காற்றின் மடியில்

மே 10, 2011

கண்ணாடிச் சிறையில்
குளிர்த்த‍ தனியறையில்
வேலை செய்து
குளிர்த்த‍ காரில்
பயணம் செய்து
கொசு வாராதிருக்க‍
வீட்டுச் சாளரங்களடைத்துக்
காற்றின் தழுவலற்ற‍ வாழ்க்கை
ப‌ழகிவிட்ட‍து.

சொந்த ஊர் சென்றிருந்த‌போது
அரவமற்ற‍ ஓர் ஞாயிற்றுக்கிழமை
அரசாங்கப் பேருந்தில் பயணித்தேன்.
அடுக்குமாடிகளுக்கிடையே முழுக்க
அடக்க‍ம் செய்ய‍ப்ப‍டாத சாலைகளில்
விரைந்த பேருந்தில்
அகலத்திறந்திருந்த
சன்ன‍ல்கள் வழியாக‌க்
காற்று முகத்தில்
அறைந்தது.
காலம் பின்னே
ப‌றந்தது.

‘டிக்க‍ட் டிக்க‍ட்!
சட்டுன்னு சொல்லுங்க,
எங்க போகனும்?’
அம்மாவிடம் என்றேன்.


ஒரு மரணத்தில் பிறந்த இரு கவிதைகள்

மே 10, 2011

1)

பெரிய மனிதர்கள்
கொலையுண்டு இறந்தால்
வன்முறையில் வெடிக்கிறோம்.
தெரிந்தவர்கள்
உறவினர்கள் இறந்தால்
கதறிக்கதறி நடிக்கிறோம்.
கூப்பிடு தூரத்தில்
பல்லாயிரம் உயிர்கள்
பலியானால் எதுவும்
நடக்காதது போல் கடக்கிறோம்.
தீவிரவாதிகள் இறந்தால்
கைகொட்டிச் சிரிக்கிறோம்.
அட,
சக மனிதனின்
மரணத்திற்காக
மௌனமாய் வருத்தப்படலாம்
என்பது மறந்தேவிட்டது.

2)

நல்ல வேளை
ஒசாமா என் பக்கத்து வீட்டில் இல்லை.
அது எப்படி தெரியாமலிருந்திருக்கும்
என்ற கேள்வி வந்திருக்கும்.
இன்றைய தினத்தில்
எங்கள் அடுக்குமாடிக்
கானகத்தில்
பக்கத்து வீட்டில்
ஒசாமா என்ன
ஒபாமேவே வந்தாலும்
தெரியாது.