ஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா?

இணையத்தின் மட்டற்ற சுதந்திர உணர்வுக்கு விகடன் சவால்விட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஆனந்த விகடனின் அவதூறு’ பதிப்பைப் பார்த்ததும் புரிந்தது. விகடன் இணையதளத்தில் (கட்டுரை முழுவதும் பதிவுசெய்யாமல் படிக்க முடியாது என்பதால்)   தலைப்பு மட்டும் தென்பட்டது; மிரட்டியது.

இது ஓர் ஆபத்தான அபத்தத்தின் உச்சம். எம்.ஜி.ஆர், சிவாஜி பற்றிய ஒரு சாதாரண அங்கதப்பதிப்பினைத் தாக்கித் தலைப்புச் செய்தியாக்குவதற்கு ஒரே உள்நோக்கம் தான் இருக்க முடியும் – ஜெயமோகனுக்கு எதிராய் எதிர்ப்பலை கிளப்பிக் குளிர்காய்ந்து, அதிகப் பிரதிகள் விற்கவேண்டும். இது ஜெயமோகனுக்கு மட்டும் எதிரான செயலில்லை, இணையத்தின் வலிமை உணர்ந்த வலியின் விளைவு. எழுத்தாளர்கள் இணையத்தின் மூலம் நேராய் மக்களைச் சென்றடையத் துவங்கிவிட்டால் பத்திரிக்கைகளின் தாக்கமும் தேவையும் குறைந்துவிடாதா?

இணையத்தில் யார்வேண்டுமானாலும், யாரைப்பற்றியும், எதுகுறித்தும் எதுவும் எழுதலாம். பத்திரிக்கைகளின் கட்டுப்பாடுகளுக்கும், வியாபர நிர்ப்பந்தங்களுக்கும் உட்படவேண்டிய கட்டாயமில்லை. தமக்குத் தேவையானதை வாசகர்கள் தேர்ந்தெடுத்துப் படித்துக்கொள்வார்கள். எழுத்தாளனும் வியாபர நோக்கங்களுக்கு விடுப்புகொடுத்துவிட்டுத் தன் ஆழ்மனதின் கதவுகளைக் கவலையில்லாமல் திறந்துவிட முடியும். பத்திரிக்கைகளில் செய்ய முடியாத பல்வேறு முயற்சிகளை, சோதனைகளைச் செய்துபார்க்க முடியும். இப்படி விளைந்ததுதான் ஜெயமோகனின் பதிப்பும். அதன் தரத்தைப் பற்றி நான் இங்கு அலசப் போவதில்லை. எம்.ஜி.ஆர், சிவாஜியைப் பிடிப்பதும் பிடிக்காததும் அவர் சொந்த விருப்பு. அவர்கள் பற்றி எழுதுவது அவர் உரிமை. இணையம் அளித்த சுதந்திரம். ஏற்பதும் நிராகரிப்பதும் வாசகன் உரிமை. 

அந்தப் பதிப்பை எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு நேர்ந்த இழிவாய்ச் சித்தரித்து, அளவுக்கதிகமான முக்கியத்துவமளித்து sensationalize செய்வது அரசாங்க அடக்குமுறையை விடவும் கீழ்த்தரமானது. வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அரசியல் இயக்கங்கள் ஏதேனும் வன்முறையில் இறங்கினால் விகடன் பொறுப்பேற்குமா? இத்தனை ஆண்டுகள் இவர்கள்தான் கருத்து சுதந்திரத்திற்காகக் கொடிபிடித்திருந்தவர்களா? நம்ப முடியவில்லை.

MF ஹூசைனுக்கும், சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லீமா நஸரீனுக்கும் மத வெறியர்களால், அரசியல் அடிப்படைவாதிகளால் விளைந்த இன்னல்களில் சிறுபகுதியேனும் ஜெயமோகனுக்கு விகடனால் விளைந்தால் அது விகடனுக்கு பெரும் இழுக்கு. பின் விகடனுக்கும் கொமேனிக்கும், டொகாடியாவுக்கும் என்ன வேறுபாடு? தலைவர்கள், கலைஞர்கள், கடவுள்கள், எவருமே விமர்சனங்களுக்கும் விகடத்துக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பது விகடனுக்குத் தெரியாதா?

பிற பதிப்புகளில், ஜெயமோகன் போன்ற தரமான இலக்கியவாதிகள் சிறுபத்திரிக்கைகளுக்குள் சிறைபட்டிருப்பதால் மக்களைச் சென்றடைவதில்லை என்று எழுதியிருக்கிறேன். இச்செயல் பிரபல இதழ்களிலிருந்து அவர்களை மேலும் அந்நியப்படுத்தும். இழப்பு தமிழ் மக்களுக்குத்தான்.

இதிலிருந்து விளையக்கூடிய ஒரே  நன்மை – மேலும் பல எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இணையத்தின் ஈர்ப்பும் சாத்தியங்களும் புரியும்.

6 Responses to ஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா?

  1. cvalex சொல்கிறார்:

    முற்றிலும் உடன்படுகிறேன்.

  2. anamikan சொல்கிறார்:

    விகடன் பரபரப்பாக எதையாவது வெளியிட்டால் அது ஒரு வியாபார தந்திரம்.
    ஜெயமோகனும் விளம்பரப் பிரியர்தான். நாளைக்கே அவர் விகடனில் எழுதலாம்.
    இதில் இல்லாதவற்றையெல்லாம் நீங்கள் கற்பனை செய்கிறீர்கள். ஜெயமோகன்
    எழுத்தினை விகடன் மூலம்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இல்லை.
    அவர் தளத்தினை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். முதலில் விகடன்
    என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படியுங்கள். ஜெயமோகன் அதற்கு எழுதியிருக்கும்
    எதிர்வினை அவர் அதை அரசியலாக்கி குளிர் காய விரும்புகிறார் என்பதைக்
    காட்டுகிறது.

  3. kannan சொல்கிறார்:

    anamikan – விகடன் கட்டுரையையும் படித்தேன்…ஜெயமோகனைக் கண்டித்து எழுதியதில் தவறில்லை. அது விகடனின் உரிமை. தலைப்புச் செய்தியாக்கிய விதம் பிடிக்கவில்லை. இதன் விளைவாய் நாளை நிச்சயம் நான்கு பேர் குறைந்தபட்சம் ஓர் ஊர்வலமாவது நடத்துவார்கள் என்பதை விகடன் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆருக்கு எதிராய் இத்தனை காட்டமாய் (நகைச்சுவை என்று அவர் கருதினாலும்கூட) விகடனிலோ குமுதத்திலோ எழுதியிருக்கத் துணிந்திருக்கமாட்டார். அதைப் பெரிதுபடுத்தி விகடன் பதிப்பித்தது இன்று தேசிய அளவில் நாம் அன்றாடம் காண்கிற ‘sensationalist journalism’தான்.

    இதனால் ஜெயமோகன் இன்னும் கொஞ்சம் வாசகர்கள் பெற்றாலும், எம்.ஜி.ஆர், பெரியார் பக்தர்களின் எதிர்ப்பை எண்ணிக் கொஞ்ச நாள் அஞ்சியே நடமாட வேண்டியிருக்கும் என்பது என் கணிப்பு. இதுவே விகடனின் கணிப்பாகவும் இருந்திருக்கும் என்பதே என் வருத்தம்.

    சிந்தித்துப் பார்க்கையில் ஜெயமோகனும் இணையத்தின் தாக்கத்தைக் குறைத்து எடைபோட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.

  4. […] ஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா? – கண்ண… […]

  5. ஜமாலன் சொல்கிறார்:

    நண்பருக்கு..

    இப்பிரச்சனை இறுதியில் விளம்பர யுத்திதான் என்பதை ஜெயமோகனின் மறுப்புகளில் புரிந்துகொள்ள முடிகிறது. ஜெயமோகன் குறித்து பல பதிவுகள் வந்துவிட்டது. உண்மையில் பிரச்சனை கருத்து சுதந்திரம் குறித்தது அல்ல. அரசியல் கட்சிகள் இதனை அரசிலாக்கலாம். ஆக்க வேண்டும் என்கிற விருப்பம் இருபுறமும் இருப்பதைப்போலவே இருக்கிறது. உண்மையில் இன்றைய அரசியல் கட்சிகள் ஆக்காது என்பதுதான் உண்மை. இந்த 2 ஐ-கான்களும் மறதியை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஜெயமோகன் அதனை ரீடடெய்ன செய்துள்ளார். அவ்வளவே. நீங்கள் கூறியிருப்பதைப் போல இணையத்தை அவரும்கூட குறைவாக மதிப்பிட்டுவிட்டார். இல்லாவிட்டால் இணையத்தில் வெளியிட்டுவிட்டு இதனை அவர்கள எடுத்துப் போட்டுவிட்டார்கள் என்று கூறுவது என்ன நியாயம்?

    அன்புடன்
    ஜமாலன்.

  6. இரத்தினவேலு சொல்கிறார்:

    அய்யா,
    ஆனந்தவிகடன் கொஞ்ச நாளாக எங்களூர் மொழியில் “பெரிய புடிங்கி” என்று நினத்துக்கொண்டு எழுது/வெளியிடு கிறது.
    திரு ஜயமோஹன் அவர்களும் சந்தர்ப்பவாதி தான். திரும்பவும் எங்களூர் மொழியில் “தானிக்கி தீனி சரியாயிந்தி.”

    இரத்தினவேலு 9840249988

பின்னூட்டமொன்றை இடுக