NIOS இணையின்மை

தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி (NIOS) மூலம் எழுதும் பத்தாவது, பன்னிரண்டாவது தேர்வுகளை தமிழ்நாட்டுப் பாடத்திட்டத் தேர்வுகளுக்கு இணையானவையாக ஏற்கப்போவதில்லை என்று ஓர் அரசாணை வெளிவந்துள்ளது.

இத்திட்டம் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டுப் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒன்று. இப்படியொரு முடிவெடுப்பதன் மூலம் பல்லாயிரம் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும். பள்ளியில்லாக் கல்வியை (எங்களைப் போல்) தாமாகத் தேர்ந்தெடுத்தவர்களைவிட, பள்ளிகளிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேறியும் வெளியேற்றப்பட்டுமுள்ள பலர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். உடல் குறைபாடோ கற்றல் குறைபாடோ உள்ள மாணவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்றாக அமைந்திருந்தது. அத்தகைய மாணவர்கள்தாம் அரசுப்பணிகளைப் பிறரைவிடக் கூடுதலாகச் சார்ந்திருக்கவும் நேரும். அவர்களது எதிர்காலத்தோடு இந்த அரசாணை விளையாடுகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் NIOSஐ ஏற்கமறுத்துவந்ததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். இந்நிலையில் அதே நிலைப்பாட்டை அரசுப்பணிகளுக்கு எடுப்பதென்பது அத்தீர்ப்புக்கும் மாணவர் நலனுக்கும் எதிரான செயல்.

இது மையநீரோட்டத்திற்குப் புறத்தே நிகழ்வதால் அதற்கு எதிராக அதிக ஆரவாரம் எழாமற் போகலாம். நீதிமன்றத்துக்குத்தான் பாதிக்கப்படுபவர்கள் செல்லப்போகின்றனர். ஆனால் ஒவ்வொன்றுக்கும் வழக்காடிப் பல ஆண்டுகளை இழக்கவேண்டியிருப்பது அவலமான நிலை.

NIOS முறையில் குறைபாடுகள் இருப்பதாகக் கருதினால் அந்நிறுவனத்தோடும் ஒன்றிய அரசோடும் உரையாடி அக்குறைகளைக் களைய வேண்டுமேயன்றி, மாணவர்களுக்கு ஓர் அரசு வழங்கும் வாய்ப்பை இன்னொரு அரசு மறுப்பது முறையன்று. ஒருபுறம், இதே அடிப்படையில், மாணவர்கள் நலனுக்காக NEET எதிர்ப்புக் குரலெழுப்பியபடி, மறுபுறம் வேறு மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கக்கூடிய, பிற்போக்கான நடவடிக்கைகள் எடுப்பதிலுள்ள முரணை உணர்ந்து தமிழக அரசு இந்த முடிவைக் கைவிட்டாகவேண்டும்.

பின்னூட்டமொன்றை இடுக