1)
நெடுஞ்சாலை ஓரத்து
ஆலம் விழுதுகளைப்
பிடித்தாட ஆசைப்பட்ட
இளவயதுப்
பேருந்துப் பயணங்களை
நினைத்தவாறு
காரில் விரைந்து
கடந்தேன்.
2)
பழைய சிற்பத்தின் முகத்தில் புதிய சாயம்
கொலைக் கைதியின் கழுத்தில் பதிந்த கயிறு.
3)
அழுத்தம் தாங்காது மடிந்து போயின
பீலியின் மெல்லிய இறகுகளில்
குடியிருந்த நுண்கிருமிகள்.
4)
விழும்போதும்,
மேகம் மழையாய்
ஆறு அருவியாய்
கனி விதையாய்
இலை உரமாய்
கதிர் ஒளியாய்
மனிதன்?
5)
ஒரு கவிதை
தன்னை மாய்த்து
இன்னொன்றை
ஈன்று சென்றபோது
அறிந்தேன் அது
நல்ல கவிதையென்று.