தாகூர், சத்யஜித் ரே இருவரது வேறுபட்ட அணுகுமுறையில் இல்லமும் உலகமும் (காரே பாரே/ The Home and the World) என்கிற கதை உருவாக்கப்பட்டிருக்கிற நயம், ஒரு நாவலைத் திரைப்படமாய் எடுப்பதற்கான சிறந்த பாடம்.
முதலில் ரேயின் படத்தைத்தான் சில ஆண்டுகளுக்கு முன் கண்டேன். தேசிய இயக்கத்தைக் கதைக்களமாய்க் கொண்டு, மனித உறவுகளை, தன்மைகளை அலசிய விதம் பிடித்திருந்தது.
தாகூரின் கதையை, அண்மையில் படிக்க நேர்ந்த போதுதான் ரேயின் ஆக்கத்தை இன்னும் அதிகமாய் ஆழமாய் ரசிக்கமுடிந்தது.
கதைக்களம் முற்றிலும் புதியது. சுதேசி இயக்கத்தின் குறைபாடுகளை இவ்வளவு அப்பட்டமாய் அக்காலத்திலேயே அலசுவதற்கு, தாகூருக்கு ஒரு தனித் துணிவு இருந்திருக்க வேண்டும். திலகர்களும், காந்திகளும் மட்டும் கொண்டதல்ல சுதந்திர இயக்கம்; சுயநலவாதிகளும் போலிப் போராளிகளும் கூடப் பங்கெடுத்திருக்கிறார்கள் என்பதைத் தாகூர் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறார்.
மூன்று பாத்திரங்கள் மாறிமாறிக் கதை சொல்கிற ‘நவீன’ உத்தி கையாளப்பட்டிருக்கிறது. பலமுறை ஒரே நிகழ்ச்சியை மூவரும் வெவ்வேறு விதமாய், தத்தமது மாறுபட்ட கோணங்களில் வர்ணிக்கிறார்கள். நாயகன் நிக்கில் 24 காரட் நல்லவன். அதனால் மனைவி பிமலாவுக்குப் பலவீனமானவனாய்த் தென்படுகிறான். அவன் நண்பன் சந்தீப் நேர்எதிர். 24 காரட் சுயநலவாதி. தன் சுயமுன்னேற்றத்திற்கு சுதேசி இயக்கத்தைக் கருவியாக்குகிறான். அவன் வசீகரத்தாலும், சுதேசி இயக்கத்தாலும் ஈர்க்கப்படுகிறாள் பிமலா. நிக்கில் தேசத்தைவிட மனிதர்களை அதிகம் நேசிக்கிறவன். தன்னளவில் மற்றவர்களுக்கு முன்பே சுதேசிப் பொருள்களைப் பயன்படுத்தினாலும், சுதேசி இயக்கம் ஏழைகள் மீது சுமையாய் திணிக்கப்படுவதை எதிர்க்கிறான். மனைவி தன் நண்பனின் மீது கொண்ட மோகத்தை அறிந்தும், அவள் சுதந்திரம் அது என்று சகித்துக்கொள்கிறான். இந்த மூவரின் மனப்போராட்டங்களை, தத்துவ விவாதங்களை விரிவாய் விவரிக்கிறார்.
சந்தீப் Miltonஇன் சாத்தான் (நாவலில் Paradise Lost பற்றிய ஓர் சிறு குறிப்பு எதேச்சையான coincidence அல்ல என்று நினைக்கிறேன்), ஷேக்ஸ்பியரின் Iago வரிசையைச் சார்ந்தவன். குற்ற உணர்வு சிறிதுமின்றி, தன் ஆற்றல்மீது மிக்க நம்பிக்கையுடன், மிகுந்த சுயநலச் சிந்தனைகளைச் சிந்திக்கிறான். இறுதிவரை தன்னிலை மாறாமல் இருக்கிறான்.
படிக்கும் போது சத்யஜித் ரேயின் திரைப்படம் குறித்த நினைவுகள் பிரம்மிப்பாய் மலர்ந்தன. உரையாடல்களும், மனப்போராட்டங்களும், தத்துவ விவாதங்களும் நிறைந்த இந்தக் கதையைத் தொய்வில்லாத, உரையாடல் குறைந்த, திரைப்படமாய் உருவாக்கியது அவரது திறமைக்குச் சான்று. உரையாடல்களால் கூற முடியாத சிந்தனை ஓட்டங்களைக் காட்சி அமைப்பின் மூலமும், முகபாவங்கள் மூலமும் வெளிப்படுத்துகிறார். வார்த்தைகளால் வடிக்கப்பட்ட தாகூர் கதையின் ஓட்டத்தை பொருத்தமான காட்சிகளாலும், பார்வையாளர்களை ஊகிக்கத்தூண்டுவதன் மூலமும் வெளிப்படுத்துகிறார்.
நாவல்களைத் திரைப்படமாக்கும் போது பொதுவாய் அதை அப்படியே (இந்த ஊடகத்திற்குப் பொருந்தாமல்) எடுத்தோ, அதை முற்றிலும் மாற்றியோ சிதைத்துவிடுவார்கள். தாகூரின் ஒரு சிறப்பான overstated நாவலை, சற்றும் சிதைக்காமல், understated திரைப்படமாக எடுத்தது சத்யஜித் ரேயின் சாதனைதான். தாகூருக்கு ஏன் நோபல் பரிசு கிடைத்தது, ரேக்கு ஏன், ஆஸ்கார் உட்பட, பல பெருமைகள் கிடைத்தன என்பதற்கு இந்தப் படைப்புகள் விடையளிக்கின்றன.