ஈழப்போர் – தமிழக அரசியவாதிகளின் போர்வை

ஒக்ரோபர் 15, 2008

தமிழகத்தில் பிரச்சனைகள் வலுக்கிற போதெல்லாம், ஈழப்போர்வைக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள் நம் அரசியல் தலைவர்கள். ஈழப்போர் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் மூர்க்கமாய் நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் நம் தலைவர்களுக்கு ஐந்தாண்டுக்கொருமுறை மட்டும் இந்தப் போர்வை தேவைப்படுகிறது. இந்து நாளிழதளில் குறிப்பிட்ட மாதிரி இது Tamil Chauvinism எல்லாமல்ல; அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல்.

தொடர் மின்வெட்டால் தமிழ்நாடே தவித்துக்கொண்டிருக்கும் போது, அதற்கான தீர்வு காணும் திறனும் அற்று, பிரச்சனைக்கான காரணங்களையேனும் தெளிவாக விளக்கும் துணிவுமற்று, மக்கள் கவனத்தை ஈழத்தின் பக்கம் திருப்புவது எதற்காக? இந்தத் தடங்கலை ஒரு வாய்ப்பாக மாற்ற முனையாமல், நம் அரசியல் தலைவர்களின் இந்த நடத்தை வெறும் திசைதிருப்பல் முயற்சியா, அல்லது, ஈழ மக்கள் மீது திடீரென எழுந்த இரக்கமா, அல்லது,  இக்கட்டில இருக்கும் ஒரு தீவிரவாத அமைப்பைக் காக்கும் முயற்சியா? உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு பொருளாதாரச்சரிவு இந்தியாவையும் நெருங்கிக்கொண்டிருக்கிற வேளையில், மத்திய அரசின் நெற்றியில் துப்பாக்கிவைப்பது மட்டமான, பொறுப்பற்ற அரசியல்.

விடுதலைப் புலிகள் தம் இரக்கமற்ற வன்முறையைக் கைவிடும்வரை ஒரு பயங்கரவாத இயக்கமாகத்தான் கருதப்படுவார்கள்; கருதப்படவேண்டும். சிங்கள அரசு வன்முறையை நிறுத்தட்டும், நாங்கள் நிறுத்துகிறோம் என்கிற பழைய வாதம், அகிம்சையின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய இந்த மண்ணில் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது; கூடாது.   நிலையான தீர்வு ஒருகாலும் தீவிரவாதத்தால் பெற முடியாது. 

பல்லாண்டுகால பயங்கரவாதம் சாதித்ததைவிட, ஒரு மாத அமைதிப்போர் காஷ்மீர் குறித்த இந்திய மக்களின் (நான் உட்பட)  எண்ணத்தைப் பெரிதும் மாற்றியதை அண்மையில் கண்டோம். ஈழத்தமிழர்கள் ஆயுதங்களையும், ஆயுதமேந்தத் தூண்டுகற இயக்கங்களையும் துறந்து, தீர்வுகளை அணுக வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஓர் அகிம்சை இயக்கத்திற்கு இந்திய அரசு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே செவிசாய்த்தே தீரும்.

அதுவரையில் ஈழப்போர், தமிழகத்தின் நெருக்கடி நேரங்களில்மட்டும் இங்கு மேலோட்டமாய் கவனிக்கப்படும். மத்திய அரசுக்குக் கலைஞர் விதித்திருக்கிற இரண்டு வார கெடு, அதற்குள் பருவமழை வந்து மின்வெட்டு நின்றுவிடும் என்கிற நம்பிக்கையில்தானோ?


பாரதி – ஆங்கிலத்தில்

ஒக்ரோபர் 13, 2008

பாரதியின் உணர்ச்சி வேகத்தை ஆங்கிலத்தில் அடக்கி, வெளியுலகிற்கு வெளிச்சம் போடுவதில், என் சில முயற்சிகள்:

  1. நல்லதோர் வீணை
  2. தேடிச் சோறு நிதந்தின்று
  3. அஃகினிக் குஞ்சு

நல்லதோர் வீணை – ஆங்கிலத்தில் மீட்டினால்!

ஒக்ரோபர் 7, 2008

தாகூரைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சிக்கும் போது தோன்றியது, ஏன் தாகூர் அளவிற்கு, பாரதி கவனிக்கப் படவில்லை? நல்ல மொழியாக்கம் இல்லை என்பதாலா? தாகூரின் கவிதையின் சாரத்தை ஆங்கிலத்தில் கண்டு என்னால் தமிழில் ஓரளவு தர முடியும்போது, பாரதியின் படைப்புகளையும் உலகுக்கு அறிமுகப்படுத்த இயலாதா?

தாகூருக்கு ஒரு W.B.Yeats, R.K.Narayanக்கு ஒரு Graham Greene மாதிரி பாரதிக்கு…?

இதோ என்னால் இயன்ற எளிய முயற்சி. இன்னும் வல்லமை மிக்கவர் கரங்களில் இந்த வீணை மேலும் அழகாய் மீட்டப்படக் கூடும்.


நான் கடவுள்! (கீதாஞ்சலி – 4)

ஒக்ரோபர் 6, 2008

நான் பயணித்த பாதை நெடுந்தூரமானது! நெடுநாள் எடுத்தது!

காலையின் முதல் ஒளி துளித்த போது, என் தேரில் கிளம்பினேன். பல உலகங்களில் பயணித்தேன், பல கிரகங்களில், விண்மீன்களில் என் காலடி பதித்தேன்.

ஒரு நெடுந்தூரப் பயணம்தான் உன்னை உனக்கு மிகமிக அருகே அழைத்து வருவது! கடும் பயிற்சிதானே ஓர் எளிய ராகத்திற்கு உன்னை வழிநடத்திச்செல்கிறது?

ஒரு பயணி ஒவ்வொரு அந்நியக் கதவையும் தட்ட வேண்டியிருக்கிறது; அகிலமெங்கும், ஆகாயமெங்கும் அலைந்தபின் தான், இறுதியில், உள்ளிருக்கும் கோயிலை அடைய முடிகிறது.

என் விழிகள் வான்வெளியெங்கும் தேடியபின், இமைமூடினேன். பின் கூறினேன், ‘ஓ! இங்கே இருக்கிறாயா நீ!’

‘எங்கே?’ என்கிற கேள்வியும் கூச்சலும் ஆயிரம் கண்ணீர் ஓடைகளாய் உருகி உலகைச் சூழ்ந்தன, ‘நானே’ என்கிற உறுதி வெள்ளத்தில்!

 

தாகூர் எழுதியதாய் நான் புரிந்து எழுதியது (my interpretation of a verse in Gitanjali)!


கீதாஞ்சலி – 3

ஒக்ரோபர் 6, 2008

விடு! ஜபித்தலையும், ஓதுதலையும், ருத்ராட்சம் உருட்டுதலையும் விட்டுவிடு!

தனிமையில், கோயிலின் இருண்ட மூலையில், கதவுகளை அடைத்துக் கொண்டு, யாரை வணங்கிக் கொண்டிருக்கிறாய்?

திற விழி! உன் கடவுள் உன் முன்னே இல்லை என்பதை அறி!

எங்கே, அந்த உழவன் கடும் நிலத்தைப் பிளந்து உழுதுகொண்டிருக்கிறானோ, அங்கே இருக்கிறான் உன் கடவுள்.

எங்கே, அந்த ஏழை கற்களை உடைத்துச் சாலை அமைக்கிறானோ, அங்கே இருக்கிறான் உன் கடவுள்.

அவர்களோடு வெயிலில் காய்கிறான், மழையில் நனைகிறான்; அவனது உடை கிழிந்து, புழுதி படிந்துகிடக்கிறது.

உன் காவி உடைகளைக் களைந்து, அவனைப்போல் நீயும், புழுதியில் இறங்கி வா!

முக்தியா? மோட்சமா? எங்கே கிடைக்கும் அந்த மோட்சம்? நம் கடவுளே, ஆனந்தமாய் ஆக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான்; அதன் மூலம் நம்மோடு பிணைந்திருக்கிறான்!

உன் தவங்களைத் துறந்து வா! அந்தப் புனித நறுமலர்களை எறிந்து வா!
உன் உடைகள் கலைந்து, கிழிந்து, கறைபடிவதால் என்ன கேடு நிகழ்ந்துவிட முடியும்?
அவன் உழைக்கும் போது அவனை எதிர்கொள்! உன் நெற்றி வியர்வையில் அவனைக் கண்டுகொள்!
– தாகூர்
(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)
 
 

 

 


கீதாஞ்சலி -2

ஒக்ரோபர் 6, 2008

எங்கே மனதில் அச்சமில்லையோ, தலை நிமிர்ந்துள்ளதோ,

எங்கே கலைச்செல்வங்கள் கட்டற்றுக் கிடக்கின்றனவோ,

எங்கே குறுகிய சுவர்களால் சமுதாயம் சிதைக்கப்படாமல் உள்ளதோ,

எங்கே வாய்மையின் ஆழத்திலிருந்து வார்த்தைகள் பிறக்கின்றனவோ,

எங்கே விடாமுயற்சி தன் கரங்களை முழுமையை நோக்கி நீட்டுகின்றதோ,

எங்கே பழம்பழக்கம் என்கிற பாழும் பாலைவனப்புழுதியில் காணாமற்போகாமல், தெள்ளிய நீரோடையான பகுத்தறிவு பாய்கிறதோ,

எங்கே விரிந்த சிந்தனையும், செயல்வேகமும் கொண்டு மனம் முன்னே நடத்தப்படுகிறதோ,

அங்கே, எந்தையே, அந்தச் சுதந்திர சொர்க்கத்தில், என் நாடு விழிக்கட்டும்.

– தாகூர்

(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)


கீதாஞ்சலி

ஒக்ரோபர் 6, 2008

என் காதலா, எங்கே எல்லோருக்கும் பின்னே நிழலுக்குள் மறைந்து நிற்கிறாய்?

உன்னை வெறும் வெறுமையாய் நினைத்து, புழுதியில் தள்ளித் தாண்டிச் செல்கிறார்களே!

உனக்காக நான் கடைபரப்பிக் காத்திருக்கிறேன். எல்லோரும் ஒவ்வொன்றாய், உனக்கான, என் பூக்களை எடுத்துவிட்டார்கள்.

காலை கடந்துவிட்டது. மதியமும் தான். மாலையின் நிழலில் என் கண்கள் சொருகக் காத்திருக்கிறேன்.

கடந்து செல்கிறவர்கள் என்னைக்கண்டு புன்னகைத்து என்னை நாணத்தால் நிரப்புகிறார்கள். பிச்சைக்காரியைப் போல சேலையால் முகத்தை மறைத்து அமர்ந்துள்ளேன். என்னதான் வேண்டும் என்று கேட்கிறவர்களுக்கு, முகத்தைத் தாழ்த்தி, விடையுரைக்க மறுக்கிறேன்.

ஓ! எப்படிச் சொல்வேன்? உனக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை. எனைக்காண வருவேன் என நீ வாக்களித்திருப்பதை.

ஓ! எப்படிச் சொல்வேன்? உனக்கு வரதட்சனையாய் என் வறுமையை மட்டுமே வைத்திருக்கிறேன் என்பதை.

ஆ! என் இதயத்தின் ஆழங்களில் இந்தப் பெருமையை மறைவாய் அணைத்துக்கொள்கிறேன.

புல்வெளியில் அமர்ந்து உன் வருகையைக் கனவு காண்கிறேன். பொற்கொடி பறக்க, ஒளிவீசி, வரும் உன் தேர் கண்டு பிரமித்து வாய்பிளக்கிறார்கள். வெட்கத்தோடும், பெருமையோடும் படபடத்து நிற்கும் என்னைப் புழுதியிலிருந்து அள்ளி, அணைத்து, உன் அருகில் அமர்த்திக்கொள்கிறாய்.

ஆனால் நேரம் சறிந்துசெல்கிறது. ஆர்ப்பரிப்போடு நிறைய ஊர்வலங்கள் கடந்து செல்கின்றன.  உன் தேர் வரும் ஓசை இன்னும் செவிகளில் விழவில்லை.

நீ மட்டும்தான் அந்த நிழலுக்குள் மறைந்து நிற்பாயா? நான் மட்டும்தான், வீண் ஏக்கத்தால், இதயம் தேயக் கண்ணீரோடு காத்திருப்பேனா?

– தாகூர்

(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)