கோவையில் செயல்பட்டு வரும் அருவி அமைப்பினர் இலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த பல தலைப்புகளில் நீண்ட உரைகளை ஏற்பாடு செய்துவருகின்றனர். சென்ற ஞாயிறன்று, என்னை உரையாற்ற அழைத்திருந்தனர்.
நிறைய நண்பர்கள், உறவினர்கள் குழுமியிருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றியது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். வித்தியாசமான அனுபவம்.
‘காந்திய ஒளியில் சில பயணங்கள்’ என்ற பரந்த தலைப்பை எடுத்துக்கொண்டதில், நிறைய புத்தகங்களுக்குள் பயணமும், மீள் பயணமும் செய்ய முடிவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இதைச் சாக்காட்டி, மனைவியிடம் நிதியொதுக்கீடு பெற்று, நீண்ட காலமாக வாங்க நினைத்திருந்த ஜெ.பி. குறித்த ஒரு வரலாற்றுநூலையும், போனஸாக பல வருடங்களுக்கு முன் தண்ணீரில் நனைந்து வீணாகப்போன Complete Works of Shakespeare புத்தக்கத்துக்குப் பதிலாக இன்னொரு பிரதியையும் வாங்க முடிந்தது. (ஷேக்ஸ்பியருக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக்கூடாது)
இந்நிகழ்ச்சி குறித்து ஒரு விரிவான குறிப்பை எழுதிய நண்பர் சுரேஷுக்கும், ஒருங்கிணைத்த அருவி நண்பர்களுக்கும், நெகிழ்ச்சியான அறிமுக உரையாற்றிய எழுத்தாளர் சு.வேணுகோபாலுக்கும், வந்திருந்த பிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
தனது முகநூல் பக்கத்தில் வெ.சுரேஷ் எழுதிய பதிவு:
“காந்திய ஒளியில் சில பயணங்கள் கண்ணன் அவர்களின் உரை:
அப்பா சாஹேப் பட்வர்தன் என்ற பெயரை நான் இன்று காலை வரை கேள்விப்பட்டதில்லை.அல்லது சுத்தமாக மறந்திருக்கிறேன்..அவர் காந்தியோடு பணியாற்றிய காங்கிரஸ்காரர். இவருக்காக காந்தி ஒரு நாள் உண்ணா விரதமிருந்திருக்கிறார். ரத்னகிரி சிறையில்,காந்தியோடு இருந்தபோது, சிறையில், மலமள்ளும் பணியைத் தனக்கு வழங்கக் கோரி கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால் அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. அந்தப் பகுதியில், மலம் அள்ளும், பணியைச் செய்யாத,மஹர்(தலித்) இனத்தை சேர்ந்தவர்களே இருந்ததால், வேறு பகுதிகளில் இருந்து பங்கி வகுப்பு தலித்துகளை கொண்டு வந்து சிறையில் மலம் அள்ளும் பணியை செய்திருக்கிறார்கள்.இதை எதிர்த்துதான், அப்பாசாஹெப் பட்வர்தன் அந்தப் பணியைத் தனக்கு வழங்குமாறு கேட்டிருக்கிறார்.அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வந்தபோது அதனை எதிர்த்து உண்ணா விரதத்தை தொடங்கியிருக்கிறார். அவரின் இந்த செயலை ஆதரித்துத்தான், காந்தியும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதமிருந்திருக்கிறார். இந்த அப்பாசாஹெப் பட்வர்தன்,பிராமணர்களிலேயே மிகவும் உயர்ந்த வகுப்பாக தம்மை கருதிக் கொள்ளும், சித்பவன் பிராமணர் . அவர் மேலான காந்தியின் பாதிப்பு இவ்வளவு தூரம் இருந்திருக்கிறது.இந்த நிகழ்வை, இன்று முதல் முறையாக, கோவை அருவி, அமைப்பினர், ஒருங்கமைப்பு செய்த்திருந்த “காந்திய ஒளியில் சில பயணங்கள் என்ற ,நிகழ்ச்சியில், நண்பர் ,கண்ணன் வாயிலாகக் கேட்டு மெய்சிலிர்த்து அமர்ந்திருந்தோம். ,இவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற பல உயர் வகுப்பினர், காந்தியின், கருத்துக்களால், தம்மை மாற்றிக் கொண்டனர்.. கண்ணனின் காந்திய ஒளியில் சில பயணங்கள் என்ற அருமையான உரையில், மேலே சொன்ன பட்வரதன், வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயண், கிருபளானி, ராஜேந்திர பிரசாத்,வ.வே .சு அய்யர்,கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதியினர்,,இன்னும் பலரின் வாழ்க்கைப் பயணங்கள் அடைந்த மாற்றத்தை விவரித்தார்,காந்திய ஒளியில் சில பயணங்கள் எனும்போது, காந்தியின், பயணங்கள் அவரது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள், மற்றும், காந்தியின் தாக்கத்தால், பிறரதுவாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று இரண்டு விதமாக கண்ணன் பிரித்து அடையாளப்படுத்தியது,வெகு சிறப்பாக அமைந்தது. கூடவே, சில காணொளிகளையும் காட்டினார் . நவகாளி யாத்திரையின் காணொளியில், பின்னணியில் வரும்,அந்த வங்கப்பாடல், மனமுருக வைத்தது.(அதன் இணைப்பை கண்ணன் வழங்கிடக் கோருகிறேன்.),
வினோபா பாவே, ஜேபி.போன்றவர்களின் மகத்தான பணிகளை நினைவு கூர்ந்த கண்ணன்,பொது புத்தியில் உறைந்திருப்பதைப் போல அவர்களின் வாழ்வும் பணியும், தோல்விகரமானது அல்ல என்று தீர்மானமாக சொன்னார். தமது பூதான் இயக்கத்தின் மூலம்,வினோபா, 44 லட்சம்,ஏக்கர்,நிலத்தைப் பெற்று மறு வினியோகம் செய்தார் என்பதும், தன்னிடமிருந்த ஒரு ஏக்கரில் மனமுவந்து கால்பங்கு கொடுக்க முன்வந்த எளிய விவசாயிகளும் அடக்கம் என்ற தகவல் பிரமிப்பையம், நேர்கிஸ்ச்சியையும் அளித்தது.அதோடு, தற்காலத்தில், காந்திய ஒளியில், பயணம் செய்வோரைக் குறித்தும், ஒரு சிறிய அறிமுகத்தை செய்து வைத்தார். லட்சியவாத காலமெனும்,காந்திய சகாப்தமெனும்,அந்த உன்னதப் பெருவெளியில், இரண்டு மணி நேரங்கள் எம்மை, உலவ வைத்த நண்பர் கண்ணன் அவர்களுக்கும், நிகழ்வினை, ஏற்பாடு, செய்திருந்த அருவி அமைப்பினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். கண்ணன் உரைக்கு முன் திரையிடப்பட்ட, பேப்பர் பேக்,புத்தகங்களின் வரலாறு குறித்த ஆவணப் படமும் அற்புதம். உரையின் இறுதியில், அமைந்த கேள்வி பதில் நேரத்தில் வழக்கம் போல வந்த சில சம்பந்தமில்லாத கேள்விகளுக்கும், கண்ணன் பொறுமை இழக்காமல், நிதானமாக தெளிவாக பதில் சொன்னதும், பாராட்டத்தக்கது. கூட அமர்ந்திருந்த நண்பர் செந்தில்குமார் தான் பதட்டமடைந்தார்.நண்பர்,இன்னொரு(விழுப்புரம்) செந்தில் குமார் அர்த்தமுள்ள ஒரு கேள்வியை முன்வைத்தார்.