விழித்திருந்த இரவினிலே

நவம்பர் 24, 2011

உடல் சாய்ந்தவுடன் கண்சாய்ந்துவிடும் எனக்கு

அரிதாய் வாய்க்கும் சில உறக்கமற்ற இரவுகள்.

அப்போதுதான் தெரிகிறது

அருகிலுறங்கும்

அவள்

தளிர்க்கரங்கள் மார்மீது விழுவதுவும்,

மென்முகம் என்முகத்தோடு இணைவதுவும்,

இசைபாடும் அவள் சுவாசத்தின் இளஞ்சூடும்,

மடிமீது படர்ந்திடும் அவள் சிறுபாதமும்,

உடலெங்கும் பரவிடுமோர் பரவசமும்

எனக்கெனக் கென்றேங்கும் முழங்காலும் அதன்கீழும்,

மனதினிலே அரும்பிடுமோர் பெருங்கனிவும்

ஆற்றொழுக்காய் ஊற்றெடுக்கும் கவிச்சொல்லும்

மறக்குமுன்னே பதியவெண்ணும் படபடப்பும்

எழுந்துவிட்டால் இதையிழப்போ மெனும்பதைப்பும்

இடையிடையே இடைவருடும் அவளுதைப்பும்

அப்பப்பா!

முகம்திருப்பி அவள் தேன்னுதலில்

இதமாகப் பதிக்கின்றேன் என்னிதழை.

இன்று மட்டும்

என்னைக் கொஞ்சம் விழிப்பில் வைத்தால்

வணங்குவேன் தாயே!


எடைக்கு வந்த பாரதி

நவம்பர் 10, 2011

பழைய பேப்பர் சில மாதங்களாய் அவனிடம்தான் போடுகிறோம். பதினைந்து வயதிருக்கும். இரு மாத பேப்பர் அவன் தராசில் எடைகூடுதலாய்த் தெரியும்.

அன்று, மேஜை மீதிருந்த கிழிந்த பாரதி புத்தகத்தைக் கேட்டான்.

‘அது எடைக்கில்லப்பா’.

‘இல்ல சார்,  என் தம்பி ஸ்கூல்ல படிக்கறான். அவனுக்குப் பேச்சுப்போட்டிக்கு நான்தான் எழுதித்தருவேன். பாரதியார் பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும. நான் வேணாக் காசு தரேன் சார்’

மகிழ்ந்துபோய், வீட்டுக்குள்ளிருந்த இன்னொரு பாரதி புத்தகம் தந்தேன்.

புதிதாய் வாங்கியது.

‘காசெல்லாம் வேண்டாம்பா. எடைக்குப் போட்டுற மாட்டியே?’

‘அதெப்படி சார்? பாரதியாரப் போய் எடைக்குப் போடுவனா?’


சோப் என்கிற கறைநீக்கி

நவம்பர் 10, 2011

சோப் ஓர் உன்னதக்

கண்டுபிடிப்பு.

எந்தக் கறைபடிந்தாலும்

கழுவிவிடமுடியும்.

எனவே கறைபடிவதைப்பற்றிக்

கவலைப்பட வேண்டியதேயில்லை.

சோப்பை நம்பாதவர்கள்

பரிதாபத்திற் குரியவர்கள்.

அவர்கள்

அழுக்கின் சுமையோடே

வாழ்கிறார்கள்.

அல்லது,

அழுக்கு சுமையென்று

அறியாமலே வாழ்கிறார்கள்.

அல்லது,

அழுக்கே அண்டக்கூடாதென்ற

அபத்தப்பிடிவாதத்தோடு வாழ்கிறார்கள்.

ச்சே!

எந்த சோப் நல்ல சோப்?


பழையன கழிதல்

நவம்பர் 10, 2011

‘அப்பா! இன்னிக்கு நீ பேசனும்’

கடந்த சில வாரங்களாய்

மகளைப் பள்ளியில்விடச்

செல்லும்போது தினமும்

கேட்கும் வாசகம்.

ப்ளேஃக்ரூப்பில் இருந்தவளை

​நர்சரி வகுப்புக்கு மாற்றியிருந்தோம்.

பழைய வகுப்புக்கே செல்லவேண்டுமாம்,

அதுகுறித்து ஆசிரியையிடம்

நான் பேசவேண்டுமாம்.

‘சரிடா! நான் பேசறேன்.

ஆனா நர்சரிலமாதிரி

ப்ளேஃக்ரூப்பில நிறைய விளையாட்டிருக்காது,

பரவால்லையா?’

‘பரவால்லப்பா, எனக்கு

ப்ளேஃக்ரூப்தான் பிடிக்கும்’

எப்போதும் போல் சரியென்றேன்.

கார் பள்ளியை நெருங்கியது.

‘அப்பா, இன்னிக்கு நீ பேசவேண்டாம்.

நான் குட்கேர்ளா அவங்க

எங்க அனுப்பறாங்களோ

அங்கயே போயிக்கிறேன்.’

​மறுநாள் காலை.

‘அப்பா! இன்னிக்கு நீ பேசனும்’


மாற்றங்கள்

நவம்பர் 2, 2011

கோலம் ரங்கோலியாகிவிட்டது.

மருதாணி மெகந்தியாகிவிட்டது.

பம்பரங்கள் அதிவேக ப்ளாஸ்டிக் அவதாரமெடுத்துவிட்டன.

கம்பர்கட் காட்பரீஸ் ஆகிவிட்டது.

சிலேட்டுகளின் இடத்தில் ஐபேட்.

குழந்தைகள் மட்டும் இன்னும் குழந்தைகளாய்…


மகிழ்மலர் – 3

நவம்பர் 2, 2011

பணர்கட்டா சாலையில்

பாலத்துக்கு அடியில் காரைவிட்டேன்.

‘அப்பா, பாலத்துக்கு மேல போகலாம்!’

‘இல்லைடா, நாம் நேராப் போகனும்’

‘பரவால்லப்பா, பாலத்துக்கு மேல ஓட்டு’

என் மகளோடான இந்த உரையாடல், அழகான கவிதைத் தருணமாய்த் தோன்றியது. ஆனால் கவிதை வேறொருவரால் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது 😦

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கேதான் இருக்கிறதாம்…

இதெல்லாம் ஒரு காரணமா?

– முகுந்த் நாகராஜன்