(11-Sep-2016)
சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்தபடி, வீட்டுவேலை முடித்துச் செல்லும் ஐந்து பெண்கள் உரையாடிக் கொண்டிருந்தனர்.
இந்த மோடின்னால எத்தன தொந்தரவு பாரு.
நமக்கெல்லாம் புதுசா என்ன கவலை. காசிருந்தாத் தானே இதப்பத்தி எல்லாம் கவலப் படணும்? கோடிக்கணக்கா பணம் வச்சிருக்காங்க. ஒரு பத்து ரூபா கூட்டிக் கேட்டா குடுக்க மாட்டாங்க.
(நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். உடனே என்னிடம் பேசத் தொடங்கினார்.)
எனக்கு நேத்து ரெண்டு ஐநூறு ரூபா சம்பளமாக் குடுத்தாங்க. பஸ்ஸுக்குக் காசில்லைன்னு பாங்குக்குப் போனா ஒரே கூட்டமா இருந்துச்சு. மாத்தறதுக்கு ராத்திரி ஆயுருமாட்டா இருந்துச்சு. நல்ல வேளை, உங்கள மாதிரி ஒருத்தரு வெளிய நின்னிட்டு இருந்தாரு. அவர் கிட்ட கேட்டேன். ஐநூறு ரூபா வாங்கிட்டு அஞ்சு நூறு ரூபா நோட்டு குடுத்தாரு.
இவங்க காசு தர்றலைன்னாலும் பரவால்ல. ஒரு வேளை சோறு போட்டா என்ன குறைஞ்சு போயிடுவாங்க?
அந்த அம்மணி போற இடத்துல, சாப்பாட்டுக்குப் பதிலா ரெண்டு பிஸ்கட்டு குடுத்தாங்களாம். அவ எங்கிட்டக் கொண்டுவந்து குடுத்துட்டா.
அங்க இங்க வேல செஞ்சு மாசத்துக்கு மூவாயிரம் ரூபா சம்பாதிக்கிறோம். ஒரு நாளைக்கு நூறு ரூபா செலவாயிருது. பஸ்ஸுக்கே எத்தனையாகுது.
(பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களது பேருந்து வருவது தெரிந்து எழுந்தார்கள்.)
நாங்க அறிவொளி நகர் போகணும். இதுதான் ஒரே பஸ்ஸு.
காந்திபுரம் போயித் திரும்பி வருவோம். அப்பத்தான் உட்கார்ந்துட்டுப் போக முடியும். காந்திபுரத்துக்கு மூணு ரூபா. அங்கிருந்து பத்து ரூபா.
(எல்லாரும் முன்புறம் ஏற, என்னிடம் பேசியவர் விந்தி விந்தி நடந்து சென்று பின்பக்கம் மெதுவாக ஏறினார்.)
(15-Nov-2016)
நேற்று, கோவையிலிருந்து பொள்ளாச்சி அருகே எங்கள் கிராமத்துக்குப் பேருந்தில் செல்லும் வழியிலுள்ள எல்லா அரசு வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியது தெரிந்தது. சிட்கோவிலுள்ள எஸ்.பி.ஐ.கிளையில் சாமியானா கட்டியிருந்தார்கள். எங்களூர் மக்கள் செல்ல வேண்டிய வடக்கிபாளையம் (எங்கள் கிராமத்திலிருந்து 7-8 கி.மீ. தொலைவிலுள்ள, அரை மணிக்கொரு பேருந்து செல்லக்கூடிய) வங்கியில் ஆண்களுக்கும், பெண்களுக்குமாய் இரண்டு நீண்ட வரிசைகள் இருந்தன.
வழிநெடுகிலும் ‘பணம்’, ‘பணம்’ என்ற ஒற்றை ஒலி காற்றை ஆக்கிரமித்து செவியில் அறைந்தபடி இருந்தது. சந்தித்தவர்களெல்லோரும் இதுவரை வராத மழையை விடவும் பணத்தைப் பற்றியே அதிகம் பேசினர். அவர்கள் சொன்னதெல்லாம் உண்மையில்லை – ஆனால் அவர்களுக்குத் தெரிந்த உண்மை. என் நினைவில் நின்றவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.
பேருந்தில் ஓர் இளைஞர்:
எல்லாரும் செல்லாத நோட்டுல கூலி தராங்க. வேண்டாம்னு சொல்லிட்டு இன்னிக்கு வேலைக்கே போகல. பாங்குக்குப் போனா மாத்தித்தராங்க. ஆனா வரிசைல நிக்கணுமே.
—
வழியிலிருக்கும் தோட்டத்தில் ஒரு முதியவர்:
மழை வந்து 23 நாள் ஆச்சு. அதனால இவுளும் எங்கயும் வேலைக்குப் போக வழியில்ல.
மாத்தறதுக்கு எங்ககிட்ட என்ன காசுங்க இருக்கு? ஜப்பான்ல இருந்து அவங்க இன்னொருத்தருக்கு பணம் அனுப்புவாங்க. அவங்க வந்து சம்பளம் தரணும். இந்த மாசம் என்ன நோட்டு கொடுப்பாங்கன்னு தெரியல.
எங்கள் உரையாடலில் கலந்து கொண்ட இன்னொரு நடுத்தர வயதினர்:
பாங்குக்கெல்லாம் யாருங்க போறாங்க? எனக்கு எங்க ஓனர் வரும்போதுதான் சம்பளம் கிடைக்கும். அவங்க வந்துட்டுப் போயி ரெண்டு மாசம் ஆச்சு. அதுவரைக்கும் பையனோட சம்பளத்துல சமாளிச்சுப்போம். சேமிப்பா? அதெல்லாம் ஒரு பைசா தங்காதுங்க. ஏதாவது ஒரு செலவு வந்துட்டே இருக்கும். போன மாசந்தான் மாமியார் இறந்தாங்க. எங்களுதுல எதொன்னுனாலும் எக்குத்தப்பாத்தான் செலவாகும்.
மோடி பாட்டுக்கு செல்லாதுன்னு அறிவிச்சுட்டுப் போயிட்டாரு. இங்க எல்லாரும் வரிசைல நின்னுட்டு தவிக்கறாங்க. கடையில ஏதாவது வாங்கப்போனா கையில என்ன காசு வைச்சிருக்கேன்னு காமிக்கச் சொல்லிப் பாத்துட்டுத்தான் அந்தப்பக்கமே திரும்புறான். எல்லாருக்கும் கூலியெல்லாம் பழைய நோட்டுல தராங்க. அத மாத்துறதுக்கு பாங்குக்குப் போனாங்கன்னா ஒரு நாள் கூலி போயிருது.
ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு யாரு சில்லறை தருவாங்க? இன்னிக்கு ஜோப்புல நூறு ரூபா வைச்சிருக்கிறவன்தான் ரெண்டாயிரம் வைச்சிருக்கவன விட பணக்காரன்.
பெட்ரோல் பங்குல, ஐநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டாத்தான் பழைய நோட்ட வாங்கிக்கிறான்.
அம்பராம்பாளையம் ஆத்துல நேத்து கத்தை கத்தையா ஐநூறு ரூபா ஆயிரம் ரூபா நோட்டு மிதந்துட்டு வந்துச்சாம். எங்க பசங்க போயிப் பாத்தாங்க. அம்பராம்பாளையம் வேட்டைக்காரன்புதூர்ல எல்லாந்தான் பெரிய முதலைக இருக்காங்க. விவசாயப் பணத்துக்கு வரி இல்லைனாலும், இத்தன கோடியைக் கணக்கு காமிச்சா விவசாயத்துல எப்படி இத்தன சம்பாதிச்சேன்னு கேள்வி வருமில்ல? என்னென்னவோ வியாபாரம் பண்றாங்க.
ஈச்சனாரி பக்கத்துல ஒரு குப்பைத்தொட்டிக்கிட்ட ஒரு ஆம்னி வேன் வந்து நின்னுச்சு. அதுல இருந்து நிறையா அட்டைப்பொட்டிய இறக்கி தீ வைச்சுக் கொளுத்திட்டுப் போயிட்டாங்க. அத்தனையும் பணம். யாருன்னே தெரியலையாம்.
கறுப்புப் பணம் இருக்கறவங்களுக்கு என்ன கவலைங்க. அடுத்த மாசம் வரைக்கும் பார்ப்பாங்க. ஒன்னும் மாத்த முடியலைனா தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. அடுத்த மாசம் சம்பாதிச்சுப்பாங்க. (Black money is a flow and not a stock. – Prabhat Patnaik)
நேத்து செட்டியார் தோட்டத்துல ஆயிரம் அடிக்கு போர்(bore) போட்டாங்க. தண்ணியே கிடைக்குல. போன வருஷமே அஞ்சு குழியெடுத்து எதுலையும் தண்ணி வரல.
உங்க லைன்ல, மூணு நாளா த்ரீ-ஃபேஸ் இல்லை. புதுக்காட்டுக்காரர் மாட்டுக்குக் காட்டறதுக்குக் கூட தண்ணி இல்லைனு சொன்னாரு. லைன்மேனுக்கு காசு கொடுத்தாத்தான் வேலை நடக்கும்.
எங்கள் பக்கத்துத் தோட்டத்துக்காரர்:
காஸ் கெனெக்சனுக்கு பாங்குல கணக்குத் தொடங்கச் சொன்னாங்க. ஆனா நான் இன்னும் அதுல ஒரு பைசா போடல.
பால்க்காரன் வேற வந்து சொல்லீட்டுப் போயிட்டான். பழைய நோட்டுல தான் பால் காசு தருவானாம். பதினைஞ்சு நாளைக்கு ஒருக்காத் தருவான். அவங்க கம்பெனில அவன்கிட்ட சொல்லிருக்காங்க – பழைய நோட்டுதான் வரும்னு. அவ்வளவு பெரிய கம்பெனி – புது நோட்டுக் குடுத்தா என்னவாம்.
எங்க அண்ணன் பையன் வெளியூர்ல இருந்து போன் பண்ணினான். உப்பு வெலை ஏறப்போகுதாமா. கிலோ 300 ரூபாய் ஆயிடுமாமா. ஒரு மூட்டை வாங்க வைங்கன்னான். இப்ப உப்பில்லைனா என்ன போச்சுன்னு விட்டுட்டேன்.
எங்கள் தோட்டத்தில் மாடு மேய்க்கும் பெண்:
எங்கிட்ட இருந்த காசெல்லாம் தம்பிக வாங்கிட்டுப் போயிட்டாங்க. எனக்கு வேணுங்கிறப்பத் தருவாங்க. நாங்க என்ன ஆடம்பர செலவு பண்றோம்?
நேத்துத்தான் தீபாவளி சேலையை தண்டல்க்காரரு கூப்பிட்டுக் குடுத்தாரு. எப்பவும் தீபாவளிக்கு முன்னாடியே வந்துரும். இந்த வருஷம் இப்பத்தான் வருது.
பாங்கு கணக்கு இருக்கான்னே தெரியலையே. பேப்பர் போடற பையன் ஆதார் அட்டை, போட்டோ எல்லாம் வாங்கிட்டுப் போனான். அவனே மாசாமாசம் பணத்தை எடுத்துட்டு வந்து குடுத்துருவான். ஐம்பது ரூபா அவன் எடுத்துப்பான். எங்க எல்லாருக்கும் அவன்தான் தருவான். மொதல்ல தபால்காரரு தான் செய்துட்டு இருந்தார். இப்ப இந்தப் பையன் செய்யறான். அவனும் ஏதோஅரசாங்க வேலைல தான் இருக்கான். (அவர் கணவனால் கைவிடப்பட்டவர். அரசுத்திட்டம் ஒன்றின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் பணம் வருகிறது.)
நீங்க சொன்ன மாதிரியே தக்காளி விலை ரொம்ப கம்மியா இருக்கு. கிரியண்ணன் தோட்டத்துல பறிக்காமயே விட்டுட்டாங்க.
வழியில், பத்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒரு வயதான தம்பதியர்:
மழையே காணலை. இப்படியே இருந்தா, இந்த வேசைல குடிக்கிறதுக்குக்கூட தண்ணி பத்தாது.
பரவால்ல, மோடி ஒரு நல்ல காரியத்தத் தொடங்கி வைச்சுட்டாரு. எல்லாரும் கொஞ்சமா கறுப்புப் பணம் வைச்சிருக்காங்க? எல்லாம் வெளிய வரட்டும்.
அம்பராம்பாளைத்துல பணமெல்லாம் மிதக்கல…நேத்து நாங்க அங்க தான் இருந்தோம். ஏதோ துணி மூட்டைகதான் இருந்துச்சு. இப்படித்தான் குறிச்சிக் குளத்துக்கிட்ட பணத்தைக் கொட்டி எரிச்சாங்கன்னு கதை கட்டிட்டு இருக்காங்க.
வடக்கிபாளையத்துல பெரிய வரிசையா இருந்துச்சு. அதுனால, பொள்ளாச்சி போயி இந்தியன் பாங்க்ல ஏழாயிரம் ரூபா போட்டுட்டு வந்தேன். ஏழு அக்கவுண்ட் வைச்சிருக்கேன். எங்க கூட்டமில்லையோ, அங்க போட்டறலாம்னு போனேன்.
தக்காளி ஊர்ல எத்தனை ரூபாயிக்கு வாங்குனீங்க? எங்களுது நேத்து பதினாலு பெட்டி (பெட்டிக்கு 15 கிலோ) அனுப்பினோம். வண்டி வாடகை, சுங்க வரி, கமிசன் எல்லாம் போக மொத்தமா 120 ரூபாதான் கிடைச்சது. பறிச்ச கூலி கூட கிடைக்கல. கூலி குடுத்துக் கட்டுபடியாகாதுன்னு நானே தான் பறிக்கிறேன்.
இந்த புது இரண்டாயிரம் ரூபா நோட்டு இந்த சேலை மாதிரி லேசா இருக்கு கண்ணு. இப்படினா கிழிஞ்சிருமாட்டா இருக்கு. நேத்து, டாஸ்மாக் கடைல, ஒருத்தன் ரெண்டாயிரம் ரூபா கள்ள நோட்டுக் குடுத்து, ரெண்டு குவார்டர் அடிச்சிட்டுப் போயிட்டானாம்.
பணமிருக்கவனுக்கும் கவலையில்லை. இல்லாதவனும் சமாளிச்சுக்கறான். இடைவெட்டுகதான் மாட்டிட்டு முழிக்குதுக.