இனி இழவு வீட்டில் அழாதீர்கள்

பிப்ரவரி 18, 2011

மனிதர்கள் மடிந்தபிறகு

கண்ணீர் வடிக்கும்

முன்னர் சிந்தித்ததுண்டா

உறவுகள் முறிந்தபோது

அழுததுண்டா என்று?

உறவுகள் முறிந்தபோது

அழுமுன்னர் சிந்தித்ததுண்டா

முறிவுகள் பழுதுபார்க்க

முனைந்ததுண்டா வென்று?

உறவுகள் முறியுமுன்னே

சிந்தித்ததுண்டா ​எப்படி

முறிக்காம லிருப்பதென்று?

போதும், இனி எந்த

இழவு வீட்டிலும் அழாதீர்கள்.

செத்தவனுக்குக் கனி

சுவைப்பதில்லை.

—————-

சண்டைக்கார உறவுக்காரியை

நீண்டநாட்கழித்து​ (தெருவில்

எதிர்பாராமற்) கண்டபோது

சட்டென்று எழுந்த

புன்னகையை ​மென்றுவிழுங்கினேன்.

அவள் தொண்டைக்குள்ளும்

என்னவோ சிக்கிக்கசிந்தது.

——————

சின்ன வயதில்

காது குடைந்துவிட்ட

பெரியம்மாவோடு சண்டை.

அன்றைக்கொரு விஷேஷத்தில்

அவளைச் சந்திக்கநேர்ந்தால்

விரைப்பாயிருக்கக் கண்ணாடிமுன்

பயிற்சியெடுத்துச் சென்றேன்.

காதுக்குள் தேங்கிக்கிடந்த

அழுக்கு அடைத்தது.


மொட்டை மரத்தின் உச்சியில் ஒற்றை இலை

பிப்ரவரி 17, 2011

மொட்டை மரத்தின்

உச்சியில்

உதிராமல்

பிடிவாதமாய்

ஒட்டி நிற்கும்

ஒற்றை இலை.

நேற்று​

மொட்டைமாடியிலிருந்து

பார்த்தபோது

அழகான படிமமாய்த் தெரிந்தது.

எதற்கான

படிமம் என்பதுதான்

இன்னமும்​

பிடிபடவேயில்லை.

இன்றை​க்கு

அந்த இலையும் உதிர்ந்துவிட்டது.

எஞ்சியிருப்பது

என்மனைவி பிடித்த

புகைப்படம்தான்.

[படைத்தவனுக்குப் புரிந்தால்தான்

படிமமா?

படிப்பவனுக்குப் புரிந்தால் சரி.]


இந்த ஞானம் வந்தாற்பின் வேறெது வேண்டும்

பிப்ரவரி 1, 2011

தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ சிறுகதைத் தொகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

வெளியே ஏதோ சத்தம் கேட்கவும், என் மகளை எடுத்துக்கொண்டு பால்கனியிலிருந்து வேடிக்கைக் காண்பிக்கச் சென்றேன். குடியரசு தினப் போட்டிகள் நடந்துகொண்டிருந்தன. பெரியவர்களும் குழந்தைகளும் நடந்தும் ஓடியும் கலந்துகொண்டிருந்தனர்.

“மகிழ்குட்டி! யாருடா ஜெயிப்பாங்க, அஜினி அக்காவா, ராதிகா அக்காவா? யாரு ஜெயிப்பாங்க?’ என்றேன்.

“எல்லாரும் ஜெயிப்பாங்க அப்பா” என்றாள். “அஜினி அக்கா, ராதிகா அக்கா, ஸ்ருதி அக்கா, ஜான்வி அக்கா எல்லாரும் ஜெயிப்பாங்க’.

இவளுக்கு நான் இனி என்ன சொல்லித்தருவது? இதெல்லாம் இரண்டு வயதில் தெரியக்கூடாது,  இன்னும் அறுபது ஆண்டுகள் ஆகவேண்டும் என்றா? பள்ளிக்குச் சென்று பாடம் கற்கத்தான் வேண்டுமா? அழகிய வெள்ளைத்தாளில் கறுப்புப் பென்சில் கிறுக்கப்போகிறது.

பின் தலைப்புக் கதை படித்தபோது,  சிலிர்த்தது.


விதிகள் மீறப்படாத போது

பிப்ரவரி 1, 2011

ஒளிமுளைக்காத அதிகாலை வேளை.
யாருமற்ற ஏர்போர்ட் சாலை.
கண்ணியமாய் வேலை செய்தது
ஒரு சாலை விளக்கு.
சிகப்பைக் கண்டததும்
சட்டென்று வண்டியை
நிறுத்திக் காத்திருந்தார்
வாடகைக்காரின் ஓட்டுனர்.
எந்த ரகசியக் காமிராவும்
இந்தக் காட்சியைப்
பதிந்தமாதிரித் தெரியவில்லை.