இதுவரை நான் செய்திராத அளவு கடுமையான உடலுழைப்பு செய்து முடித்த ஒரு தினத்தில், மாலை 6 மணிக்கு, மனமகிழ்ச்சியுடனும் உடற்சோர்வுடனும் மண்புழுதியோடும் நண்பரின் நிலத்திலிருந்து வீட்டிற்குத் திரும்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போதுதான் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு வந்தது.
‘திருக்குறள் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம். நாளை காலை 10மணிக்கு ஏவிஎம் ஸ்டூடியோ வரமுடியுமா,’ என்றார்கள்.
‘நான் இப்ப கோயமுத்தூர் பக்கத்துல ஒரு கிராமத்தில் இருக்கனே. காலைல வந்து சேர்வது சிரமமாயிற்றே’ என்றேன்.
‘சரி, யோசிச்சுச் சொல்லுங்க. வந்தா நல்லாயிருக்கும்.’
திருக்குறள் குறித்து கடந்த 3 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளிலும், சில மேடைகளிலும் பேசிக்கொண்டிருந்து ஒரு 5000 பேரை அடைந்திருப்பேன் என்று நினைக்கிறேன். (சிறிது காலமாய் தடைபட்டிருக்கும்) எனது திருக்குறள் மொழிபெயர்ப்புப் பக்கத்தினை 1600 பேர் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றோடு ஒப்பிடும்போது நீயா நானாவின் பெரும் வீச்சு நான் அறியாததில்லை. திருக்குறளை மக்களுக்குச் சென்றுசேர்க்கும் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்கு நான் எப்படி மறுக்கமுடியும். எப்படியாவது வந்து சேர்கிறேன் என்றேன்.
பேருந்துகள் மாறி அவசரமாய் வீட்டை அடைந்து கிளம்பி, கொஞ்சமேனும் தூங்கவேண்டும் அதிகாலையிலேயே சென்றடையவேண்டும் என்கிற இரட்டைக் கவலையோடு, 3 ஆண்டுகளாய்த் தவிர்த்துவந்த சொகுசுப் பேருந்து ஒன்றில் ஏறிச் சென்னைக்குச் சென்றேன். நண்பர் விஜயசாகரின் வீட்டில் ஆயத்தமாகி நிகழ்ச்சிக்குச் சரியான நேரத்தில் சென்றடைந்தேன்.
எங்கே, சர்ச்சைக்குரிய விவாதங்கள் நிறைந்த ஒரு பரபரப்பு நிகழ்ச்சியாக அமைந்துவிடுமோ, என்கிற அச்சம் இருந்தது. ஆனால், ஆன்டனியும் கோபிநாத்தும் எல்லா சர்ச்சைகளையும் விவாதங்களையும் தவிர்ப்பதில் கவனமாக இருந்தது திருப்தியளித்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் புதியவன் எனினும், பேசுவதற்கு ஓரளவு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் பேசவேண்டியதெல்லாம் பேசிவிடவும் முடியவில்லை.
நிகழ்ச்சி ஒளிபரப்பான பின், ‘உழவுபற்றி ஏதாவது பேசுவீங்கன்னு நினைச்சேன்,’ என்று விவசாய நண்பர் குறைபட்டுக்கொண்டார். ‘நீங்க எப்பவும் செய்வது போல காந்தியையும் குறளையும் இணைத்துப் பேசியிருக்கலாமே,’ என்று காந்திய அன்பர்கள் ஆதங்கப்பட்டனர்.
5-6 மணிநேரம் பதிவு செய்ததை ஒன்றரை மணிநேரத்துக்குள் திறம்பட அடக்கியிருந்தார்கள். அறம்பற்றி நான் பேசியது எடிட்டிங்கில் வெட்டுப்படாமல், முழுமையாகக் காட்டியிருக்கலாம் என்பது மட்டுமே என் தரப்புக் குறைபடல்.
திருக்குறள் அறத்தை அடிப்படையாகக் கொண்ட நூலெனினும், ஓர் அறநூல் மட்டுமே அன்று; இலக்கிய நயமும் கவித்துவ எழுச்சியும் கொண்ட ஆக்கம் என்று பேசினேன். திருக்குறளில் கவனிக்கப்படாமல் இருக்கும் நகைச்சுவை உணர்வு பற்றியும் கோடிட்டுக்காட்டினேன். அப்போது ‘செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்’ என்று நான் கூறிய குறள் ஒளிபரப்பில் இடம்பெற்றது. ‘இரவு’ அதிகாரம் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். மிகச்சுருக்கமாகப் பேசியதால் அது இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன். இந்தப் பதிவையே அதைக் குறித்து விரிவாக எழுதும் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறேன். அந்த நிகழ்ச்சிப் படமாக்கலின் இடைவேளையில் கூட இரண்டு நண்பர்கள் திருக்குறளின் முரண்கள் பற்றிப் உரையாடிக்கொண்டிருக்கும் போது, இரவச்சத்தில் இரப்பதை இகழும் வள்ளுவர் இரவு அதிகாரத்தில் புகழ்கிறாரே என்று பேசக்கேட்டேன். இரவு அதிகாரத்துக்கான மரபான உரைகளில் நேரடிப் பொருளையே எடுத்துள்ளனர். பரிமேலழகர், “இனி , ‘மானந் தீரா இரவு இரவாமையோடு ஒத்தலின் அதனானும் வீடெய்தற்பயத்ததாய உடம்பு ஓம்பப்படும் ,’ என்னும் அறநூல் வழக்குப்பற்றி , மேல் எய்திய துவரத் துறத்தல் விலக்குதற் பொருட்டு இரவு கூறுகின்றார்” என்று எழுதுகிறார். பரிமேலழகர் தொடர்ந்து இப்படியான உரையையே இரவு அதிகாரத்தின் எல்லாக் குறள்களுக்கும் எழுதுகிறார். மணக்குடவர் உரையிலும் பெரிய வேறுபாடில்லை. நான் படித்த சில நவீன உரைகள் இவர்களை அடியொற்றியே உள்ளன.
எனது வாசிப்பில், இரத்தலை வள்ளுவர் நியாயப்படுத்துவதாகக் காணவில்லை; இரவச்சம் எழுதிய ஒருவர் அப்படிச்செய்வது எப்படிச் சாத்தியம்? இரவு அதிகாரத்தில் ஓர் அற்புதமான அங்கதம் மிளிர்வதாய் உணர்கிறேன். வள்ளுவர் நம்மோடு விளையாடும் விளையாட்டாகவே அந்த அதிகாரத்தை நான் கருதுகிறேன்.
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
[அ. இரந்து கேட்கத் தக்கவரைக் கண்டால் அவரிடம் இரக்கவேண்டும்; அவர் இல்லையென்று ஒளிப்பாரானால் அது அவர்க்குப் பழி; தமக்குப் பழி அன்று. (மு.வ. உரை)
ஆ. கொடுக்கும் நிலையில இருக்கிற ஒருத்தன் கிடைச்சா, அவன்கிட்ட கேட்றணும். கொடுக்க முடியலைனா அவனுக்குத்தான் அவமானம்; நமக்கு அதிலென்ன இழிவு (என் ‘உரை’)]
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
[அ.இரந்து கேட்ட பொருள்கள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
ஆ. எதையாவது யாராவதுகிட்டக் கேட்டு நோகாமல் கிடைத்தால், அதன் சுகமே அலாதியானது.]
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்பும் ஓர்ஏஎர் உடைத்து.
[அ. ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
ஆ. இருப்பதை ஒளித்துவைக்காத, கடமை தவறாத பெரிய மனுஷனத் தேடி அவங்கிட்டக் கேட்பதிலையும் ஒரு அழகு இருக்குப்பா]
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு.
[அ. உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவனிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே போன்ற சிறப்புடையது.
ஆ. இருப்பதைக் கனவுலகூட மறைக்காத புண்ணியவான்கிட்ட எதையாவது கேட்பதும் மற்றவங்களுக்கு அள்ளிக்கொடுக்கிறதுக்குச் சமம்தான்]
இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின், மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
[அ.இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளேயே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
ஆ. திட்டாம தர்மம் பண்ற மவராசனைப் பார்த்தா, ஒரே குஷியா இருக்குங்க]
இரப்பாரை இல்லாயின், ஈர்ங்கண் மாஞாலம்
மரப்பாவை சென்று வந்தற்று.
[அ. இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
ஆ. தர்மம் பண்ணுங்க சாமின்னு கேட்கிறதுக்கு ஆளில்லைனா, இந்த உலகம் பொம்மை உலகம் மாதிரி உயிர்ப்பே இல்லாமப் போயிடுமே]
ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை?
[அ. பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவரிடத்தில் என்ன புகழ் உண்டாகும்?
ஆ. கேட்பதற்கு யாருமில்லைனா, கொடுக்கிறவனுக்குப் பெருமை சேர்க்க என்ன இருக்கு? அதனாலதான் நாங்க பெரிய மனசு பண்ணி எதையாவது கேட்கிறோம்.]
மேற்கண்ட குறட்பாக்களை, வள்ளுவரின் நேரடிக் கூற்றாகப் பார்க்காமல், இரக்கின்ற ஒருவன் தன் செயலை நியாயப்படுத்தச்சொல்லும் தர்க்கங்களைப் பகடி செய்வதாக வாசித்தால், நாம் பெறும் அர்த்தங்களும் அனுபவங்களும் வேறாகின்றன. வள்ளுவர் தனது குரலில் அல்லாது, கவிமாந்தரின் குரலிலும் பேசும் இலக்கிய உத்தியை வேறு பல குறட்பாக்களிலும் காணலாம்.
திருக்குறளில் நகைச்சுவை பற்றி மேலும் கூர்ந்து கவனித்து எழுதவேண்டும்.
நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டது குறித்து என்னைவிட நண்பர்களுக்கு மகிழ்ச்சி என்பதை முகநூல் வாழ்த்துகள் மூலம் காணமுடிந்தது. நன்றி. நண்பர்களின் மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன்.
———————————
இணையத்தில் காண:
Chapter 18 – Episode 451:
http://www.hotstar.com/#!/neeya-naana-1584-s