திருக்குறள் (ஆங்கிலத்தில்) – Facebook, Twitter தலைமுறைக்கு

திருக்குறளில் இருந்து நிறையப் பெற்றிருக்கிறேன். வாழ்க்கை குறித்த என் நோக்கைச் செதுக்கிச் செம்மைப்படுத்துவதில் திருக்குறளின் பங்கு மிகப்பெரியது. என்னுடைய ஆங்கிலப் பேச்சுகளையும் திருக்குறள் எப்போதும் மெருகேற்றியிருக்கிறது. ஒவ்வொரு குறளும், தமிழ்  தெரியாதவர்களிடம் ஓர் ஆர்வத்தை உருவாக்குவதைக் கண்டிருக்கிறேன்.

ஆனாலும், திருக்குறளின் நுனியைக்கூட முழுவதுமாய் நான் அளக்கவில்லை என்பதை அறிவேன். எனவே, திருக்குறளைக் கற்று, கற்கின்ற போதே, மற்றவர்கள் கவனித்திற்கும் எடுத்தச் செல்ல ஒரு சிறு முயற்சியை சில நாட்களாய் முன்னெடுத்திருக்கிறேன். Twitter, Facebook போன்ற தளங்களில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துவருகிறேன். ஏற்கனவே வேறு ஆங்கில உரைகள் இருந்தாலும், தற்கால மொழிநடையில், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் பயன்படித்தி, குறளை என் நோக்கில் இங்கு தருகிறேன்.

இதற்காக குறளையும், பல உரைகளையும் (குறிப்பாய் பரிமேலழகர்) படிக்கும் போது ஒன்று தெளிவாய்த் தெரிகிறது – கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது குறளளவு.

சில சமயம், நான் பார்த்த அனைத்து உரைகளோடும் ஒத்துப்போகாமல், ஆங்காங்கே, சில குறள்களுக்கு, என்நோக்கில் புது உரைதரும் வாய்ப்பும் இதன்மூலம் கிட்டியுள்ளது.

உதாரணம், இந்தக்குறள்:
தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது.
பரிமேலழகர் உரை
தம் மக்கள் அறிவுடைமை = தம் மக்களதறிவுடைமை;
மா நிலத்து மன் உயிர்க்கெல்லாம் தம்மின் இனிது = பெரிய நிலத்து மன்னாநின்ற உயிர்கட்கெல்லாம் தம்மினுமினிதாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஈண்டறிவென்றது இயல்பாகிய அறிவோடுகூடிய கல்வியறிவினை.
மன்னுயி ரென்றது ஈண்டறிவுடையார் மேனின்றது, அறிவுடைமை கண்டின்புறுதற்கு உரியார் அவராகலின்.
இதனால் தந்தையினும் அவையத்தா ருவப்பரென்பது கூறப்பட்டது.

இதற்கு எனது ஆங்கில வடிவம்: All living creatures on this earth feel prouder when their children are smarter than themselves.

மற்றொரு எடுத்துக்காட்டு இந்தக்குறள்:

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.

இதற்கு ஜெயமோகன், தன்னுடைய நவீன இலக்கியம் பற்றிய ஓர் இடுகையில், பல்வேறு சாத்தியங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த ஒரு குறளுக்கு மட்டும் எத்தனை வகையாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்று நோக்கினால் எம்ப்சன் என்ன சொல்கிரார் என்று புரியும். ‘பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்’ இவ்வளவுதான் குறள். இது முற்பிறப்பின் வினைப்பயனைச் சொல்வது என்பது பரிமேலழகர் கூற்று. சமண ஊழ்வினையைச் சொல்கிறது என்பது நச்சினார்க்கினியர் உரை

இப்போதுள்ள இதுவே அறத்தின் எப்போதுமுள்ள வழி என்று நினைக்காதே வண்டியும் ஓர்நாள் ஓடத்தில் ஏறும் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார் என்றே நான் வாசிக்கிறேன். இன்னும் பல வாசிப்புகளுக்கு இதிலே இடமுள்ளது. இன்னும் இன்னும் சிந்திக்கச் செய்கிரது இந்தக்குறள்.

இக்குறளை நான் புரிந்திருந்திருந்தது இப்படி : One man lifting another on a palanquin, can’t be justified as the fruit of any prior moral deeds.

என்னுடைய கோணம் இம்மூன்றினின்றும் மாறுபட்டதாய் இருந்ததை, ஆச்சர்யமாய் எண்ணி, குறளுக்கு இன்னும் எத்தனை உரை வேண்டுமானாலும் எழுதலாம் என்று என் மொழிமாற்ற முயற்சியை நியாயப்படுத்திக்கொள்கிறேன்.

இரண்டடிக் குறள், Twitter-ன் 140 எழுத்துகளுக்குள் ஓரளவு எளிதாகவே அடங்கிவிடுகிறது. இன்றைய தலைமுறைக்கு ஏற்ற வடிவத்தில் குறளைக் கொண்டு சேர்ப்பதிற்கு Twitter, Facebook உருவாக்கித் தருகிற தளங்கள் பெரிதும் பயன்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னும் அதிக வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்லும்போது, பல குறள்களை மையமாக்கி, ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நிகழ்த்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம். கைபேசி மூலம் எழுதவும், படிக்கவும் முடிகிறது என்பது கூடுதல் வசதி.

வள்ளுவன் மூலமாய் தமிழனுக்கு வான்புகழ் இருப்பதாய்ப் பாடுவதென்னவோ பாடிவிட்டோம். ஆனால் குறளையும், மற்ற தமிழ் இலக்கியங்களையும் உலகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் இதுவரை நாம் பெரும் வெற்றி பெறவில்லை என்பதும், நமக்குள்ளே பழம்பெருமை பேசுவதில் பயனில்லை என்பதும் நாமறியாததல்ல. வெளிநாட்டார் இதை வணக்கம் செய்து, இறவாத புகழோடு குறள் வாழ என்னாலான சிறு முயற்சி இது. இதன்மூலம் குறளுக்கு நான் கொடுப்பதைவிட எடுப்பதே இன்னமும்அதிகமாய் இருக்கிறது.

மேலும் படிக்க, பின்தொடர : Twitter, Facebook

3 Responses to திருக்குறள் (ஆங்கிலத்தில்) – Facebook, Twitter தலைமுறைக்கு

  1. amy சொல்கிறார்:

    நண்பரே தமிழ் மீது இருக்கும் உங்கள் பற்று வியப்புக்குரியது. திருக்குறள் பற்றி நீங்கள் எழுதிய விளக்கங்கள் கண்டேன். இவை மேலும் பலரை சென்று அடைய திருகுறளுகென ஒரு வலைத்தளம் http://www.kurals.com இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு உள்ளது. அதில் உங்கள் கருத்துகள் உரைகள் பதிவு செய்யலாமே….

  2. […] இக்குறளுக்கு Facebook பக்கத்தில் என் மொழிபெயர்ப்பு: […]

  3. […] மேலாய் திருக்குறள் மொழிபெயர்ப்பு. அதற்காகத் தேடித்தேடிப் படிக்கிற […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: