மேற்கத்திய ஊடகங்களின் இனப்படுகொலை ஆதரவுநிலை

Poetry Foundation இணையத்தளம், அதே நிறுவனத்தின் Poetry இதழ் ஆகியவை ஆங்கிலக் கவிதையுலகில் மதிப்புக்குரிய இடத்தில் இருப்பவை(இருந்தவை). காசாவில் தற்போது நடைபெறும் இன அழித்தொழிப்பு குறித்து முற்றமைதி காத்துவருகின்றனர். பாலசுத்தீனக் குரல்கள் கடந்த மூன்று மாதங்களாக இத்தளங்களில் புதிதாக ஒலிக்கவே இல்லை. பலரும் குற்றம்சாட்டிய பின்னும் இன்னும் காசா குறித்து ஆழ்ந்த அமைதி காக்கின்றனர். ரஃபாத் ஆல்-அரீர் உட்பட பல பாலசுத்தீனக் கவிஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு சொல் இல்லை. ஆலரீரின் கவிதை ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் ஒரு சொல் இல்லை. அவர்களே முன்பு பதிப்பித்துள்ள கவிஞர் மொசாப் அபு தோகா இசுரேலால் கடத்தப்பட்டபோது பலரும் குரலெழுப்பினர். இங்கு ஒரு சொல் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு சொல் இல்லை. ஆதரவு கூற, ஆறுதல் சொல்ல, பொதுவாகவேனும் வருந்திப் பாட ஒரு கவிதைகூடவா எழவில்லை? அவர்கள் பதிப்பிக்க இருந்த ஒரு சயனிய-எதிர்ப்பு யூதரின் மதிப்பிரையைக் கூட அக்டோபர் 7க்குப் பிறகு ஒத்திவைத்தனர்.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொத்துக்கொத்தாய்க் கொன்று குவிக்கப்படும்போது அமைதி காப்பது நடுநிலை அல்ல.

கவிதை என்பது ஒரு பெருந்துயர் நடந்துமுடிந்த பின் அழுவதற்கு மட்டுமா வேண்டும்? கவிதை என்பது வெறும் காதலையும் காமத்தையும் காற்றையும் வெளியையும் தனிப்பட்ட சிற்றின்னல்களையும் பாடுவதெனில் உங்கள் கவிதையை காசாவின் எரிகளங்களில் எறிக.

——–

இதேபோலத்தான் மேற்குலகின் பல மையநீரோட்ட ஊடகங்கள் – BBC, CNN, The New York Times, The Atlantic முதலானவை, அமைதிகாத்தோ, இனப்படுகொலையை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்தோ, ஒரு தரப்பின் துயரைத் தூக்கியும் மறுதறப்பினதைத் தாழ்த்தியும் செயல்பட்டுவருகின்றன. எக்சில் பல பாலசுத்தீன ஆதரவுப் பதிவர்களும் பதிவுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. பல ஊடகங்கள் சர்வதேச நீதமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்காடியதை அதிகம் கவனப்படுத்தாமல் இசுரேலின் தடுப்புவாதங்களை மட்டும் முன்னிலைப்படுத்தியுள்ளன. நம் கண்முன் நடக்கும் படுகொலையை இவர்கள் இவ்விதம் புறக்கணித்தும் திரித்தும் ஒருதலையான சித்திரத்தை அளிக்கும்போது, நாம் நேரடியாக அறிய வாய்ப்பற்ற பிறவற்றைக் குறித்து இவர்கள் கூறியவற்றையெல்லாம் எப்படி முழுமையாக நம்புவது? ஊடகம், இலக்கியம், திரைப்படம், வரலாறு என்று மேற்குலகம் இதற்குமுன் நமக்குக் கட்டமைத்துக் காட்டிய அனைத்தையும் இனி ஐயத்துடன் அணுகவேண்டும், மறுபரிசீலனை செய்யவேண்டும், பெருந்திரளுக்கு புறத்தேயிருந்து ஒலிக்கும் குரல்களுக்கும் புதிய சாத்தியங்களுக்கும் செவிதிறந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி முதலிய நாடுகள் தாராளச் சிந்தனையையும் கருத்துச் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் முன்வைக்கின்றன என்பது எத்தனை பெரிய பொய் என்பதும் இந்த மூன்று மாதங்களில் வெளிப்பட்டுள்ளது. அவர்களது நாடுகளிலுமே இவையனைத்துமே காலத்துக்கேற்ப, வசதிக்கேற்ப எடுத்தாளப்படும் கருவிகளாகவே உள்ளன. இவர்கள் இன்னமும் வெள்ளையின மேலாதிக்க, காலனியாக்கக் காலத்திலிருந்து வெளிவரவே இல்லை என்பதே தெளிவாகியுள்ளது.

முழுக்க மரபான ஊடகங்களைச் சார்ந்திராத அமெரிக்க இளைஞர்கள், மூளைச்சலவை செய்யப்பட்ட மூத்தவர்களைப் போலன்றி, பெருமளவு இனப்படுகொலைக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்ற தரவுகளே ஒரே ஆறுதல்.

பின்னூட்டமொன்றை இடுக