உதைத்தாலும் உதறினாலும்

ஜூலை 30, 2011

அவளுக்கென்று வாங்கிய
சிறுபோர்வை எடுத்துப்
போர்த்தி விடுகிறேன்.
நான் உறங்கி இமைமூடுமுன்
உதைத்தும் உருண்டும்
உதறிவிடுவாள் என்றறிவேன்.
ஆனாலும்
போர்த்தாமலிருக்கமுடிகிறதா?


கவிதையின் சூட்சுமம்

ஜூலை 30, 2011

என் மகளின் சட்டைப்பையில் இருந்த பேனா

எங்கே என்றாள் என் மனைவி.

கீழே விழுந்துவிட்டது என்று சொல்லவந்தவன்,

நிறுத்தி, ‘மகிழ், நீ சொல்லு’ என்றேன்.

‘தாவிக் குதிச்சு ஓடிறுச்சு’ என்றாள்.

கவிதையின் சூட்சுமம் சற்றே புரிந்துவிட்டமாதிரி இருந்தது.