சுழன்றாடு மத்தே

நவம்பர் 26, 2017

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வர்தா சென்றிருந்தபோது இரண்டு பெட்டிச் சர்க்காக்களை (ராட்டை) வாங்கி வந்திருந்தோம். நூற்க கற்றுக்கொண்டு, ஒரு சில நாட்கள் பயன்படுத்தினோம். பெட்டிச் சர்க்காவில் நூற்கப்படும் நூல் இன்று கதராடைகள் செய்யப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால், அதிலிருந்த ஆர்வம் விரைவில் விலகிவிட்டது. ஆனால், சர்க்காவைப் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஓர் எளிமையான உற்பத்திக் கருவிக்கான ஏக்கம் என் மனதில் எப்போதும் உண்டு. எதாச்சையாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, மோர் கடையும் வேலையைத் தொடங்கினோம். அன்றிலிருந்து மோர் கடையும் அச்சிறு மத்தே எங்கள் சர்க்கா ஆனது. நான்கைந்து நாட்கள் மோர் கடைந்தால், அடுத்த வாரத்துக்குத் தேவையான நெய் கிடைத்துவிடுகிறது. நாங்கள் மூவரும் தினமும் பங்களிக்கக்கூடிய இன்னொரு செயலாக இது அமைந்துவிட்டது. தயிரை விட மோர் பிடித்திருக்கிறது. அதுவே ஆரோக்கியமானது என்றும் சொல்கிறார்கள். உண்மையில், மோர் என்றால் என்னவென்றே இப்போதுதான் உணர்கிறேன். இது போல், நாம் இழந்திருக்கும் சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் எத்தனையோ?

****
நெய் என்பது கடைக்குச் சென்று புட்டியில் வாங்குவது அல்ல; பால் கறப்பது முதல் வெண்ணெய் உருக்குவது வரை நெய் உருவாக்குவதற்கு ஒரு நீண்ட செயல்முறை உள்ளது என்கிற அனுபவப் பாடம் என் பெண்ணுக்கு.

****

மகிழ்மலர் மோர்கடைந்து கொண்டிருந்தாள். நான் ஜெயமோகனின் கொற்றவை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி…ஆயர் சேரியில் கண்ணகி விழித்தெழும்போது:
‘புலரியில் கண்ணகி நூறு நூறு புறாக்கள் குறுகும் ஒலி கேட்டுப் பலகைமஞ்சம் விட்டெழுந்தபோது மூதாய்ச்சியர் மாயோன் புகழ்பாடி மோர்கடையும் ஒலியே அது என்றறிந்தாள்.’

இந்த வரியை அவளுக்குப் படித்துக் காண்பித்தேன்.
‘ஆமாம்பா. மோர் கடையும் போது புறாச் சத்தம் மாதிரியே கேக்குது.’

அன்றுமுதல் அதிகாலையில் எங்கள் திண்ணையில் புறாக்கள் ஒலிக்கத்தொடங்கிவிட்டன.

****

சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை எம்.எஸ்.குரலில் அருமையாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=ogm5odfetE4

‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே’

****

சென்ற வாரம், தமிழிசை ஆய்வாளர் நா.மம்மதுவோடு மருத்துவர் ரமேஷ் வீட்டில் மூன்று நாட்கள் கழித்தோம். சிலப்பதிகாரம் சார்ந்தே அதிகமும் பேசினார். ஆய்ச்சியர் குரவையில் வரும் ‘குடமுதல் இடமுறையாக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என விரிதரு பூங்குழல் வேண்டிய பெயர்’களும், முல்லைத்தீம்பாணியும் எங்களுள் ஆழப் பதிந்தன. (எம்.எஸ். பாடல் முல்லைத்தீம்பாணியில் இல்லை என்றறிகிறேன்)

 


அனுபவக் கல்வி

நவம்பர் 7, 2017

நாராயணன் நாங்கள் குடியிருக்கும் வீடு அமைந்துள்ள தோப்பில் வேலை செய்பவர். சரியாகக் காது கேட்காது. கடும் உழைப்பாளி. காலை ஐந்தரை-ஆறு மணிக்கு வந்து தொழுவத்தைச் சுத்தம் செய்து பால் கறப்பதில் தொடங்கி, மாலை ஆறு மணிக்கு மேல் மாலை கறந்த பாலை பால்க்காரரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வதுவரை ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பார்.

எங்கள் கிராமத்தில் பலரும் பாம்புகளைப் பற்றிப் பல கதைகள் சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்கள் பார்க்கும் பாம்புகள் எப்போதும் கட்டுவிரியனாகவோ நாகமாகவோ தான் இருக்கின்றன. ஐந்து தலை நாகம் பற்றியெல்லாம் சிறுவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். உண்மையில் அவர்களுக்குப் பாம்புகளை அடையாளம் காண முடிகிறதா, அல்லது எந்தப் பாம்பைப் பார்த்தாலும் விஷப்பாம்பு என்று அஞ்சுகிறார்களோ என்று எனக்குச் சில சமயங்களில் சந்தேகம் தோன்றுவதுண்டு.

‘நம்முடன் வாழும் பாம்புகள்’ என்று என்.பி.டி. பதிப்பித்துள்ள ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். பிரபல பாம்பு நிபுணர் விட்டேக்கரின் நூலின் மொழிபெயர்ப்பு. கருப்பு வெள்ளைப் படங்களுடன், பாம்புகளுக்கான தமிழ்ப் பெயர்களும் ஆங்கிலப் பெயர்களும், அவற்றைப் பற்றிய ஓரளவு விரிவான குறிப்புகளும் கொண்ட நூல்.

அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த நாராயணனால் பாம்புகளை அடையாளம் காண முடிகிறதா என்று சோதித்துப் பார்க்கலாம் என்று தோன்றியதோ, அல்லது பாம்புப் படங்களைப் பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் இருக்கும் என்று தோன்றியதோ தெரியவில்லை- அவரிடம் அப்புத்தகத்தில் ஒரு படத்தைக் காண்பித்து இது என்ன பாம்பு என்று சைகையில் கேட்டேன். அவருக்குப் படிக்கத் தெரியாது. படத்தைப் பார்த்த உடன் கண்ணாடி விரியன் என்றார். அதற்கு முன்புள்ள படத்தில் கட்டுவிரியனையும், அதற்கும் முன்பு நாகத்தையும் சரியாகக் காண்பித்தார்.

‘எங்க அப்பா கண்ணாடி விரியன் கடிச்சுத்தான் செத்துப்போனார். அப்போ நான் நம்ம பாப்பா வயசுகூட இருந்திருக்க மாட்டேன். என் கடைசித் தம்பி கைக்குழந்தை,’ என்றார்.

‘அப்போ மழைக்கு வீடெல்லாம் ஒரே சொத சொதன்னு இருக்கும். தூங்கிட்டு இருக்கும் போது ஏதோ கடிச்சுது. ரொம்ப நேரம் எங்க அப்பா ஒன்னும் இல்லேன்னுட்டாரு. அப்புறம்தான் எங்க அம்மா கண்ணாடி விரியனப் பார்த்தாங்க. உடனே அடிச்சுட்டாங்க. பின்னாடியே முருங்க மரத்துகிட்ட இருந்து இன்னும் நாலு பாம்புக வந்தது. அந்தக் காலத்துல ஏது பஸ்ஸூ காரெல்லாம். அதுவும் நடு ராத்திரி வேற. வண்டிகட்டி அவர கொண்டு போறதுக்குள்ள இறந்துட்டாரு. மொழங்காலுக்கிட்ட கடிச்சிருந்தது. அம்மா அவருக்குத் தொடைல இறுக்கிக் கட்டுப் போட்டிருந்தாங்க. புதூர்ல ஒரு அம்மா, அந்த கட்டு எதுக்குன்னு அவுத்தாட்டாங்க. சீக்கிரமா விஷம் தலைக்கேறிடுச்சு.’

‘அதுக்கப்புறம் நாங்க யாரும் படிக்கலை. நான் பெரிசானப்புறம் என்னையும் ஒரு கட்டுவிரியன் கடிச்சிடுச்சி. ஆனா, அப்ப நான் வேலை செஞ்சிட்டிருந்த காட்டுக் கவுண்டர் கிட்ட கார் இருந்துச்சு. உடனே என்னை கேரளாவுல ஒரு கிருஸ்துவங்க ஆஸ்பித்திரி இருக்கு. அங்க கூட்டிட்டுப் போனாங்க. ஒரு கல்லு வைச்சு விஷத்தை உறிஞ்சி எடுத்துட்டாங்க.’

‘அப்புறம் எங்க அண்ணன் பொன்னுசாமி இல்ல…அவரு மாட்டுக்குச் சோளத்தட்ட அறுத்திட்டு இருக்கும் போது, சர்ருன்னு சுத்தி வந்து ஒரு கண்ணாடி விரியன் அவரு மொழங்கால்ல கடிச்சிருச்சு. ராத்திரி எட்டு மணிக்கு கே.பி.கே. பஸ்ஸூலதான் பொள்ளாச்சி கொண்டு போனோம். அப்பவே பத்தாயிரம் ரூபா செலவாச்சு.’

மேலும் சாரைப் பாம்பு பற்றி, நாகப் பாம்பு பற்றியெல்லாம் சொன்னார். அவர் சொன்ன தகவல்கள், உடல்கூறுகள் பெரும்பாலும் அந்தப் புத்தகத்தோடு ஒத்துப் போகிற மாதிரித்தான் இருந்தன.

உண்மையில், எத்தனை புத்தகங்களைப் புரட்டினாலும் என்னால் பாம்புகளைச் சரியாக அடையாளம் காணமுடியும் என்றோ, பாம்பு கடித்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றோ நம்பிக்கை இல்லை. குழவியோ தேனீக்களோ வீட்டுக்குள் கூடு கட்டிவிட்டால்கூட நாராயணனிடம்தான் ஓடுகிறோம். யார் யாருக்குக் கற்றுக்கொடுக்கிறோம்?

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஊசலாடியபடியே அவர்களுக்கு நிகழும் அனுபவக் கல்வியை எந்தக் கல்விமுறையால் கொடுக்க முடியும்? அவர்களது அனுபவங்களில் இருந்து அவர்களை அந்நியப் படுத்தாமலேனும் இருக்கமுடியுமா?