பரிசோதனை

ஜனவரி 21, 2011

அலுவலக நுழைவாயிலில்

தினமும் காருக்குப் பரிசோதனை.

முனையில் கண்ணாடி பதித்த

நீளஇரும்புக்கம்பியை அடியிலிட்டும்

கார்-டிக்கியைத் திறந்தும்.

வெடிகுண்டுகள் வேறெங்கும்

வைக்கப்படுவதில்லை போலும்.

 

நிலம் பிளந்து விழுங்கிய

சில லட்சம்பேர்;

அலைமலைகள் அழைத்துச்

சென்ற ஆயிரங்கள்;

நெரிசலில் நொருங்கிய

நாளங்கள் உடல்கள் ;

பெருநெருப்புக் கருக்கிய

கசங்கிய சீருடைகள்,

சீருடைக்குள் சிறார்கள்;

சீறிப்பாயும் எந்திரஎருமைகள்,

எங்கேயும் படர்ந்திருக்கும் எமன்;

கம்பிமுனையில் பதித்த கண்ணாடிக்குள்

எதன் பிம்பம் தெரிந்ததோ?

திறந்த கார்-டிக்கிக்குள்

எதன் வரவைக் கண்டானோ

அந்தக் காவலாளி?

 

வெடிகுண்டு கிடைக்காத ஏமாற்றத்தில்

போகலாம் என்று கையசைத்தான்.

தினமும்.


தஞ்சைப் பயணம்

ஜனவரி 12, 2011

எனது தஞ்சைப் பயணம் குறித்த ஆங்கிலப் பதிவு இங்கே.

இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு உந்துதலாகவும், உறுதுணையாகவும் இருந்தது,  எழுத்தாளர் ஜெயமோகனின் பயணக் கட்டுரைகள். இது குறித்து அவருக்கு நான் எழுதிய கடிதமும், அவரது பதிலும் இங்கே.

———————————————-

அன்புள்ள ஜெயமோகன்,

அண்மையில் தஞ்சைப் பயணம் சென்றிருந்தேன். உங்கள் தஞ்சைப் பயணம் குறித்த கட்டுரைகளால் உந்தப்பட்டது ஒரு முக்கிய காரணம். நீங்கள் சென்ற இடங்கள் அனைத்திற்கும் செல்ல இயலவில்லை எனினும், நாங்கள் சென்றவை அனைத்தும் நீங்கள் சுட்டிக்காட்டியவை. குடுமியான்மலை, தாராசுரம், கொடும்பாளூர் ஆகிய அற்புதமான இடங்களுக்குச் செல்ல ஆர்வமூட்டியதற்கு என் நன்றிகள்.

மூன்று ஆண்டுகளாய் உங்கள் பதிவுகளைத் தொடர்வதன் விளைவாய், இந்த வருடம் நான் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிற பல புத்தகங்களும், நீங்கள் அடையாளம் காட்டியவை…நாஞ்சில் நாடன், ஆ.மாதவன், சுகுமாரன், வண்ணநிலவன் போன்றோர் எழுதியவை. சக எழுத்தாளர்கள் மீதும் வெளிச்சம் போட்டுக்காட்டுவது, ஓர் அரிய பங்களிப்பு.

தஞ்சைப் பயணம் குறித்த என் ஆங்கிலப்பதிவு இங்கே. தமிழறியாத என் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் எழுதியது.

நான் ‘திசைகளின் நடுவே’ குறித்து எழுதிய கடிதம் உங்கள் கவனித்தில் பட்டதா எனத்தெரியவில்லை. எனவே அந்த மடலின் தொடர்ச்சியாகவே இதையும் இணைத்திருக்கிறேன்.

அன்புடன்
த.கண்ணன்

https://urakkacholven.wordpress.com/

அன்புள்ள கண்ணன்

பதிவைக் கண்டேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

பொதுவாக நாம் நம்முடைய பண்பாட்டு மூலங்களைப்பற்றி இன்னும் விரிவாக தொடர்ச்சியாகப் பேசுவது அவசியம் என்று நினைக்கிறேன். தமிழின் சொத்துக்கள் எனச் சொல்லப்படும் பல கோயில்கள் பற்றி மிகக்குறைவாகவே பொதுவெளியில் பேசப்பட்டிருக்கின்றன

ஜெ

——————————————–

 


2010ல் படித்தவை

ஜனவரி 1, 2011

இது 2010ல் நான் படித்து, என் மனதில் நின்ற புத்தகங்களின் பட்டியல்.

2010ன் சிறந்த புத்தகங்கள் என்றெல்லாம் என்னால் பட்டியலிடமுடியாது. அந்த அளவிற்கு, நான் இப்போது அதிகம் படிப்பவனல்ல. வந்தவுடன் ஒரு புத்தகத்தைப் படித்துவிடவேண்டும் என்ற முனைப்புமில்லை. அதன் தேவையும் எனக்குப் புரிவதில்லை. இதுவரை வந்த அற்புதமான நூல்கள் எத்தனையோ இன்னும் படிக்கப்படாமல் இருக்கும்போது, இப்போது வந்தவை இன்னும் சில காலம் காத்திருக்கலாம் என்ற தள்ளிப்போடும் மனப்பான்மையாகவும் இருக்கலாம்.

1. புதுமைப்பித்தன் சிறுகதைகள்

பலகதைகளை மறுவாசிப்பு செய்தேன். சில புதிய கதைகள். காஞ்சனை, சாபவிமோசனம், ஒரு நாள் கழிந்தது, செல்லம்மாள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், பால்வண்ணம் பிள்ளை, மனித யந்திரம், மகாமசானம் ஆகிய கதைகள் மனதில் அப்பிக்கொண்டன.  James Joyceன் Dubliners படித்த கையோடு, புதுமைப் பித்தன் படித்தேன். இருவருக்கும் ஒற்றுமைகள் அதிகம் இல்லையெனினும், ஜாய்ஸூக்கு எந்த விதத்திலும் குறைந்தவரில்லை என்றுதான் தோன்றியது.  நகைச்சுவையும், நக்கலும் இழையோட வறுமையை, அச்சத்தை, அன்பை, இயலாமையை, பிடிவாதத்தை, மனிதாபிமானத்தை அழகாய் வெளிப்படுத்தும் பல கதைகள்.

2. ஜெயகாந்தன் சிறுகதைகள்

அப்பா வாங்கி வைத்திருந்த ஜெயகாந்தனின் சிறுகதைகள் தொகுப்புகளிலிருந்து சிலவற்றையும் படித்தேன். எங்கோ யாரோ யாருக்காகவோ , மெளனம் ஒரு பாஷை, ரிஷிபத்தினி, ரிஷிகுமாரன், இன்னும் ஒரு வரம்  போன்ற கதைகள்.

‘எங்கோ யாரோ யாருக்காகவோ’ பள்ளிப்பருவத்தில் படித்தது.  விபச்சாரியின் கதை என்பதாலோ என்னவோ அப்போது பெரிதாகக் கவரவில்லை.  இப்போது படிக்கும் போது புதிய பொலிவோடு தெரிகிறது. அதில் உள்ள முரண்பாடுகளும், மனச்சிக்கல்களும், வேஷங்களும், நியாயங்களும் புரிகறது.

கடைசி மூன்று கதைகளும் ஒரே கதையின் தொடர்ச்சியாக உள்ளன. ஆனால் தனித்தனியாகவும் தனிச்சிறுகதைகளாக நிற்கன்றன என்பது ஒரு மாறுபட்ட முயற்சி. குமுதம் கதைகள் என்பதால் கொஞ்சம் எளிமைப்படுத்தப்பட்ட நடை. ஆனால் கனமான கரு. மற்றவர்களுக்காக வாழ்வதே பெரிய தவம் என்கிறது.

3. திசைகளின் நடுவே – ஜெயமோகன்

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் சில ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். நவீன தமிழிலக்கியத்தில் ஒரு மிகப்பெரிய ஆக்கம்தான். அதன்பிறகு அவரது blog தொடர்ந்து படித்துவந்தாலும், இப்போதுதான் புத்தக வடிவில் மறுபடி படிக்கிறேன். இத்தொகுப்பில் உள்ள ஆரம்பகாலக் கதைகளில் அவரது வேர்கள் வெளிப்படுகின்றன. இவை பிறகு பெரும் மரங்களாய் விரியக்கூடும் சாத்தியங்கள் அப்போது படித்தவர்களுக்கும் தென்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. மாடன் மோட்சத்திலும், திசைகளின் நடுவேயும், படுகையிலும் பல விஷ்ணுபுரத்தின் வாயில்கள் தெரிகின்றன. பல்லக்கு, வலை, போதி, ஜகன்மித்யை, சவுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தைத் தொடுகின்றன.

இறுதியில் லங்காதகனம் என்னை உலுக்கியது. நதி முதலான மற்றவை அத்தனையும் தகனம் செய்து மனதில் தங்கிவிட்டது. அனந்தன் ஆசான் மட்டுமல்ல, ஜெயமோகனும் இதில் பூரண வேஷம் பூண்டுதான் கலையின் உச்சத்தில் நிற்கிறார்.

4. தமிழ் தாத்தா – கி.வ.ஜகந்நாதன்

உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாறு. எளிய நடை. இது ஒரு அறிமுக நூலாகத்தான் இருக்கிறது. சுவடிகள் தேடிப் பதிப்பிப்பதற்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்த அன்றைய மனிதர்களின் மீது பெரும் மதிப்பையும், வியப்பையும், நன்றியையும் உருவாக்குகிறது.

உ.வே.சா.வின் ‘என் சரிதம்’ படிக்கும் ஆவலைத்தூண்டியது…இணையத்தில் படிக்கத்துவங்கிவிட்டேன்.

5. Metamorphosis – Franz Kafka

காப்காவின் The Trial முன்பே படித்திருக்கிறேன். பெரிய பாதிப்பு ஏற்படுத்தவில்லை. Metamorphosis அதே வகை எழுத்துதான் என்றாலும், இம்முறை பிடித்திருந்தது. எல்லா எழுத்துகளுமே எந்த மனநிலையில், எந்த மனமுதிர்ச்சியில் படிக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் பிடிப்பதும் பிடிக்காததும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் இந்த வருடம் நான் மறுபடி மறுபடி உணர்ந்தது…இளமையில் மிக அதிகமாகப் படித்துவிட்டால், புத்தகங்களின் மறுவாசிப்பு அவசியம்.

திடீரென ஏதோ பூச்சியாகிவிட்ட கதாநாயகனைக் குறியீடாகக் கொண்டு பல்வேறு தளங்களைத் தொட்டுச் செல்கிறார் காப்கா. நம்மிலிருந்து மாறுபட்டவர்களை நாம் அந்த பூச்சியைவிடக் கீழாகத்தான் நடத்துகிறோம்.

6. Dubliners – James Joyce

இங்கு விரிவாக எழுதியுள்ளேன். ஜாய்ஸ் மீதிருந்த பயத்தை விலக்கி ஆர்வத்தைத் தூண்டியது. விளைவாய் A Portrait of the artist as a Young Man படித்துக்கொண்டிருக்கிறேன்.

7. Alice in the Wonderland

பதின்பருவத்தில் படிக்கத்துவங்கி, ஏதோ fairy tale என்று ஒதுக்கியது. இப்போது மறுபடி படித்தபோது அதன் அபத்தங்களை ரசிக்க முடிகிறது. Catch-22 மாதிரி அழகான அபத்த இலக்கிய வகை. அநியாயத்திற்கு குழந்தைகள் புத்தகமாக்கிக் கொடுமை செய்கிறார்கள்.

8. ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா

அபத்த இலக்கியம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது – ஸீரோ டிகிரி இந்த வருடம் எனக்கு நிகழ்ந்த விபத்து.  எந்த வகை இலக்கியம் என்பதைவிட, இது எந்த வகையில் இலக்கியம் என்ற கேள்விதான் எழுந்தது.

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தானோ என்னவோ அவருக்கு இந்த வருட சாகித்ய அகாதமி வருது வழங்கிவிட்டார்கள் 🙂 வாழ்த்துகள்.  [2001ல் V.S.Naipaulன் A House for Mr.Biswas படித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு நோபல் பரிசு வழங்கினார்கள். எழுத்தாளர்கள் கவனிக்கவும்.] நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராஜா சிறுகதை இணையத்தில் படித்தது – அற்புதம். அவரது சொல்வனம் கட்டுரைகள் தொடர்ந்து படிப்பதால், அவர் சுட்டிக்காட்டிய  ‘திருக்குறள் உரைக்கொத்து’ என்ற நூலும் வாங்க முயன்று பொருளதிகாரம் மட்டும்தான் கிடைத்தது.

சென்ற மாதம் Amazon Kindle வாங்கினேன். பிரமிக்கவைக்கும் தொழில்நுட்பம். அதற்கு அடுத்தநாள் பெங்களூர் புத்தகக்கண்காட்சியில் பல புத்தங்களை அள்ளிவந்தேன். தமிழ் புத்தகங்கள் படிக்கும் ஆர்வமே இப்போது மேலோங்கி நிற்பதால், கிண்டில் படிக்கப்படாமலே கிடப்பில் கிடக்கிறது.

சென்ற வாரம் தஞ்சாவூர் பயணித்தின் போது சரஸ்வதி மகால் நூலகப் பதிப்புகளான தனிப்பாடல் திரட்டு (2 தொகுதி), தொல்காப்பிய உரைக்கொத்து ஆகியவை வாங்கினேன்.

சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், வண்ணநிலவன், ஆ.மாதவன், நீல பத்மநாபன், தி.ஜானகிராமன் ஆகியோர் புத்தகங்களும் இவ்வாண்டு வாங்கிப் படிக்கப்படக் காத்திருக்கின்றன. சுந்தர ராமசாமியின் செம்மீன் மொழிபெயர்ப்பும் வாங்கினேன். அகநானூறு படிக்க எடுத்து வைத்திருக்கும் முக்கிய பழந்தமிழ் இலக்கிய நூல். நண்பருக்கப் பரிசளிக்க Flipkartல் வாங்கிப்பின் தராமல் நானே ஆசைபற்றி வைத்துக்கொண்ட A.K.Ramanujanன் மொழியாக்கம் – Poems Of Love And War: From The Eight Anthologies And The Ten Long Poems Of Classical Tamil.

ஆக, எப்போதும் போல், படித்ததைவிட படிக்கவேண்டும் என்று வாங்கியவையே அதிகம் (வாங்கிய ஆங்கில நூல்களும் பல). வாங்க நினைத்திருப்பவை இன்னும் அதிகம். கிண்டிலில் Project Gutenberg தளத்திலிருந்து சேர்த்துவிட்ட க்ளாசிக்ஸ் நூற்றுக்கும் மேல்.

2010ல் நானும் சில கவிதைகள் எழுத முயன்றுள்ளேன். Facebook வெறும் அரட்டைத்தளமாக இல்லாமல், ஓர் இலக்கிய அரங்கமாகவும் மாற்றமுடியும் என்பது புரிந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாய் கடந்த சில மாதங்களாக நிறைவாய்ச் செய்வது திருக்குறள் மொழிபெயர்ப்பு. அதற்காகத் தேடித்தேடிப் படிக்கிற திருக்குறள் நூல்கள். குறிப்பாய் பரிமேலழகர் உரை, வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சார்யரின் விளக்கவுரையுடன்.

இவ்வாண்டு புதிதாய்க் கண்டுகொண்ட மிக முக்கியமான வளைதளங்கள்:

1. http://azhiyasudargal.blogspot.com நவீனத் தமிழ் இலக்கியங்களின் பெட்டகம்.

2. http://dsal.uchicago.edu/dictionaries/winslow/ 1862ல் வெளிவந்த தமிழ்-ஆங்கில அகராதி

3. http://www.tamilvu.org/library/libindex.htm பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் உள்ளன. தொல்காப்பியம், திருக்குறள் உரைக்கொத்துக்கள் உட்பட. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியும் உள்ளது.

4. http://nanjilnadan.wordpress.com/ நாஞ்சில் நாடன் படைப்புகள்

5. http://vannathasan.wordpress.com/ வண்ணதாசன் படைப்புகள்

6.  ஜெயமோகன், ராமகிருஷ்ணன் தளங்கள் மூன்றாண்டுகளாய்த் தொடர்ந்துவருவன. இவ்வாண்டும் அதிகம் படித்தவை.

இவ்வாண்டு நான் படித்ததில் பிடித்த கவிதைகள்:

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்…
இதெல்லாம் ஒரு காரணமா?

– முகுந்த் நாகராஜன்.

நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்காக கட்டிக் கொண்டது
வானம் இறங்க விரித்த
தன் மொட்டை மாடிக்களத்தை.

– தேவதேவன்

காவியம்.

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

– பிரமிள்