2016ல் படித்தவை

திசெம்பர் 31, 2016

இவ்வாண்டு படிப்பதற்கு எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது என்பது இப்பட்டியலைப் பார்க்கும்போது தெரிகிறது. எனக்கே சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இவ்வாண்டுதான் மிகவும் அதிகம் பயணம் செய்திருக்கிறோம்; கிராமக் குழந்தைகளோடு நிறைய நேரம் கழித்திருக்கிறோம்; மகிழ்மலரின் தேவார-திருவாசக இசையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம்; விவசாயம், தேங்காயெண்ணெய் ஆட்டுதல் என்று முற்றிலும் புதிதான பணிகளுக்குள் ஆழமாகச் சென்றிருக்கிறோம்; தோப்பில் ஒரு சிறு அறையினை எங்கள் உடலுழைப்பையும் அளித்துக் கட்டியுள்ளோம். நன்றாக உறங்கியிருக்கிறேன்; ஓரளவு எழுதியுமிருக்கிறேன்; தியாகு நூலக நண்பர்களைத் தொடர்ந்து சந்தித்து இலக்கிய-அரசியல் உரையாடல்களில் ஈடுபட்டிருக்கிறேன்; சில நல்ல திரைப்படங்களையும் கண்டிருக்கிறேன். இத்தனைக்குமிடையில் படிப்பதற்கு நிறைய நேரம் இருந்திருக்கிறது; சும்மா இருக்கும் சுகத்துக்கும் நிறைய நேரமிருந்திருக்கிறது; ஒரு புத்தகம் (முகிலினி) எங்கள் தோட்டத்தில் வெளியிடப்பட்டது என்பதெல்லாம் எல்லோரும் சபிக்கும் 2016ம் ஆண்டை பாசத்துடன் திரும்பிப் பார்க்கவைக்கின்றன.

பட்டியலில் பல புத்தகங்கள் அளவில் சிறியவை; அதனாலும் பட்டியலின் நீளம் கூடியிருக்கலாம். குறைபட்டுக்கொள்ளவும் விசயங்கள் இல்லாமலில்லை: அறிவியல், வரலாறு, விவசாயம், கல்வி குறித்தெல்லாம் மேலும் அதிகமாய்ப் படித்திருக்கலாம். வரும் ஆண்டுகளில் படிக்கவேண்டும். படித்த புத்தகங்கள் குறித்து மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறேன்; மிகக் குறைவான குறிப்புகளே எடுத்திருக்கிறேன். எழுத வேண்டும்.  திருக்குறள் மொழிபெயர்ப்பு ஓராண்டாய்த் தடைபட்டு நிற்கிறது.

பட்டியலில் உள்ள புத்தகங்களில் அனேகமாக அனைத்தையும் துணிவுடன் பிறருக்குப் பரிந்துரைப்பேன். பரிந்துரைக்க முடியாதவற்றை பெரும்பாலும் பாதியில் நிறுத்திவிடுகிறேன் – அதுவே ஒரு நல்ல வடிகட்டிதான்.

ரஷ்ய எழுத்தாளர்கள் தான் மனதுக்கு மிகவும் நெருக்கமாகத் தெரிகிறார்கள். தாஸ்தோவஸ்கியும் தால்ஸ்தோயும் இந்த ஆண்டும் என் படிப்பு நேரத்தை ஆக்கிரமிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

இவ்வாண்டு படித்தவற்றுள் டாப் 2 புத்தகங்கள்: ஸ்வெட்லானா அலெக்ஸிவிச்சின் The Second-hand Time,  Chernobyl Prayers.

அலெக்ஸிவிச் இலக்கியத்தின் எல்லைகளை விரித்திருக்கிறார். புனைவுகளும் கவிதைகளும் அரிதாகவே எட்டிப்பிடிக்க முடிந்திருக்கிற பல உயரங்களை இந்த இரண்டு புத்தகங்களிலும் எட்டியிருக்கிறார். அவரது எழுத்துகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை எனினும், அவரது எழுத்துமுறையாலும் தொகுப்புமுறையாலும் தனித்து விளங்குகின்றன. படிக்கும் நமக்குள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. நாவல்களின் ஆழ அகலங்களைவிட அதிகமாய்ப் பயணப்பட்டிருக்கின்றன.

ஸெகண்ட் ஹாண்ட் டைம் சோவியத் வாழ்க்கை குறித்தும், அதன் சிதைவுக்குப் பின்னான மாற்றங்கள் குறித்தும் பல கோணங்களில் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கிறது. சோவியத் கால அடக்குமுறையிலிருந்து விடுபடப் போராடி, ஒரு மோசமான வணிகச் சூழலில் சிக்கிக் கொண்ட மக்களின் உணர்வுகளை இந்நூலின் மையமாகக் கொள்ளலாம். நாங்கள் போராடியது சுதந்திரத்திற்காக, பிட்சாவுக்கும் பர்கருக்காகவும் அல்ல என்பது அடிக்கடி கேட்கும் ஒரு குரல். எத்தனை விதவிதமான குரல்கள்? ஒவ்வொரு குரலுக்கும் பல மாற்றுக்குரல்கள் ஒலிக்கின்றன. நிஜத்தில் நடந்ததிருக்கக்கூடும் என்று நாம் நம்ப முடியாத பல நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் கதையும் ஒரு சிறுகதையின் நேர்த்தியுடன் வெளிப்படுகிறது. ஒட்டுமொத்தமாய் ஒரு நாவலின் முழுமையை விஞ்சுகின்றன.

செர்னோபில் ப்ரேயர்ஸ் அணு உலை விபத்துக்குப் பின்னர் நிகழ்ந்த மக்களின் வரலாற்றினைப் பதிவு செய்கிறது. கடந்த காலமா எதிர் காலமா என்ற மயக்க நிலையை உருவாக்குகின்றது. கதிர்வீச்சுகளால் பாதிப்படுவோம் என்று தெரிந்தும் கணவனோடு அவன் சாகும்வரையில் துணையாக இருக்கும் இளம்பெண், கதிர்வீச்சுகளின் பாதிப்புகளைப் பற்றி அறியாமலே அப்பகுதியில் வேலைக்கு அமர்த்துபடுபவர்கள், தெரிந்திருந்தும் துணிந்து செல்பவர்கள், ரோபோக்கள் கூட செல்ல முடியாத நெருக்கத்திற்குச் சென்று வரும் ராணுவத்தினர் என்று பலரும் பேசுகிறார்கள். அவர்களது வாழ்க்கை, காதல், அவர்கள் படித்த இலக்கியம், அரசியல் என்று ஒவ்வொருவரும் பல்வேறு விஷயங்களைக் குறித்துப் பதிவு செய்கிறார்கள்.  அசாத்தியமான துணிச்சல், அசட்டுத்தனமான நம்பிக்கை என்று சோவியத் மனநிலையின் இருவேறு கூறுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. இதிலும் ஒவ்வொரு பதிவையும் ஒரு சிறுகதையாகக் கொள்ளலாம். உண்மை புனைவை விட விசித்திரமானது, சோகமானது; சுவாரசியமானதும்கூட என்கிற எண்ணம் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இதைச் செய்திக்கட்டுரை என்று ஒதுக்கிவிட்டிருந்தால், இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பேரிழப்பாக இருந்திருக்கும். நல்ல வேளைவயாக நோபல் குழுவினர் அந்தத் தவிறைச் செய்யவில்லை.

‘பல குரல்களை இணைக்கும் எழுத்தின் மூலம், நமது காலத்தின் துயரத்துக்கும் துணிச்சலுக்கும், அவர் எழுப்பிய நினைவுச்சின்னத்துக்காக,’ அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.  ‘நம் காலத்தின் உணர்வுகளின் சரித்திரத்தையும், ஆன்மாவின் சரித்திரித்தையும் அவர் எழுதினார்; கூறுபொருளால் மட்டுமின்றி வடிவ ரீதியாகவும் சோதனை செய்து ஒரு புது இலக்கிய வகைமையை அவர் உருவாக்கினார்,’ என்றும் நோபல் பரிசுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது நோபல் குழு அறிவித்தத்து. இப்பாராட்டுகள் எவ்வகையிலும் மிகையானவை அல்ல.

டோரிஸ் லெஸ்ஸிங்கின் Grass is Singing – இனவெறி, மாறும் விவசாய முறைகள், திருமணத்துக்குப் பின் கிராமத்துக்குக் குடிபெயரும் ஒரு இளம் பெண்ணின் தனிமை என்று இந்த நூல் பல விதங்களில் எனக்கு அணுக்கமாக இருந்தது.

அதே போல், கண்மணி குணசேகரனின் கோரை. அகற்றமுடியாத கோரை முளைத்தவிட்ட விவசாய பூமியை களமாகக் கொண்டு, மாறும் பொருளாதாரச் சூழலில் ஒரு விவசாயியின் வாழ்க்கையை நேரடியாகவும், நுட்பமாகவும் விவரிக்கிறது.

விருதுகள் அறிவிக்கப்படுவதற்குப் பல மாதங்கள் முன்பே வண்ணதாசனின் உலகிலும் சஞ்சாரம் செய்துவந்தேன். பின்னர், நெல்லையின் ஈரத்திலிருந்து, அசோகமித்திரனின் வரண்ட தண்ணீருக்குள் ஒரு பாய்ச்சல்.

தமிழ் நவீன கவிதைகளை இவ்வாண்டு அதிகம் படிக்கவில்லை. ஆனால், பாரதியும், பழந்தமிழ்ப் புலவர்களும், திருமுறை நால்வரும், ஆங்கிலக் கவிகளும்  ஆண்டு முழுவதும் துணைக்கு வந்தனர்.
இனி, பட்டியல்:

  1. How Children Learn – John Holt
  2. The Child’s Language and the Teacher – Krishna Kumar
  3. Vinoba on Education – Vinoba Bhave
  4. Woman in the Dunes – Abe Kobe
  5. Grass is Singing – Dorris Lessing
  6. Poems of Love and War – A.K.Ramanujan
  7. The Nation’s Favourite Poems (BBC Books)
  8. The Best of Ruskin Bond – Penguin
  9. சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி – தமிழில், தி.சு.சதாசிவம்
  10. அரூப நெருப்பு (சிறுகதைகள்) – கே.என்.செந்தில்
  11. கனிவு  – வண்ணதாசன்
  12. உயரப்பறத்தல் – வண்ணதாசன்
  13. பெயர் தெரியாமல் ஒரு பறவை – வண்ணதாசன்
  14. முகிலினி – இரா.முருகவேள்
  15. சிலப்பதிகார ஆய்வுரைகள் – ம.பொ சிவஞானம்
  16. வள்ளுவரும் இளங்கோவும் – அ .சா.ஞானசம்பந்தம்
  17. பகவான் புத்தர் – தர்மானந்த கோஸம்பி (மராத்தி) – தமிழில், கா.ஸ்ரீ.ஸ்ரீ.
  18. பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம்
  19. Box – ஷோபா சக்தி
  20. இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் (கிழக்கு பதிப்பகம்) (நான் முடித்தவை:)
    – மழை
    – போர்வை போர்த்திய உடல்கள்
    – கால எந்திரம்
    – நந்தன் கதை
    – ஒளரங்கசீப்
    – ராமானுஜர்
    – கொங்கைத்தீ
  21. பருவம் – எஸ்.எல். பைரப்பா – தமிழில், பாவண்ணன்
  22. தண்ணீர் – அசோகமித்திரன்
  23. படைப்பாளிகளின் உலகம் (கட்டுரைத் தொகுப்பு) – அசோகமித்திரன்
  24. வ.வே.சு. ஐயர் – தி.செ.சௌ.ராஜன்
  25. அறம் – ஜெயமோகன் (இணையத்தில் சில கதைகளைப் படித்தது. முழுத் தொகுப்பு இப்போதுதான் படிக்கிறேன்)
  26. தேர்ந்தெடுத்த கதைகள் – கி.ராஜநாராயணன்
  27. காந்தி அம்பேத்கர் மோதலும் சமரசமும் – அருணன்
  28. The SecondHand Time – Svetlana Alexievich
  29. Chernobyl Prayers – Svetlana Alexievich
  30. தால்ஸ்தோய் குறுநாவல்களும் சிறுகதைகளும் – நா.தர்மராஜன்
    – இரண்டு ஹுஸ்ஸார்கள் (Two Hussars)
    – குடும்ப மகிழ்ச்சி (Family Happiness)
    – கஜக்கோல் (Kholstomer)
    – நடனத்திற்குப் பிறகு (After the Ball)
    – கிரைஸ்ஸர் சொனாட்டா (The Kreutzer Sonata)
  31. குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த் எக்சுபெரி – தமிழில், வெ.ஸ்ரீராம்
  32. Beowolf – from the Norton’s Anthology of English Literature, The Major Authors
  33. Sir Gwain and The Green Knight – from the Norton’s Anthology of English Literature, The Major Authors
  34. A Study in Scarlet – Arthur Conan Doyle
  35. The Sign of the Four – Arthur Conan Doyle
  36. The Hound of the Baskervilles – Arthur Conan Doyle
  37. பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்
  38. சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்
  39. Notes from Underground – Dostoevsky
  40. White Nights – Dostoevsky
  41. கோரை – கண்மணி குணசேகரன்
  42. சாகுந்தலம் – காளிதாசன்  (கவித்துவம் குறைவான உரைநடை மொழியாக்கம்தான்…மொழிபெயர்ப்பாளர் பெயர் குறித்து வைக்காமல் விட்டுவிட்டேன்; அல்லயன்ஸ் பதிப்பகம் என்று நினைக்கிறேன்)
  43. பாஞ்சாலி சபதம் – பாரதி
  44. என் கதை – கமலா தாஸ் – தமிழில், நிர்மால்யா
  45. உலகப் புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைகள்) – வைக்கம் முகம்மது பஷீர்
  46. தபால்காரன் (Vieille France (The Postman)) – மார்ட்டின் டுகார்ட் (Roger Martin du Gard) – தமிழில், க.நா.சு
  47. The Agricultural Testament – Sir Albert Howard
  48. ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன்
  49. A Street Car named Desire – Tennessee Williams
  50. கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் – போகன் சங்கர்

கூடுதலாக, இவ்வாண்டு படித்த சில நீண்ட சிறுகதைகளும், ஒரு முக்கியமான கட்டுரையும்:

  1. The Crocodile – Dostoevsky
  2. The Cloak – Gogol
  3. What we talk about when we talk about love – Raymond Carver
  4. Patriotism and Government – Leo Tolstoy

பகுதி படிக்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டுக்கு  அனுப்பிவைக்கப்பட்டுள்ள சில புத்தகங்கள்:

  1. (கு.அழகிரிசாமி சிறுகதைகள்)
  2. (கு.ப.ரா சிறுகதைகள்)
  3. (The Story of Philosophy – Will Durant)
  4. (தொல்காப்பியம்)
  5. (சிலப்பதிகாரம் – உ.வே.சா. பதிப்பு)
  6. (Norton’s Anthology of English Literature, The Major Authors)
  7. (Where I am calling from – Short stories –  Raymond Carver)

 

தொடர்புடைய பதிவுகள் :

2015ல் படித்தவை

2014ல் படித்தவை

2013ல் படித்தவை

2012ல் படித்தவை


2015ல் படித்தவை

திசெம்பர் 31, 2016

தலைப்பில் பிழையில்லை. ஓராண்டு தாமதமாகத் தொகுத்தாலும், 2015ல் படித்த பல புத்தகங்கள் குறித்து சிறு குறிப்புகள் எழுதிவைத்திருந்ததால், பெரும்பாலான புத்தகங்களை நினைவுபடுத்திப் பட்டியலில் சேர்த்து விட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

  1. வாழ்விலே ஒரு நாள், One Day in the life of Ivan Denisovich – சோல்ஸெனிட்சின் (எம்.கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பு)
  2. தீட்டு (சிறுகதைகள்) – அழகிய பெரியவன்
  3. அன்னை (La Madre) – கிரேசியா டெலடா (Grazia Deledda) – தமிழில், தி.ஜானகிராமன்
  4. The Way Home – Contemporary Bengali Short fiction, Edited by Aruna Chakravarti, Penguin
  5. Life of Mahatma Gandhi – Loius Fischer
  6. The Portrait of a Lady – Henry James
  7. Makers of Modern Asia – Ramachandra Guha
  8. The Muddy River – P.A.Krishnan
  9. கிருஷ்ணா கிருஷ்ணா – இந்திரா பார்த்தசாரதி
  10. உபரா – லட்சுமண் மானே (மராத்தி) – தமிழில் – எஸ்.பாலச்சந்திரன்
  11. கூந்தப்பனை (குறுநாவல்கள்) – சு.வேணுகோபால்
  12. திசையெல்லாம் நெருஞ்சி (குறுநாவல்கள்) – சு.வேணுகோபால்
  13. வெண்ணிலை (சிறுகதைகள்) – சு.வேணுகோபால்
  14. நாஞ்சில் நாடன் கதைகள்
  15. சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
  16. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்
  17. அஃகம் சுருக்கேல் (கட்டுரைகள்) – நாஞ்சில் நாடன்
  18. சாதியும் நானும் – தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன்
  19. மாதொருபாகன் – பெருமாள் முருகன்
  20. பாரதிபுரம் – யு.ஆர்.அனந்தமூர்த்தி – தமிழில், தி.சு.சதாசிவம்
  21. மகாமுனி – பிரேம் ரமேஷ்
  22. Summerhill – A.S.Nell
  23. Small is Beautiful – E.F.Schumacher
  24. Dismantling the Inner School – David H.Albert
  25. கடைசி டினோசர் – தேவதச்சன்
  26. விண் வரையும் தூரிகைகள் – தேவதேவன்
  27. அந்தக் காலம் மலையேறிப் போனது – இசை
  28. உணவே மருந்து – டாக்டர் எல்.மகாதேவன்
  29. தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும் – பால சிவகடாட்சம்
  30. ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது – எஸ்.என்.நாகராசன் (நேர்காணல்)

 

தொடர்புடைய பதிவுகள் :

2014ல் படித்தவை

2013ல் படித்தவை

2012ல் படித்தவை


சுவட்ச் பாரத் – சில கேள்விகள்

திசெம்பர் 31, 2016

‘அங்கிள், முன்னேற்றம் என்கிற பெயரில் புதுசா ஃப்ரிட்ஜ்.
ஆனா மலம் கழிப்பதோ வெளியில்.’

‘அங்கிள், வீட்டில் உட்கார புதுசா சோபா செட்.
ஆனா மலம் கழிக்க உட்காருவதோ தண்டவாளத்தில்’

‘அங்கிள், டை பேண்ட் ஷூ போட்டிருக்கீங்க…’

போன்ற பொன்மொழிகளோடு பல பெரிய பெரிய ஃப்ளெக்ஸ் பேனர்கள், ஸ்வட்ச் பாரத் நிமித்தம், கோவையில் தோன்றியுள்ளன. நீட்டிய கைகளும், ஏளனப் புன்னகையுமாய் கொழுகொழுப்பான சிவத்த சிறுவர்களின் படங்கள், நம்மை ஆள்பவர்களும் அவர்கள் நியமித்திருக்கும் விளம்பர நிறுவனங்களும் நம்மை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாய் நிற்கின்றன.

அங்கிள், எனக்குச் சில கேள்விகள்.
1. வெளியில் மலம் கழிக்கின்றவர்களில், புதிய ஃப்ரிட்ஜ் வாங்குகிற, சோபா செட் வாங்குகிற, டை ஷூ அணிகின்ற நபர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரம் ஏதேனும் உண்டா?
2. வீட்டுக்குள் மலம் கழிப்பவர்களை, ‘ஃப்ரிட்ஜ் வாங்கவேண்டாம்; வெளியில் மலம் கழிப்பதை விட அதிகமாக ஃப்ரிட்ஜினால் பாரதத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்,’ என்று எப்போது அறிவுறுத்தப்போகிறீர்கள்?
3. இன்றைக்கு மலம், நாளைக்கு உரம். ஆனால், சுத்தமான பாரதத்தில், இந்த ஃப்ளெக்ஸ் பேனர் எல்லாம் என்னாகும்? எப்போது மக்கும்?
4. அங்கிள், சுற்றுச்சூழல் கிடக்கட்டும். ஃப்ரிட்ஜ் இருக்கிறதே என்று நாம் பதனப்படுத்தி உண்ணும் பல பெருநிறுவனத் தின்பண்டங்களாலும், தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் சோபா செட்களில் எந்நேரமும் மலத்துளைகள் அடைந்துகிடப்பதாலும், மலம் கழிப்பதற்கே பிரச்சனை என்கிறார்களே, உண்மையா? இது குறித்தெல்லாம் உங்கள் பேனர்கள் எப்போது பேசப் போகின்றன?
5. இந்தியச் சூழலுக்கு ஏற்ற கழிப்பறைகளிலும், மலத்தைச் சேகரித்து உரமாக்கிப் பயன்படுத்தும் முறைகளிலும் பலரும் பல சோதனை முயற்சிகள் செய்திருக்கின்றனர். அவற்றையெல்லாம் கவனித்தீர்களா? ஆம் எனில், உரமாகக்கூடிய மலத்தைக் கழிவாகக் கருதும் இந்த மனநிலையை நிலைநிறுத்தவா இத்தனை கோடிகள் செலவு செய்ய வேண்டும்?
6. ஃப்ரிட்ஜுக்கும், செருப்புக்கும், சோபா செட்டுக்கும், கழிப்பறை கட்டுவதற்கான இடத்துக்கும், மூன்று வேளைச் சோற்றுக்கும் வக்கற்று மலம் கழிக்க, இருள் கவியும் வேளையில் சாலையோரங்களில் அமர்ந்து, ஒவ்வொரு முறை பளீரென்ற ஹெட்லைட் வெளிச்சத்தைப் பீச்சிக்கொண்டு வாகனங்கள் வரும் போதும், கூசி எழுந்து முகம் மறைத்துத் திரும்பிக் கொள்ளும் எம் கிராமத்துப் பெண்கள், எள்ளிநகையாடும் உங்கள் விளம்பரங்களைப் படித்தால், நொந்து துணுக்குறக்கூடுமோ என்று ஒரு கணமேனும் எண்ணியதுண்டா?


காசிநகர் தமிழ்ப்புலவர்

திசெம்பர் 24, 2016

குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலை முழுவதும், பேரூர் கோயிலில், பச்சைநாயகி கருவறை முன்பு, ஒரு கரும்பளிங்குக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் அங்கு சென்றிருந்தபோது, அங்கேயே நின்று முழுவதையும் படித்துச் சுவைத்தேன்.

நாஞ்சில் நாடன் குமரகுருபரரை ‘மேஜர் போயட்’ என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகத் தெரிந்தது.

காசியில் மடம் நிறுவுவதற்காக அருள் வேண்டி சகலகலாவல்லி மாலையைக் குமரகுருபரர் பாடியதாகக் கூறப்படுகிறது. இப்பாடலின் பல வரிகள், அவர் வேறொரு நவீன காசிவாசிக்கு முன்னோடியாக இருந்திருப்பார் என்று எண்ணவைக்கின்றன.

‘நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்’

‘மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்’

ஆகிய வரிகள் பாட்டுத்திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும், எமக்குத் தொழில் கவிதை போன்றவற்றை நினைவுபடுத்தின.

இன்றைக்கும் விஷ்ணுபுரம் விழாவில் நாஞ்சில் நாடனுடன் சிறிது நேரம் தனியே உரையாட முடிந்தது. குமரகுருபரர் குறித்துப் பேசினோம். ‘வெண் தாமரைக்கன்றி நின்பதந்தாங்க’ என்று குமரகுருபரர் தொடங்கியுள்ளதையும் வெள்ளைத்தாமரையில் வீற்றிருப்பாள் என்று பாரதி தொடங்கியதையும் ஒப்பிட்டுப்பார்த்தார்.

சகலாவல்லி என்கிற சொற்றொடரே எத்தனை அழகாக அமைந்துள்ளது என்று வியந்தார். குமரகுருபரர் தாமரைக்குக் கஞ்சத்தவிசு என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளதையும், கம்பன் கஞ்சம் என்ற சொல்லைப் எடுத்தாண்டுள்ளதையும் (கஞ்சநிமிர் சீரடியளாகி) குறிப்பிட்டார். [பாரதியும் பாஞ்சாலி சபதத்தில் ‘கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக் கட்டிநிறுத்தினார் பொற்சபை ஒன்றே’ என்கிறான்.]

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் வாங்கிவைத்திருப்பதாய்க் கூறினேன். குமரகுருபரனின் பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்தையும் கட்டாயம் படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

படிக்கத்தான் வேண்டும்.


பேருந்துப் பயணம் 2

திசெம்பர் 11, 2016

பாரதியார் சாலையில் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து கொண்டிருந்தேன். எதிரில் வந்த ஸ்கூட்டர் ஒன்று நேதாஜி சாலையில் திரும்பும் முன், தலைக்கவசத்துக்குள் இருந்து இரு கண்கள் என்னைப் பார்த்துச் சிரித்தன. என்னைப் பார்த்தா, எனது வேட்டி, தொளதொளா ஜிப்பா, கதர் ஜோல்னாவைப் பார்த்தா என்று தெரியவில்லை.

சற்று தூரம் நடந்திருப்பேன்.
‘ஜி,’ என்ற குரல் கேட்டவுடன், குற்றமே தண்டனை படம் நினைவுக்கு வந்து தொலைத்தது. திரும்பினேன்.
சிரிப்பை உதிர்த்துச் சென்ற அதே வண்டி. தலைக்கவசத்துக்குப் பின்னால் அதே கண்கள்.
‘ஜி, நீங்க சங்கத்துல இருக்கீங்களா?’
‘எந்த சங்கம்?’ புரியாமல் விழித்தபடி கேட்டேன். வேட்டியைக் குனிந்து பார்த்துக்கொண்டேன்.
ஒரு சில வினாடிகள் மௌனம். தலைக்கவசக் கண்களிலும் குழப்பம்.
‘ஆர்.எஸ்.எஸ்.ல’
‘இல்லீங்க,’ சொல்லி முடிக்கும்போதே அவரது வண்டியும் எனது கால்களும் எதிரெதிர் திசைகளில் விர்ரென்று பயணப்பட்டன.

ஐயன்மீர், என்னைப் பார்த்து ஏன் இந்தக் கேள்வி கேட்டீர்?


பேருந்துப் பயணம் 1

திசெம்பர் 11, 2016

பொதுவாக பொள்ளாச்சி-கோவை பாதையில் தனியார் பேருந்துகளில் நான் ஏறுவதில்லை. சாதாரணக் கட்டணம் வசூலிக்கும் அரசுப் பேருந்துகளாகப் பார்த்து, நடத்துனரிடம் உறுதி செய்துகொண்டுதான் ஏறுவேன். நேற்றிரவு, நேரமாகிவிட்டதாலும், சாதாரணக் கட்டண அரசுப் பேருந்து எதுவும் தயாராக இல்லாததாலும், தனியார் பேருந்தில் ஏறினேன்.

கிண்டிலில் படித்தபடியும், உரக்க ஒலித்துக் கொண்டிருந்த பாட்டுகளைக் கேட்ட படியும் பயணம் அமைந்தது. பாட்டோடு பாட்டாக குடிமகன் ஒருவன் பாடிக் கொண்டே வந்து கொண்டிருந்தான். இடையிடையே அஜித் பற்றிப் புகழாரங்கள்.

நடத்துனர் பாட்டை நிறுத்தினார். அஜித் பாட்டு ஒன்றைப் போடச் சொல்லிக் கேட்டான். பதில் வராததால், அவனே பாடத் தொடங்கினான். பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு என் இருக்கை மீது அவன் தாளம் போட்டது, கிண்டிலில் படிப்பதற்கு இடையூறாக இருந்தது.

‘தல பத்தி யாராவது தப்பா பேசினா, மொட்டைத் தலையில குட்டு வைச்சுருவேன்,’ என்று ஒரு வசனம் சொல்கிற வரை யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை.

மொட்டை அடித்திருந்த இளைஞன் ஒருவன் தன் நண்பனோடு வந்திருந்தான். சந்தனம் பூசியிருந்த மொட்டைத் தலையைச் சுற்றி ஒரு துணி கட்டியிருந்தான். வேகமாக எழுந்து வந்து,
‘நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். சத்தம் போட்டுகிட்டே வந்துட்டிருக்க. வாயைப் பொத்திகிட்டு உக்காரு,’ என்று கையை ஓங்கினான்.

குடிமகன், ‘பாஸ், நானும் மதுரதான். என்னை அடிச்சுருவியா,’ என்றான் விடாப்பிடியாக. இருவரும் வாட்ட சாட்டமான இளைஞர்கள்.

மார்பின் மீது ஒரு அடி விழுந்தது. இளைஞனின் நண்பன் தடுத்து அவனை இழுத்துச் சென்றுவிட்டான்.

குடிமகன் கொஞ்ச நேரம் புலம்பிக் கொண்டும் பொருமிக் கொண்டும் அமர்ந்திருந்தான்.

உக்கடம் நெருங்கும் போது, எழுந்து லுங்கியை இறுக்கிக் கட்டியபடி சென்று, ‘என்னை அடிச்சுட்ட இல்ல. கீழ எறங்குடா..ஒத்தைக்கு ஒத்தை பார்த்துடலாம்,’ என்றான் வீறாப்பாக.

மொட்டை இளைஞனும் வேகமாக எழுந்து, ‘எறங்கு பாத்துறலாம்,’ என்றான்.

குடிமகனின் வலது கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் துளிர்த்தது.நரம்புகள் புடைத்து நின்ற வலுவான வலது கையால் துடைத்துக்கொண்டே,
‘நான் அடிக்க வேண்டாம்னு சொல்லல. என்னை ஏன் பாஸ் அடிச்சீங்க?’ என்று கேட்டுவிட்டு இறங்கிச் சென்றான்.