ஜகந்நாதன் – ஒரு காந்தியப் போராளிக்கு அஞ்சலி

தமிழகத்தின் முக்கியமான காந்தியப் போராளிகளில் ஒருவரான ஜகந்நாதன் இன்று மரணமடைந்த செய்தி படித்தேன். மனைவி கிருஷ்ணம்மாள் ஜகந்நாதனோடு இணைந்து, பல இயக்கங்களை முன்னின்று நடத்தியவர்.

ஐந்திணை விழாவின் போது கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் அம்மாவைச் சந்தித்தேன். தனியே உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த 88 வயதிலும், வாரத்தில் பாதியை நாகப்பட்டினத்தில் சமூகப் பணிகளுக்காகவும், மீதியை செங்கல்பட்டில் உடல்நலமற்று இருந்த ஜகந்நாதன் ஐயாவைப் பார்த்துக் கொள்ளவும் பயன்படுத்திவந்தார். அவரைச் சந்தித்த எல்லார் மீதும் அவரின் அன்பின் குளுமை பொழிந்தது. இறால் பண்ணைகளை முதலில் பார்த்தபோது, ஜகந்நாதன் ஐயா ‘இதற்காகவா நாங்கள் பிரிட்டிஷ் சிறைகளில் புழுத்துப்போன உணவை உண்டோம்’ என்று மீண்டும் சிறைசெல்லத் துணிந்துவிட்டதைப் பற்றிக் கூறியபோது மனம் நெகிழாதவர்களே அந்த அறையில் இருந்திருக்கமுடியாது. (நான் அப்போது எழுதிய பதிவு இங்கே.)

பிறிதொருமுறை அவரைச் சந்திக்கவிரும்பி, அலைபேசியில் பேசியபோதும், என்னை நினைவு படுத்திக்கொள்ள முடியாவிட்டாலும், அதே அன்பு மிதந்துவந்தது. ஐயாவின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு காந்திகிராம் சென்றுவிட்டதாகக் கூறினார். ஜனவரி முடிந்தபிறகு, அவர் உடல்நிலை தேறியபின் பேசுவோம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

இந்த அபூர்வ தம்பதியரின் பெரும் பங்களிப்புகள் நம்மில் பலருக்கும் தெரியாமலே உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மாணவர்களிடம் அவர்களின் கதையைப் பகிர்ந்து வருகிறேன்.

இந்தப் பேரிழப்பிலிருந்து அம்மா மீண்டு வரவேண்டும்.

1 Responses to ஜகந்நாதன் – ஒரு காந்தியப் போராளிக்கு அஞ்சலி

  1. சங்கர இராமசாமி சொல்கிறார்:

    சர்வோதயத் தலைவர் சங்கரலிங்கம் ஜகந்நாதன் குறித்த கட்டுரை தினசரிகளில் கூட இவ்வாறு வரவில்லை. அவரது படம் கணினியில் கிடைக்கவில்லை. இருவரும் சேர்ந்த படமும், தகவல்களும் தங்கள் வலைப்பதிவில் இருந்தன.எமது வலைப்பூவில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில செய்திகளுடன். நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக