தேய்பிறையில் வாடிக்கையாளர் சேவை

பிப்ரவரி 21, 2008

அனைத்துத் துறைகளிலும், இந்தியாவில் பெருகிவரும் பெரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையில் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. இந்திய நிறுவனங்களாகட்டும், பண்ணாட்டு நிறுவனங்களாகட்டும், அனைத்தின் மீதும் இக்குற்றச்சாட்டை சுமத்தலாம். இந்நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த எதிர்ப்புகளை ஒதிக்கிவிட்டு, அவைகளின் செயல் திறத்தையும், சேவை தரத்தையும் ஆராய்ந்து பார்த்தால், கடக்க வேண்டிய பாதை வெகு தொலைவு என்பது புரியும்.

வங்கிகளில் நான் சந்தித்த தரக்குறைவான சேவைகள் அநேகம். என் அண்மைக்கால அவதிகளை, ஒரு நெடிய புலம்பலாக இங்கு பதிவு செய்திருக்கிறேன். தேவையற்ற தவறுகளால் எத்தனை உலைச்சல், அலைச்சல்.

ரிலையன்ஸ், ஸ்பென்ஸர், ஃபுட் வேர்ல்ட் போன்ற பல பெரிய தொடர்கடைகளில், பல நேரங்களில் அழுகிய தக்காளிகளும், வெங்காயமும் அகற்றப்படாமலே கிடக்கின்றன. பல மாதங்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய பொருள்கள் நிறையக் காணக்கிடைக்கின்றன. தயாரிப்பான தேதியைக் காணாமல் நான் இங்கு எதுவும் வாங்குவதில்லை. வசதியையும் பழக்கத்தையும் முன்னிட்டு என்னைப் போன்றவர்கள் அங்கு குவிந்த வண்ணம் இருந்தாலும், உலகத் தரத்தை இன்னும் இந்நிறுவனங்கள் எட்டவில்லை என்பது கசப்பான உண்மை.

நிர்வாகத் திறனாலும், விளம்பர பலத்தாலும், சரியான இடங்களின் தேர்ந்தெடுப்பாலும், தேசிய அளவில் பரந்திருப்பதால் குறைந்த விலைகளை நிர்ணயிக்கமுடிகிறதாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் உழவர்களோடான நேரடித் தொடர்புகளாலும், பல தரப்பட்ட பொருள்களை ஒரே இடத்தில் விற்க முடிவதாலும், குளிர்சாதன வசதி, கார் நிறுத்துமிடம் என்ற பிற அனுகூலங்களாலும் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற தொடர்கடைகளின் வளர்ச்சி பெறுகத்தான் போகிறது. இதனால் ஏற்பட சாத்தியமான பரவலான பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு, இவ்வளர்ச்சியை எதிர்ப்பதுவும் ஏற்றதல்ல.

ஆயினும் இவை வாடிக்கையாளர் சேவையில் முன்னேற்றம் காண முடியாவிட்டால் சந்திக்க வேண்டிய சிக்கல்கள் ஏராளமிருக்கும். வர்த்தக வளர்ச்சியில், இயந்திரமயமான சேவையை அளிக்கும் முயற்சியில் மனித நயத்தை (human touch) இழந்துவிடக்கூடாது. 

இப்பெரு நிறுவனங்கள் தடுமாறப்போகிற சேவை அம்சத்தில்தான், சிறிய கடைகள் சிறப்பாகச் செயல்பட்டு நசுங்கிப்போகாமல் தமக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. பொருள்பலத்தை புன்னகை கொண்டு சிறு வணிகர்களால் எதிர்கொள்ள முடியும்.


நொந்தாரை வாழவைக்கும் இந்தியா

பிப்ரவரி 21, 2008

இந்தியர்களை இனவெறியர்கள் என்று நினைத்திருந்த Andrew Symmondsக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும், IPL ஏலக் கோமாளிக் கேளிக்கையில் மிக அதிக விலைக்கு ‘விற்க’ப்பட்ட வெளிநாட்டு வீரர் அவர்தான் என்பதை அறிந்தபோது. ஒரு மாதம் முன்பு, சிமண்ட்ஸுக்கு எதிராய் இந்திய தேசமே போர்க்குரல் உயர்த்தியது – ஹர்பஜன் உன் தாயைத் தானே அவமானப்படுத்தினார், இனத்தையல்லவே என்று. இன்றைக்கு ஹைதராபாத் நவாபாய் வலம் வருவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவரும் தன் நாட்டை மறந்து, பாக்கிஸ்தானில் விளையாட மறுத்து, இந்தியாவின் நண்பனாகத் துணிந்து விட்டார்.

பணம் படுத்தும் பாட்டை என்னவென்று சொல்ல!

பி.கு… 

தனியுடைமைச் சமுதாயத்தில் பொருளாதார நோக்கங்கள் மேலெலும் போது, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பெறுகி, விளைவுகளும் விளங்குகிற போது, மத இன வேறுபாடுகள் மறைவதற்கான வாய்ப்புகள் உருவாகுமா என்கிற கேள்வி எழுகிறது. விடை அவ்வளவு விளையாட்டாய் அறிந்துவிட முடியாது என்பதால் இப்போதைக்கு வினாவோடு விடைபெறுவோம். தொடரும் பதிவுகளில், வேறொரு பொருத்தமான தொனியில், தொடர்ந்து ஆராயலாம்.


வயதான சிங்கமா இளங்கன்றா?

பிப்ரவரி 18, 2008

‘வயதான’ காரணத்தால் கங்குலியையும் டிராவிடையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அடிபட்டு ஓடமுடியாத யுவராஜூம், பொதுவாகவே ஓடாத முனாப் படேலும் ஆட்டக்களத்தில். வயதான சிங்கங்களைவிட அடிபட்ட இளங்கன்றுகள் எந்த வகையில் மேலென்று தெரியவில்லை.

ஓரிரண்டு ஆண்டுகளே விளையாடப்போகிறார்கள் என்பதால் இப்போதே விடுப்பு கொடுத்துவிட்டார்களாம். குப்பையில் போடுமளவிற்கு ஓரிரண்டு ஆண்டுகள் எப்போது இவ்வளவு மலிவாயின? எண்பது வயது அரசியல்வாதிகள் ஆள்கிற, ஏன், வாரிசுகளாய்க் கூட அறிக்கப்படுகிற, நாட்டில் இப்படியும் சில வாதங்கள்.


CIAவின் Animal Farm: நவயுக விலங்குப் பண்ணைகள்- பாகம் 2

பிப்ரவரி 18, 2008

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், Animal Farm திரைப்படத்தை CIA மாற்றியமைத்ததாம்; படித்தபோது வியப்பாக இருந்தது. கம்யூனிஸத்தை வீழ்த்த அமெரிக்கர்கள் அபத்தத்தின் எல்லைகளை அளந்திருக்கிறார்கள்.

Animal Farm புத்தகத்தின் இறுதியில், நான் முன்பு எழுதியது போல், மனிதர்களின் கொடுங்கோல் ஆட்சியை மாற்றி பன்றிகளின் கொடுங்கோலாட்சி உருவாகிறது. மற்ற விலங்குகள் மனிதர்களையும் பன்றிகளையும் வேறுபடுத்த முடியாமல் மாறிமாறிப் பார்க்கின்றன.

இந்தக் காட்சியை, திரைப்படத்தில் திட்டமிட்டு மாற்றியிருக்கிறதாம் அமெரிக்க ஒற்று நிறுவனம்.  காட்சியிலிருந்து மனிதர்களை நீக்கிப் பன்றிகளை மட்டும் மையப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் முதலாலித்துவ மனிதர்களை மறக்கடித்து கம்யூனிஸ்ட்டுப் பன்றிகளை மட்டும் மட்டம் தட்டிவிட்டார்களாம். இருவரையுமே ஒரே தட்டில் வைத்த Orwell அப்போது மறுத்துப்பேச உயிரோடு இல்லை.

 உலக அரசியல் அரங்கிலும் சிறுபிள்ளை விளையாட்டுகள் சாத்தியம்தான் போலும்.


ஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா?

பிப்ரவரி 15, 2008

இணையத்தின் மட்டற்ற சுதந்திர உணர்வுக்கு விகடன் சவால்விட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஆனந்த விகடனின் அவதூறு’ பதிப்பைப் பார்த்ததும் புரிந்தது. விகடன் இணையதளத்தில் (கட்டுரை முழுவதும் பதிவுசெய்யாமல் படிக்க முடியாது என்பதால்)   தலைப்பு மட்டும் தென்பட்டது; மிரட்டியது.

இது ஓர் ஆபத்தான அபத்தத்தின் உச்சம். எம்.ஜி.ஆர், சிவாஜி பற்றிய ஒரு சாதாரண அங்கதப்பதிப்பினைத் தாக்கித் தலைப்புச் செய்தியாக்குவதற்கு ஒரே உள்நோக்கம் தான் இருக்க முடியும் – ஜெயமோகனுக்கு எதிராய் எதிர்ப்பலை கிளப்பிக் குளிர்காய்ந்து, அதிகப் பிரதிகள் விற்கவேண்டும். இது ஜெயமோகனுக்கு மட்டும் எதிரான செயலில்லை, இணையத்தின் வலிமை உணர்ந்த வலியின் விளைவு. எழுத்தாளர்கள் இணையத்தின் மூலம் நேராய் மக்களைச் சென்றடையத் துவங்கிவிட்டால் பத்திரிக்கைகளின் தாக்கமும் தேவையும் குறைந்துவிடாதா?

இணையத்தில் யார்வேண்டுமானாலும், யாரைப்பற்றியும், எதுகுறித்தும் எதுவும் எழுதலாம். பத்திரிக்கைகளின் கட்டுப்பாடுகளுக்கும், வியாபர நிர்ப்பந்தங்களுக்கும் உட்படவேண்டிய கட்டாயமில்லை. தமக்குத் தேவையானதை வாசகர்கள் தேர்ந்தெடுத்துப் படித்துக்கொள்வார்கள். எழுத்தாளனும் வியாபர நோக்கங்களுக்கு விடுப்புகொடுத்துவிட்டுத் தன் ஆழ்மனதின் கதவுகளைக் கவலையில்லாமல் திறந்துவிட முடியும். பத்திரிக்கைகளில் செய்ய முடியாத பல்வேறு முயற்சிகளை, சோதனைகளைச் செய்துபார்க்க முடியும். இப்படி விளைந்ததுதான் ஜெயமோகனின் பதிப்பும். அதன் தரத்தைப் பற்றி நான் இங்கு அலசப் போவதில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜியைப் பிடிப்பதும் பிடிக்காததும் அவர் சொந்த விருப்பு. அவர்கள் பற்றி எழுதுவது அவர் உரிமை. இணையம் அளித்த சுதந்திரம். ஏற்பதும் நிராகரிப்பதும் வாசகன் உரிமை. 

அந்தப் பதிப்பை எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு நேர்ந்த இழிவாய்ச் சித்தரித்து, அளவுக்கதிகமான முக்கியத்துவமளித்து sensationalize செய்வது அரசாங்க அடக்குமுறையை விடவும் கீழ்த்தரமானது. வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அரசியல் இயக்கங்கள் ஏதேனும் வன்முறையில் இறங்கினால் விகடன் பொறுப்பேற்குமா? இத்தனை ஆண்டுகள் இவர்கள்தான் கருத்து சுதந்திரத்திற்காகக் கொடிபிடித்திருந்தவர்களா? நம்ப முடியவில்லை.

MF ஹூசைனுக்கும், சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லீமா நஸரீனுக்கும் மத வெறியர்களால், அரசியல் அடிப்படைவாதிகளால் விளைந்த இன்னல்களில் சிறுபகுதியேனும் ஜெயமோகனுக்கு விகடனால் விளைந்தால் அது விகடனுக்கு பெரும் இழுக்கு. பின் விகடனுக்கும் கொமேனிக்கும், டொகாடியாவுக்கும் என்ன வேறுபாடு? தலைவர்கள், கலைஞர்கள், கடவுள்கள், எவருமே விமர்சனங்களுக்கும் விகடத்துக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது விகடனுக்குத் தெரியாதா?

பிற பதிப்புகளில், ஜெயமோகன் போன்ற தரமான இலக்கியவாதிகள் சிறுபத்திரிக்கைகளுக்குள் சிறைபட்டிருப்பதால் மக்களைச் சென்றடைவதில்லை என்று எழுதியிருக்கிறேன். இச்செயல் பிரபல இதழ்களிலிருந்து அவர்களை மேலும் அந்நியப்படுத்தும். இழப்பு தமிழ் மக்களுக்குத்தான்.

இதிலிருந்து விளையக்கூடிய ஒரே  நன்மை – மேலும் பல எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இணையத்தின் ஈர்ப்பும் சாத்தியங்களும் புரியும்.