அவன் கவிஞனே அல்லன்
என்றனர் அன்றைய இலக்கியவாதிகள்.
மிகவும் எளிமையானவை,
மிகவும் நேரடியானவை,
ஆழ்படிமங்களே அற்றவை
என்று புறந்தள்ளப்பட்டன
அவன் கவிதைகள்.
அந்தப் பெயர் தெரியாக்கவிஞனும்
அவன் குழந்தைக்குமட்டும்
ஒரு பாடல் கற்றுக்கொடுத்துவிட்டு
மாண்டு போனான்.
அவனைப் புறக்கனித்தவர்கள்
மாண்டுபோனார்கள்.
அவர்கள் படைத்த
இலக்கியங்கள் இல்லாமற்போயின.
எப்படியோ இன்றும்
அப்பாடல் மட்டும் ஒலிக்கின்றது,
தமிழறிந்த எல்லாக்
குழந்தைகள் நாவிலும்:
நிலா நிலா ஓடி வா.
ஒரு பெயர்தெரியாக் கவிஞன் கதை
ஓகஸ்ட் 17, 2011கொள்ளேன் என்றல்
ஓகஸ்ட் 17, 2011அலுவலக வேலையாய்
வேற்றூர் சென்று திரும்பினேன்.
அலுவலகத்திலிருந்து அனுப்பிய
குளுகுளு இனோவாவில்.
புறநகர் தொட்டதலிருந்தே
மழை; வாகன நெரிசல்;
ஓட்டுநர் பாடு திண்டாட்டம்தான்.
‘இரண்டு நாட்பயணமாயிற்றே:
அன்பளிப்பாய் ஐம்பது ரூபாய் தரலாமா?
பத்து ரூபாய் போதுமோ?’
வீடு வந்தது.
ஐம்பது ரூபாய் கொடுத்தேன்.
“வேண்டாம் சார். நான் வாங்கறதில்ல.”
வசதியின் வலி
ஓகஸ்ட் 17, 2011பள்ளியில் விட்டுச்செல்ல
மகளை ஒருகையிலும்
அவள் செருப்பை மறுகையிலும்
பள்ளிப்பையை ஒரு தோளிலும்
என் மடிகணினிப்பையை மறு தோளிலும்
சுமந்தவாறு லிஃப்டிலேறியிறங்கி
ஹோண்டா காரிலேற்றி
ஓட்டிச் செல்கிறேன்.
சகதிபடிந்த சாலையைக் கடக்கக்
காத்திருக்கின்றனர் இரு சிறுமியர்:
நைந்த பைகளும்
வெளிறிய சீருடையும்
வெறுங்கால்களுமாய்.
வெயில்வர வெகுநேரமில்லை.
பல்லியின் வால்
ஓகஸ்ட் 17, 2011சிறுவன் ஒருவன்
பல்லியின் கழுத்தில்
சுருக்கிட்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
சுருக்கிருக்கும்வரை இரையருந்த மறுத்தது பல்லி.
அறவுணர்ச்சி உறுத்த
கயிற்றை அறுத்துவிட்டான் சிறுவன்.
பல்லி சுதந்திரமாய்த் திரிந்தது.
பல்லியின் வாலும் சுருட்டிக்கொண்டு
அதனோடே இருந்தது.
என்றோ அறுபட்டுப்
பாம்பின் புற்றில் கிடந்தது
இன்னொரு வால்.
உடலோடிருந்த வால்
அறுபட்ட வாலோடு
அவ்வப்போது உறவாடியது.
அறுபட்ட வாலை
வதைத்தது பாம்பு.
என்றோ அறுபட்ட வால்தானே
என்று மௌனம் காத்தது பல்லி.
தலைக்கொரு துயர்வந்தால்
பொறுத்திருப்பாயா என்று
பொருமியது இணைந்திருந்த வால்.
“அறுந்த வாலுக்குப் பல்லியின் வால்
என்ற நினைப்பிருந்தால்தானே?
புலியின் வாலெனத் தன்னை நினைத்து
அன்றொரு நாள் என் கண்ணைப்
பதம்பார்த்ததுதானே இந்த வால்”
என்று வன்மம் பேசியது பல்லி.
பாம்பைப் பகைத்தால்
புற்றுக்குள் ஓனான் புகுந்துவிடும்
என்ற பயம்வேறு.
அனாதையான பல்லியின்
அறுந்தவாலைப் பொசுக்கியுண்டது
பாம்பு.
தானென்ன தலையா?
அதிகம் ஆட்டினால்
எங்கே பல்லி தன்னையும்
அறுத்துவிட்டுவிடுமோ என்றஞ்சி
வாளாவிருந்தது இணைந்த வால்.
நேற்று பல்லியின் சுருக்கறுந்த தினம்.
விமரிசையாய் விழாவெடுத்தது பல்லி.
வாலும் தரையில் தட்டித்தட்டி
எப்போதும்போல்
ஆர்ப்பரித்துக் கொண்டாடியது.
ஆர்ப்பரிப்பில் பொய்யில்லை.
ஆனாலும் ஏனோ இம்முறை
வாலுக்கு வலித்தது.
——————————————————————
பின்குறிப்பு – இந்தக் கவிதை பிறந்த கதை:
கவிதை ஏன், எப்படித் தோன்றுகிறது என்பது எனக்கே புரியாத புதிர். இந்தக் கவிதையின் ஆக்கத்தில் அதற்கான விடை கொஞ்சமாய்க் கிடைத்தது. இந்த சுதந்திர தினத்தன்று, நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்து. கூட்டத்தில் நின்று தேசிய கீதம் கேட்கும்போது கிளம்பும் உத்வேகம் அலாதியானது. பின் நடந்த கலைநிகழ்ச்சிகளைக் கண்ட களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த என் மகள், வீறிட்டெழுந்தாள் – பூனை, பூனை என்றவாறு. அவளை எடுத்துத் தோளில் சாய்த்து நடந்து கொண்டிருந்தேன். அவள் கனவில் வந்த பூனை கணத்தில் பல்லயாகிக் கவிதையானது.
பின்-பின்குறிப்பு: கணினியில் பதிந்தபின் தோன்றுவது : அண்மையில் படித்த மாமல்லனின் உப்பரிகை காகங்களும் இந்தப் பல்லிக்கு உறவோ?