சென்ற ஆண்டில் படித்த புத்தகங்களைப் பட்டியலிட்ட போது எழுதியிருந்தேன்,
“2010ன் சிறந்த புத்தகங்கள் என்றெல்லாம் என்னால் பட்டியலிடமுடியாது. அந்த அளவிற்கு, நான் இப்போது அதிகம் படிப்பவனல்ல. வந்தவுடன் ஒரு புத்தகத்தைப் படித்துவிடவேண்டும் என்ற முனைப்புமில்லை. அதன் தேவையும் எனக்குப் புரிவதில்லை. இதுவரை வந்த அற்புதமான நூல்கள் எத்தனையோ இன்னும் படிக்கப்படாமல் இருக்கும்போது, இப்போது வந்தவை இன்னும் சில காலம் காத்திருக்கலாம் என்ற தள்ளிப்போடும் மனப்பான்மையாகவும் இருக்கலாம்.”
அதே நிலைமையும் எண்ணமும் தாம் இவ்வாண்டும். 2011ல் எழுதப்பட்ட புத்தகங்கள் எவற்றையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எனக்கிருந்த நேரத்திற்கு ஓரளவு நிறைவாய், நிறையப் படித்திருக்கிறேன்.
இப்புத்தகங்களை ஒற்றை வரியில் விமர்சிக்கும் நோக்கமெல்லாம் எனக்கில்லை. அது சாத்தியமுமில்லை. இவை என்மீது ஏற்படுத்தியதாய் நான் இப்போது நினைக்கிற பாதிப்பினைப்பற்றி மட்டுமே எழுத விழைகிறேன்.
1. தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடனுடைய முதல் நாவல். சொல்ல மறந்த கதை திரைப்படமாய்ப் பார்த்தபோது பிடிக்கவில்லை. படிக்கும்போது கிடைக்கிற அனுபவம் முற்றிலும் வேறாக இருந்தது. தன்தகுதிக்கு மீறி மணம்புரிந்து கொள்ளும் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அழகாய், திரைப்படமளவிற்கு ஆர்ப்பாட்டாமில்லாமல், அமைதியாய்ச் சொல்லியிருக்கிறார் என்றே தோன்றியது. அவரைச் சென்ற ஆண்டில்தான் படிக்கத்துவங்கினேன். இன்னும் படிக்க வேண்டும்.
2. மரப்பசு – தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமனின் நடைமீது எனக்கு எப்போதும் ஒரு மோகமுண்டு. இந்த நூலிலும் அதற்குக் குறைவில்லை. ஆனாலும் இது ஒரு முழூமையான புத்தகமாய்த் தோன்றவில்லை. அதிர்ச்சி மதிப்பிற்காகச் செயற்கையாய்ப் பல நிகழ்ச்சிகளும் பாத்திரப்படைப்புகளும் திணிக்கப்பட்டதாகவே தோன்றியது. அவர் மீது எழுந்த விமர்சனங்களுக்கு உக்கிரமான ஒரு எதிர்வினையாக இதை எழுதியிருப்பாரோ என்றும் தோன்றுகிறது.
சிலிர்ப்பு போன்ற அவர் சிறுகதைகளைப் படித்து அவர்மீதுள்ள மோகத்தை மீட்டெடுத்துக் கொண்டேன்.
3. கம்பாநதி – வண்ணநிலவன்
இதற்குமுன் வண்ணநிலவனை நான் படித்ததில்லை. அதைச்சொல்வதற்கு இப்போது வெட்கமாகயிருக்கிறது. எவ்வளவு அற்புதமான எழுத்து. முதலில் மிக எளியநடைபோல் தோன்றினாலும், படிக்கப்படிக்க அதிலுள்ள வசீகரம் என்னை உள்ளே இழுத்துக்கொண்டது. எஸ்தர், மிருகம் போன்ற சிறுகதைகளிலும் அதே வசீகரிக்கும் எழுத்து.
4. உறுபசி – S.ராமக்கிருஷ்ணன்
நான் படிக்கும் முதல் எஸ்.ரா.வின் நாவல். அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. நிறையப் பிழைகள் நிறைந்திருந்ததாக நினைவு. அவையே எழுத்தோடு ஒன்ற முடியாமற்செய்திருக்கலாம்.
அண்மையில் உயிர்மையில் படித்த ஒரு சிறுகதையிலும் அதே போன்ற பாத்திரப்படைப்பு. இது எஸ்.ரா.விற்குப் பிடித்த களம்போலும்.
5. Portrait of the Artist as a Young Man – James Joyce
இவ்வாண்டு படித்த ஒரே ஆங்கில நாவல். ஆங்கிலத்திலும் தமிழுலும் எத்தனை பேருக்கு முன்னோடியான எழுத்து என்பது படிக்கும்போது புரிந்தது. Ulysses ஏற்கனவே பாதிபடித்திருப்பதால் என்ன எதிர்பார்ப்பது என்பது தெரிந்திருந்தது. ஆனால் Dubliners மட்டும் படித்துவிட்டு இந்த நாவலைப் படிப்பவர்களுக்கு முற்றிலும் புதிய ஜாய்ஸ் தென்படுவார்.
6. பாரதி சில நினைவுகள் – யதுகிரி அம்மாள்
பாரதியை அருகிலிருந்து அறிந்துகொள்ள வாய்ப்புகிடைத்த ஒரு சிறுமியின் நினைவுகளை அப்படியே பாதுகாத்துவைத்து, எழுத்தில் பதிந்திருக்கிறார் யதுகிரி. பாரதி என்கிற மனிதனை, அவனது ஆளுமை சுற்றியிருந்தவர்கள் மீது செலுத்திய பாதிப்பைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான படைப்பு.
7. மகாகவி பாரதியார் – வ.ரா
பாரதியைப் பற்றிய இன்னொரு சரிதை. அவரை இன்னொரு கோணத்திலிருந்து அணுக உதவும். ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கைவண்ணத்தில், இதுவே நான் பாரதியைக்குறித்துப் படித்துள்ள சிறந்த படைப்பு.
8. தலைமுறைகள் – நீலபத்மனாபன்
அன்றாட வாழ்வனுபவங்களை மட்டுமே வைத்து ஒரு மிகப்பெரிய புதினத்தை உருவாக்கமுடியும் என்பதற்கு இது சாட்சி. பெண்பார்த்தல், திருமணம், மணமுறிவு, பிள்ளை பிறத்தல், பெயர்வைத்தல் என்று அன்றாட நிகழ்வுகளும், சடங்குகளும் தொகுக்கப்பட்டு, தமிழ்வாழ்வைப்பற்றிய ஓர் ஆவணமாய் அமைந்துவிட்டது. ‘ஹம் ஆப் கே ஹேன் கோன்’ போன்ற திரைப்படங்களுக்கான டெம்ப்ளேட் இந்த நாவலில் உள்ளது. யதார்த்தமான சித்தரிப்புகளினூடே, யதார்த்த மொழியில், நுட்பமாய் எழுதப்பட்டிருப்பதே இதை அத்தகையத் திரைப்படங்களிலிருந்து வேறுபடுத்தி இலக்கியமாக்குகிறது.
9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
ஹென்றி நாம் எங்குமே பார்த்திருக்க முடியாத மனிதன். முழுக்க முழுக்க ஒரு எழுத்தாளனின் கற்பனையிலிருந்து மட்டுமே உதித்திருக்கூடிய ஒரு பாத்திரம். எந்த சூதும் தீதும் அற்ற, தெரியாத, ஒருவன் இருக்கமுடியுமானால் அவன் ஹென்றியாக இருக்கவே வாய்ப்புள்ளது. பலராலும் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவலாகக் கருதப்படுகிற நூல் இது. ஆயினும் அவரது சிறுகதைகள் தருகிற நிறைவினை என்னால் அவர் நாவல்களில் அடைய முடிவதில்லை.
10. சாயாவனம் – சா.கந்தசாமி
இயற்கைக்கும் மனிதனும் நடக்கும் போராட்டத்தை இதைவிட அழகாய் யாரும் எழுதிவிடமுடியுமா என்று தெரியவில்லை. கவித்துவமாய் வரிகின்றன பல காட்சிகள். உணர்வு பெற்று எழுந்தும் விழுந்தும் வருகின்றன மரங்களும், செடிகளும், கொடிகளும், காடும்.
11. புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்
என்ன எழுத்து! என்ன நுட்பம்! தன்னைச் சுற்றியுள்ள உலகை இந்த மனிதர் எப்படி இவ்வளவு தெளிவாகக் கவனித்து நினைவில் நிறுத்தி எழுத்தில் வடித்திருக்கிறார்? பாதிதான் படித்து முடித்திருக்கிறேன்…ஆனால் இந்த நாவல் ஏற்படுத்தியிருக்கிற பிரமிப்பு, அதற்குள்ளாக இந்தக் குறிப்பை எழுத வைத்திருக்கிறது. ஜாய்ஸ் புத்தகத்தை இந்தப் பட்டியலில் உள்ளடக்கியதற்கும் அதுதான் காரணம். அதற்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல, பாண்டியனின் நினைவுகளாய் இவர் பதிப்பவை. நிச்சயமாய் நான் படித்துள்ள ருஷ்டி, நைப்பால் படைப்புகளைவிட பலபடிகள் மேலாகவே இந்த நூலை வைப்பேன்.
ஆனால் இதை எழுதியவரின் இரண்டாவதும் கடைசியுமான நூல் இதுதான் என்பதும், நம்நாட்டின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவர் என்கிற அங்கீகாரம் கிடைக்காமலே முதுமையடைந்து மறைந்தார் என்பதும் நம் தமிழ் இலக்கியச்சூழலின் நிலையைத் தெளிவாய் வெளிப்படுத்துகின்றன.
2012ஐ ஒரு சிறந்த படைப்பின் துணையோடு துவங்குகிறேன்.
நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ஆண்டு தமிழில் ஓரளவு நிறையப்படிக்கமுடிந்திருக்கிறது. இவையன்றி பல சிறுகதைகள் – என்னிடமுள்ள தொகுப்புகளிலும், இணையத்திலும் – அசோகமித்திரன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா., வண்ணிநிலவன், வண்ணதாசன், சுந்தர ராமசாமி, பூமணி, ஜெயமோகன், சுஜாதா போன்ற பலருடைய அருமையான பல சிறுகதைகளைப் படித்தேன். பிரமிள், சுகுமாரன், கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன், தேவதேவன், தேவதச்சன் போன்றவர்களின் பல அற்புதமான கவிதைகளையும் படித்தேன்.
வண்ணதாசனின் முன்னுரைகளுக்காகவே அவருடைய எல்லா புத்தகங்களையும் வாங்கவேண்டும் என்றுள்ளேன். அவரது ஒவ்வொரு வரியின் சுகத்திலும் லயித்துப்போன நாட்கள் பலவுண்டு.
எல்லாவற்றிக்கும் மேலாக என்னுடன் எப்போதும் உடனிருக்கும் பாரதியும் வள்ளுவனும்.
தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களின் துணையோடு, 2011 இனிதே நிறைவடைகிறது.
2012ல் தமிழோடான என்னுடைய தொடர்பு வலுப்பட உள்ளது என்கிற இனிய எதிர்பார்ப்போடு, இந்தப் புத்தாண்டை வரவேற்கிறேன்.