ஜல்லிக்கட்டு – சில எண்ணங்கள்

ஜனவரி 22, 2020

முகநூல் மூன்றாண்டுகள் முன் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் பற்றிய நினைவுகளைக் கிளறிக்கொண்டிருக்கிறது. அப்போது சில போராட்டங்களில் நான் அமைதியாகக் கலந்துகொண்டும், தீவிரமாக எழுதிக்கொண்டும் இருந்தேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம் மீதான எனது ஆர்வத்துக்கும் அதற்கான ஆதரவுக்கும் அடிப்படையாக அமைந்தது ஒரு முக்கியக் கூறு:

தமிழ்நாட்டில் மாணவ சமூகத்தை அரசியல்படுத்தி ஒன்றிணைப்பதற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் உதவியது. சுயநலம் சார்ந்து தம் பிழைப்பு, தம் வளர்ச்சி என்றிருந்த ஒரு தலைமுறை மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒரு சமூகப் பிரச்சனைக்காகக் களமிறங்கவைத்தது. நான் போராட்டங்களின் போது கண்ட நிகழ்ச்சிகளின் மூலமாக இது ஒரு பரந்த விழிப்புணர்வுக்கும் மாணவர்களிடம் பசுமைச் சிந்தனைக்கும் வழிவகுக்கும் என்று நம்பிக்கை கொண்டேன்.

உழவு, சுற்றுச்சூழல் சார்ந்து பெருமளவு ஆர்வத்தை இப்போரட்டங்கள் ஏற்படுத்தத்தான் செய்தன. சில இளைஞர்கள் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஈடுபடவும் செய்தனர். தமிழகத்தின் சுற்றுச்சூழல் இயக்கத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாக இதை நாம் காணலாம். ஆனால் இது தன்னளவில் ஓர் இயக்கமாக வளரவில்லை. அதற்கு ஒரு காரணம், போராட்டத்தை ஒருங்கிணைத்த சிலர் அதை அவசரமாக முடிவுக்குக் கொண்டுவந்தனர். ஜல்லிக்கட்டு மட்டுமே போராட்டத்தின் நோக்கம் என்றும் அது நிறைவேறிவிட்டது என்று அறிவித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து பல்வேறு விசயங்களைப் பற்றி பேசிவந்தனர். இது அடுத்த நாள் மாணவர்கள்மீது காவல்துறையினர் திட்டமிட்டு நிகழ்த்திய கொடூர வன்முறைத் தாக்குதலுக்கு வழிகோலியது. மீண்டும் அந்த மாணவர்கள் பிற காரணங்களுக்காகப் போராட்டம் செய்வதற்கு அஞ்சும்படியான ஒரு சூழலை உருவாக்கியது. அதனால்தான் தமிழக மாணவர்கள் நீட் எதிர்ப்பு, குடியுரிமைச் சட்ட திருப்பு எதிர்ப்பு என்று எதிலும் பெருமளவு ஈடுபடவில்லை என்று தோன்றுகிறது. இது அகிம்சைப் போராட்டங்களில் நமக்குப் போதிய புரிதலும் பயிற்சியும் இல்லையென்பதையும் வெளிப்படுத்தியது.

ஜல்லிக்கட்டு மூலமாக நாட்டு மாடுகள் மீது மக்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப்பிறகு நாட்டு மாடுகளின் விலை அதிகரித்தது. மரபான உழவர்களிடையே – குறிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறாத எங்கள் பகுதியில் – பெரிதாக ஆர்வம் அதிகமானது மாதிரித் தெரியவில்லை. ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் வேறுமாதிரி இருக்கலாம். ஆனால், இது ஆர்வத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான ஒரு செயற்கையான வழிமுறைதான். உழவர்கள் நாட்டு மாடுகளை நோக்கித் திரும்புவதற்குத் தேவையான உண்மையான பொருளாதார காரணிகளை இது அடையாளம் கண்டு சரி செய்வதில்லை.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் இன்னொரு வகையில் முக்கியமானது. உள்ளூர்ச் சமூகங்கள் தங்கள் பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பதற்கான உரிமையை நிலைநாட்டவும், அப்படியான உரிமைகளில் தலைநகர் தில்லியோ சர்வதேச நிறுவனங்களோ தலையிட்டு ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்கவும் பயன்பட்டது. வெளியாட்களின் தலையீட்டால், உள்ளூர்ப் பழக்கங்களை மாற்றுவதில் எனக்கு இன்னும் உடன்பாடில்லையெனினும், உள்ளூர்ச் சமூகங்கள் தாங்களே தங்கள் மரபுகளையும் பழக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்தி, தொடர்ந்து பரிணமித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஒரு விளையாட்டாகவோ, சடங்காகவோ ஜல்லிக்கட்டு என்னைத் தனிப்பட்ட முறையில் பெரிதாக ஈர்க்கவில்லை. உணர்வெழுச்சியில்லாமல் இப்போது இதைப் பார்த்தால், அதன்மீது எனக்கு எந்த ஆர்வமும் தோன்றவில்லை. ஜல்லிக்கட்டை நான் நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் பார்த்திருப்பதோடு சரி. ஆனால் அதுவே இது குறித்துப் பேசுவதற்கான தகுதி எனக்கில்லை என்றாக்கிவிடாது. இதில் எந்தவிதமான அழகியலோ இக்காலத்துக்கேற்ற வேறு உயர்ந்த நோக்கமோ இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.

இது வீரத்தைக் கொண்டாடுவதாகக் கொண்டால், இன்றைய உலகில் இத்தகைய வீரத்துக்கான இடம் என்ன என்பதைப்ற்றி நாம் கேள்வி எழுப்பவேண்டும். முரட்டுக் காளைகளின் பின்னால் ஓடித்தான், இன்றைய மக்களாட்சிக்கும், அகிம்சைப் போராட்டங்களுக்கும் எளிமையான வாழ்க்கைக்கும் தேவையான வீரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்பவர்கள் எல்லாருக்கும் ஒரு புதிய பாதையில் நடப்பதற்கான வீரத்தை இப்போட்டிகள் வழங்கிவிடுவதில்லை. இது ஒரு முக்கியான மரபுதான். ஆனால் எல்லா மரபுகளும் என்றென்றும் தொடரப்பட வேண்டியவையல்ல. தொடர்ச்சியாக மக்களைக் காயப்படுத்தியும் காவுவாங்கியும் வருகிற ஒரு விளையாட்டு நமக்கு இன்னும் தேவைதானா? இந்த மரணங்களையும் காயங்களையும் அவற்றின் மீது நாம் காட்டும் அக்கறையின்மையையும் பிற விளையாட்டுகளோடு ஒப்பிட்டு நியாயப்படுத்துவதையும் காண்பது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஜல்லிக்கட்டு மனிதருக்கும் விலங்குகளுக்கும் தீங்கான ஒன்றாக உள்ளது. அப்போது குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவை என்று கேட்டால், மேற்கோ கிழக்கோ எப்பகுதியாயினும் இத்தகைய வன்முறை விளையாட்டுகள் காட்டுமிராண்டித்தனமானவை என்றே நான் கருதுகிறேன்.

நாட்டு மாடுகள் – பசுக்கள் மாட்டுமல்லாமல் எருமைகளும், காப்பாற்றப்படவேண்டும். அதற்கு மாடுகளைப் பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை பொருளாதார ரீதியான தற்சார்புடையதாக வேண்டும். இன்றேல், ஜல்லிக்கட்டு மாதிரி என்தனை முட்டுகள் கொடுத்தாலும், நீண்டகால நோக்கில் பயன்படாது.

நாம் விரும்பியதைச் செய்யும் உரிமையை வென்றுவிட்டோம். இனி அந்த உரிமையை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்தவேண்டும்.


குடியுரிமைச் சட்ட திருத்தத்தின் நோக்கம்

ஜனவரி 17, 2020

இந்த அரசாங்கம் நல்ல நோக்கத்தோடுதான் குடியுரிமைச் சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்திருப்பதாக நம்ப விரும்புபவர்கள், அமித் சாவின் இந்தப் பேச்சுகளைக் கேட்க வேண்டும்.

மிகவும் சாமார்த்தியமாக, அகதிகள் ஊடுருவிகள் என்று இரு பிரிவுகளைக் கட்டமைத்துப் பல இடங்களில் மிக வெளிப்படையாகவே வெறுப்பைக் கக்குகிறார். வெளிநாட்டிலிருந்து வந்த (அல்லது இந்நாட்டினர் என்று நிரூபிக்கமுடியாத) முஸ்லிம்கள் மட்டும் ஊடுருவிகள், பிறரெல்லாம் அகதிகள் என்று எப்படி ஆகமுடியும்?

CAA, NRC ஆகிய திட்டங்களுக்கிடையே ஏதோ மிகையான இணைப்பைப் போராட்டக்காரர்கள் ஏற்படுத்திவிட்டதாக நினைக்கவேண்டாம். இந்த அரசாங்கமே தனது நோக்கமாக இதைத்தான் பலமுறை அறிவித்திருக்கிறது.

https://scroll.in/article/947436/who-is-linking-citizenship-act-to-nrc-here-are-five-times-amit-shah-did-so?fbclid=IwAR2LEe9fEGr47JhotIVY-59DRNqtgfJabdNvGMo6utuOhzhOtATDKo-OxmM

CAA, NRC ஆகிய இரண்டையும் ஆதரிப்பதாக பா.ஜ.க. ஆதரவாளர்கள் தங்களுடைய முகநூல் சுயவிவரப் படத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை இந்த வன்மமான திட்டத்தின் மூலம் அவர்களது கட்சி எதைச் செய்ய நினைக்கிறது என்பதில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.

இது பாதிக்கப்பட்ட சிலரை இணைப்பதற்கான திட்டமன்று. பலரை நீக்குவதற்கான திட்டம். இதில் இத்திட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும் சரி, அல்லது தீவிர ஆதரவாளர்களுக்கும் சரி, எவ்வித ஐயமும் இல்லை. நடுவில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறவர்கள்தான இந்த அரசுக்கு சில நற்பண்புகளைக் கற்பிக்கிறார்கள். அத்தகைய நல்லெண்ணம் இருப்பதாகக் காட்டிக்கொள்ள அவர்களேகூட விரும்புவதில்லை.


மார்கழித் திங்கள் குளிர்குறை இந்நாள்

ஜனவரி 17, 2020

(2-ஜனவரி-2020)

மார்கழி மாதத்தின் இருள்விலகாத அதிகாலையில் வியர்த்துப்போய் எழுந்தேன். கொடுங்கனவொன்றும் கண்டுவிடவில்லை. புழுக்கமாக இருந்தது. எழுந்து வெளியே சென்றேன். விண்மீன்களைப் பார்த்தபடி திரும்பும்போது மூன்றடி முன்னால் ஒரு கட்டுவிரியன் நெளிந்து சென்று ஒரு மூலையில் ஒடுங்கியது. அதன்மீது மின்பந்தத்தின் ஒளிபாய்ச்சி ஒரு பாதுகாப்பான தூரத்துக்கு வழியனுப்பிவிட்டு வந்து மின்விசிறியைச் சுழலவிட்டுப் படுத்தேன்.

அந்நாளின் இறுதியில் இரவு எட்டு மணிக்குமேல் மகள் தலை நீராடி மீதம் வைத்த அரப்புப்போட்டுக் குளிர்ந்த நீரில் குளித்தேன். சற்றும் நடுங்கவில்லை. எப்போதும் தண்ணீரில் குளிப்பது வழக்கம்தானெனினும், நாற்பதைக் கடந்தபின் வரும் முன்பனிக்காலங்களில் குளியலறையில் கனன்றுகொண்டிருக்கும் கொதிகலனின் வெந்நீர் சபலத்தைக் கிளப்பும். ஒன்றிரண்டு போசி வெந்நீர் எடுத்துவிடவைக்கும். ஆனால் இவ்வாண்டு அச்சபலம் எட்டிப்பார்க்கவில்லை. நாங்கள் இக்கிராமத்துக்கு வந்தபின், கடந்த ஐந்து வருடங்களில் மார்கழி மாதம் இந்த அளவுக்கு குளிரும் பனியும் அற்றிருந்ததில்லை. ஓட்டுவீட்டில் கசிந்திறங்கும் குளிர் தாளாமல் கம்பளியும் சுவெட்டரும் குல்லாவும் முதல் ஆட்களாய் அணிந்துவிடும் மனைவியும் மகளும், இன்னும் அவற்றை வெளியில் கூட எடுக்கவில்லை.

“மார்கழி மாசம் ஃபேனே போடமுடியாது. இத்தனை உப்புசமா இருந்ததே இல்லை. திண்ணைக்கு வரலாம்னா கொசு ஜாஸ்தியா இருக்கு. க்ளைமேட் ரொம்பத்தான் மாறிப்போச்சு,” என்றார் பக்கத்துவீட்டுப் பாட்டி.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலையாவதுபோல் ஆறு காலங்களும் தம்மியல்பு இழந்து திரிவதற்கு ஏதேனும் பெயர் உண்டா? பருவச்சூழல் நெருக்கடிநிலையின் வெளிப்பாடுதானா இது?
பொள்ளாச்சியின் ஒற்றை கிராமத்தின் ஒற்றைத் திங்களைக் கொண்டு பூமி வெப்பமடைந்துவிட்டதாக உறுதிப்படுத்திவிடமுடியாதுதான். எனினும் அடுத்த பத்தாண்டுகளில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நாம் நம் அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான உலகை விட்டுச்செல்கிறோம் என்பதை முடிவு செய்யும். இதுவே நம் காலத்தின் மிக முக்கியமான அக்கறையாக இருக்கவேண்டும். ஆனால் நம் கவனத்தைக் கட்டுவிரியன்கள் களவாடிக்கொண்டிருக்கின்றன.


காந்தியின் தேசியம்

ஜனவரி 17, 2020

இம்மாத காலச்சுவடு இதழில் ‘காந்தியின் தேசியம்’ குறித்த எனது கட்டுரை வெளிவந்துள்ளது. இது குடியுரிமைச் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை. எனினும் இச்சூழலில் காந்தியின் தேசியம் குறித்த கருத்துகளும், அவர் மிகவும் மதித்த தாகூர், தல்ஸ்தோய் ஆகியோர் தேசியத்தை எதிர்த்துக் கூறிய கருத்துகளும் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.


இணையத்தில் சந்தாதாரர்கள் மட்டுமே இப்போது படிக்கமுடியும். கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

/நாம் மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது காந்தியின் தேசியம் ஓர் அடிமை நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஒருவரின் தேசியம்; விடுதலைக்குப் பிறகு வாழ்ந்த சில மாதங்களிலும் சிதறிக்கிடந்த மக்களை ஒருங்கிணைக்கப் போராடியவரின் தேசியம்; தேசியத்தின் பெயரால் கொல்லப்பட்ட ஒருவருடைய தேசியம். அமைதி நிலவும் சுதந்திரத் தேசத்தில் அவர் தேசம் கடந்த மனிதநேய நிலையை நோக்கித்தான் சென்றிருப்பாரென்பதை அவர் வெவ்வேறு தருணங்களில் உரைத்த சில கருத்துகளிலிருந்து நாம் உய்த்துணரலாம். காந்தியின் தேசியத்துக்கும் காந்தியைக் கொன்றவர்களின் தேசியத்துக்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு./

—-

/தாகூரும் தல்ஸ்தோயும் தாக்கிய தேசியவாதத்திலிருந்த குழுமனப்பான்மையும் வன்முறையும் மிகையான பழம்பெருமையும், தாம்-பிறர் என்ற இருமையும், காந்தியின் தேசியத்தில் இல்லாமலோ மட்டுப்பட்டோ இருந்தன. காந்திக்கு இந்திய வரலாற்றின்மீது மிகையான பற்றும் இல்லை; மேற்கத்தியப் பண்பாட்டின்மீது மிகையான ஈர்ப்பும் இல்லை; காழ்ப்பும் இல்லை. அவர் நவீனத் தொழில்மயப் போக்கை நிராகரித்தபோதும், அதன் நிறைகுறைகளை ஆய்ந்தே நிராகரித்தாரேயன்றி, அது மேற்கிலிருந்து வந்ததால் நிராகரிக்கவில்லை. ஆங்கில ஆட்சியையுமேகூட அது வெளிநாட்டவரின் ஆட்சி என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை; தம் நாட்டு மக்களுக்குத் தீமைதரும் ஆட்சி என்று கருதியதாலேயே எதிர்த்தார். அதனாலேயே ஆரம்பத்தில் ஆங்கில ஆட்சியிலேயே இந்தியர்களுக்குத் தேவையான உரிமைகளுடனும் சுயாட்சியுடனும் வாழமுடியும் என்று நம்பினார். அது சாத்தியமில்லை என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த பிறகே ஆங்கில ஆட்சி நீங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கித் தீர்க்கமாக நகர்ந்தார். நல்லாட்சி என்றாலும் அது தன்னாட்சிக்கு மாற்றாக முடியாதென்றும் எத்துணை குறைபாடுகள் இருந்தாலும் முழுச் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றும் பின்னர் கூறினார்./

/1909இல், லண்டனில் இந்திய மாணவர்களோடான ஒரு சந்திப்புக்கு வந்த கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை மதன்லால் திங்க்ரா சுட்டுக்கொன்றார். குறுக்கே வந்து அவரைத் தடுக்க முயன்ற லால்கக்கா என்ற பார்சி மருத்துவரையும் கொன்றுவிட்டார். அப்போது தேசியவாதிகள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலை காந்தி செய்தார். திங்க்ரா செய்தது தவறு என்று கட்டுரை எழுதினார். இன்றும்கூட திங்க்ராவின் நீதிமன்ற அறிக்கை தேசபக்தியின் உச்சங்களில் ஒன்றாகப் பலரால் போற்றப்படுகிறது. (‘திங்க்ராவின் உரையைப் பெற்ற சாவர்க்கர் அதில் ராமர், கிருஷ்ணர் ஆகிய பெயர்களைச் சேர்த்து இந்துமதச் சாயம் கூட்டி வெளியிட்டார்’ என்கிறார் ராமச்சந்திர குஹா.) அன்று வின்ஸ்டன் சர்ச்சில் “தேசபக்தியின் பெயரால் பேசப்பட்ட மிகச்சிறந்த உரை” என்றும் “இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் கொள்ளப்படும்” என்றும் “சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் – இறுதிச்சடங்குகள் செய்வதற்கு அவரது உடல் நண்பர்களுக்குத் தரப்படக்கூடாது என்பதைக்கூட நான் ஆதரிக்கிறேன்” என்றும் தன்னிடம் சொன்னதாக வில்ஃபிரட் ப்ளண்ட் கூறுகிறார்.

இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதிய காந்தி, “மதன்லால் திங்க்ராவின் எதிர்வாதம் ஏற்கத்தகுந்ததன்று. என் பார்வையில் அவர் ஒரு கோழையைப்போல நடந்திருக்கிறார். அவரைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது. அவர் படித்த மிக மோசமான எழுத்துகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டதால் இச்செயலைச் செய்யத் தூண்டப்பட்டிருக்கிறார். அவர் ஆற்றிய எதிர்வாதமும் மனனம் செய்து கற்றது போலிருக்கிறது. அவரைத் தூண்டியவர்கள்தாம் தண்டனைக்குரியவர்கள்./


பாம்பும் பட்டாம்பூச்சியும்

ஜனவரி 17, 2020

(29-Nov-2019)

திருவண்ணாமலை மருதம் பள்ளி சென்றிருந்தபோது, அப்பள்ளியை நடத்தும் முக்கிய நபர்களில் ஒருவரான அருணோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவருக்குக் கைபேசியில் ஓர் அழைப்பு வந்தது – தொடக்கப்பள்ளி வகுப்பறையின் அருகில் ஒரு லூனா மாத் (Luna moth) இருப்பதாக.

[Butterfly – வண்ணத்துப்பூச்சி, moth – பட்டாம்பூச்சி என்றோ அந்துப்பூச்சி என்றோ சில இயற்கை இதழ்களில் மொழிபெயர்க்கிறார்கள்; அந்திப்பூச்சி என்றும் சொல்கிறார்கள். ஆனால் பகலில் பறக்கும் அந்திப்பூச்சிகளையும் பார்த்திருப்பதாக அருண் கூறினார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் தம்பலப்பூச்சி, தனுப்பீசம், பதமம், பொட்டு, விட்டிகை, விட்டில், ஈயலி, வெள்ளைவண்ணாத்தி, தட்டாரப்பூச்சி ஆகிய சொற்களும் ஏதேனும் mothஐக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன].

இதுவரை அங்கு லூனா மாத் தென்பட்டதில்லை என்பதால் அருணுக்கு நம்பிக்கையில்லை. வேறு ஏதாவது பொதுவான அந்திப்பூச்சியாக இருக்கலாம் என்றார். வேறொரு மாணவனை அனுப்பி உறுதி செய்யச் சொன்னார். அவன் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு வந்தது. லூனா மாத் தானாம் என்று உடனிருந்தவர்களை அழைத்துக்கொண்டு ஓடினார். ஒன்றும் புரியாமல் நானும் சென்றேன். உண்மையிலேயே காண்பரிய காட்சிதான். ஒரு கொய்யா மரத்தின் இலைகளோடு இலையாய், அசையாது தொங்கிக்கொண்டிருந்த லூனா மாத் அத்தனை அழகு. அடுத்த சில நிமிடங்களில் குழந்தைகள் பெரியவர்கள் என்று அப்பள்ளியைச் சேர்ந்த அனைவரும் வந்து வந்து அதைக் கண்டு களிப்புடன் சென்றனர்.

அடுத்த நாள் மதியம் இன்னொரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன். மருதம் பள்ளி வளாகத்தில் சில ஓலைக் குடில்கள் உண்டு. அவற்றில் ஒன்றில் அமர்ந்திருந்தோம். அவ்வழியே சென்ற அருண் அடுத்த குடிலில் ஒரு பாம்பு வந்திருப்பதாகச் சொன்னார். சென்று பார்த்தோம். அதனருகில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அது ரஸ்ஸல்ஸ் குக்ரி என்ற வகைப் பாம்பின் குட்டி என்றான். (Russell’s kukri; Common/Banded kukri என்ற பாம்பினத்தை எண்ணெய்ப் பனையன் என்கிறது விக்கி). சன்னமாக இருந்தது. பெரிதானால் மேலும் சற்று தடிமனாகும் என்று விரல்களால் அளவு காட்டினான்.

“கடிக்காதா?” என்றேன்.

“அவ்வளவு சீக்கிரம் கடிக்காது. மிகவும் அருகில் கைவைத்தால் சீறும். தொட்டால்தான் கடிக்கும். மிகவும் சின்னப் பல்தான். பெரிதாகக் காயம் ஆகாது. விஷமும் கிடையாது,” என்றான்.

“எத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருப்பாய்?”

“அது நகர்ந்து செடிகளுக்குள் மறையும் வரை.”

சிறிது நேரம் நின்று, சில படங்கள் எடுத்துவிட்டுத் திரும்பிவிட்டோம். அந்தப் பச்சைவெளியில், ஓலைக்குடிலின் வாயிலில் ரஸ்ஸல்ஸ் குக்ரியோடு அவன் தனியே அமர்ந்து அமைதியாக அதன் அசைவுகளை நோக்கியவாறு இருந்தான்.

எந்தப் பொதுத் தேர்வில் ரஸ்ஸல்ஸ் குக்ரி பற்றியும் லூனா மாத் பற்றியும் இவர்கள் பெற்றுள்ள கள அறிவைச் சோதிக்கப்போகிறார்கள்?


குழந்தைகளுக்கான நூல்கள்: மகளின் பரிந்துரை

ஜனவரி 17, 2020

எல்லாரும் புத்தக சிபாரிகள் போடுகிறார்கள். குழுந்தைகளுக்கான ஒரு பரிந்துரைப் பட்டியலைப் போடலாமே என்று சில நண்பர்கள் முன்பே கேட்டிருந்தார்கள். நான் மகளைக் கேட்டேன். அவளுக்குப் பிடித்த ஐந்து, பத்து என்று தொடங்கினோம். வளர்ந்து நாற்பதைத் தாண்டிவிட்டது. இவை அனைத்தையும் நான் படிக்கவில்லை. பட்டியல் அவளுடைய தேர்வுதான். அனைத்தும் குழந்தை நூல்களல்ல. ஆனால் குழந்தைகளுக்குமானவை என்று கொள்ளலாம். [அவள் வயது பதினொன்று.]

1 டோட்டோ சான் – சன்னலில் ஒரு சிறுமி – National Book Trust [Totto-Chan: The Little Girl at the Window – Tetsuko Kuroyanagi]
2 மாயி-சான் – தோசி மாருகி – Books for Children [The Fire of Hiroshima – Toshi Maruki]
3 குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த்-எக்சுபெரி; தமிழில்: வெ. ஸ்ரீராம் – க்ரியா பதிப்பகம் [The Little Prince – Antoine de Saint-Exupéry]
4 பனி மனிதன் – ஜெயமோகன் – கிழக்குப் பதிப்பகம்
5 வெள்ளி நிலம் – ஜெயமோகன் – விகடன்
6 குழந்தைகளும் குட்டிகளும் – ஓ பெரோவ்ஸ்கயா (தமிழில் : ருக்மணி) – Books for Children [Kids and Cubs – Olga Perovskaya]
7 கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் – தமிழில்: பெரியசாமித் தூரன் – தமிழினி பதிப்பகம் [The Call of the Wild – Jack London]
8 ஐம்பேரியற்கை – மாற்கு – தமிழினி பதிப்பகம்
9 தேவமலர் மற்றும் கதைகள் – தேசாந்திரி பதிப்பகம் (தேவமலர் – செல்மா லாகர்லெவ் – க.நா.சு., உயிராசை – ஜாக் லண்டன் – புதுமைப்பித்தன்; மேல்கோட்டு – நிக்கலாய் கோகல் – பாஸ்கரன்; விருந்தாளி – ஆல்பர் காம்யூ – க.நா.சு.) [The Legend of the Christmas Rose – Selma Lagerlöf, Love of Life – Jack London, The Overcoat – Nikolai Gogol, The Guest – Albert Camus]
10 மகாபாரதம் (வியாசர் விருந்து) – ராஜாஜி [Mahabharata – C. Rajagopalachari]
11 இளைஞர்களுக்கான கம்ப ராமாயணம் – சரஸ்வதி ராம்நாத் முன்னுரை – எழுதியவர் பெயர், பதிப்பகம் குறித்துவைக்கவில்லை [Ramayana]
12 நிழல் காட்டும் நிஜங்கள் (திருக்குறள் கதைகள்) – மலர்க்கொடி ராஜேந்திரன் – விஜயா பதிப்பகம்
13 மாயக்கண்ணாடி – உதயசங்கர் – நூல் வனம்
14 கடவுளைப் பார்த்தவனின் கதை – லியோ டால்ஸ்டாய் – தமிழில்: பாலு சத்யா – Books for Children [Leo Tolstoy – can’t identify the original – can someone help?]
15 ஒரு நாயின் கதை – பிரேம் சந்த் – தமிழில்: யூமா வாசுகி- Books for Children [ कुत्ते की कहानी/Story of a Dog – Munshi Premchand]
16 ரஸ்டியின் வீரதீரங்கள் – ரஸ்கின் பாண்ட் – தமிழில்: கே.பாலச்சந்திரன் – National Book Trust [The Adventures of Rusty – Ruskin Bond]
17 சாவித்திரிபாய் பூலே – வழிகாட்டியின் வாழ்க்கைப் பயணம் – தமிழில்: சாலை செல்வம் – அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகப் பதிப்பகம் [Savitri Bai – Journey of a Trailblazer – Azim Premji University Publication]
18 பாப்பாவுக்கு காந்தி – தி.ஜ.ர. – காந்திய இலக்கிய சங்கம்
19 ஐந்து சீன சகோதரர்கள் – Books for Children
20 ஃபெலுடா வரிசை – சத்யஜித் ரே – Books for Children [Feluda Series – Satyajit Ray]: அனுபிஸ் மர்மம், டார்ஜிலிங்கில் ஓர் அபாயம், பம்யாய் கொள்ளையர்கள்,…
21 சிறுவர் நாடோடிக் கதைகள் – வீர வேலுசாமி (பதிப்பாசிரியர்: கி.ரா) – அகரம் பதிப்பகம்
22. பெரிய மரமும் சிறிய புல்லும்: உலக நாடோடிக் கதைகள் – யூமா வாசுகி – Books for Children
23 காட்டிலே கதைகள் – மலையாள மூலம்: சிப்பி பள்ளிபுறம், தமிழில்: எல்.பி.சாமி – Books for Children
24 மாகடிகாரம் – விழியன் – Books for Children
25 Prodigy Series (Kizhakku) – லெனின், அக்பர், அலெக்ஸாண்டர், இலியட், பரமஹம்சர், விவேகானந்தர், வீரபாண்டிய கட்டபொம்மன், அமேசான் காடுகள், மலைகள்…
26 லயன் காமிக்ஸ் : உரைபனி மர்மம் , பெயிரூட்டில் ஜானி, மலைக்கோட்டை மர்மம், ஃளைட் 731, வான்வெளிக்கொள்ளையர்கள்,…
27 தும்பி இதழ்கள்
28 சுப்பாண்டியின் சாகசங்கள்

1. The Adventures of Burratino or the Little Gold Key – Alexei Tolstoy – Raduga Publishers Moscow
2. Black Beauty – Anna Sewell (Abridged)
3. The Call of the Wild – Jack London (Original)
4. Ben Hur – Lew Wallace (Abridged)
5. Alice’s Adventures in Wonderland – Lewis Carroll (Original)
6. The Wonderful Wizard of OZ – L. Frank Baum (Abridged)
7. The Black Arrow – Robert Louis Stevenson (Abridged)
8. 20,000 Leagues Under the Sea – Jules Verne (Abridged)
9. The Last of the Mohicans – James Fenimore Cooper (Abridged)
10. Gulliver’s Travels – Jonathan Swift (Abridged)
11. The Hound of the Baskervilles (Sherlock Holmes) – Sir Arthur Conan Doyle (Abridged)
12. Blue Umbrella – Ruskin Bond
13. Angry River – Ruskin Bond
14. The Magic Finger – Roald Dahl
15. Charlie and the Chocolate Factory – Roald Dahl
16. Charlie and the Great Glass Elevator – Roald Dahl