பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் – ஒரு கடிதம்

ஒக்ரோபர் 25, 2011

பாரதி பற்றிய இந்தப்பதிவுக்குப்பின், ஜெயமோகன் எதிரிவினையாற்றத் ‘தேர்ந்தெடுக்காத’  ஒரு கடிதத்தை அவருக்கு இரண்டு வாரங்களுக்குமுன் எழுதியிருந்தேன். அவர் விவாதத்தை முடித்துக்கொள்கிறேன் என்கிறமாதிரி தோற்றமளிக்கக்கூடிய பதிவினையிட்டதால், நானும் ‘எழுதிய கடிதம் ஏன் எவர் கண்ணிலும் படாமற்போகவேண்டும்?’ என்று இதை இங்கு பதிவிடுகிறேன்.  முடிவில், விவாதம் great poet என்பது குறித்தா, greatest poet என்பது குறித்தா என்று குழம்பிப்போயிருக்கிறேன்.  அவரும் குழம்பியிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.  அவரோடு எதிரிவினையாற்றும் தகுதிபடைத்த புதிய குரல் அவருக்குள்ளேயே எழும்பிவிட்டதால் இதோடு நாமெல்லாம் விலகிக்கொள்வது நல்லது.

எனக்கு இவ்விவாதத்தைத் தொடர்ந்ததன் மூலம் எம்.டி.முத்துக்குமாரசாமி, டகால்டிறியாஸ் குரானா போன்ற ரசமான எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொள்ளமுடிந்ததில் மகிழ்ச்சி.

————————————————————————

அன்புள்ள ஜெயமோகன்,

சுஜாதா, நகுலன் பற்றிய பிம்பங்களை நீங்கள் உடைத்தபோது, அவற்றோடு முழுமையாக உடன்படாத போதும், உங்கள்  கோணத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பாரதி விவாதத்தில் அப்படியொரு புரிதல் எனக்கும், எதிர்வினைகளை வைத்துப்பார்க்கும்போது பலருக்கும், ஏற்படவில்லை. பாரதியின் கவிதைகளில் கொப்பளிக்கிற உணர்ச்சிகளையும், அவன் எழுதிய காலகட்டத்தையும், அவனிக்கிருந்த சூழலையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவன் சரித்திரம் நிலைக்கிறவரை, அவனை அலசவே முடியாது. பாரதி எளிமையை நாடி எளிமையாய் எழுத முயன்றவன். கடினமாய் எழுதியவற்றைக்கூட மற்றவர்களுக்குப்படித்துக்காட்டி, அவர்களுக்குப் புரியாதபோது, மாற்றியவன் (வ.ரா., யதுகிரியின் சரிதைகளின்படி). அவன் கவிதைகள் மீது மரபுக் கவிதையின் அளவுகோள்களையும், நவீனத்துவ நோக்கையும் பாய்ச்சி, அளப்பது சரியாகப் படவில்லை.

நம் உள்ளுணர்வுக்கு எதிராய், பாரதியை நிராகரித்து நாம் என்ன சாதிக்கப்போகிறோம். பாரதியின் பிம்பம் உடைக்கப்பட வேண்டியதாகவே நீங்கள் கருதினாலும், உடைவதால் எதை அடையப்போகிறோம்? அவனை மிஞ்சுவதற்கு எவ்வகையில் மற்றவர்களுக்குப் பாரதி தடையாயிருக்கிறான். பாரதியின் மதிப்பையும், பாதிப்பையும் குறைவாகவே எடைபோட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் – எனவேதான் உங்களைத் தொடர்ந்து படிக்கிற என்னைப்போன்ற பலரிடமிருந்தும் இவ்வளவு கடுமையான எதிர்வினைகள்.

தயவுசெய்து, பாரதியை வெறும் பக்திக் கவிஞன் என்ற குப்பிக்குள் அடைக்காதீர்கள். நாத்திகனான நான், திருவாசகத்துக்கும் கம்பராமாயணத்தும் இணையாக, பாரதியின் பக்திக்கவிதைகளிலும் (அவன் மற்ற கவிதைகளைப் போலவே) ஆழமான உணர்வெழுச்சயை அடைந்துள்ளேன்.

“ஒரு இலக்கியவாதி இலக்கியப்பரம்பொருளை அடைய நினைப்பது தப்பா? தப்பா? தப்பா?” என்று கேள்வி எழுப்பியிருந்தீர்கள். ஏன் பரம்பொருள் ஒன்றுதான் என்று நினைக்கிறீர்கள். வாசகனாய், இலக்கிய ஆர்வலனாய், எனக்கு, பாரதி சொன்னமாதிரி ‘பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே’ என்றுதான் தோன்றுகிறது. அந்த இலக்கியப்பரம்பொருள் வள்ளுவனிலும், இளங்கோவிலும், கம்பனிலும், பாரதியிலும் பரவி நிற்பதாகவே நான் காண்கிறேன். ஒவ்வொன்றாய் விலக்கிச்சென்றால் பின் பரம்பொருளே இல்லை என்கிற இலக்கிய-நாத்திக நிலைப்பாட்டிற்குத்தான் வந்தாக வேண்டும்.

எது எப்படியோ, நீங்கள் தொடங்கிய இந்த விவாதங்களின் மூலம் ஒரு நன்மை: பாரதியை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதும், அதன் மாறாத்தன்மையும், எனக்கு மறுபடியும் உறுதியாய்ப் புரிகின்றன.

கண்ணன்.

————————————————————————-

என் மூன்றுவயது மகள் ஆக்ரோஷமாய் ‘அக்கினிக்குஞ்சு’ பாடல் பாடிக்கொண்டிருக்கிறாள்;  ‘காக்கை குருவி’களை நோக்கிநோக்கிக் களியாட்டம் கொண்டிருக்கிறாள்; தீக்குள் விரலை வைத்தால் என்னவாகும் என்று ஆராய்ந்துகொண்டிருக்கிறாள். பாரதி இன்னும் 70 வருடங்களுக்காவது மகாகவிதான். தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.


பாரதி என்றொரு மானுடன்

ஒக்ரோபர் 11, 2011

முதலில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி. பாரதி ஒரு மகாகவி இல்லை என்ற விவாதத்தைத் தொடங்கி, பாரதியை விமர்சினங்களால் கண்டடைய முடியாது என்ற தெளிவை ஏற்படுத்தியதற்காக. அவர் எவ்வளவு அற்புதமான மகாகவி என்று எங்களுக்கு நினைவுபடுத்தி, மறுபடியும் நிறுவியதற்காக.

பாரதி ஓர் அற்புதமான நிர்வாணச் சிலை செய்துசென்றான். அதன் நிர்வாணமே அதன் அழகு. அச்சிலையை ரசிப்பதைவிட்டு,  மற்ற சிலைகளின் ஆடை ஆபரணங்கள் போல் இதில் இல்லையே என்று விவாதிப்பதில் பொருளில்லை.

பாரதியின் பல கவிதைகள் நேரடித்தன்மையோடு இருக்கலாம்; ஆழ்படிமங்கள் இல்லாமல் இருக்கலாம்.  ஆனாலும் அவற்றின் உணர்வெழுச்சியே அவற்றிற்கான தனியிடத்தை ஏற்படுத்துகின்றன. அவன் கவிதைகளை, உணர்ச்சிகளைக் கழற்றி வைத்துவிட்டு வெறும் விமர்சனப் பார்வையோடு பார்த்தால், வெற்று விவாதங்கள் தான் விளையும்.

பாரதியை வெறும் இசைப்பாடல் எழுதியவனாகவும், பக்திக் கவிஞனாகவும், உரைநடை முன்னோடியாகவும் மட்டுமே பார்க்க முடிகிறபோது,  ஜெயமோகனின் இலக்கியப்பார்வைமீது எனக்கிருந்த மதிப்பு பலகாதம் கீழிறங்கிவிட்டது.

மற்ற மொழியினர் பாரதியை மட்டுமல்ல, கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் தான் இன்னும் அறியாமல், பாராட்டாமல் இருக்கிறார்கள்.  அந்த அளவுகோளின்படி தமிழில் கவிஞர்களே இல்லை என்றாகும். பாரதி உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்தவன். வெறும் மேடைப்பேச்சு தரும் தற்காலிக உணர்வெழுச்சியல்ல அவனுடையது – நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் சற்றும் மங்காத உணர்வெழுச்சி.  அத்தகைய உணர்வெழுச்சியை மொழிபெயர்ப்பதற்கு பாரதியின் திறத்தோடு இன்னொரு கவிஞன்தான் வரவேண்டும். என்னுடைய மொழிபெயர்ப்புகளையே நான் மறுபடி படிக்கும் போது, எனக்கு என்னுடைய போதாமை புரிகிறது. தமிழில் இருக்கும் வேகத்தையும், எளிமையையும், அழகையும் ஒருசேர என்னால் (மற்றவர்களாலும்) ஒருபோழ்தும் ஆங்கிலத்தில் கொண்டுவர முடியவில்லை என்பது தெளிவு.

ஆனாலும், அது ஒரு பொருட்டல்ல. தொடர்ந்து முயல்வோம். மற்றவர்களை பாரதி சென்றடைந்தாலும், அடையாவிடினும், தமிழனுக்குப் பாரதி மகாகவிதான்.

பாரதியை பக்தி, சமூகம், வேதாந்தம், மொழி என்கிற கூட்டிலெல்லாம் அடைத்துப்பார்க்க முடியாது. அவன் கவிதைகளிற் பொங்கிநிற்பது மானுடம். ஆத்திகனையும், நாத்திகனையும் நகரவிடாமற் கிறங்கடிக்கும் மானுடம். பாரதி என்றொரு மானுடன் கவிபுனைந்த மொழியினை அறிந்தவன் நான். எனக்கு என்றும் அவன் மகாகவிதான்.

பாரதியின் படிமங்களற்ற, காலத்தை வென்று நிற்கும் இந்த நேரடிக் கவிதையையே எல்லா விமர்சனங்களுக்கும் பதிலாய்த் தரலாம்.

தேடிச்சோறு நிதந்தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்ப மிகவுழன்று பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்க்கூற்றுக் கிரையெனப்பின்மாயும் பல
வேடிக்கை மனிதரைப்போல் நானும்
வீழ்வேனென்று நினைத்தாயோ ?