அபிநவ் பிந்த்ரா – ஒரு நாயகன் உருவாகிறான்

இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் இந்த ஆண்டு ஒரு தங்கத்தோடு திரும்பும் என்று நேற்று வரை எவரும் கனவு கண்டிருந்தால் கூட எழுந்ததும், நல்ல நையாண்டிக் கனவு என்று நகைத்திருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் ஒரு வெண்கலமாவது கிட்டாதா என்ற ஏக்கம் எல்லாருக்கும் இருந்திருக்கும். லியாண்டர் பயஸ், எப்போதும் போல் உயிரைக் கொடுத்து விளையாடினால் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்திருப்போம். ராத்தோர் மறுபடியும் வெள்ளி பெறுவாரா என்று வினவியிருப்போம்.

இன்று, அந்தக் காண முடியாத கனவு நனவாகிவிட்டது. ஒரு புது நாயகன் உருவாகிவிட்டான். ‘யார் இந்த அபிநவ் பிந்த்ரா?’ – இன்று நூறு கோடி உதடுகள் உதிர்க்கும் கேள்வி இது.

இந்திய விளையாட்டு வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதைவிட அதி முக்கிய தினம் இது. ஆனந்தின், லியாண்டரின்  வெற்றிகளை விடவும் ஒரு படி மேலானது இந்த வெற்றி.

விளையாட்டு வெறும் விளையாட்டுதானே என்று நாம் ஒதுக்கிய தினங்கள் இன்றோடு முடியட்டும். விளையாட்டு வெற்றிகளின் மூலம் உலக நம் வரவை உரக்க அறிவிப்போம். விளையாட்டு வெறும் பொழுதுபோக்கல்ல, திறமையிருந்தால் அதுவே தொழிலாகலாம் என்று நம் குழந்தைகளுக்கு வழிகாட்டுவோம். அபிநவ் தன் வீட்டிலேயே உலகத்தரத்திற்கு ஒரு பயிற்சித் தளம் அமைத்திருந்த மாதிரி நாமும் வாய்ப்புகள் உருவாக்கித்தருவோம்.

ஓடி விளையாடு பாப்பா என்று பாடுவதை முதல் வகுப்போடு நிறுத்தாமல், தொடர்ந்து ஊக்கம் தருவோம். விளையாட்டு என்றால் மட்டை எடுத்து பந்தை அடிப்பது மட்டும்தான் அல்ல என்று நம் மக்களுக்குப் புரியவைப்போம்.

இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கிற இந்தப் புது நாயகனை வாழ்த்துவோம். பின் தொடர்வோம்.

(Abhinav Bindra : A Hero is born)

பின்னூட்டமொன்றை இடுக