குழந்தைகளுக்கான புத்தகங்கள்

ஜனவரி 9, 2017

2016ல் படித்தவை என்று நானும் நண்பர்களும் பெரிய பட்டியல்கள் போடுவததைப் பார்த்துவிட்டு மகிழ்மலர், தானும் ஒரு பட்டியல் போட்டு வைத்திருக்கிறாள். மகிழின் சமவயதுக் குழந்தைகளுக்கும் இப்பட்டியல் பயன்படும் என்பதால் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

1. கு. அழகிரிசாமி சிறுகதைகள்
– அன்பளிப்பு
– இருவர் கண்ட ஒரே கனவு
– சாப்பிட்ட கடன்
– ராஜா வந்திருக்கிறார்

[இக்கதைகள் எவையுமே சிறுவர்களுக்காக எழுதப்பட்டவை என்று சொல்லமுடியாது. ஆனால், சிறுவர்களும் படிக்கக்கூடியவை. சாப்பிட்ட கடன் கதையின் முதல் பாதி அவளுக்குச் சற்றே சிரமமாக இருந்தது. அதன் பின் பாதியையும், மற்ற மூன்று கதைகளையும் மிகவும் ரசித்துப்படித்தாள்.]

2. குட்டி இளவரசன் (பிரெஞ்சு நாவல்: அந்த்வான் து செந்த் எக்சுபெரி – தமிழில், வெ.ஸ்ரீராம்)
[குக்கூ நண்பர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்தது. முந்தைய ஆண்டுகளில் இதை நான் அவளோடு சேர்ந்து வாசித்தபோது, அவ்வளவு ஈர்ப்பாக இல்லை; இவ்வாண்டு, அவளே படிக்கும்போது, ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது; நான் ரசித்த பல இடங்களை அவளாலும் ரசிக்க முடிந்தது – உதாரணமாக, ஒரு வேற்றுக் கிரகத்து வியாபாரி விண்மீன்களை எண்ணிக்கொண்டு, அவற்றைத் தனது சொத்து என்று உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கும் பகுதி]

3. பனி மனிதன் (நாவல் – ஜெயமோகன்)
[நண்பர் செந்தில் கொடுத்தது. முதல் சில அத்தியாயங்களைப் படித்துவிட்டு, அவளுக்குப் பிடிக்குமோ என்கிற சந்தேகத்தோடுதான் அவளுக்குத் தந்தேன். மிக சுவாரசியமாகவும் வேகமாகவும் படித்து முடித்தாள். நாவலுக்கு இடையிடையே உள்ள பெட்டிச் செய்திகளைப் படிப்பதற்குக் கொஞ்ச காலம் பிடித்தது. ஆனால், அவற்றைப் படிப்பதற்கான ஒரு பிடி கிடைத்தபின், ‘எப்படிப்பா இவருக்கு இதெல்லாம் தெரியும்,’ என்று வியந்துகொண்டே படித்தாள்.]

4. வான்வெளிக் கொள்ளையர் (முத்து காமிக்ஸ்)
[இதுவும் நண்பர் செந்தில் கொடுத்தது. ‘லாரன்ஸ் தப்பிச்சிடுவாரா?’ என்று அடிக்கடி கேட்டபடியே விறுவிறுப்பாகப் படித்தாள்.]

இச்சிறு பட்டியலில் சற்றே பெரிய குழந்தைகள் படிக்கக்கூடிய புத்தகங்கள் என்று அவள் கருதுபவை, அதிலும் அப்பாஅம்மாவின் துணையின்றிப் படித்தவை மட்டுமே இடம்பெற்றுள்ளன. குட்டிக்குட்டி படக்கதைகள் இல்லை…பாரதி புத்தகாலயம், NBT பதிப்பித்த குட்டி நூல்களில் அநேகமாக அனைத்தையும் அவளுக்காகவும் எங்கள் பயிலகத்துக்காகவும் வாங்கியுள்ளோம்; பலவற்றை அவள் படித்தும்விட்டாள். சுப்பாண்டி கதைகள் (தொகுதி 1)தான் அவளாகப் படித்த முதல் பெரிய புத்தகம். அதனை அதற்குப்பிறகும் அவ்வப்போது மறுவாசிப்பு செய்கிறாள்.

எங்கள் பயிலகத்து மாணவர்கள் நிறைய வண்ணப்படங்களுடன் கூடிய சிறிய குழந்தைப் புத்தகங்களைப் புரட்டுவதையே விரும்புகின்றனர். தெனாலிராமன் எல்லா வயதினரிடமும் மிகப் பிரபலம். பெரிய வயது(12-15) மாணவர்கள் அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகள் படிக்கவேண்டும் என்று அவ்வப்போது எடுக்கின்றனர்…இதுவரை யாரும் அதிக பக்கங்களைக் கடக்கவில்லை. DK’s Visual Dictionary அவர்கள் அடிக்கடி நாடும் இன்னொரு புத்தகம்; பெரும்பாலும் புரியாமலே படம்பார்ப்பார்கள்; சில சமயம் விளக்கச்சொல்லிக் கேட்பார்கள். தமிழில் அது போல் கிடைத்தால், பிரமாதமாக இருக்கும்.

இந்த மாணவர்கள் மத்தியில்தான் தோழர் இரா.முருகவேளின் முகிலினி வெளியிடப்பட்டது. ‘நம்ம முகிலினி’ என்று ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அப்புத்தகத்தை அவர்கள் பார்ப்பார்கள். ஒரே ஒருவன் மட்டும், அதன் முதல் அத்தியாத்தைப் படித்துவிட்டு, ‘அண்ணா சூப்பர்’ என்றான். விரைவில் எவரேனும் முழுவதும் படிப்பார்கள் என்று நம்புகிறேன். குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கும்போது, எழுத்தாளர் யார் என்பதைவிட, அந்தப் புத்தகம் எந்தச் சூழலில் எவர் கொடுத்துக் கிடைத்தது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது.

நாங்கள் செல்லும் இரண்டு துவக்கப்பள்ளிகளிலும், பாவண்ணனின் ‘யானை சவாரி’ குழந்தைப் பாடல்களுக்கு (பாரதி புத்தகாலயம்) நல்ல வரவேற்பு கிடைக்கிறது. குழந்தைகள் விரும்பிப்பாடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் பெரியவர்களுக்காக எழுதப்பட்ட பல கிளாசிக்குகள் சிறுவர்களுக்கான சுருக்கப்பட்ட வடிவங்களில் பிரபலமாக உள்ளன. குழந்தைகளுக்காகவென்றே பிரத்யேகமாக எழுதப்பட்ட கதைகளில் கிடைக்காத ஒரு பரந்த அனுபவம் இக்கதைகளில் கிடைப்பதுண்டு. (குழந்தைக் கதைகளில் வேறுவகையான அனுபவம் கிடைக்கும்…அதையும் குறைத்து மதிப்பிடமுடியாது. அவற்றிற்கான தேவையும் உள்ளது.) தமிழில் அப்படியொரு நிலை இல்லை. கு.அழகிரிசாமியின் இச்சிறுகதைகளைப் போன்றவை இந்த இடைவெளியை நிரப்பக்கூடும். நாஞ்சில் நாடனின் ஒரு சிறுகதையையும் மகிழுக்குப் படித்துக் காண்பித்திருக்கிறேன். தேவதச்சனின் கவிதைகள் பலவற்றை அவளோடு படித்தது நான் எதிர்பாராத ஒரு புது அனுபவமாக அமைந்தது; எனக்கும் அவரது கவிதைகளுக்குள் நுழைவதற்கு உதவியாக இருந்தது. அதை அவரிடம் பகிர்ந்துகொண்டபோது பரவசமாகிவிட்டார்.

சென்ற ஆண்டு, மகிழ் உடல்நிலை சரியில்லாமல் இருந்த இரு முறைகளில், ஒரு தடவை பாரதியின் வசன கவிதைகளையும், அடுத்த முறை கல்கியின் பார்த்திபன் கனவில் கணிசமான பகுதியையும் அவளுக்கு உரக்கப் படித்தேன். அதனால் உடல்நிலை சரியானது என்றெல்லாம் கூறமாட்டேன்; ஆனால் மோசமாகவில்லை என்பதற்கு உத்திரவாதம் தரமுடியும். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை முழுமையாகப் படித்துக்காட்டும்படி கேட்டிருக்கிறாள். பார்த்திபன் கனவைத் தானே படித்து முடிக்கப்போவதாகக் கூறியிருக்கிறாள். படித்துவிட்டால், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்று பல மாதங்களுக்குக் கல்கியிலிருந்தே பெரிய விருந்து வைத்துவிடலாம்.

Roald Dahl எழுதிய The Magic Finger மற்றும் The Umbrella Man, சேக்ஸ்பியரின் The Merchant of Venice, The Tempest (abridged versions) அவளுக்குப் படித்துக்காண்பித்திருக்கிறேன்; விரும்பிக் கேட்டாள். The Wizard of Oz, Twenty thousand leagues under the Sea ஆகியவற்றை அவளே படிக்க முனைகிறாள். ஏனோ, அவை பல மாதங்களாகப் பாதியிலேயே நிற்கின்றன. (இவ்வரிசையில் பல புத்தகங்களை நண்பர் தியாகு தனது நூலகத்திலிருந்து எங்கள் பயிலகத்திற்கு அன்பளிப்பாக அளித்துள்ளார். பெரிய பொக்கிஷமாக எங்கள் குழந்தைகளுக்காக அவை காத்துக்கொண்டிருக்கின்றன.)

தற்போது, உதயசங்கர் எழுதிய மாயக்கண்ணாடி (தமிழினியிலிருந்து எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் அன்பளிப்பு), மலையாளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள காட்டிலே கதைகள் ஆகிய சிறுவர் கதைத்தொகுப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறாள்.

(நண்பர்களும் தங்களது பரிந்துரைகளைப் பகிர்ந்துகொண்டால், சிறுவர்களுக்கான ஒரு விரிவான பட்டியல் உருவாகலாம்.)


இதையும் இங்கு சொல்லவேண்டும்: மகிழ், தோட்டத்தில் விளையாடியபடி குதூகலமாகக் கேட்டு, ஒரு சில பத்திகளை மனனம் செய்துகொண்ட ஆங்கிலக் கவிதை, வேர்ட்ஸ்வர்த்தின், ‘The Tables Turned’:

Up! up! my Friend, and quit your books;
Or surely you’ll grow double:



Books! ’tis a dull and endless strife:
Come, hear the woodland linnet,
How sweet his music! on my life,
There’s more of wisdom in it.

அம்மாவோடு சேர்ந்து பறவைகளையும் தொடர்ந்து பார்க்கிறாள் என்பது கூடுதல் ஆறுதல்.


ஓர் ஓவியம், ஒரு கொண்டாட்டம்

ஜனவரி 8, 2017

பேயோன் ட்விட்டரில் தொடர்ந்து பல சிறப்பான ஓவியர்களின் ஓவியங்களைப் பகிர்ந்து வருகிறார். என்னைக் கவர்ந்த சில ஓவியங்களை எனது மடிகணினியில் சேமித்து வைத்து, இந்த வாரம் எங்கள் பயிலக்கத்தில் குழந்தைகளுக்குக் காண்பித்தேன்.

முந்தைய நாள் வகுப்பு முடிந்து திரும்பிச்செல்கையில், தனது தம்பியையும், இன்னொரு சிறுவனையும் சாலையில் அடித்துவிட்ட கதையைப் பற்றி நான் கேட்டதால், அதுவரை என் மீது கோபித்துக் கொண்டு பாரா முகத்துடன் அமர்ந்திருந்த ஹசீன், முதல் ஆளாக அந்த ஓவியங்களைப் பார்க்க வந்தான். (என் மகள், ‘அப்பா லேப்டாப்ல ஏதாவது படம் போடறேன்னு சொன்னா, ஹசீனண்ணா சரியாயிடுவாங்க,’ என்று அறிவுரை வழங்கியிருந்தாள்.)

பெரும்பாலான ஓவியங்களைப் பார்த்து முடித்த பின்னர், அவனே ஓர் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்து (Gabriele Münter “On the Seine”, 1930) வரையத் தொடங்கினான். சஹானாவும், தமிழ்ச்செல்வியும் அவனோடு சேர்ந்து கொண்டு அதே ஓவியத்தை தத்தம் பாணிகளில் வரையத் தொடங்கினர். வண்ணம் தீட்ட, எல்லாரையும் தனது குறும்புகளால் சீண்டிக்கொண்டிருந்த ஜுமானா தனது க்ரையான்களைக் கொடுத்தாள்.

‘அக்கா, பெங்களூரு பிஸ்கட் இருக்காக்கா,’ என்று ஜெய் கேட்க, (அவை என்றோ தீர்ந்து விட்டதால்) வேறு பிஸ்கட்டுகளைப் பகிர்ந்தளித்தோம்.

பயிலகத்தில் புதுக்களை கட்டியது. புகைப்படங்கள் எடுக்கத்தொடங்கினோம். ஒரு குதூகல உணர்வு எல்லாரையும் தொற்றிக்கொண்டது. எதிர்பாராமல் ஒரு கொண்டாட்டம் அரங்கேறியது.


தியான வனம்

ஜனவரி 1, 2017

சென்ற வாரம் முற்றிலும் புதியதோர் அனுபவத்தைக் கொணர்ந்து தந்தது. காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பணிசெய்கின்றவர்களும், கடந்த சில ஆண்டுகளில் எங்கள் இனிய குடும்ப நண்பர்களாகவும் ஆகிவிட்ட ராஜா-கல்பனா தம்பதியினர், பள்ளி மாணவர்களுக்காக ஒருங்கிணைத்த ஒரு பயிற்சி முகாமுக்காகச் சென்றிருந்தோம். இம்முறை, கல்லூரி வளாகத்தில் அல்லாமல், அருகிலிருந்த தியான வனம் என்கிற ஆசிரமத்தில் நிகழ்ச்சி நடந்தது.

தியான வனத்தை நடத்திவருபவர் கோர்கோ மோசஸ் – காவி உடை அணிந்த ஒரு ஜெசூயிட் பாதிரியார். அவ்வப்போது பயிற்சிக்காக வருகின்ற பாதிரியார்களின் துணையோடும், பெரும்பாலும் தனியாகவும் ஆறரை ஏக்கர் நிலத்தை நிர்வகித்து வருகிறார். நல்ல மழை வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், அருகிலிருந்த அணையில் நீர் முழுவதுமாக வற்றிவிட்ட போதும், இன்னும் நிறைய பசுமை அங்கு மிச்சமிருந்தது. நாங்கள் சென்று சேர்ந்த காலைப் பொழுதில் பெய்த சிறு மழையின் கருணையில் பசுமை மெருகேறியிருந்தது.

ஃபாதர் கோர்கோ மிக எளிய ஒரு துறவு வாழ்வினை வாழ்ந்து வருகிறார். அவரது படுக்கை அறை இதுவரை நான் எங்கும் கண்டிராத ஒரு கோலத்தைக் கொண்டிருந்தது. பிரமிட் வடிவத்தில் கட்டப்பட்டுள்ள அந்த அறையில், நான்கு அடிக்குக்கும்  உயரமாக இருந்த ஒரு மரக்கட்டிலும், அதன் மீது ஒரு மெல்லிய மெத்தை விரிப்பும் இருந்தன. அறையின் ஒரு மூலையில் சில தடுப்பகளால் அமைக்கப்பட்ட ஒரு கழிவறை. இவற்றைத் தவிர அந்த அறையில் எந்த ஒரு பொருளும் இல்லை.

‘பொருட்களே இல்லாத ஒரு அறையை இப்போதுதான் பார்க்கிறேன்,’ என்றேன்.
‘எனது சில பொருட்கள் என் அலுவலக அறையில் இருக்கின்றன,’ என்றார்.

நான்கு சிறுமிகள் குத்துவிளக்கு ஏற்ற, ‘ஒளிவளர் விளக்கே’ என்ற திருமுறைப் பாடலை மகிழ்மலர் பாட நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சி நடந்த பெரிய அரங்கில், தலாய் லாமா, விவேகானந்தர், ஃபிரான்சிஸ் அஸிசி, ரூமி, மகாவீரர் என்று பல சமயத் தலைவர்களின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவர்கள் அனைவரைப் பற்றியும் சில குறிப்புகளைக் குழந்தைகளோடு பகிர்ந்துகொண்டார். பத்மாசனம் போட்டிருந்த ஒரு சித்தரின் ரூபத்தில் யேசுவின் படம். யேசுவை ஒரு சித்தராகத்தான் பார்ப்பதாகக் கூறினார்.

வங்காளத்தில் சுவாமி சதானந்த கிரி என்பவரிடம் பல ஆண்டுகள் யோகப்பயிற்சி பெற்றிருக்கிறார். சுவாமி சரணானந்தா என்ற பெயரையும் இந்தப் பாதிரியார் பூண்டிருக்கிறார். யேசு நாம செபம் என்ற புத்தகத்தை வங்காள மொழியில் எழுதி, ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறார்.

தியான அறை என்று தனியே ஓர் அறை இருந்தது. மிகவும் ரம்மியமான சூழலில், அமைதியின் மடியில் அமைந்துள்ள அந்த அறையின் வாயிலை நோக்கிய சுவரின் மையத்தில், 12 சமயங்களின் சின்னங்களை ஒருங்கே கொண்டுள்ள ஒரு படம் இடம்பெற்றிருந்தது. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் வாசகம் அதன் மேல் பிரதானமாக எழுதப்பட்டிருந்தது. படத்தின் நடுவில் தியானம் செய்யும் ஓர் உருவம்.

அனைத்துச் சமயங்களை நிறுவியவர்களும், ஆழ்ந்த தியானத்தின் மூலமாகவே ஞான நிலையை எய்தியதாகக் கூறினார்.

படத்தின் முன்னே கீதை, பைபிள், குரான் மூன்றும் விரித்து வைக்கப்பட்டுள்ளன. அறையின் புத்தக அடுக்கில், அந்த நூல்களின் பல பிரதிகள் இருந்தன.

முதல் நாள் மாலையில், 10-15 வயதுக்குள் இருந்த 30 குழந்தைகளும் ஒரு மணிநேரம் பக்திப்பாடல்கள், வினோபாவின் சர்வசமயப் பாடல், தியானம், பைபிலிலிருந்து அன்று நாங்கள் கண்ட சில குறள்களுக்கு இணையான சில பத்திகள் படிக்கப்படுவதைக் கேட்பது என்று அமைதியாகக் கழித்தனர். பாதிரியார் 12 சமயங்கள் குறித்தும் குழந்தைகளுக்குச் சுருக்கமாகக் கூறினார். புத்தரின் கதையைச் சொன்னார்.

மையப் படத்துக்கு தீபாராதனை செய்து தியானத்தை முடித்தார்.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு, சில உடற்பயிற்சிகளுக்குப் பின்னர், மீண்டும் தியான அறையில் ஒரு மணி நேரம். இம்முறை பைபிலுக்குப் பதில், கீதையிலிருந்து சில பத்திகளைத் தேர்ந்தெடுத்துத் தந்து, என்னைப் படிக்கச் சொன்னார்.

அவர் சொன்ன புத்தர் கதையின் பல பகுதிகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தர்மானந்த கோஸம்பி எழுதியிருப்பதைச் சுட்டிக்காட்டினேன். ‘ஆம், அவை புராணங்கள் தான்; எல்லா ஞானிகள் குறித்தும் வெகுசில ஆண்டுகளில் புராணங்கள் எழுப்பப்படுகின்றன; அவர்களது தத்துவங்களை விளக்கவே அந்தப் புராணங்கள் பயன்படுகின்றன,’ என்றார்.

பயிற்சியின் இடையில் ஃபாதர் கோர்கோ கொரிய நடனம் கற்பித்தார். எல்லாரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நித்யா பறவைகள் குறித்து ஒரு வகுப்பெடுத்தபோது, மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குறள் அடிப்படையிலான எங்களது வகுப்புகள் எளிமையானவையாக மாறின; ஒரு வகையில் அவசியமற்றும் போயின. கண்ணெதிரில் அறமும் அன்பும் நிறைந்த ஒரு எளிய மனிதர் இருக்கும்போது நாம் சொல்லிப் புரியவைப்பதற்கு என்ன இருக்கிறது.

கிராமத்துள் குழந்தைகளைக் குழுக்களாக அனுப்பி, ஒவ்வொரு குழுவும் 5 வீடுகளுக்கேனும் சென்று, மக்களோடு பழகி, உரையாடி வருமாறு செய்தார். ஒரு சில வீடுகளில் நாய்கள் குரைத்தன; ஓரிரு வீடுகளில் மனிதர்கள் குரைத்தனர்; பெரும்பாலும் உள்ளே அழைத்துவைத்து அளவளாவி, உண்ண ஏதேனும் கொடுத்து அனுப்பினர். வறட்சியால் வருமானமின்றி, வேலையின்றித் தவித்தாலும், மனங்களில் இன்னும் ஈரம் இருக்கத்தான் செய்கிறது.

தனக்குப் பின் தியான வனத்தை நடத்துவதற்கு எவரும் இதுவரை ஆர்வம் காட்டவோ பயிற்சி பெறவோ இல்லை என்கிற ஏக்கம் ஃபாதர் கோர்கோவுக்கு இருக்கிறது. இந்த இடம் பக்தர்களைக் (devotees) காட்டிலும் ஆன்மீகத் தேடலுடையவர்களுக்கானது(Seekers) என்று குறிப்பிட்டார். நிறுவன எதிர்ப்பு என்று பெரிதாக இல்லாவிட்டாலும், பெரிய ஆதரவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு தியான வகுப்புகள் மூலமாகவும், ஆசிரமத்தில் நடத்தப்படும் முகாம்களின் மூலமாகவும் நிர்வாகத்திற்குத் தேவையான நிதி திரட்டிக்கொள்கிறார். குடிப்பழக்கத்திலிருந்து விடுபடவும் முகாம்கள் நடத்துகிறார்.

‘ஒளிவளர் விளக்கே’ பாடலைப் பழகவேண்டும் என்று கூறி, மகிழ்மலரை மீண்டும் பாடச்சொல்லி பதிவு செய்துகொண்டார். வரிகளை எழுதிக்கொண்டார். ஆனந்த பைரவி ராகமாக இருக்கவேண்டும் என்றார். பாடல் இயற்றியது யார் என்பது அப்போது உறுதியாக நினைவில்லை (திருமாளிகைத் தேவர்). அவரது நூலகத்துக்கு அழைத்துச் சென்றார். திருமுறை முழுவதும் 20க்கும் மேற்பட்ட பாகங்களாக இருந்தது. மேக்ஸ் மியூலரின் கிழக்கத்திய சமயங்கள் குறித்த நூல்களின் முழுத்தொகுதியும் வைத்திருக்கிறார். தனது 18ம் வயது முதல், 38 ஆண்டுகள் வங்காளத்தில் இருந்துவிட்டதால், தமிழில் போதிய அளவு தேர்ச்சி பெற இயலவில்லை எனக் குறைபட்டார்.

இரண்டு நாட்களின் முடிவில் மாணவர்களிடம் நிகழ்ச்சி பற்றிய கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருந்த போது ஒரு சிறுமி கூறினாள், ‘நான் ஃபாதர் கிட்ட இந்துக்கள் பைபிள் படிக்கலாமான்னு கேட்டேன். அவர் படிக்கலாம்னு சொன்னார். அது எனக்கு ரொம்பப் பிடிச்சது.’