உள்ளங்கைக்குள் உதய சூரியன் மறைந்துபோகிறான்

பெப்ரவரி 20, 2009

மின்வெட்டை மறக்கப் போர்க்கொடி உயர்த்தி, இப்போது உள்ளங்கைக்குள் மறைந்து  போன உதய சூரியன்.

தம்மையும், தம்மக்களையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் புலிகள்.

பலியெடுக்கத் தயங்காத ஆதிக்க அரசு.

இந்தியாவின் இலங்கைக் கொள்கையை இன்னமும் நிர்ணயிக்கும் ராஜீவின் ஆவி.

இவற்றுக்கிடையில் வன்முறைக் கடலில் இன்னமும் தத்தளிக்கும் இலங்கைத் தமிழர்கள்.

நெருங்கும் இந்தியத் தேர்தல் தூரத்து நம்பிக்கை ஓடம்?


ஈழப்போர் – தமிழக அரசியவாதிகளின் போர்வை

அக்டோபர் 15, 2008

தமிழகத்தில் பிரச்சனைகள் வலுக்கிற போதெல்லாம், ஈழப்போர்வைக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள் நம் அரசியல் தலைவர்கள். ஈழப்போர் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் மூர்க்கமாய் நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால் நம் தலைவர்களுக்கு ஐந்தாண்டுக்கொருமுறை மட்டும் இந்தப் போர்வை தேவைப்படுகிறது. இந்து நாளிழதளில் குறிப்பிட்ட மாதிரி இது Tamil Chauvinism எல்லாமல்ல; அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல்.

தொடர் மின்வெட்டால் தமிழ்நாடே தவித்துக்கொண்டிருக்கும் போது, அதற்கான தீர்வு காணும் திறனும் அற்று, பிரச்சனைக்கான காரணங்களையேனும் தெளிவாக விளக்கும் துணிவுமற்று, மக்கள் கவனத்தை ஈழத்தின் பக்கம் திருப்புவது எதற்காக? இந்தத் தடங்கலை ஒரு வாய்ப்பாக மாற்ற முனையாமல், நம் அரசியல் தலைவர்களின் இந்த நடத்தை வெறும் திசைதிருப்பல் முயற்சியா, அல்லது, ஈழ மக்கள் மீது திடீரென எழுந்த இரக்கமா, அல்லது,  இக்கட்டில இருக்கும் ஒரு தீவிரவாத அமைப்பைக் காக்கும் முயற்சியா? உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு பொருளாதாரச்சரிவு இந்தியாவையும் நெருங்கிக்கொண்டிருக்கிற வேளையில், மத்திய அரசின் நெற்றியில் துப்பாக்கிவைப்பது மட்டமான, பொறுப்பற்ற அரசியல்.

விடுதலைப் புலிகள் தம் இரக்கமற்ற வன்முறையைக் கைவிடும்வரை ஒரு பயங்கரவாத இயக்கமாகத்தான் கருதப்படுவார்கள்; கருதப்படவேண்டும். சிங்கள அரசு வன்முறையை நிறுத்தட்டும், நாங்கள் நிறுத்துகிறோம் என்கிற பழைய வாதம், அகிம்சையின் வெற்றியை உலகுக்கு உணர்த்திய இந்த மண்ணில் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது; கூடாது.   நிலையான தீர்வு ஒருகாலும் தீவிரவாதத்தால் பெற முடியாது. 

பல்லாண்டுகால பயங்கரவாதம் சாதித்ததைவிட, ஒரு மாத அமைதிப்போர் காஷ்மீர் குறித்த இந்திய மக்களின் (நான் உட்பட)  எண்ணத்தைப் பெரிதும் மாற்றியதை அண்மையில் கண்டோம். ஈழத்தமிழர்கள் ஆயுதங்களையும், ஆயுதமேந்தத் தூண்டுகற இயக்கங்களையும் துறந்து, தீர்வுகளை அணுக வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஓர் அகிம்சை இயக்கத்திற்கு இந்திய அரசு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே செவிசாய்த்தே தீரும்.

அதுவரையில் ஈழப்போர், தமிழகத்தின் நெருக்கடி நேரங்களில்மட்டும் இங்கு மேலோட்டமாய் கவனிக்கப்படும். மத்திய அரசுக்குக் கலைஞர் விதித்திருக்கிற இரண்டு வார கெடு, அதற்குள் பருவமழை வந்து மின்வெட்டு நின்றுவிடும் என்கிற நம்பிக்கையில்தானோ?


பாரதி – ஆங்கிலத்தில்

அக்டோபர் 13, 2008

பாரதியின் உணர்ச்சி வேகத்தை ஆங்கிலத்தில் அடக்கி, வெளியுலகிற்கு வெளிச்சம் போடுவதில், என் சில முயற்சிகள்:

  1. நல்லதோர் வீணை
  2. தேடிச் சோறு நிதந்தின்று
  3. அஃகினிக் குஞ்சு

நல்லதோர் வீணை – ஆங்கிலத்தில் மீட்டினால்!

அக்டோபர் 7, 2008

தாகூரைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சிக்கும் போது தோன்றியது, ஏன் தாகூர் அளவிற்கு, பாரதி கவனிக்கப் படவில்லை? நல்ல மொழியாக்கம் இல்லை என்பதாலா? தாகூரின் கவிதையின் சாரத்தை ஆங்கிலத்தில் கண்டு என்னால் தமிழில் ஓரளவு தர முடியும்போது, பாரதியின் படைப்புகளையும் உலகுக்கு அறிமுகப்படுத்த இயலாதா?

தாகூருக்கு ஒரு W.B.Yeats, R.K.Narayanக்கு ஒரு Graham Greene மாதிரி பாரதிக்கு…?

இதோ என்னால் இயன்ற எளிய முயற்சி. இன்னும் வல்லமை மிக்கவர் கரங்களில் இந்த வீணை மேலும் அழகாய் மீட்டப்படக் கூடும்.


நான் கடவுள்! (கீதாஞ்சலி – 4)

அக்டோபர் 6, 2008

நான் பயணித்த பாதை நெடுந்தூரமானது! நெடுநாள் எடுத்தது!

காலையின் முதல் ஒளி துளித்த போது, என் தேரில் கிளம்பினேன். பல உலகங்களில் பயணித்தேன், பல கிரகங்களில், விண்மீன்களில் என் காலடி பதித்தேன்.

ஒரு நெடுந்தூரப் பயணம்தான் உன்னை உனக்கு மிகமிக அருகே அழைத்து வருவது! கடும் பயிற்சிதானே ஓர் எளிய ராகத்திற்கு உன்னை வழிநடத்திச்செல்கிறது?

ஒரு பயணி ஒவ்வொரு அந்நியக் கதவையும் தட்ட வேண்டியிருக்கிறது; அகிலமெங்கும், ஆகாயமெங்கும் அலைந்தபின் தான், இறுதியில், உள்ளிருக்கும் கோயிலை அடைய முடிகிறது.

என் விழிகள் வான்வெளியெங்கும் தேடியபின், இமைமூடினேன். பின் கூறினேன், ‘ஓ! இங்கே இருக்கிறாயா நீ!’

‘எங்கே?’ என்கிற கேள்வியும் கூச்சலும் ஆயிரம் கண்ணீர் ஓடைகளாய் உருகி உலகைச் சூழ்ந்தன, ‘நானே’ என்கிற உறுதி வெள்ளத்தில்!

 

- தாகூர் எழுதியதாய் நான் புரிந்து எழுதியது (my interpretation of a verse in Gitanjali)!


கீதாஞ்சலி – 3

அக்டோபர் 6, 2008

விடு! ஜபித்தலையும், ஓதுதலையும், ருத்ராட்சம் உருட்டுதலையும் விட்டுவிடு!

தனிமையில், கோயிலின் இருண்ட மூலையில், கதவுகளை அடைத்துக் கொண்டு, யாரை வணங்கிக் கொண்டிருக்கிறாய்?

திற விழி! உன் கடவுள் உன் முன்னே இல்லை என்பதை அறி!

எங்கே, அந்த உழவன் கடும் நிலத்தைப் பிளந்து உழுதுகொண்டிருக்கிறானோ, அங்கே இருக்கிறான் உன் கடவுள்.

எங்கே, அந்த ஏழை கற்களை உடைத்துச் சாலை அமைக்கிறானோ, அங்கே இருக்கிறான் உன் கடவுள்.

அவர்களோடு வெயிலில் காய்கிறான், மழையில் நனைகிறான்; அவனது உடை கிழிந்து, புழுதி படிந்துகிடக்கிறது.

உன் காவி உடைகளைக் களைந்து, அவனைப்போல் நீயும், புழுதியில் இறங்கி வா!

முக்தியா? மோட்சமா? எங்கே கிடைக்கும் அந்த மோட்சம்? நம் கடவுளே, ஆனந்தமாய் ஆக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான்; அதன் மூலம் நம்மோடு பிணைந்திருக்கிறான்!

உன் தவங்களைத் துறந்து வா! அந்தப் புனித நறுமலர்களை எறிந்து வா!
உன் உடைகள் கலைந்து, கிழிந்து, கறைபடிவதால் என்ன கேடு நிகழ்ந்துவிட முடியும்?
அவன் உழைக்கும் போது அவனை எதிர்கொள்! உன் நெற்றி வியர்வையில் அவனைக் கண்டுகொள்!
- தாகூர்
(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)
 
 

 

 


கீதாஞ்சலி -2

அக்டோபர் 6, 2008

எங்கே மனதில் அச்சமில்லையோ, தலை நிமிர்ந்துள்ளதோ,

எங்கே கலைச்செல்வங்கள் கட்டற்றுக் கிடக்கின்றனவோ,

எங்கே குறுகிய சுவர்களால் சமுதாயம் சிதைக்கப்படாமல் உள்ளதோ,

எங்கே வாய்மையின் ஆழத்திலிருந்து வார்த்தைகள் பிறக்கின்றனவோ,

எங்கே விடாமுயற்சி தன் கரங்களை முழுமையை நோக்கி நீட்டுகின்றதோ,

எங்கே பழம்பழக்கம் என்கிற பாழும் பாலைவனப்புழுதியில் காணாமற்போகாமல், தெள்ளிய நீரோடையான பகுத்தறிவு பாய்கிறதோ,

எங்கே விரிந்த சிந்தனையும், செயல்வேகமும் கொண்டு மனம் முன்னே நடத்தப்படுகிறதோ,

அங்கே, எந்தையே, அந்தச் சுதந்திர சொர்க்கத்தில், என் நாடு விழிக்கட்டும்.

- தாகூர்

(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)


கீதாஞ்சலி

அக்டோபர் 6, 2008

என் காதலா, எங்கே எல்லோருக்கும் பின்னே நிழலுக்குள் மறைந்து நிற்கிறாய்?

உன்னை வெறும் வெறுமையாய் நினைத்து, புழுதியில் தள்ளித் தாண்டிச் செல்கிறார்களே!

உனக்காக நான் கடைபரப்பிக் காத்திருக்கிறேன். எல்லோரும் ஒவ்வொன்றாய், உனக்கான, என் பூக்களை எடுத்துவிட்டார்கள்.

காலை கடந்துவிட்டது. மதியமும் தான். மாலையின் நிழலில் என் கண்கள் சொருகக் காத்திருக்கிறேன்.

கடந்து செல்கிறவர்கள் என்னைக்கண்டு புன்னகைத்து என்னை நாணத்தால் நிரப்புகிறார்கள். பிச்சைக்காரியைப் போல சேலையால் முகத்தை மறைத்து அமர்ந்துள்ளேன். என்னதான் வேண்டும் என்று கேட்கிறவர்களுக்கு, முகத்தைத் தாழ்த்தி, விடையுரைக்க மறுக்கிறேன்.

ஓ! எப்படிச் சொல்வேன்? உனக்காக நான் காத்திருக்கிறேன் என்பதை. எனைக்காண வருவேன் என நீ வாக்களித்திருப்பதை.

ஓ! எப்படிச் சொல்வேன்? உனக்கு வரதட்சனையாய் என் வறுமையை மட்டுமே வைத்திருக்கிறேன் என்பதை.

ஆ! என் இதயத்தின் ஆழங்களில் இந்தப் பெருமையை மறைவாய் அணைத்துக்கொள்கிறேன.

புல்வெளியில் அமர்ந்து உன் வருகையைக் கனவு காண்கிறேன். பொற்கொடி பறக்க, ஒளிவீசி, வரும் உன் தேர் கண்டு பிரமித்து வாய்பிளக்கிறார்கள். வெட்கத்தோடும், பெருமையோடும் படபடத்து நிற்கும் என்னைப் புழுதியிலிருந்து அள்ளி, அணைத்து, உன் அருகில் அமர்த்திக்கொள்கிறாய்.

ஆனால் நேரம் சறிந்துசெல்கிறது. ஆர்ப்பரிப்போடு நிறைய ஊர்வலங்கள் கடந்து செல்கின்றன.  உன் தேர் வரும் ஓசை இன்னும் செவிகளில் விழவில்லை.

நீ மட்டும்தான் அந்த நிழலுக்குள் மறைந்து நிற்பாயா? நான் மட்டும்தான், வீண் ஏக்கத்தால், இதயம் தேயக் கண்ணீரோடு காத்திருப்பேனா?

- தாகூர்

(என் மொழிபெயர்ப்பு – தாகூரின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து)


பாரதி – சில இணைப்புகள்

செப்டம்பர் 24, 2008

 Subramania Bharati’s Letters: a treasure trove

Early views of nationalist-poet Subramania Bharati

“Without social reform, our political reform is a dream, a myth, for social slaves can never understand political liberty.” - காந்தியும் பாரதியும் ஒரே தளத்தில்தான் சிந்தித்திருக்கிறார்கள்.

பாரதியின் மொத்த எண்ணங்களின் சாரம் இந்தக் கடிதத்தில்…உரைநடையிலும் கவிதையின் காரம் மாறாமல்:

“தம்பி – நான் ஏது செய்வேனடா

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாகயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது

தம்பி – உள்ளமே உலகம்


ஏறு 
ஏறு ஏறு  மேலே மேலே மேலே

நிற்கும் நிலையிலிருந்து கிழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களை கண்டு குடல் குலுங்கச் சிரி

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ 
பற. பற - மேலே மேலே மேலே
**

தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது  

தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க் என்றெழுது

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது

அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு. அதன்பெயர் தமிழ் ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது

ஆணும் பெண்ணும்  ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது

அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது

பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது

பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது

தொழில்கள், தொழில்கள் என்று கூவு

தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிரைப்பன் மேற்குலத்தான் என்று கூவு.

வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக

முயற்சி ஒங்குக. ஸங்கீதம், சிற்பம் யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கைநூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிந்திடுக என்று முழங்கு

சக்தி சக்தி சக்தி என்று பாடு “


கிரிக்கெட் பற்றிய காவியம்

செப்டம்பர் 2, 2008

C.L.R. James எழுதிய Beyond the Boundary படிக்க நேர்ந்தது. விளையாட்டினைக் குறித்து இவ்வளவு அழகாக, ஆழமாக எழுத முடியுமா என்ற வியப்பு எழுந்தது. ஏனோ, தமிழில் இத்தகைய முயற்சிகள் நடைபெறுவதில்லை. இந்திய ஆங்கில இதழ் எழுத்தாளர்களில்  ராமச்சந்திர குகா, நிர்மல் சேகர், ஆர்.மோகன், ப்ரேம் பணிக்கர் போன்றவர்களின் எழுத்துகளைப் பெரிதும் சுவைத்திருக்கிறேன். தமிழில் இவர்களுக்கு இணையான பெயர் இதுவரை இல்லை.

விளையாட்டுகளைக் கண்டு களிப்பதில் நமக்கு இருக்கிற ஆர்வம் ஏன் விளையாட்டு விமர்சன எழுத்தில் இல்லை? ஜேம்ஸின் இந்தப் பழைய புத்தகம் என்னுள் இந்தக் கேள்வியை எழுப்புகிறது. விளையாட்டை ஒரு கலையாக - ஓவியம், நாடகம், இசைக்கு இணையான கலையாக, நிறுவுகிறார் ஜேம்ஸ். அத்தோடு நிற்கவில்லை. கிரிக்கெட், இனவெறி, மனித உணர்வுகள், கலாச்சாரம், இலக்கியம் இவற்றிற்கெல்லாம் உள்ள நுண்ணிய இணைப்புகளைக் கண்டறிந்து வெளிச்சம் போடுகிறார்.

விளையாட்டை நாம் வெறும் விளையாட்டாக மட்டும் பார்ப்பதால் நம்மிடம் விளையாட்டு இலக்கியம் இல்லை; அதில் இழையோடுகிற மற்ற undercurrents நம் கண்ணில் படுவதில்லை; நாடகத்தை விடவும் விளையாட்டால் வாழ்க்கையை அதிக துல்லியமாய், நாம் எதிர்பாராத விதங்களில், சித்தரிக்க முடியும் என்பதை நாம் உணர்வதில்லை. விளையாட்டு வெற்றிகளும் அதனால் தான் குறைவோ? இத்தனை நாட்களில் ஒரே ஒரு அபிநவ் பிந்திரா. ஆனால் விளையாட்டு ரசனை, ஏன், வெறி கூட நம்முள் உண்டு. தமிழகத்தற்கென்று தனி விளையாட்டுக் கலாச்சாரம் உண்டோ இல்லையோ, தனி விளையாட்டு ரசனைக் கலாச்சாரம் உண்டு. சில ஆண்டுகளுக்குமுன், டெண்டுல்கர் தன்னுடைய முதுகு வலிக்கும், பாக்கிஸ்தானுக்கும் எதிராகத், தனியாய், ஓர் அசாத்தியப் போராட்டம் நடத்தி, இறுதியில் தோல்வியைத் தழுவிய பின் பாக்கிஸ்தான் அணிக்குக் கிடைத்த கரவொலி, மரியாதை, இந்தியாவில் வேறு எங்கும் நிகழ வாய்ப்பில்லை. இது - விளையாட்டு ரசனையில் மட்டுமல்ல – நமக்கென உள்ள தனி விருந்தோமல் மரபு.  விளையாட்டில் வள்ளுவன் தாக்கம். இதை இன்னும் ஆழமாய் அலச வேண்டும்.

விளையாட்டிற்கு இலக்கிய அங்கீகாரம் கிடைத்தால், இன்னும் நிறைய விளையாட்டு வெற்றிகளை நாம் குவிக்க முடியும். வாழ்க்கையை வேறு விதங்களில் அணுகிப் பழக முடியும்.