பல நிகழ்வுகளைக் காணும்போது, ஜார்ஜ் ஆர்வெல்லின் Animal Farm புத்தகம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது.
Animal Farmல், மனிதர்களின் கொடுங்கோலாட்சியைச் சகிக்கமுடியாத விலங்குகள், புரட்சி செய்து, மனிதர்களை விரட்டிப் பொதுவுடைமை ஆட்சியை நிறுவுகின்றன. அந்தப் பொதுவுடைமை அரசு மெதுவாய், பன்றிகளின் தலைமையில் இன்னொரு கொடுங்கோலாட்சியாய் மாறுகிறது. இறுதியில் பன்றிகள் மனிதரைப் போலவே இருகால்களை உயர்த்தி நடக்கக்கூடக் கற்றுக்கொள்கின்றன.
ரஷ்யப் புரட்சியையும், ஸ்டாலினின் எழுச்சியையும் நையத் தாக்கிய இந்த நையாண்டிக்கதை, அறுபது ஆண்டுகளாகியும் அதன் இயைபை இழக்கவில்லை. அதிகாரம் படைத்தவன் மனிதனாகினும், பன்றியாகினும் ஒரே விளைவுதான் – அதிகாரம் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான உதாரணங்கள்.
ஹிட்லரின் கொடுமைகளின் விளைவாய் உருவான இஸ்ரேல், அவனுக்கு இணையான கொடுமைகளைத் தொடர்ந்து புரிந்துவந்திருக்கிறது.
அப்கானிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பலபடிகள் பின்னோக்கியே நகர்ந்திருக்கிறார்கள். ரஷ்சிய ஆக்ரமிப்பில் ஆட்சி செய்த நஜிபுல்லா ஆகட்டும், பின் அமெரிக்க ஆதரவில் எழுந்த முஜாகிதின்களாகட்டும், அவர்களை வீழ்த்திவந்த தாலிபன் ஆகட்டும், இப்போதைய அமெரிக்கக் கைப்பாவைகளாகட்டும் ஒருவருக்கொருவர் மிஞ்சிய கொடுங்கோலர்கள்.
தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பில் துவங்கிய திராவிட இயக்கம் வெற்றிபெற்று, பல நூறு சாதிச்சங்கங்களிடம் தமிழ்ச் சமுதாயத்தை ஒப்படைத்துவிட்டது.
காஷ்மீரில் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராய் குஜராத்தில் இந்துக்களின் தீவிரவாதம்.
இலங்கையில் சிங்கள இனவெறிக் கொடுமைக்கு மாற்றாய், புலிகளின் வன்முறை வெறியாட்ட முறைகள்.
வங்கத்திலும், கேரளத்திலும் இடதுசாரிகள் எந்தவிதத்திலும் மாறுபட்ட ஆட்சிகளை அளித்தவிடவில்லை. நந்திகிராம் – ‘முதலாளித்துவ’ இடதுசாரி சர்வாதிகாரத்திற்கான இன்னொரு எடுத்துக்காட்டு.
இந்தியர்களும் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு கிடைத்தால், ஆங்கிலேயரைவிட அதிகமாகவே செலுத்துவோம் என்பதற்கு பணபலம் படைத்த இந்திய கிரிக்கெட் வாரியம்(BCCI) சாட்சி. ஹர்பஜன்-சிமண்ட்ஸ் இனவெறிக் குற்றச்சாட்டை நியாயமான முறையில் அணுகி, உண்மையைக் கண்டறிந்து நிலைநாட்டாமல், அதிகாரத்தையும், மிரட்டலையும் பயன்படுத்துவது வெள்ளையரிடம் நாம் கற்றுக்கொண்ட பாடம்.
காணுமிடமெங்கும் இன்னும் ஏராள விலங்குப் பண்ணைகள்.