தன்னெஞ்சறிவது பொய்த்தெழுப்பும் பிம்பங்கள்

ஏப்ரல் 18, 2024

எங்கள் கோவை தொகுதியின் இந்துத்துவ வேட்பாளர் நீட் தேர்வை உயிரே போனாலும் விலக்க மாட்டோம் என்று சொல்வதாக ஒரு காணொளி கண்ணில் பட்டது. யாருடைய உயிர் என்பதை அறிந்து கொள்வதற்காக உள்ளே சென்றேன். இத்தனை ஆண்டுகளில் அவர் பேசுவதை ஓரிரு நிமிடங்களுக்கு மேல் கேட்டதில்லை. அவர் என்றில்லை; வெகுகாலமாகவே, அது அறியவேண்டிய தரப்பில்லை என்பதால், இந்துத்துவர்கள் யார் பேசுவதைக் கேட்டும் எழுதுவதைப் படித்தும் என்னை வருத்திக் கொள்வதில் ஆர்வமிழந்துவிட்டேன். அதனால் தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஊடகங்கள் அவர் கவர்ச்சியான தலைவர் என்று பிம்பம் கட்டுவது எப்படி என்பதை அறியேன். இன்று கேட்ட அந்த ஒரு நிமிடப் பரப்புரையில் சில எளிய கூறுகள் புலப்பட்டன.

தேநீர்க் கடையிலோ வீட்டுக்குள்ளோ பிறர் பேசுவது போலத் தயங்காமல் மற்றவர்களைப் பற்றிப் பொது மேடையில் தனிப்பட்ட அவதூறு பேசுகிறார். முதலமைச்சரைச் சிறையில் தள்ளுவது பற்றிச் சர்வ சாதாரணமாக அதிரடியாகச் சொல்கிறார். இதைத் தனிப்பட்ட துணிச்சல் என்று வகைப்படுத்துதல் பிழை. அதிகாரப் பீடத்தில் இருந்துகொண்டு, பெருங்கட்சிகளின் பின்புலம் இருக்கும் யார்வேண்டுமானாலும் எதிர்த்தரப்பினரைப்பற்றி மட்டும் இப்படிப் பேசலாம். அவைநாகரிகம் கருதுவோர் செய்யமாட்டார்கள்; இவர் செய்கிறார். கேச்ரிவால் தில்லி சட்டசபையில் மோடி-அதானி குறித்துச் சொன்ன இதே பினாமி வாதத்தை இவர் சொல்வாரா? மாட்டார். நேர்மையான துணிவு என்பது எந்தப் பின்புலமும் இல்லாதபோதும் சமரசமின்றி அதிகாரத்தை எதிர்ப்பது. வெறும் எதிர்க்கட்சிகளை எதிர்ப்பதல்ல.

பிறகு, கேட்பவர்கள் உடனே உறுதி செய்துகொள்ள முடியாத அளவு தொடர்ச்சியான தரவுகளை ரமணா பாணியில் படபடவென்று அள்ளித் தெளிக்கிறார். அத்தரவுகள் எளிய தர்க்கத்தைக்கூடக் கொண்டிருக்கவில்லை.

ஸ்டாலினைச் சிறைப்படுத்திவிட்டால் தற்கொலைகள் நின்றுவிடும் என்கிறார். வடக்கே கோட்டா நகரத்தில் நுழைத்தேர்வுப் பயிற்சித் தொழிற்சாலைகளில் சென்ற இரண்டு ஆண்டுகளில் நடந்துள்ள 41 தற்கொலைகளையும் அவரைக் கைது செய்திருந்தால் தடுத்திருக்கலாமா?

நீட் வந்ததால்தான் ஏழைத்தாய்களின் பிள்ளைகள் அரசு மருத்துவக் கல்லூரியில் நுழைகிறார்கள்; இல்லையேல் பினாமிகள் நடத்தும் தனியார் கல்லூரிகளில்தான் படிக்க முடியும் என்கிறார். எத்தனை அபத்தமான வாதம் இது. எத்தனை ஏழைகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்துவந்தனர்/படிக்கின்றனர்? அரசுக்கல்லூரியோ தனியார் கல்லூரியோ, நீட்டுக்கு முன்பும் மருத்துவப் படிப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எளிதில் கிட்டக்கூடியதாக இல்லைதான். எனினும் நீட்டுக்குப் பிறகு எட்டாக் கனியானது. அரசுப்பள்ளி மாணவர்களுக்காகத் தமிழ்நாட்டரசு செயல்படுத்திய 7.5% இட ஒதுக்கீடுதான் அவர்களுக்கான வாயில்களைச் சற்றேனும் திறந்துள்ளது. இதற்கும் நீட் தேர்வுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நீட் என்றில்லை, எங்கும், எப்போதும் எந்தக் கடினமான நுழைவுத் தேர்வும் அதற்கான சிறப்புப் பயிற்சி பெறும் வசதிவாய்ப்பு கொண்டவர்களுக்கானது; ஒருபோதும் ஏழைகளுக்கானதன்று. ஏற்கிறோமோ இல்லையோ, நுழைவுத் தேர்வுகளுக்கான நியாயங்கள் ஆயிரம் இருக்கலாம்; அது ஏழைகளுக்கானது என்பது எந்த வகையிலும் அவற்றில் ஒன்றல்ல. நுழைவுத் தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் இதை அறிவார்கள். இவர் அறிந்தே பொய் சொல்கிறார்.

அடுத்து, திமுக ஐம்பதாண்டுகளில் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளைத்தான் திறந்தது; நாங்கள் 15 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்திருக்கிறோம் என்கிறார். 2014க்குப் பிறகு 15 அரசுக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ளன என்பது சரிதான். ஆனால் அதைச் செய்தது மாநில அரசு. ‘நாங்கள்’ என்று எதனடிப்படையில் சொல்கிறார்? அதிமுக இவர்களின் கிளை என்கிற பொருளில் சொல்கிறாரா? இதற்கு எடப்பாடியாரின் பதில் என்னவாக இருக்கும்? ஒன்றிய நிறுவனங்கள் அனுமதி அளிப்பதே கல்லூரியைத் திறப்பதற்குச் சமம் என்கிறாரா? எனில், மற்ற இடங்களில் ஏன் இந்தளவு செய்யமுடியவில்லை? மதுரையில் ஒரு எய்ம்ஸ் கல்லூரியையே, கட்டடம் கூடக் கட்டாமல் மாணவர்களைச் சேர்த்து அவர்கள் வாழ்வை வீணடித்துக் கொண்டுள்ளனர். அந்த மாணவர்கள் புகார்களையடுக்கும் காணொளியும் உலவுகிறது,பாருங்கள். இவர் தன் விருப்பத்துக்கேற்ப ஏதேனும் எண்களைத் தரவுகள் என்று வீசிவிட்டு கண்ணில் மண்ணைத் தூவக்கூடியவர் என்பது தெளிவாகப் புரிகிறது. கேட்பவர்கள் விழிப்புடன் இருக்கமாட்டார்கள் என்ற எண்ணம் ஒருவருக்குத் தரும் தன்னம்பிக்கை வலுவானது. இதற்குச் சிறப்பான முன்னுதாரணங்கள் அவருக்கு வழிகாட்டிகளாக உள்ளனர்.

இறுதியாக, நான் எப்போதும் கூறுவதுதான். அவரைப்பற்றி நான் சொல்வது பிழை; அவர் நல்லவர், வல்லவர் என்றே ஒருவர் நம்பினாலும், அது அவரைத் தேர்ந்தெடுக்கப் போதுமான காரணமல்ல. அவர் நேரடியான இந்துத்துவம் பேசுகிறாரோ இல்லையோ, அவர் யாருடைய, எந்தக் கருத்தியலின் பிரதிநிதி என்பதை எல்லாரும் அறிவர். மோடி அரசியலமைப்பு எனது கீதை என்றாலும், பின்னாலேயே ராச்நாத் இராமராச்சியம் தொடங்கிவிட்டது என்பார். இந்துத்துவம் என்ற அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும், பிளவுபடுத்தும் பிற்போக்குக் கருத்தியல் கொண்ட இயக்கம் எதிர்க்கப்பட வேண்டியதல்ல, முற்றாக ஒதுக்கப்பட வேண்டியது. இந்துத்துவ அடிப்படைவாத இயக்கத்தை நீக்கிய பிறகு எஞ்சுபவர்களே நம்முன் இப்போதைக்கு இருக்கும் வாய்ப்புகள்.


அன்பையும் அறனையும் அரிக்கும் பிணி

ஏப்ரல் 15, 2024

உண்மையிலேயே மிகுந்த வருத்தமாக உள்ளது. நாம் அறிந்தவர்கள், நமக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் இந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் மனம் துணுக்கிடுகிறது. இடுக்கண் களைய முடியாமல் பொருமுகிறது. நா காய்கவர்ந்து கொந்தளிப்பான சொற்களை உதிர்க்கிறது.

தாம் இந்துக்கள் என்பதாலேயே, தமக்குப் பாதிப்பு இல்லை என்பதாலேயே, பிறரை ஒடுக்கும் இந்துத்துவத்தை வேறென்ன காரணம் சொல்லி ஆதரித்தாலும் அது அடிப்படைவாதமே.

இந்துத்துவம் நம் அன்பையும் அறனையும் அரிக்கும் நோய். நம் மானுடத்தன்மையைப் பறிக்கும் பிணி.

அன்று ஜெர்மனியில் நாசிசமும் இன்று இசுரேலில் சயனிசமும் எப்படிச் சாதாரண மனிதர்களுக்கு இரத்தவெறியும் வெறுப்பும் ஊட்டிப் படுகொலை செய்யத் தூண்டினவோ அப்படித்தான் இந்துத்துவ மதவெறிக் கொள்கையும் நம்மைப் பண்பும் பரிவுமற்ற மாக்களாக்கும். பெருந்திரளில் கரைத்துக்கொண்டு வெறிமுழக்கமிட்டுப் கொடுமைகள் புரிய வைக்கும். பல கற்றும் கல்லாதவராய் எந்தப் பாதகத்தையும் நியாயப்படுத்த வைக்கும். வெறும் மத நம்பிக்கை கொண்ட ஒரு சாதாரணன் ஒரு மசூதியைத் தகர்க்கமாட்டான். பழிவாங்குதாகச் சொல்லி மாற்றுமதப் பெண்களை வன்புணர மாட்டான். கருவுற்ற பெண்களைக் கொன்றிட மாட்டான். அண்டை வீட்டாரைக் கொளுத்தியெரிக்க மாட்டான். மாடுகளைக் காப்பதாகக் கூறி மனிதர்களை வெட்டித்தள்ள மாட்டான். இந்துத்துவ வெறி அவனை அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. இந்துத்துவ வெறிச்செயல்கள் எவற்றுக்கும் இதுவரை எவரும் பொறுப்பேற்றதில்லை; தலைவர்கள் தண்டிக்கப்பட்டதில்லை. அயோத்தியில் கோயில் எழும்புகிறது. குசராத்தில் இந்துத்துவ ஆட்சி இருபத்தாண்டுகளுக்கு மேலாக நடக்கிறது. உத்தரப்பிரதேசம் அவர்களின் அடுத்த தலைவரை உருவாக்கிவருகிறது.

வளர்ச்சி, வணிகம், ஊழல், சாதி, குடும்ப அரசியல் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறி வைத்தனர். எல்லாப் பொறிகளில் அகப்படும் இரைகளும் இந்துத்துவ நெருப்புக்கு அவியாகவே என்பது எப்படிப் புரியாமற்போனது? மதம் தாண்டிய மக்கள்நலப் பணிகள் எவற்றிலும் திறம்படச் செயல்படும் தகுதியற்றவர்களாகவே இந்துத்துவர்கள் வெளிப்பட்டுள்ளனர்.

இந்துத்துவத்தின் அத்தனை வேடங்களும் இப்பத்தாண்டுகளில் கலைந்துவிட்டன. இப்போது நாம் காண்பது அதன் கோர முகமும் அலங்காரம் கலைந்த பொய்களும் புனைவுகளும் மட்டுமே. இன்னமும் அதன் மீது நீங்களாக வேடம்சாத்திப் பார்த்து ஏமாற்றிக்கொள்ளவேண்டாம்.

மற்றவர்கள் யாரும் இங்கு தூயவர்கள் அல்லர். ஆனால் அவர்களை இடித்துரைக்கலாம், கடுமையாகக் கடிந்துகொள்ளலாம், அவர்களுக்கெதிராகப் போராடலாம், மாற்றலாம், மாற்றுகள் காணலாம். இந்துத்துவம் எதிர்ப்பதற்கும் மாற்றுவதற்கும் தகுதியற்ற முழுமுற்றான தீமை. இந்துத்துவத்தைவிட்டுத் தூர விலகுவதும் இந்துத்துவத்தைத் தூர விலக்குவதுமே நம்மையும் இச்சமூகத்தையும் இப்போதைக்குக் காக்கும் வழி்.


பருவநிலை நீதி

ஏப்ரல் 15, 2024

16-3-2024

பருவநிலை நீதியும் சமூகநீதியும் ஒன்றே என்று சுவீடன் நாடாளுமன்றத்தின் முன் போராடிய இளைஞர்கள்.

சமூக நீதியை இட ஒதுக்கீடு, கல்லூரிப் படிப்பு, வேலைவாய்ப்பு என்பதைத் தாண்டி, விரித்துப் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் கடந்துகொண்டிருக்கிறது. பருவநிலை மாற்றம் எல்லாரையும் பாதித்தாலும் சமூக-பொருளாதார ஏணியின் அடிமட்டத்தில் இருப்பவர்களே அதிகமாகவும் முன்னதாகவும் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதாரச் சமத்துவமின்மை, அதிகாரக் குவிப்பின் காரணமாக பருவநிலை பாதிப்பு ஒரு பெருந்தரப்புக்கும் அதனை உருவாக்கும் உல்லாச வாழ்வு வேறொரு குறுந்தரப்புக்கும் என்றிருக்கும் நிலை பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதன் இன்றியமையாமையை உணரவிடாமற் செய்து, மீளமுடியா பருவநிலைச் சுழலில் ஆழ்த்தி, சமூகநீதியையும் சிதைக்கிறது. இந்திய அளவிலும் இது குறித்த முறையான ஆய்வுகள், உரையாடல்கள், சமூகச் செயல்பாடுகள், அரசின் நடவடிக்கைகள் பெருக வேண்டும்.


19-3-2024

காசுமீர் உடைக்கப்பட்டபோது லடாக்கைத் தனியே பிரித்து ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அறிவித்தது பாசக அரசு. அப்போது அதை வரவேற்றிருந்தாலும், அதனால் விளைந்த பிற இடர்களை உணர்ந்து, சென்ற ஆண்டு, ஒன்றிய அரசு வாக்குறுதி தந்திருந்தபடி ஆறாவது அட்டவணையைச் செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்துக் கல்வியாளர்-சூழலியலாளர் சோனம் வாங்க்சுக்(Sonam Wangchuk ) கடுங்குளிரில் திறந்தவெளியில் உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினார். இன்னமும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. பல்லாயிரம் பனிப்பாறைகள் கொண்ட லடாக்கில் கட்டற்ற தொழில் விரிவாக்கம் திணிக்கப்பட்டால் பெரும் சூழலியல் கேடுகள் ஏற்படும். லடாக் மட்டுமன்றி பிற பகுதிகளும் பாதிக்கப்படும். சோனம் வாங்க்சுக் இவ்வாண்டு மீண்டும் 21 நாள்கள் (சாகும்வரை நீடிக்கப்படக்கூடிய) உண்ணாநிலைப் போராட்டத்தை 11500 அடி உயரத்திலுள்ள லே பகுதியில் மேற்கொண்டுள்ளார். பல நூறு மக்கள் துணையுடன் திறந்தவெளியில் -10° செல்சியசு குளிரில் இப்போராட்டத்தை நடத்திக்கொண்டுள்ளார். பருவநிலை நெருக்கடி குறித்த விழிப்புணர்வை இப்போராட்டத்தின் மூலம் ஏற்படுத்தவும் சோனம் முயல்கிறார். லடாக் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ளூர்ப் பழங்குடிகளின் உரிமைகளைக் காப்பதுதான் சூழலைக் காப்பதற்குச் சிறந்த வழி. நம் கண்ணுக்கெட்டாத ஒரு மூலையில் நடந்தாலும் உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு, அதிலும் அகிம்சைப் போராடங்களுக்குச் செவிசாய்க்க வேண்டியது மக்களின் கடமை. அரசின் கடமை.

இது சென்ற ஆண்டு நான் எழுதியது:

When J&K was broken and Article 370 withdrawn, it was projected as a master move to solve all the ills of the region. Ladakh, especially, was almost claimed to be liberated from Kashmir and 370. For now, I’ll refrain from commenting on how well things have been progressing in Kashmir. But, apart from news on Chinese incursions, there has hardly been any news on Ladakh. Now I suddenly hear that Sonam Wangchuk, a respected educationist and social worker, but quite sympathetic to Modi and BJP, is now on a 5-day fast in minus 40°C under the open skies. He says All is not well in Ladakh. The protection offered by Section 370 is no more there and no new safeguards have been provided. Sixth Schedule, which was promised by BJP, is not being implemented. Ladakh is a climate sensitive region and they are bound to be affected badly by unbridled growth. Let me add, to convince our selfish selves, all of us will be affected.


24-3-2024

I am not sure if I agree with it immediately but Sonam Wangchuk, on his 19th day of Climate Fast, raises a point here which needs serious consideration. Delhi has 7 MPs, while Ladakh, which is geographically 40 times larger than Delhi, and ecologically more critical, has only 1 MP. Can we think of ways to restore a balance? Pure anthropocentric approaches hurt humans to a great extent if not as much as other species.


29-4.2024

அகிம்சை வழிப் போராட்டத்தைத் தேர்ந்தெடுப்பதை எதிராளியின் தன்மையோடு தொடர்பு படுத்தவேண்டியதில்லை. ஆனால் அகிம்சைப் போராட்டங்களுக்குப் பாராமுகம் காட்டும் சமூகங்கள் வன்முறைக்கான விதைகளைத் தாமே தூவிக்கொள்கின்றன.

காணொளி


6-4-2024

நம்மாழ்வார் இதுகுறித்துப் பன்னிரண்டு ஆண்டுகள் முன்பு பேசிக் கேட்டிருக்கிறேன். கோழிப்பண்ணைகளில் கிடைக்கும் முட்டை என்பது வெறும் இராயசனப் பந்து என்றார்.

ஏழைகளுக்கும் முட்டைகள் எளிதில் கிடைப்பதால்தான் இத்தகைய மிகையான அச்சங்கள் பரப்பப்படுகின்றன என்ற வாதத்தை முன்வைத்துத் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பேசுவதையும் கேட்டிருக்கிறேன்.

எங்கள் மகளுக்கும் பொதுச்சந்தையில் வாங்கும் முட்டைகளைத்தான் தருகிறோம். பிற குழந்தைகளையும் பள்ளியிலும் வீட்டிலும் தவறாமல் முட்டை உண்ணுமாறு அறிவுறுத்தவே செய்கிறோம். இருப்பினும் எந்த சுயக்கட்டுப்பாடும் அரசுக்கட்டுப்பாடும் இன்றி இயங்கும் கோழிப்பண்ணைகளை நினைத்தால் அச்சமாகத்தான் உள்ளது.


தேர்தல்காலப் பதிவுகள்

ஏப்ரல் 15, 2024

(14-4-2024)

இசுரேல் இரானியத் தூதரகத்தைத் தாக்கி இரானியத் தளபதிகளைக் கொலை செய்ததற்கு எதிர்வினையாக இரான் இப்போது இசுரேலைத் தாக்கியுள்ளது. அமெரிக்காவையும் பிற நட்பு நாடுகளையும் போரிலும் இனப்படுகொலையிலும் நேரடியாக ஈடுபடவைக்க நேதன்யாகு செய்யும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்துத்துவ அரசு எந்தவித அரசியல் முன்யோசனையும் அறம்சார் நிலைப்பாடும் இன்றி, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற மத உணர்வோடு இசுரேலுடன் இணக்கமாகிக் கொண்டுள்ளது. பல்லாயிரம் ஏழை இந்துத் தொழிலாளர்களை இசுரேலுக்குப் போர்ச்சூழலில் அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.

மீண்டும் இசுரேல் இரானைத் தாக்கினால் பெரும்போராக இது மாறலாம்.

இந்துத்துவ அரசு மீட்பு விமானங்களை அனுப்பி இந்துத் தொழிலாளர்களை மீட்டு வரலாம். பின்னர் ஒரு திரைப்படம் எடுக்கலாம்.

பைடன்(/டிரம்ப்), நேதன்யாகு, மோடி போன்ற தலைவர்களை மக்களாட்சிகளில் தேர்ந்தெடுப்பது நம் காலத்தின் பெருஞ்சோகம்.


(13-4-2024)

பிபி-மோடி கூட்டு

காசாவில் இனப்படுகொலையை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கும் நேதன்யாகுவின் அன்புக் கோரிக்கையை ஏற்று மோடியும் பாசக அரசும் பல்லாயிரம் ஏழை இந்தியத் தொழிலாளிகளை இசுரேலுக்கு அனுப்பிக்கொண்டுள்ளனர். Bibi-Modi bromance என்று இக்கூட்டைச் சுட்டுகிறது Boston Review. பால்சனாரோ, டிரம்ப் முதலானோர் உள்ள மோடியின் கொடுங்கோலர் நட்புப்பட்டியலில் நேதன்யாகுவுக்கு இடமில்லாது போகுமா? பாலசுத்தீனர்கள் செய்துகொண்டிருந்த பணிகளை இந்தியர்கள் மேற்கொள்ளப்போகின்றனர். இன அழித்தொழிப்புக்குத் துணைபோகும் செயல் இது.

தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற இந்தியாவின் நட்பு நாடுகள் இசுரேல் மீது இன அழிப்பு வழக்குத் தொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா தன் வரலாற்றுப் பங்கினை மறந்து இப்படியொரு செயலைச் செய்கிறது. அது அறமற்றது என்பதோடு மோசமான அரசியலும்கூட.

அது மட்டுமல்லாமால், அண்டை நாடுகளையும் போருக்கிழுத்துச் சீண்டிக்கொண்டிருக்கிறது இசுரேல். இத்தகைய ஆபத்தான சூழலில் இத்தனை ஆயிரம் ஏழைத் தொழிளாளர்களை உ.பி., பிகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் இருந்து அனுப்புகின்றனர். எத்தனை இடர் வந்தாலும் எங்கேனும் ஏதேனும் பணி வேண்டும் என்னுமளவுக்கு அம்மாநிலங்களின் வேலைவாய்ப்பும் பொருளாதாரச் சூழலும் இவர்களது ஆட்சியில் உள்ளன.

மேலும் இந்துக்களின் காவலனான இந்துத்துவ அரசும் சயனிய இசுரேலிய அரசும் இப்பணிகளுக்கு இந்துக்களை மட்டுமே வரவேற்கின்றன என்கிறது இக்கட்டுரை. தாங்கள் செல்லுமிடம் போர்முனையாகக்கூடும் என்பதை அந்த இந்துக்கள் அறிவார்களா?


11-4-2024

‘பாலசுத்தீனத்தில் ஈகைத் திருநாளுக்கு முந்தைய மாலை.

குழந்தைகளுக்கு மிட்டாய்கள் இல்லை.

குழந்தைகளே இல்லை.’

என்று கவிஞர் மொசாப் அபு தொகா ஒரு பதிவிட்டிருக்கிறார்.

ஒரு கணம் உறைந்து, பின் கீழே வந்தேன்.

வருத்தம் தொனிக்கும் எதிர்வினைகளுக்குக் கீழே,

‘கர்மா’ என்றொரு பதில்.

இசுரேலியர் யாராவது இட்டதா எனில், இல்லை. எழுதிய நபரின் பெயரின் பின்னொட்டாக, ‘மோதி கா பரிவார்’ (மோடியின் குடும்பம்). இசுரேலுடன் இவர்கள் தம்மை இணைவைத்துக்கொள்வதில் எந்த வியப்புமில்லை. இவர்கள் நாட்டை அழைத்துச் செல்ல முனைவது அதே அழிவுப்பாதையில். இதுபோன்ற எண்ணற்ற பதிவுகளால் இவர்கள் சமூக ஊடகங்களைச் சகிக்கமுடியாதவையாக்கினாலும் இவ்வொற்றைச் சொல் கூடுதலாகவே தைத்தது. இப்பின்னொட்டு, “தவறியும் என்னைப் படித்துவிடாதே,” என்பதற்கான எச்சரிக்கை மணி. இவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?


5-4-2024

வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

கோலொடு நின்றான் இரவு.

(The extortion and graft done wielding the sceptre

is no different from robbery done pointing a spear.)

கொடுங்கோன்மை அதிகாரத்திலுள்ள இக்குறளை என் பயிற்சி வகுப்புகளில் பயன்படுத்துவதுண்டு. இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய என் மொழிபெயர்ப்பு. இதற்கான காட்சிப்பக்கத்தின் துணைப்படமாக வண்டியோட்டுநர் ஒருவரை வழிமறித்துக் கையூட்டு பெறும் போக்குவரத்துக் காவலரின் படத்தையே வைத்திருந்தேன். கடைநிலை அலுவலரின் சிறு வழிப்பறி. படித்து நற்பதவிகளில் இருப்போரின் அறப்பிறழ்வு குறித்து உரையாட எடுத்துக்கொண்ட இக்குறளுக்கு நிறைவாகப் பொருந்தாத படமாக அது இருந்தது.

இனி அங்கு உலகின் மாபெரும் பணப்பறிப்புத் திட்டம் சார்ந்த ஈர்ப்பானதொரு படத்தை எளிதாகத் தேர்ந்து பயன்படுத்திவிடலாம் என்ற முடிவிலுள்ளேன். அதுவே சாலப் பொருந்தும்.


2-4-2024

விக்கிப்பீடியாவில் உள்ள தகவல்களின்படியே இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டச் செயல்பாட்டாளர்கள் 95 பேர் கொலையுண்டுள்ளனர், 163 பேர் தாக்கப்பட்டுள்ளனர், 211 பேர் மிரட்டப்பட்டுள்ளனர். இத்தனை தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்களின் இழப்புகளை மலினப் படுத்தும்வகையில் ஒரு கீழ்மையான அரசியல் நாடகம் அரங்கேறியுள்ளது.

ஆளுங்கட்சியின் மாநிலத் தலைவர் இத்தனை நாள் பொதுத்தளத்தில் உள்ள வரலாற்றுத் தகவல்களை விடுத்து, மிகக்குறிப்பாக இரண்டு ஆவணங்களைத் தகவல் உரிமைச் சட்டம் மூலம் கோரி உடனே பெறுகிறார். வெளியுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இந்நாள் அமைச்சர் ஊடகக்கூட்டம் கூட்டிப் பழைய ஆவணங்களை அகழ்ந்து வந்து வழங்குகிறார். பிரதமரும் தன் கைச்சொடுக்கில் கிட்டக்கூடிய தரவுகளை விடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பெற்ற தகவல்களைப் புதுக் கண்டுபிடிப்பு போல தேர்தல் பரப்புரைகளில் முன்வைத்து முழங்குகிறார். இந்த அளவுக்குத்தான் இவர்களின் ஆட்சித்திறனும் பொறுப்புணர்வும் உள்ளனவெனில், உடனடியாக ஆட்சி மாற்றம் நடந்தாக வேண்டும் என்பதற்கு வேறென்ன காரணம் வேண்டும்? கட்சத்தீவு சார்ந்த அரசியல் நிலைப்பாடுகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஈழம் தொடர்பாகச் சுமத்த காங்கிரசு மீதும் திமுக மீதும் இதைவிடப் பெரும்பழிகள் உள்ளன. ஆனால் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் அயல்நாட்டு உறவுகளை வெறும் பரப்புரைக் கருவிகளாக்குவது உலகளவில் ஒரு நாட்டின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் செயல். தேர்தல் வெற்றிக்காகப் படித்தவன் சூதும் வாதும் செய்வதெப்படி என்பதற்கான செய்முறை விளக்கம் காட்டியுள்ளனர். ஆட்சிக்காகத் தேர்தல்நேரப் போர்களைத் தொடங்கவும் தயங்க மாட்டார்கள். அதுவும் இவர்களுக்குப் புதிதன்றே.

பி.கு.: இதன் பக்கவிளைவாக, இப்போதுதான் தமிழ்நாட்டு மீனவர்கள் ‘இந்திய மீனவர்கள்’ ஆகியுள்ளனர்.


31-3-2024

கோவையில் IIMA, Phd, IPS வேட்பாளர்கள் களம் காண்பதால் அவர்களின் தனித்தகுதிகளை முன்னிறுத்தும் உரையாடல்களை இம்முறை கேட்கவேண்டியுள்ளது. இளமை, படிப்புத்தகுதி போன்றவற்றுக்கும் அரசியலில் திறம்படச் செயல்படுவதற்கும் தொடர்பு காணும் மாயைகளில் சிக்குண்டு தத்தளித்து வாக்களிப்பவர்கள் பயன்மதிப்பற்ற பண்டங்களை அளந்து எடை போடட்டும். மற்றவர்கள் இம்முறை எந்தக் கட்சி தோற்றாக வேண்டும், யார் நுழைவதற்கு இங்கு ஓர் இம்மி அளித்தாலும் நீங்காத பெருந்தீங்கு நேரும் என்ற தெளிவை முதலில் அடைந்தால் சரி. அதிகாரப் பரவலாக்கம் பெறாத வலுவற்ற மக்களாட்சியில் யார் வெல்லவேண்டும் என்பதைக் காட்டிலும் யார் தோற்கவேண்டும் என்பதே நாம் விடையறுக்க வேண்டிய முதன்மை வினா. கூடாத கட்சிகளைக் கழித்தபிறகே எஞ்சிய கட்சிகள்/வேட்பாளர்களின் தகுதிகளைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

மதவெறியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் ஒரு கட்சி (பல்லாயிரம் கோடி தேர்தல் பத்திரப் பறிப்பு நிதி வேறு கதை), மக்களாட்சிக்கு எல்லா வகைகளிலும் அச்சுறுத்தலான கட்சி, பன்மைத்தன்மை கொண்ட நிலப்பரப்பில் ஒற்றைத்தன்மையை நிலைநிறுத்த முயலும் ஓர் இயக்கம் எக்காரணம் கருதியும் ஏற்கப்படக்கூடாத ஒன்று. பொருளாதாரம், வளர்ச்சி, கல்வி, மருத்துவம், உட்கட்டமைப்பு, ஊழலின்மை போன்ற அளவுகோள்களில் அவர்கள் எப்படிச் செயலாற்றினார்கள் என்பதை அலச வேண்டிய அவசியமே இல்லை. அவ்வலகுகளில் நன்றாகச் செயல்பட்டிருந்தாலுமே அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள். வெறும் அறிதல் ஆர்வத்துக்காக நோக்கினால், அவற்றிலும் அவர்கள் சறுக்கியே இருக்கிறார்கள் என்பது அரசின் பரப்புரைகளைத் தாண்டித் தரவுகளைப் பார்த்தாலோ அலைபேசி/கணினியைத் தாண்டி களத்தில் கால்வைத்தாலோ புரியும். அது தேர்தலுக்குத் தொடர்பற்ற ஒரு தனி அவலம்.


28-3-2024

சஞ்சீவ் பட், அரவிந்த் கேச்ரிவால் போன்றவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை அவர்கள் உண்மையிலேயே புரிந்தார்களா இல்லையா என்ற வினாவுக்கு வழக்காடுமன்றங்கள் என்றாவது ஐயமற விடைகூறலாம். ஆனால் அக்குற்றச்சாட்டுகள் உண்மையோ பொய்யோ, அவர்கள் மோடிக்குப் பாதிப்பு வரும்வகையில் அவரை எதிர்த்தார்கள் என்பதற்கும் அவர்களது விடாப்பிடியான சிறைவாசங்களுக்கும் உள்ள வெளிப்படையான தொடர்பைக் காணத் தேர்ந்த அரசியலறிவு தேவையில்லை. தற்செயல் என்று புறந்தள்ள முனைபவர்களின் அகங்களும் அதை அறியும்.


22-3-2024

சென்ற வாரம் தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது. சூடான அரசியல் நிகழ்வுகளுக்கிடையில் விறுவிறுப்பற்ற நிகழ்வுதான்.

திருவள்ளூர் என்று நினைக்கிறேன்….ஓர் அரசுக் கல்லூரியில் ‘புள்ளிங்கோ’ முறையில் முடிவெட்டி வந்த மாணவர்களை நிறுத்தி காவல்துறையினர் மாற்றி வெட்டி வருமாறு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தனர்.

பொதுவாகவே நடையுடை பாவனைகளில் சற்றே மாறுபட்டுத் தெரியும் இளைஞர்களை ஆசிரியர்களுக்கும் பிடிக்காது. காவல்துறையினருக்கும் பிடிக்காது. அவர்களது அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குபவர்களாக அத்தகைய இளைஞர்களைக் காண்கிறார்கள்.

ஆனாலும் சிகையலங்காரத்திலெல்லாம் எதற்குக் காவல்துறை தலையிட வேண்டும்? பண்பாட்டுக் காவலர்களாக மாறும் உரிமையை அவர்களுக்கு யார் வழங்கியது? நல்லதுதானே செய்கிறோம் என்று அவர்கள் நினைக்கலாம்; ஆசிரியர்களும் பெற்றோர்களும் அரசும் அவ்வாறே நினைக்கலாம். பெருந்தொற்றுக் காலத்தில் காவல்துறை அத்துமீறலைச் சுட்டிக்காட்டி எழுதியபோது பலர் அந்நேரத்தில் அது இன்றியமையாதது என்றே வாதாடினர். இப்படித்தான் நம் சுதந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுத்தருவதற்குப் பழகிக்கொள்கிறோம். அதிகாரத்துக்கு அடிபணிதலைக் கற்றுத்தருவதையே நம் கல்வி நிறுவனங்களின் முதன்மை நோக்கமாக்க அனுமதிக்கிறோம்.


22-3-2024

திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் இதுபோன்ற கொடுமையான நிகழ்வுகளைப் பற்றி அவர்களும் பிறரும் உரக்கப் பேசி எதிர்க்கக்கூடும். ஆளுங்கட்சியாக இருக்கையில் அவர்களும் பேசுவதில்லை. எதிர்க்கட்சிக்கு வந்துவிட்ட மற்றவர்களும் பெரிதாக எதிர்ப்பதில்லை. காவல்துறையிடம் வரம்பு மீறிய அதிகாரம் குவிவதும் அவர்களின் குற்றங்கள் மென்மையாகக் கையாளப்படுவதும் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.


22-3-2024

நல்லது. சூரியமூர்த்தி மாற்றப்பட்டுள்ளார். புதிய வேட்பாளர் எப்படியோ? சமூக ஊடகத்தில் எழுந்த மெல்லிய எதிர்ப்புக்குத் திமுக செவிசாய்த்திருப்பது நன்று.

தேர்தல் அரசியல் தேவைகளுக்காக இதுபோன்ற சாதியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதும் சாதிவெறியர்களுக்குத் தம் கட்சிகளில் இடமளிப்பதும் சாதியக் கணக்குகளின்படியே வேட்பாளர்களை நிறுத்துவதும் முடிவுக்கு வரவேண்டும். இந்தியாவில் மதவெறியும் சாதியமும் ஒரே தீமையின் இருமுகங்கள்.

19-3-2024

திமுகவின் கூட்டணிக் கட்சியான கொமதேக, சூரியமூர்த்தி என்பவரை நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது. முகநூலில் அவரது உரையொன்றின் பகுதியைக் கேட்க நேர்ந்தது. சகிக்கமுடியாத அப்பட்டமான சாதிவெறி, கொலைவெறிப் பேச்சு.

நாற்பதும் நமதே என்று இவரையும் சேர்த்துத்தான் சொல்கிறீர்களா? எவ்வகையிலும் தேர்ந்தெடுக்கப்படவே கூடாத வேட்பாளர். மதவெறிக்குச் சாதிவெறி எவ்வகையில் மாற்றாகும்? சலிப்பாக உள்ளது.


18-3-2024

நானும் என் முகநூல் ஓடையை மேலும் கீழும் உருட்டிப் பார்க்கிறேன். முன்தினம் தேர்தல் பத்திரப் பதிவுகளாய் நிறைந்து வழிந்து காட்டாறாகப் பாய்ந்தது, நேற்று முதல் சலனமற்று அமைதியாகத் தேங்கி நிற்கிறது. இப்படியொரு லாட்டரி அடித்ததை அறிந்த பிறகு, தேர்தல் பத்திரத் திட்டம் ஊழல்தானா இல்லையா, வழிப்பறிதானா இல்லையா என்று எதுவும் முடிவு சொல்வதற்கில்லாமல் திமுக சார்பாளர்கள் தவிப்பது புரிகிறது.

வேறு எந்தக் கட்சிக்கும் ஒற்றை நிறுவனத்திடமிருந்து, அதுவும் ஒரு சூதாட்ட நிறுவனத்திடமிருந்து, 500 கோடி ரூபாய் கிடைத்திருந்தால் தமிழ்ச் சமூக ஊடகங்களில் மாபெரும் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும். நடக்கவேண்டும்.

தொழில் நிறுவனங்கள் கட்சிகளுக்குப் பணம் அளிப்பது புதிதன்று. உலகநடைமுறைதான். அரசியல் கட்சிகளின் ஊழலைப் பேசுமளவு தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஊழலில் இருக்கும் சம பங்கினைப் பற்றி நாம் பேசுவதில்லை. எதையும் எதிர்நோக்காமல் ஈவதற்கு அவர்கள் கொடைவள்ளல்களல்லர். இது சந்தைப் பொருளாதாரம் அனுமதிக்கும் சட்டப்பூர்வமான ஊழல்.

எனினும் இது பெருந்தொகை. பல்வேறு முறைகேடுகளுக்கான சோதனைகளுக்கு ஆளான நிறுவனத்திடமிருந்து பெற்ற தொகை. அவர்கள் எப்படி எதற்காக இத்தனை பணத்தை எந்தக் கட்சிக்கும் தரவேண்டும், இவர்கள் ஏன் அதை ஏற்கவேண்டும் என்ற வினாக்கள் எழுப்பப்படவேண்டும். தக்க விடைகள் இருந்தால் அளிக்கப்பட வேண்டும். இதனால் ஊழல் நடந்ததா இல்லையா, அவர்களுக்குகந்த தவறான கொள்கைகள் வகுக்கப்பட்டனவா இல்லையா என்பவையெல்லாம் அடுத்தக்கட்ட வினாக்கள். (அந்நிறுவனம் பாசகவுக்கும் கொடுத்திருப்பார்கள், பாசகவைப் போல் பொய் சொல்லாமல் திமுகவே நீதிமன்றத்திடம் தரவுகளை வழங்கியது என்ற வாதங்களில் உண்மையிருந்தாலும், இதை நியாயப்படுத்திவிடாது. )

ஊழலைவிட மதவாதம் ஆபத்தானதுதான். அதனை மறுப்பின்றி ஏற்பதன் பொருள் ஊழலுக்கும் சொத்துக்குவிப்புக்கும் முழு உரிமம் கொடுப்பது என்றாகிவிடாது. தமிழ்நாட்டில் ஊழலையும் சொத்துக்குவிப்பையும் கேள்விக்குட்படுத்தாத இடத்தில் தொடர்ந்து வைத்துக்கொண்டிருப்பது மதவாதம் வேர்பிடிக்க நீரூற்றும் செயல். வேரூன்றிவிட்டால் மதவாதத்துக்கு ஊழல் ஊழலின்மை எதுவும் பொருட்டல்ல. மதம் ஒன்றே அதற்குத் தேவையான ஊட்டம்.

மதச்சார்பின்மையை ஏட்டளவிலேனும் ஏற்கும் கட்சிகள் ஊழலற்றைவை என்ற எதிர்பார்ப்போ ஏமாற்றமோ இல்லை. எழுத்துலகம் தொடர்ந்து அமைதி காப்பது அவற்றைக் கெடுப்பாரிலானும் மேலும் கெடச்செய்யும்.


15-3-2024

தேர்தல் நிதிப் பத்திர விவரங்களை வெளியிடுவதில் பாசக அரசுக்கு இத்தனை தயக்கம் இருந்திருக்கவே தேவையில்லை. அதில் எவ்வளவு தகிடுதத்தங்கள் இருந்தாலும், அவற்றைப் பார்த்துவிட்டெல்லாம் இந்துத்துவ வாக்காளர்கள் அவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டுவிடவா போகிறார்கள்? இல்லை, பண விவகாரங்களில் அவர்கள் தூய்மையானவர்களாக (வாய்ப்பில்லையெனினும், தப்பித்தவறி) இருந்துவிட்டால் நாம் அவர்களுக்கு வாக்களித்துவிடப் போகிறோமா? மதவெறி அரசியல்தான் இங்கு மையத்தில் இருப்பது. மற்றவையெல்லாம் சும்மா ஓடிப்பிடித்து ஒளிந்து விளையாடும் விளையாட்டுகள்தாமே.

ஆனால் ஒன்று, உங்கள் முகமூடிகளை நீங்கள் கழற்றிக் கொள்ளலாம்.


13-3-2024

இந்தியாவில் மத்தியிலோ மாநிலத்திலோ ஆட்சியில் இருந்தபடி தேர்தலைச் சந்திப்பதில் பெரும் அனுகூலங்கள் உள்ளன. தேர்தல் நாள் அறிவிப்பு வரும்வரை ஆளுங்கட்சிகள் அரசாங்கச் செலவில் எக்கச்சக்கமான விளம்பரங்களைத் தரலாம். ஏராளமான புதுத் திட்டங்களை அறிவிக்கலாம். பிற கட்சிகள் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகுதான் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவார்கள். அதிலும், பாவம், அவர்கள் சந்திக்கும் பேரின்னல்கள் கொஞ்சநஞ்சமா? ஆனால் எக்குத்தப்பாக எகிறவிட்ட சமையல் எரிவாயு விலையை நூறு ரூபாய் குறைத்தால், எந்த இடையூறும் இல்லாமல் நேரடியாக ஒவ்வொரு வீட்டுக்கும் நூறு ரூபாய் வழங்கிவிடலாம். எத்தனை கோடானுகோடிகள் குவிந்திருந்தாலும் இப்படியெல்லாம் பணம் மிச்சமாக்கிச் சேமித்தால்தான் பின்னர் வேட்பாளர்களையும் கட்சிகளையும் தேவைக்கேற்ப விலைக்கு வாங்கமுடியும்.

ஒன்றிய அரசுக்கு இவற்றையெல்லாம் நிறைவாகச் செய்துமுடித்துக் காலம் கனியும்வரை தேர்தல் அறிவிப்பு வராமல் பார்த்துக்கொள்ளும் மறைமுக அதிகாரம் கூடுதல் வன்மை தரும். மாநில அரசுகளும் ஏன் இத்தனை தாமதம் என்று அறச்சீற்றம் கொள்ளாமல் காலம் தந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

இவையெதுவும் புதிதில்லைதான். முன்பும் பிறர் செய்துள்ளனர் என்பதை மறந்துவிடவில்லை. செய்தும் தோற்றுள்ளனர் என்ற நினைவுதான் மங்கிவருகிறது.


10-3-2024

செய்தித்தாளை எப்போதாவதுதான் படிப்பவன் நான். தினமலர், தினத்தந்தி தவிர வேறு நாளிதழ்கள் எங்கள் கிராமத்தில் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணம். கோவை வந்து, பெற்றோர் வாங்கியுள்ள இவ்வாரத் தமிழ் இந்து இதழ்களைப் புரட்டுகையில் இரு செய்திகள் கண்ணை உறுத்தின. பெண்களுக்கு விருது வழங்கும் கூட்டத்தில் மோடி பேசியது பற்றி ஒரு செய்தி. மோடி நகைச்சுவை ததும்பப் பேசினார் என்று எழுதியுள்ளனர். ஓர் இதழுக்கு அரசியற் சாய்வு இருக்கலாம். ஆனால் செய்தியில் editorialise செய்யக்கூடாது என்ற வழக்கமெல்லாம் தமிழ் இதழ்களுக்கு ஏன் வகுத்துக்கொள்வதில்லை?மோடி பேசியது என்னவென்று சொல்லலாம், அவர் பேசியதைக் கேட்டவர்கள் சிரித்தனர் என்றுகூடச் சொல்லலாம். ஆனால் அவர் நகைச்சுவை ததும்பப் பேசினார் என்பதொரு கருத்து; சர்ச்சைக்குரிய கருத்து; அதைச் செய்தியில் ஏற்றுவது தவறு என்றுதான் நல்லதொரு இதழாசிரியர் முடிவெடுக்கவேண்டும் அல்லவா?

அடுத்துச் சனாதனம் குறித்த தீர்ப்பு. உயர்நீதி மன்ற நீதிபதி கருத்துரிமைக்கு எல்லைகள் உள்ளது எனலாம். மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தக் கூடாது என்றுகூடச் சொல்லலாம். இவற்றை நாம் ஏற்கவோ மறுக்கவோ போகிறோம். ஆனால் உதயநிதியும் ராசாவும் இந்துத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எப்படி அவர் சொல்லலாம்? இந்துத்துவம் ஓர் அரசியல் தரப்பு; மத நம்பிக்கையன்று. சமய நம்பிக்கையை இழிவுபடுத்தக்கூடாது என்பது உறுதியான சட்ட வரம்பாக இருக்கலாமா என்பதே விவாதத்துக்குரியது. எந்தவோர் அரசியல் தரப்பையும் சரியாகவோ தவறாகவோ புரிந்துகொள்ளும் உரிமையும் அதைப் போற்றவோ தூற்றவோ செய்யும் உரிமையும் எவருக்கும் உண்டு என்பதில் கூடவா ஊசலாட்டம்?



Human Condition – அன்பை அடைக்கும் தாழ்

மார்ச் 8, 2024

Masaki Kobayashiயின் Human Condition படத்தில் ஜப்பானின் குடியேற்ற நாடாக உள்ள மஞ்சூரியாவின் கனிமச் சுரங்கங்களில் மேற்பார்வைப் பணிக்கு அனுப்பப்படுகிறான் நாயகன். கட்டாயப் போர்ப்பணிக்குத் தப்பிய நிறைவில் இளம் மனைவியுடன் அங்கு செல்கிறான். ஊழியர்களைப் பரிவுடன் நடத்தினால் அவர்கள் கூடுதல் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள்; நிறுவனத்தின் உற்பத்தி நோக்கங்களும் ஈடேறும் என்று நம்புகிறான். அங்கு கடும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் சீனப் போர்க்கைதிகளையும் மனித நேயத்துடன் நடத்த முயல்கிறான். No Greater Love என்பது இப்பகுதி வரும் முதல் திரைப்படத்தின் தலைப்பு. செறுநர் மீதும் செலுத்தும் பரிவை மீறிய நயத்தக்க பேரன்பு உண்டோ? எனினும், அதில் பல இடர்ப்பாடுகளைச் சந்திக்கிறான். அவர்களுக்கு நன்மை செய்யும் முனைப்பில் பெருமளவு தோல்வியே அடைகிறான். அவர்களின் மாளாக் கண்ணீர் அவன் உள்ளத்துள் பூசல் எழுப்புகிறது. அவனது நண்பன், ‘இந்தச் சமூக அமைப்பிலுள்ள அடிப்படை முரணைக் களையாமல் உன்னால் இதற்குத் தீர்வு காணவியலாது,’ என்கிறான். ‘நீ மட்டும் மானுட நேய இரயில் ஏறிவிட முடியாது,’ என்று சவால் விடுகிறான். இச்சமூக முரணே அவனது மானுட நேயத்தை அடைக்கும் தாழாகிறது.

இப்படம் முழுக்கவே உலகப்போரில் ஜப்பானியர்களின் செயல்பாட்டை முன்வைத்து இந்த அடிப்படை மானுட முரணைக் கூர்ந்து அலசுகிறார்கள். பாசிசப் படைகளாயினும் செம்படைகளாயினும் ஏகாதிபத்திய முதலாளித்துவப் படைகளாயினும் வன்முறையின் மீதே கட்டியெழுப்பப்பட்டு உள்ளும் புறமும் அடக்குமுறையின் துணையாலேயே இயங்குகின்றன. அப்படியான அடக்குமுறை கொண்ட அமைப்புகளைச் சார்ந்திருக்கும் எந்த அரசியல் தத்துவமும் தனிமனித விடுதலைக்குப் பயன்படுவதில்லை. ‘இது சமத்துவச் சமூகம் நோக்கிய பாதையில் ஒரு படிநிலை,’ என்ற ஆறுதல், ஆற்றாது அல்லற்படும் மனிதர்க்குப் போதுமானதாக இல்லை. மார்க்சியவாதியான நாயகனை – அதன்காரணமாகத் தன் நாட்டினரால் எப்போதும் ஐயத்துடன் கீழாக நடத்தப்பட்டவனை, தன் சக கைதிகளின் உரிமைக்காகச் செயல்பட்டதால் ரசியநாட்டுச் செம்படைத் தளபதி ‘பாசிச சாமுராய்’ என்று தூற்றுகிறார். போர்க்கைதியாகிவிட்ட அவனால் எதிர்த்தரப்பில் இருக்கும் செம்படையினரோடு உரையாடவே முடிவதில்லை. இருவருக்கும் மற்றவரது மொழி புரியவில்லை என்பது மட்டுமேவா அதன் காரணம்? சொல்லற்றுப் போய் ஸ்டாலினின் சுவருயர நிழற்படத்தையே உற்று நோக்குகிறான். சிரித்த முகத்துடன் வரும் புதிய அதிகாரி, பிறரைத் ‘தோழர்’ என்று அழைப்பதைக் கேட்டு அவனுள் நம்பிக்கை துளிர்க்கிறது. தோழர் என்று அவர் சொல்லிய சொல் அவரை உண்மையான மார்க்சியவாதியாக அவனுக்குக் அடையாளம் காட்டுகிறது. ஆனால் அவரும் மற்றவர்கள் தரவிருந்த தண்டனையைக் கொஞ்சம் குறைத்துத் தந்து புன்னகையுடன் அவனது தோளைத்தட்டி அனுப்புகிறார். அவ்வளவுதான் அவரால் முடிந்தது.

வரலாற்றுச் சூழலில் தனிமனித அலைவுகளைப் பொருத்துவதிலும், அதன் விரிவிலும், ஆழத்திலும், நீளத்திலும் இத்திரைப்படம் தல்சுதோயின் நாவலைப் படிப்பதற்கு இணையான அனுபவத்தைத் தருகிறது. ஜப்பான் தோல்வியுற்றுப் பதினைந்து ஆண்டுகளுக்குள் ஜப்பானிய தேசியம் குறித்த கடும் விமர்சன நோக்குடன் இப்படியொரு நீண்ட படத்தை ஒன்பது பாகங்களில் (மூன்று படங்களாக) அவர்களால் எடுக்க முடிந்துள்ளது. ‘ஜப்பானியனாகப் பிறந்தது எனது தவறன்று. ஆனால் அதுவே எனது மிகப் பெருங்குற்றம் ஆகிவிட்டது,’ என்கிறான். இலங்கையிலோ காசுமீரிலோ அயோத்தியிலோ இந்தியாவின் செயல்பாட்டை நேரடியாக விமர்சித்து இன்று இப்படியொரு படம் வெளிவந்து திரையிடப்பட இயலுமா என்பது ஐயமே.

காசா, காங்கோ போன்ற இடங்களில் நடைபெற்றுவரும் இனப்படுகொலைகளின் பின்னணியில் இப்படத்தைப் பார்த்தது படத்துக்குக் கூடுதல் அர்த்தங்களைக் குவிக்கிறது. நிறவெறி/இனமேன்மை/நுகர்வுவெறி அடிப்படையில் எழுப்பப்படும் பேரரசுவாத அமைப்பில் எத்தனைதான் முயன்றாலும் ஒடுக்குமுறையும் கொலைவெறிச் செயல்களும் அரங்கேறியே தீரும்.

சீனப் போர்க்கைதிகளை அழைத்துவர இருப்பூர்திக்குச் செல்லும் நாயகன் அங்கு மூடிய இரும்புப் பெட்டிகளுக்குள்ளிலிருந்து காற்றும் உணவுமின்றி குற்றுயிராய் வெளிப்படும் நூற்றுக்கணக்கானோரை எதிர்கொள்கிறான். வெளியேறியதும் உணவைக் கண்டு வெறியேறி ஓடுகின்றனர். பலநாள் பட்டினிக்குப்பின் திடீரென்று அள்ளி உண்டால் மடிந்து போவார்கள் என்று நாயகன் சாட்டையைச் சுழற்றியபடி அவர்களிடம் கெஞ்சிக்கொண்டும் அடித்துக்கொண்டும் தடுக்க முனைகிறான்.

சென்ற வாரம் காசாவில் உணவு வண்டியில் உணவு பெற வந்த பாலசுத்தீனர்கள் மீது குண்டுமழை பொழிந்து நூற்றுக்கும் மேற்பட்டவரைச் சுட்டுக்குவித்தனர் இசுரேல் ஆதிக்கப் படையினர். இதனால் உளச்சான்று உலுக்கப்பட்டு உணவுப்பொட்டலங்களை விண்ணிலிருந்து தூவுகிறது அமெரிக்கா. போரை நிறுத்தவேண்டும் என்பதோ பட்டினிக்கான காரணிகளை அகற்றவேண்டும் என்பதோ இந்த இனவெறி அமைப்புகளுக்கு இல்லை.

மற்றுமொரு காட்சியில், கவசவூர்தியின் அடியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கும் உடல் காட்டப்படும். இதேபோல இசுரேலியக் கவசவூர்தி ஏறி எலும்புகள் துருத்தி தசை கிழிந்து கிடக்கும் காட்சி காசாவிலும் அண்மையில் நடந்தேறியது.

போர்க்கால நெருக்கடியில் இந்நிகழ்வுகள் நடந்தாலும், இவை முன்வைக்கும் முரண்கள் அன்றாட வாழ்க்கைக்குரியவை; சாமானிய மனிதர்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்பவை.
எத்தனைதான் மானுடத்தின் மீது பரிவு சொட்டச்சொட்ட நாம் சமூக ஊடகங்களில் எழுதினாலும், அதற்குப் பயன்படுத்தும் திறன்பேசியோ மடிகணினியோ, அதன் மின்கலனுக்குத் தேவையான கோபால்ட்டுக்காகவும் கோல்டானுக்காகவும் காவுகொடுக்கப்படும் காங்கோ குழந்தைகளின் குருதிக் கறை படிந்தே நம்மை வந்தடைகின்றன. நமக்குச் செய்திகளையும் பேரிலக்கியங்களையும் கொண்டு சேர்க்கும் மேலை நிறுவனங்களில் பலவும் பாலசுத்தீனிய இனப்படுகொலைக்கும் வெவ்வேறு இடங்களில் இன்னபிற பாதகங்களுக்கும் துணைபோனவை. நாம் உண்ணும் உணவு ஏதோ ஓர் உழவனுக்கு இழப்பை ஏற்படுத்தியே நம் கையைக் கடிக்காத விலையில் நமக்குக் கிட்டியிருக்கிறது.

தான் உறுப்பாகவுள்ள அமைப்பின் குரூரத்தை வேரறுக்காமல் ஒரு மனிதன் தனது மானுட நேயத்தை மட்டும் களங்கமின்றிப் பாதுகாத்துக் கொள்வது சாத்தியமற்ற ஒன்று. ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் அதை மட்டுமே அவனால் செய்ய முடிகிறது. அதை மட்டுமாவது செய்துதானே ஆகவேண்டும்.


தமிழென்னும் வாய்ப்பு

மார்ச் 2, 2024

இன்று பாரதியார் கவிதைகளில் ஏதேனும் படிக்கலாம் என்று நூலை அவளிடம் கொடுத்தேன். ஆறாவது வகுப்பு படிக்கிறாள்.

கை திருப்பிய பக்கத்தில் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்,’ பாடல் கண்ணிற்பட அதையே படித்தோம்.

சற்று நேரம் உரக்கப் படித்துவிட்டு, ‘எனக்கு இந்தப் பாட்டு சொல்லிக்கொடுங்கண்ணா,’ என்று அவளது தமிழ்ப் பாடநூலை எடுத்து வந்தாள்.

தாயுமானவரின் பராபரக் கண்ணி.

தம்முயிர்போல் எவ்வுயிருந் தானென்று தண்டருள்கூர்

செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே.

அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே.

எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே.

எவ்வளவு அற்புதமான வரிகள்! பின்னவையிரண்டும் நானும் பள்ளிப் பருவத்தில் படித்தவை; பசுமையாய் மனதில் பதிந்து நிற்பவை. பாரதி அப்படியொன்றும் பெரிதாக மிகைப்படுத்தி இல்லாததைச் சொல்லிவிடவில்லை. உலக மொழிகளில் எழுதப்பட்ட மிகச்சிறந்த வரிகளில் இவற்றுக்கும் தலையாய இடமுண்டு என்றே நம்புகிறேன். பலநூற்றாண்டுப் பழமை மிக்கவையாயினும் இத்தனை எளிமையும் இனிமையும் பொருளாழமும் உணர்வுப்பெருக்கும் மானுடந் தழுவிய அருள்நோக்கும் மிக்க வரிகளை நன்றாகப் பழகிய மொழியில் இத்தனை இளமையில் படிக்க இயல்வது எத்தகையதொரு வாய்ப்பு!

இந்த வாய்ப்பை வெறும் பிழைப்பு நோக்கில் நழுவவிடச்செய்யும் பெற்றோர்களின் குழந்தைகள் அனுதாபத்துக்குரியவர்கள். அதற்குப் பல பத்தாண்டுகளாக வழிவகுத்துள்ள ஒன்றிய, மாநில அரசுகள் கண்டனத்துக்குரியவை.


யாரைப் பற்றிப் பேசுகிறோம்? ஏன்?

பிப்ரவரி 18, 2024

எக்சில் ஒரு நண்பர் அலெக்சி நவால்னி ரசியச் சிறையில் இறந்துபோனது குறித்துச் சினந்து எழுதியிருந்தார். அவர் சினம் நியாயமானதுதான். கருத்துமுரண்களுக்காகக் கொடுஞ்சிறையில் அடைத்துச் சாகடிப்பது கொடுங்கோன்மையே.

ஆனால் மேற்குலகம் ஊதிப்பெருக்கும்/மறைக்கும் எந்த நிகழ்வையும் ஐயத்துடனும் பிற கோணங்களிலும் அணுகவேண்டும் என்ற தெளிவையும் கடந்த சில மாதங்களில் எட்டியுள்ளேன்.

இதே நண்பர், மக்களாட்சி குறித்தும், மனித உரிமைகள் குறித்தும், பேச்சுச் சுதந்திரம் குறித்தும் பாடமெடுக்கும் மேலை நாடுகளால் வேட்டையாடப்பட்டுச் சிறையிலிருக்கும் Julian Assange குறித்து இதுவரை எதுவும் எழுதியதில்லை. இதே நாடுகள் வழங்கும் ஆயுதங்களாலும் ஆதரவாலும் காசாவில் 115 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறித்து எதுவுமே எழுதியதில்லை. இந்த நாடுகளும் அவற்றின் ஊடகங்களுமே நம்முடைய கருத்துகளையும் இரசனையையும் அரசியலையும் முடிவுசெய்யுமளவு தாக்கம் செலுத்துகின்றன.

நம் கருத்துகள் மீது எவ்வித குறிப்பிடத்தக்க தாக்கமும் செலுத்தாத ஒரு முற்றதிகார நாட்டில் நடந்த நவால்னியின் மரணம், பிறரது படுகொலைகளைவிட இவரைப் பாதித்ததற்கும் இந்த மரணத்துக்கு மேலை ஊடகங்களில் கிடைத்துள்ள வெளிச்சமும் பிறவற்றைச் சூழ்ந்துள்ள இருட்டடிப்புமே காரணமாக இருக்கமுடியும்.

பைடன், ஒபாமா, ரிசி சுனாக் முதல் பிபிசி/சிஎன்என் ஊடாக இந்த நண்பர்வரை பலரும் இதைக்குறித்துப் பேசி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலனவர்களின் சொற்களில் அசாஞ்சும் பாலசுத்தீன ஊடகவியலாளர்களும் ஒருபோதும் முதன்மை பெறப்போவதில்லை. (அசாஞ்சின் ஆதரவாளர்கள் பலர், அவர் மனைவி உட்பட, நவால்னியின் மரணத்தைக் கண்டித்துள்ளனர். அத்தகைய எதிர்ப்பு நிலையானதொரு கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.)

ரசியாவிலேயே ஒடுக்கப்படும் புடினின் பிற அரசியல் எதிரிகளைப் பற்றி – நவால்னியைவிட முக்கியமானவர்களைப் பற்றி, எந்தச் செய்தியும் நாம் அறிவதில்லை என்பதையும் சுட்டி, அது ஏனென்ற கேள்வியை முன்வைக்கிறது இன்னொரு பதிவு:


அறம்பிறழ்ந்த கோயில்

ஜனவரி 22, 2024

நான் பள்ளிநாட்களில் பேச்சுப்போட்டிகளுக்குச் செல்லத் தொடங்கிய கட்டத்தில்தான் அத்வானியின் இரத யாத்திரை நடந்தது. இதுகுறித்து அப்பா எழுதித்தந்த ஓர் அடுக்குமொழித் தொடரைத்தான் முதன்முதலாக சொல்லத்தொடங்கினேன் – ‘அயோத்தி அயோக்கியர்களின் புகலிடமாகிறது’. 1989-1993ல் கோவையில் நானும் என் தங்கையும் இதைச்சொல்லாத பேச்சுப்போட்டி மேடைகளே இருந்திருக்காது. பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் இதைச் சொல்வதற்கான சூழல் அன்றிருந்தது. பின்னும் ஆண்டுதோறும் கம்பன் விழா நடந்துகொண்டிருந்த பள்ளி எங்களுடையது. கம்பன் விழாப் போட்டியில் வென்று நானும் விழா மேடையில் பேசியுள்ளேன். அந்த மேடைகளில் முன்வைக்கப்பட்ட இராமன் அறத்தின் காவலன். இறை நம்பிக்கையற்ற எனக்கும் ஏற்புடைய காப்பிய நாயகன். இராமன் அறம் தவறிய சில தருணங்களே மிகுதியாகப் பேசப்பட்டன. வாலி வதமும் சீதையைத் தீக்குளிக்கச் செய்ததும் நீங்காத வழுக்களாயின. ஆட்சியில் அமர்ந்து மனைவியைக் காட்டிற்கு அனுப்பிய பிந்தைய இராமனின் புராணம் தமிழ் இலக்கியங்களில் கம்பனாலும் பிறராலும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. அறம் தவறிப் பெற்ற தரணிதன்னை தீவினையென்ன நீத்த பரதனை ‘ஆயிரம் இராமன் நின்கேழாவரோ’ என்ற கம்பனைப் பேசுவதிலும்
‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங் காது,’ என்றிருந்த கம்பனின் அயோத்தியைப் பேசுவதிலும், அதே மேடைகளில் அயோக்கியர்களின் புகலிடமாகிவிட்ட அயோத்தியை இடித்துப் பேசுவதிலும் அன்று முரண் ஒன்றும் தென்படவில்லை.

பாபர் மசூதி இடிப்பை ஆதரித்த நண்பர்கள் யாரும் எனக்கு அன்று இருந்ததாக நினைவில்லை. இன்று பள்ளி, கல்லூரி நண்பர்கள் குழுமங்களில் அரசியல் பேசவே அச்சமாக உள்ளது.

அறம் பிறழ்ந்து எழுப்பப்படும் கோயிலில் இன்று வெற்றி விழா. ஈழம், காசா என்று பல இடங்களிலும் நாம் பார்த்ததுதான்- போர்வீரர்கள் தம் ஈனச்செயல்களைப் படம்பிடித்துப் போர்ப்பதக்கங்களாகத் தாமே பகிர்ந்து கொள்வதை. அப்படியான ஒரு போர்ப்பதக்கம்தான் இக்கோயில். எத்தனை வழக்காடு மன்றங்கள் கொண்டு தீர்ப்புகள் வழங்கிக்கொண்டாலும் எத்தனை நோன்புகள் இருந்து கங்கை நீராலும் இராமேசுவர நீராலும் கழுவினாலும் போக்கமுடியாத கறை இது. அயோத்தி அரசியலில் சிறைப்பட்டுவிட்ட இராமனை ஆயிரம் காந்திகளாலும் இனி மீட்கமுடியுமா?


பண்பாட்டுப் படுகொலை

ஜனவரி 22, 2024

பாலசுத்தீனின் அத்தனை பல்கலைக்கழகங்களும் தகர்க்கப்பட்டுள்ளன. அழகிய சூழலில் அமைந்திருந்த கடைசிப் பல்கலைக்கழகம் வெடித்து நொறுங்கிப் புகைமூட்டத்தில் கரைந்து காணாமற் போகும் காணொளி நேற்று வெளிவந்துள்ளது. கடந்த இரு மாதங்களாக இசுரேல் தீவிரவாதப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இடம்தான் இது. புதிதாக எதையும் கண்டறிந்து தகர்ப்பதற்கான தேவை இல்லை. ஆனாலும் தகர்த்தனர். காசாவின் மக்களை மட்டுமல்ல, அவர்களின் மொத்தப் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிவுச்சூழலையும் சேர்த்தழித்து, அவர்கள் இனி எழவே வழியில்லாமல் செய்யும் முனைப்பாகவன்றி இதை வேறெதுவாகவும் பார்க்கமுடியாது.

அமெரிக்காவும் தோழமை நாடுகளும் இதையும் கண்டிக்க மறுக்கின்றன.

அயோத்தியில் மசூதியை இடித்து எழுப்பும் கோயிலுக்கு, உச்ச நீதிமன்ற அங்கீகாரம் பெற்று, தேசிய விடுமுறைவிட்டுக் கொண்டாடும் நாட்டிலிருந்து இதையெல்லாம் தொடர்ந்து எழுதுவது தயக்கமாகத்தான் உள்ளது. ஆனால் பெருந்தீமைகளைச் சிறுகோடுகளாக்கும் தூய தீமையாய் இசுரேல் அணி இன்று கூடி நிற்கிறது.


மேற்கத்திய ஊடகங்களின் இனப்படுகொலை ஆதரவுநிலை

ஜனவரி 14, 2024

Poetry Foundation இணையத்தளம், அதே நிறுவனத்தின் Poetry இதழ் ஆகியவை ஆங்கிலக் கவிதையுலகில் மதிப்புக்குரிய இடத்தில் இருப்பவை(இருந்தவை). காசாவில் தற்போது நடைபெறும் இன அழித்தொழிப்பு குறித்து முற்றமைதி காத்துவருகின்றனர். பாலசுத்தீனக் குரல்கள் கடந்த மூன்று மாதங்களாக இத்தளங்களில் புதிதாக ஒலிக்கவே இல்லை. பலரும் குற்றம்சாட்டிய பின்னும் இன்னும் காசா குறித்து ஆழ்ந்த அமைதி காக்கின்றனர். ரஃபாத் ஆல்-அரீர் உட்பட பல பாலசுத்தீனக் கவிஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு சொல் இல்லை. ஆலரீரின் கவிதை ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் ஒரு சொல் இல்லை. அவர்களே முன்பு பதிப்பித்துள்ள கவிஞர் மொசாப் அபு தோகா இசுரேலால் கடத்தப்பட்டபோது பலரும் குரலெழுப்பினர். இங்கு ஒரு சொல் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு சொல் இல்லை. ஆதரவு கூற, ஆறுதல் சொல்ல, பொதுவாகவேனும் வருந்திப் பாட ஒரு கவிதைகூடவா எழவில்லை? அவர்கள் பதிப்பிக்க இருந்த ஒரு சயனிய-எதிர்ப்பு யூதரின் மதிப்பிரையைக் கூட அக்டோபர் 7க்குப் பிறகு ஒத்திவைத்தனர்.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொத்துக்கொத்தாய்க் கொன்று குவிக்கப்படும்போது அமைதி காப்பது நடுநிலை அல்ல.

கவிதை என்பது ஒரு பெருந்துயர் நடந்துமுடிந்த பின் அழுவதற்கு மட்டுமா வேண்டும்? கவிதை என்பது வெறும் காதலையும் காமத்தையும் காற்றையும் வெளியையும் தனிப்பட்ட சிற்றின்னல்களையும் பாடுவதெனில் உங்கள் கவிதையை காசாவின் எரிகளங்களில் எறிக.

——–

இதேபோலத்தான் மேற்குலகின் பல மையநீரோட்ட ஊடகங்கள் – BBC, CNN, The New York Times, The Atlantic முதலானவை, அமைதிகாத்தோ, இனப்படுகொலையை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்தோ, ஒரு தரப்பின் துயரைத் தூக்கியும் மறுதறப்பினதைத் தாழ்த்தியும் செயல்பட்டுவருகின்றன. எக்சில் பல பாலசுத்தீன ஆதரவுப் பதிவர்களும் பதிவுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. பல ஊடகங்கள் சர்வதேச நீதமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்காடியதை அதிகம் கவனப்படுத்தாமல் இசுரேலின் தடுப்புவாதங்களை மட்டும் முன்னிலைப்படுத்தியுள்ளன. நம் கண்முன் நடக்கும் படுகொலையை இவர்கள் இவ்விதம் புறக்கணித்தும் திரித்தும் ஒருதலையான சித்திரத்தை அளிக்கும்போது, நாம் நேரடியாக அறிய வாய்ப்பற்ற பிறவற்றைக் குறித்து இவர்கள் கூறியவற்றையெல்லாம் எப்படி முழுமையாக நம்புவது? ஊடகம், இலக்கியம், திரைப்படம், வரலாறு என்று மேற்குலகம் இதற்குமுன் நமக்குக் கட்டமைத்துக் காட்டிய அனைத்தையும் இனி ஐயத்துடன் அணுகவேண்டும், மறுபரிசீலனை செய்யவேண்டும், பெருந்திரளுக்கு புறத்தேயிருந்து ஒலிக்கும் குரல்களுக்கும் புதிய சாத்தியங்களுக்கும் செவிதிறந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுக்கிறது.

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி முதலிய நாடுகள் தாராளச் சிந்தனையையும் கருத்துச் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் முன்வைக்கின்றன என்பது எத்தனை பெரிய பொய் என்பதும் இந்த மூன்று மாதங்களில் வெளிப்பட்டுள்ளது. அவர்களது நாடுகளிலுமே இவையனைத்துமே காலத்துக்கேற்ப, வசதிக்கேற்ப எடுத்தாளப்படும் கருவிகளாகவே உள்ளன. இவர்கள் இன்னமும் வெள்ளையின மேலாதிக்க, காலனியாக்கக் காலத்திலிருந்து வெளிவரவே இல்லை என்பதே தெளிவாகியுள்ளது.

முழுக்க மரபான ஊடகங்களைச் சார்ந்திராத அமெரிக்க இளைஞர்கள், மூளைச்சலவை செய்யப்பட்ட மூத்தவர்களைப் போலன்றி, பெருமளவு இனப்படுகொலைக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்ற தரவுகளே ஒரே ஆறுதல்.