கரையேறாக் கரவுகள்

திசெம்பர் 4, 2018

/நீங்கள் நான்கு மொழிகளில் புலமைபெற்றிருக்கிறீர்கள். பிற மொழியறிவு உங்கள் படைப்பு மொழிக்கு எத்தகைய வலுசேர்த்திருக்கிறது?

பிறமொழி அறிவு தமிழை மேலும் செழுமைப்படுத்த உதவுகிறது. சொல்வளத்தைப் பெருக்குகிறது. குறிப்பிட்ட ஒரு பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லைத் தேடும்போது ஏற்கெனவே நாம் அறிந்த ஒரு சொல்லைத் தவிர, இதுவரையிலும் நாம் பயன்படுத்தாத சொற்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மொழியில் கச்சிதம் கூடுகிறது. மிகச் சரியான, பொருத்தமான சொல்லை இட வேண்டும் என்கிற முனைப்பையும் அக்கறையையும் உண்டாக்குகிறது. தவிர, வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அதனுடனான கலாச்சாரத்தையும் இலக்கியத்தையும் அறிந்துகொள்வதுதான். புனைவெழுத்தாளனுக்கு இது மிக அவசியமானது./

தமிழ் இந்துவில் வந்துள்ள பேட்டியில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் சொல்கிற இந்த கருத்து இன்னும் அதிக கவனமும் விரிவும் பெறவேண்டிய ஒன்று. பிறநாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழ்மொழியில் பெயர்க்கும்போது மொழியில் சொல்வளமும் கருத்துவளமும் கூடுகிறது; மொழிமீதான நமது (மொழிபெயர்ப்பவனின்) ஆளுமையும் அதிகரிக்கிறது.

நான் அண்மையில் சில ஆங்கிலக் கவிதைகளையும் சிறுவர்களுக்கான சரிதைகளையும் மொழிபெயர்த்தபோது, இதுவரை தமிழில் நான் பயன்படுத்தியிராத பல சொற்களைப் பயன்படுத்த நேர்ந்தது. புதிய தமிழ்ச்சொற்களை அறிந்துகொள்ளவும் முடிந்தது. உதாரணமாக, Alligator என்பதற்கு முதலில் வழக்கம்போல் முதலை என்ற சொல்லே விழுந்தது. பிறகு அகராதியில் தேடியபோது கரவு என்ற சொல் கிடைத்தது. திருவாய்மொழியில் கரவார்தடம் என்ற தொடர் இருப்பதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சுட்டியது. மேலும் தேடியபோது,

 பரவாள் இவள் நின்று இராப்பகல்
    பனிநீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
   வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும் தாமரைக்கயம்
    தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
    திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே

என்ற இனிய பாசுரத்தை அடைந்தேன். தமிழ்ப் பேரகராதியைப் புரட்டிப்பார்க்கும் (இணையத்தில்தான் எனினும்) வாய்ப்பு கிடைப்பதே ஒரு பேரனுபவம்தான். பல நூற்றாண்டுகளாய்ப் பல நாட்டு அறிஞர்களின் பேருழைப்பின் மூலம் உருவான பெட்டகம் அது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இட்டுச்சென்று கொண்டே இருக்கும்.

கரவு என்ற சொல்லை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று அதையே போட்டிருக்கிறேன். கரவு என்பதற்குப் பிறபொருள்களும் உள்ளன (மறைவு, வஞ்சனை, பொய்). ஆனால், ‘கரவு கரையேறியது’ என்கிற இடத்தில் இப்பொருளில்தானே வரமுடியும்.

Crocodile, alligator என்ற சொற்களையும், அவற்றின் வகைகளையும் குறிக்கும் வகையில், தமிழ்ப் பேரகராதியில் மட்டும் 28 சொற்கள் உள்ளன. இவற்றுள் பல திசைச்சொற்களும் இருக்கும்தான்.

Crocodile – இடங்கர் (கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமும் (குறிஞ்சிப். 257)), கடு, கோதிகை, சிஞ்சுமாரம், சீங்கண்ணி, தாலுசிகுவம், தீர்க்கவர்ச்சிகை, துவிதாதகி, நக்கரம் (நக்கரக் கடற்புறத்து – கம்பராமாயணம்), மகரம், மகாமுகம், மாசலம், மாயாதம், வன்மீன் , விடங்கர், அவகாரம், ஆட்கடியன், ஆலாசியம் (ஆண் முதலை), கிஞ்சுமாரம், கும்பீலம், சலகண்டகம்

Alligator – ஆட்பிடியன், கரா, கராம், (ஆண் முதலை), சாணாகமுதலை [தீங்குசெய்யாத ஒருவகைத் தாழ்தரமான முதலை ], செம்மூக்கன், நக்கிரம், முசலி.

ஆனால், Alligator சீனாவிலும், அமெரிக்காவிலும் மட்டுமே உள்ளதால், உண்மையில் இச்சொற்கள் எல்லாமே crocodile வகைகளைக் குறிக்கின்றனவாகவே இருக்கக்கூடும்.

தடந்தொறும் கரையேறாக் கரவுகளாய், இத்தனை சொற்களும் மூழ்கிக்கிடக்கின்றன.

—-

அதே போல, மொழிபெயர்க்கும்போது புதிய சொற்றொடர்களை உருவாக்கவும் முடிகிறது. பழமொழிகளுக்கும் மொழிவழக்குகளுக்கும் இணையான வழக்குகள் தமிழில் இல்லாத போது, பெரும்பாலும் அதன் உட்பொருளையே தருகிறோம். ‘The tide had ebbed’ என்ற ஒரு ஆங்கில மொழிவழக்கு ஓரிடத்தில் வந்தது. ‘சூழல்/நிலைமை சீரடைந்துவிட்டது’ என்று எளிதில் பொருள்படும்படி சொல்லியிருக்கலாம். ஆனால், நேரடி மொழிபெயர்ப்பாக, ‘ஓதம் ஓய்ந்துவிட்டது’ (ஓதம் – tide) என்றே எழுதிப்பார்த்தேன். சரியாகத்தானே இருக்கிறது என்று அப்படியே எடுத்தாண்டுள்ளேன். நம் பண்பாட்டுச் சூழலுக்கும் ஏற்ற புதிய மொழிவழக்குகளை உருவாக்குவதில் தவறில்லையே. சினுவா ஆச்சிபி Things Fall Apart நூலில் ஆப்பிரிக்கச் சொலவடைகளை நேரடியாக ஆங்கிலத்தில் பெயர்த்திருப்பார். அவற்றின் பொருளை விளங்கவைக்கும் வகையில் அழகாகத் தன் கதையாடலை அமைத்திருப்பார். அதுவும் அவரது மொழிக்கு ஓர் எழிலைக் கூட்டியிருந்ததாகத் தோன்றியது.

பேச்சு வழக்குக்கு நெருக்கமாக மட்டுமே எழுத்துமொழியையும் அமைக்கும் போது, குறிப்பாகக் கவிதைகளிலும் அவ்வாறு செய்யும்போது, மொழியின் வளம் குன்றிப்போகிறது என்பதாக உணர்கிறேன். (கவிதை வளம் தான் கவிதைக்கு முக்கியம் என்று கவிஞர்கள் கருதலாம். ஆனால் புதிய சொற்கள் கவிதைக்கொன்றும் பகையல்லவே.) ஆங்கிலத்தில் அந்தச் சிக்கல் இல்லை. எளிய நடையிலும் அரிதான சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். ஏனோ, தமிழில் நமக்கு நாமே இந்த எளிமை விலங்கைப் பூட்டிக்கொண்டோம். புழக்கத்தில் ஒரு சொல் வந்துவிட்டால், அதை மட்டுமே எழுத்திலும் பயன்படுத்துகிறோம். அதற்கிணையான பிற சொற்கள் நாளடைவில் முற்றிலுமாக மறைந்துபோகின்றன. நாஞ்சில் நாடன் இதுகுறித்து நேர்ப்பேச்சிலும், எழுத்திலும் அதிகமும் வருந்துவார்.

ஆங்கிலத்தில் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள தினமும் ஆங்கில இந்து படிக்கச்சொல்லித் தருகிறோம். தமிழைப் பள்ளியில் பாடமாக படிக்கின்றவர்களுக்குப் பழைய தமிழில் அருஞ்சொற்பொருள் காணவும் பழக்குகிறோம். ஆனால், நவீனத் தமிழில் புதிய சொற்களைக் கற்கும் வகையில் நம் வார இதழ்களும் நாளிதழ்களும் பெரும்பாலும் இல்லை, அப்படியிருக்க வேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்பதுமில்லை. பல்லாயிரம் சொற்கள் யாரும் தீண்டாத அகராதிகளுக்குள்ளும், பழந்தமிழ் இலக்கியங்களுக்குள்ளும், சில சிற்றிதழ்களுக்குள்ளும் மட்டுமே சிறைப்பட்டுக்கிடக்கின்றன.

புரியாத சொற்களைக் காணும் போது, ஏன் புரியாமல் எழுதுகிறான் என்று திட்டுவதை விடுத்து, அகராதியைப் புரட்டுவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ளத்தொடங்கலாம் (இணையத்திலேயே பலவும் உள்ளன). சிடுக்கிலா நடைவேறு, பொருத்தமான அரிய சொற்களைக் கையாள்வது வேறு. மொழிக்குப் புதிதாக ஏதும் தராவிடினும், இருப்பதையேனும் இழக்காமல் காக்கலாம். மீட்டெடுக்கலாம். பேசாக்கிளவியும் பேசலாம்.

Advertisements

ஒரு கவிதை – சில கவிஞர்கள்

நவம்பர் 20, 2018

Here with a Loaf of Bread beneath the Bough,
A Flask of Wine, a Book of Verse – and Thou
Beside me singing in the Wilderness –
And Wilderness is Paradise enow.

– Rubaiyat of Omar Khayyam, Edward FitzGerald (1859)

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்; – அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்றன்
காவலுற வேணும்;என்றன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

—–

அகத்தூண்டுதல்? தற்செயல்? பலருக்கும் தோன்றும் கரு? எதுவாக இருந்தாலும், ஒரு மகாகவியின் ஒளி இவ்வரிகளில் மிளிர்கிறது. குறிப்பாக, ‘in the wilderness’ – ‘காட்டுவெளியினிலே’ இரண்டுக்கும் உள்ள ஒப்புமை அருமை. உமர்கய்யாம் ஒரு மரக்கிளை கேட்டால், இவன் சற்றே அதிகமாய், காணி நிலமும் ஒரு மாளிகையும் பத்துப்பன்னிரண்டு தென்னைமரமும் கேட்கிறான். நிலவொளியும், குயிலோசையும், இளந்தென்றலும் இருக்கையில் ரொட்டியைப்பற்றிய கவலை இவனுக்கில்லை. பக்கத்திலே பெண்ணும் பாட்டும் வேண்டும் என்று இருவரும் கேட்கின்றனர் – அதிலும் இவனுக்குப் பத்தினிப் பெண் வேண்டும். கவிதை நூல் வேண்டுமென அவன் கேட்க, கவிதைகள் கொண்டுதர வேணும் என்று இவன் வேண்டுகிறான். கூட்டுக் களியில் பிற போதை வஸ்துகள் பற்றிய நினைப்பு பாரதிக்கு இப்போது வரவில்லை. காட்டுவெளியில் களித்திருப்பதே சொர்க்கம் என்று உமர்கய்யாம் நினைக்கிறான். அந்தக் காட்டுவெளியில் களித்திருக்கும்போதும் வையத்தைப் பாலித்திடல் பற்றி பாரதி அக்கறை கொள்கிறான்.

பாரதி உமர்கய்யாமை படித்திருக்கிறானா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் சொல்லவும். என்னிடமுள்ள கட்டுரைத் தொகுப்புகளிலும், இணையத்திலும் தேடிய வரை எதுவும் கண்ணில் படவில்லை. பாரதியின் முழுத்தொகுப்பில் தேடினால் உறுதிசெய்யலாம்.) விட்மனையும், ஜப்பானிய ‘ஹொக்கு’வையும், நவீனக் கவிதைப் போக்குகளையும் உள்வாங்கியிருந்த பாரதி, முகமது நபி பற்றி உரையாற்றிய பாரதி, பிட்ஸ்ஜெரால்டின் உமர்கய்யாமைப் படித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றுதான் நினைக்கிறேன். சாகா வரம் கேட்டு, மரணம் பொய்யாம் என்று சொன்ன பாரதி, நிலையாமையையும் முழுமுற்றான மரணத்தையும் அதிகம் பாடிய உமர்கய்யாமை எப்படி எடை போட்டிருப்பான் என்று தெரியவில்லை.

பாரதியின் சமகாலத்தவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை உமர்கய்யாமைப் பின்னாளில் மொழிபெயர்த்திருக்கிறார். அ.கா.பெருமாள் ஒரு கட்டுரையில் கவிமணியின் கருத்துப்படி தமிழில் ‘பாரதி ஒருவர்தான் மகாகவி’ என்று எழுதியுள்ளார். கவிமணி பாரதியைப் பற்றி இப்பிரபல வரிகளைப் பாடியுமிருக்கிறார்:

பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன்
பாட்டைப் பண்ணொடொருவன் பாடினானடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி
துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா !
கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங்
கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா!

—*—*—*—

உமர்கய்யாமின் இக்கவிதையை மொழிபெயர்ப்பதில் கவிமணி நிறைய சுதந்திரம் எடுத்திருக்கிறார். பிட்ஸ்ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்புமே அப்படித்தான் என்கிறார்கள் (wonderfully unfaithful translation).

வெய்யிற் கேற்ற நிழலுண்டு – வீசும் தென்றற் காற்றுண்டு,
கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு,
தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு,
வையந் தருமிவ் வனமின்றி வாழும் சொக்கம் வேறுண்டோ?


இதே கவிதையை, ஒமர் கய்யாமை வேறு பல மொழிபெயர்ப்புகள் மூலம் மொழிபெயர்த்துள்ள ஆசை இப்படி மொழிபெயர்த்திருக்கிறார்:

.ஜாடி மதுவும் கவிதை நூலும்

ரொட்டித் துண்டும் வேண்டும் எனக்கு,

பிறகு நீயும் நானும் யாருமற்ற இடத்தில்

சுல்தானின் ராஜ்யத்தை விட அதிக செல்வம் நமதாகும்.


கண்ணதாசனின், ‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்ற வரியும் நினைவுக்கு வருகிறது.எழில்

நவம்பர் 20, 2018

வாணியோட கன்னுக்குட்டி பொண்ணா இருந்தா எழில்னு பேர் வைக்கப் போறேன்.

சரிடா.

ஆணா இருந்தா எழில்னு வர்றமாதிரி என்ன பேர் வைக்கலாம்?

எழில்ங்கிறதே பொதுப்பேருதான். காளையா இருந்தாலும் வைக்கலாம். பசுவா இருந்தாலும் வைக்கலாம்.

இல்லப்பா, அது எப்படிப்பா?

‘ஆமா, இவதான் எல்லாருக்கும் பேரு வைச்ச மகராசி. எத்தன பேருக்கு பேர் வைச்சுருக்க நீ?’ என்று செல்லமாக அதட்டினாள் அம்மா.

‘காரி, மதுரா, வாணி, நிலா, ராசு, கல்லு, குட்டா,…’ என்று மூச்சுவிடாமல் அடுக்கினாள். நாய்,ஆடு, மாடுகளுக்கு அவள் வைத்த பெயர்கள்.

பொம்மைகளுக்கு வைத்த பெயர்களை மறந்துவிட்டாள். ‘தாரா, மேகி, ஜாய்,…’ கைகாலாட்டும் புதிய மர பொம்மைக்கு டின்டின் என்று பெயரிடலாமா என்று யோசித்துவிட்டு, மீசை, தொப்பி இருப்பதால் கேல்குலஸ் என்ற பெயரை முடிவுசெய்திருக்கிறாள்.

ஒரு பார்பி பொம்மைக்குக் கண்ணைக் கட்டிவிட்டு காந்தாரி என்று பெயர் வைத்திருந்தாள்.

காந்தார மன்னன் சுபலனுக்குப் பின்னர் காந்தாரி என்ற பெயரைச் சூட்டியவர்கள் யாரேனும் உண்டா அறிஞர் பெருமக்களே?


96

நவம்பர் 20, 2018

96 சன் டீவியில் வரும்வரை காத்திருக்காமல் ஞாயிறன்றே கே.ஜி.யில் பார்த்தோம். பள்ளிக்கால நினைவுகள் ஏராளமாகத் திரண்டு வந்தன.

எத்தனை தடவை இதே போல பேருந்தில் அடித்துப்பிடித்து வந்திருப்போம் என்று மகளிடம் சொல்லியவாறு வந்தேன். எத்தனை முறை அந்தப் படிகளில் அமர்ந்து காத்திருந்திருப்போம். டிக்கெட் வாங்கித்தருவதாகச் சொல்லி 30 ரூபாயை எப்படி என்னிடமிருந்து ஒருவன் ஏமாற்றினான்.

திருமணத்துக்குப்பின் முதன்முதலாக ஒரு படத்துக்கு வந்தோம்…யாராவது அப்பா அம்மாவைக் கூட கூட்டீட்டு வருவாங்களா என்று மனைவிக்கும் அலறும் நினைவுகள்.

உள்ளே சென்றோம். புகைப்படக் கலைஞராக நாயகன். ‘அப்பா, அந்தப் பக்கத்துக்கும் இந்தப் பக்கத்துக்கும் கலர் வித்தியாசமா இருக்குப்பா,’ என்றாள் மகள். இருள் காட்சியொன்றில் தோன்றிய விண்மீன்கள் விடிந்த பின்னும் விலகவே இல்லை. கொஞ்ச நேரம் ஏதோ புது திரை மொழியோ என்று நினைத்திருந்தேன். பின்னர் தான் புரிந்தது.

திரையில் மேலிருந்து கீழாய் நான்கு கோடுகள். நிறைய ஓட்டைகள், ஒளி பாய்ந்து விண்மீன்களாய் மிளிர்ந்தன.


பேருந்து

நவம்பர் 20, 2018

சென்ற வாரம், எங்கள் பயிலக மாணவர்கள் ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறினார்கள். அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிற அவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதற்குப் பேருந்துக்காகக் காத்திருந்திருக்கிறார்கள். பேருந்து வந்ததும் எப்போதும் போல் முண்டியடித்துக்கொண்டு ஏறியிருக்கிறார்கள். நடத்துனர் கோபமாகத் திட்டி, அவர்கள் யாரையும் ஏற்றாமலே பேருந்தை நகர்த்தச்சொல்லிவிட்டார். பேருந்து கொஞ்ச தூரம் போனதுமே, யாரோ ஒரு மாணவன் கல்லை வீசியெறிய, கண்ணாடி சிதறியிருக்கிறது. உடனே காவல்துறையினர் அழைக்கப்பட்டு, 9வது, 10வது படிக்கும் எல்லா மாணவர்களையும் மிரட்டி, விசாரித்திருக்கிறார்கள். ஜட்டியோடு உட்கார வைத்துவிடுவேன் போன்ற மிரட்டல்களையெல்லாம் மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் சின்னதாக அடியும் வாங்கியிருக்கலாம். ஆசிரியர்களும் காவல்துறையினருக்கும் நடத்துனருக்கும் ஆதரவாகவே பேசினார்களாம்.

எங்கள் மாணவர்கள் சேதமில்லாமல், தாமதமாக வீடு திரும்பினார்கள்.

‘நீங்க ஏன்டா நெருக்கியடிச்சுட்டு ஏறணும். வரிசையா ஏறலாமில்ல?’

’30-40 பேர் உட்கார்ர பஸ்ஸுல, நாங்க 100 பேர் எறணுங்கண்ணா. அடிதடியில்லாம எப்படிண்ணா ஏற முடியும்? எத்தனை தடவை நானே படில விழுகிற மாதிரி தொங்கிட்டு வந்திருக்கேன். பிரவீன்கூட ஒரு நாள் விழுந்தாட்டாங்கண்ணா.’

பல நூறு மாணவர்கள் படிக்கிற பள்ளி. மேற்கே போகும் பேருந்து அந்த நேரத்துக்கு அது ஒன்றுதான். அடுத்த வண்டி அரை மணிநேரம் கழித்து வரும்.

அடுத்த முறை இப்படி நடந்தால், இது மாதிரி கல்லெறியாதீர்கள். புகார் எழுதிப் பழகுங்கள். கலெக்டர் வரைகூடப் போகலாம். தேவைப்பட்டால் அமைதியாகப் போராடிப் பழகுங்கள். எப்போதும் உங்கள் தரப்பில் தப்பில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்று அறிவுரைகளை அடுக்கினேன். வேறென்ன சொல்ல?


பயிலகத்தில் திருக்குறள்

நவம்பர் 20, 2018

இந்த மனிதர் உண்மையிலேயே கவிதைக்குள் மாயங்கள் செய்திருக்கிறார். எங்கள் குழந்தைகள் திருக்குறள் கற்றுக்கொள்வதை நேசிக்கின்றனர். கற்றுத்தரும்படி கட்டாயப்படுத்துகின்றனர் – ஒவ்வொரு நாளும் ஒரு சில நிமிடங்களுக்காவது. புத்தகத்தையே தொட மறுப்பவர்களும், குறள்களைக் கேட்டு மனனம் செய்து ஒப்பிப்பதில் பேருவப்பு கொள்கின்றனர். ஒரு சொல்லைக்கூட உரக்கப் படிக்க மறுப்பவர்களும், தொண்டை கிழிய இக்குறளைக்கூடக் கூவுகின்றனர்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூஉம் மழை.

திருக்குறள் முழுவதையும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று ஒரு தீர்ப்பு தரப்பட்டது. என்னைக் கேட்டால், திருக்குறளைப் பாடத்திட்டத்திலிருந்தும், தேர்வுகளிலிருந்தும் முழுவதுமாய் நீக்கிவிடுங்கள் என்பேன். அதை ஒரு கொண்டாட்டமாக்குங்கள். எங்கள் குழந்தைகளைப் போலவே எல்லாக் குழந்தைகளும் திருக்குறளைக் கற்றுக்கொடுங்கள் என்று கட்டாயப்படுத்துவார்கள், அவர்களாகவே அவரவர் வேகத்தில் கற்பார்கள், மற்றவர்களோடும் மற்றவர்களிடமிருந்தும் கற்பார்கள், ஒருவர் மற்றவரை நிறைவு செய்வார்கள், மகிழ்ச்சியுடன் கற்பார்கள்.


குடி

நவம்பர் 20, 2018

கிராமம் நலம்பெற என்னவெல்லாம் செய்யலாம் என்று பயிலக மாணவர்களோடு எதேச்சையாக ஒரு சிறிய உரையாடல் நடந்தது. சுத்தம், பசுமை, கல்வி, சுற்றுச்சூழல் என்று பலவாறாகச் சொன்னார்கள்.

‘பசங்களா, எல்லாம் சரி, குடியை விட்டுட்டீங்களே,’ என்றேன்.

‘டாஸ்மாக்க மூடணும்ணா’

‘சரி, நாம என்ன பண்ணலாம்?’

‘நாங்க சொன்னா வீட்டுல அடிக்கிறாங்கண்ணா.’

‘எல்லாருக்கும் ஒரு மாலையைப் போட்டுவிடறது தாங்கண்ணா ஒரே வழி.’

‘அப்பவும் ரொம்ப நினெப்பு எடுத்தா, மாலையக் கழட்டி வைச்சிட்டுக் குடிச்சிட்டிட்டு வந்துட்டு, அப்புறமா மறுபடியும் மாலையப் போட்டுப்பாங்கண்ணா.’