டாடா நேனோ -கார்வலம் போகலாம்

ஜனவரி 11, 2008

இந்திய நடுத்தர வர்க்கம் எட்டிப்பிடிக்கிற விலையில் டாடா நிறுவனம் கார் தயாரித்திருக்கிறது. அனைவரும் ஒரு மனதாய் வரவேற்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம் தான் – நிறைய எதிர்ப்புகள், இரு சாராரிடமிருந்து. நிலம் தரக்கூடாது என்று கொடி உயர்த்தியிருக்கிற அரசியல்வாதிகள் ஒருபுறம். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று வருந்துகிறவர்கள் மறுபுறம். இரண்டுமே யார் சரி என்று உறுதியாகத் தீர்மானிக்க முடியாத பிரச்சனைகள்.

முதலில் சிங்கூர். கம்யூனிஸ்ட்டுகள் ஆண்டாண்டுகளாய் அவர்களே வளர்த்துவந்த சித்தாந்தத்திற்கு எதிராகச் செல்ல நினைக்கிறார்கள். பழகிப்போன வங்க மக்களோ மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எதிர்த்தே பழகிய இடதுசாரிகளுக்கு, எதிர்ப்பைச் சரியான முறையில் எதிர்கொள்ளத் தெரியாததுதான் கைமீறிய கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம். சிங்கூரில் எழுந்த எதிர்ப்பலைகள் நந்திகிராமில் இரத்த ஆறாகின. சிங்கூர் எப்படியோ தப்பித்தது.

அடுத்த எதிர்ப்பு இன்னமும் சிக்கலானது, சுற்றுச்சூழல் பற்றியது. எல்லோரும் கார் வாங்கிவிட்டால், உலகமே புகை மண்டலத்தால் சூழ்ந்துவிடும், வெப்பம் பெறுகிவிடும் என்ற அச்சங்களின் அடிப்படையிலானது. நோபல் பரிசு பெற்ற பச்சோரி, சுனிதா நாராயண் போன்றவர்களின் இந்த அச்சத்தில் நியாயம் இருந்தாலும், இந்த நியாயத்தை மிஞ்சுகிற வேறு சில நியாயங்களும் இருக்கின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய கவலையால், விஞ்ஞான வளர்ச்சியை, பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்யமுடியுமா? இல்லை. கூடாது.

ஏற்கனவே வளர்ந்துவிட்ட மேல்நாடுகள் வளர்ந்துகொண்டிருந்த போது, இத்தகைய கவலைகள் எதுவும் எழவில்லை. இன்று மற்றவர்கள் முன்னேற நினைக்கையில், சுற்றுச்சூழலின் பெயரால் அந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவது முறையல்ல. மேல்நாட்டில் டாம், டிக், ஹேரி  எல்லாம் கார் ஓட்டும்போது நம் ஊர் குப்புசாமியும் கந்தசாமியும் கார் வாங்க வழிவகுக்கக் கூடாதா? இவர்கள் பேருந்தில் செல்ல ஒப்புக்கொண்டால், வெள்ளையர்களும் அவ்வழியைப் பின்பற்றுவார்களா? நடுத்தர வர்க்கம் கார் ஓட்டினால்தான் சுற்றுச்சூழல் மாசுபடுமா? பச்சோரியும் சுனிதாவும் பேருந்தில் செல்கிறார்களா என்பது தெரியவில்லை. சந்தேகம்தான்.