ்கிருத அகராதியில் மகிழ் என்ற சொல்லுக்கான வேர்கள் எதுவும் இல்லாததைக் கண்ட போது.