கங்குலி – உறுதிகொண்ட போராளிக்கு ஒரு சரிவு

ஜனவரி 22, 2008

கங்குலியை உங்களுக்குப் பிடிக்கலாம், பிடிக்காமலிருக்கலாம். ஆனால், நிச்சயமாய் ஏற்றுக்கொள்வீர்கள் அவர் ஒரு கடுமையான போராளி என்பதை. இன்றைய இந்திய அணியின் அவ்வப்போதைய முக்கிய வெற்றிகளுக்குப் பலவகைகளில் அடித்தளம் அமைத்தது கங்குலிதான். கங்குலிக்கு முன் எந்த இந்திய அணித்தலைவரும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று இவ்வளவு வெறியோடு விளையாடியதில்லை; வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் பகுதி (நன்றாக விளையாடுவோம் முடிந்தால் வெல்வோம்) என்கிற எண்ணமே நிலவியிருக்கிறது. கங்குலிதான் முதன்முதல் வெற்றியைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ளாத மன உறுதியோடு விளையாடியவர். எல்லாவற்றையும் அவர் வென்றுவிடவில்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றி மட்டுமே குறியாய்க் கொண்டிருந்தார் என்பதில் ஐயமில்லை.

 கங்குலியின் மற்ற பலவீனங்கள் அவரை வீழ்த்தின. பல்வேறு தருணங்களில் சுயநலக்காரராய், தலைக்கனம் மிக்கவராய் கங்குலி சித்தரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த பலவீனங்கள் தான் அவரது பலமும்கூட. சுயநலமற்ற எந்த மனிதன் வெற்றியை ஒருமனதாய் விரட்டியிருக்கிறான். தன்னம்பிக்கையை மிகுதியாய்க் கொண்ட எவன் கொஞ்சம் தலைக்கனம் இல்லாமல் இருந்திருக்கிறான். கங்குலியும் அப்படித்தான். சச்சினுக்கு இணையாய் இயற்கையான திறமை இல்லை எனினும் அவருக்கிணையாய் விளையாடியது (ஒரு நாள் போட்டிகளில்) கங்குலியின் ‘பலவீனங்களின்’ வெளிப்பாடுதான்.

இவர் இனித்திரும்பவே முடியாது, அவ்வளவு மனவுறுதி கிடையாது என்று எல்லோரும் (நான் உட்பட) நினைத்திருந்தபோது அவர் மறுபிரவேசம் செய்து, அருமையாய் விளையாடியது எதிர்பாராத திருப்பம். எதிரணிகளைக் கூட, அவரை முற்றிலுமாய் வெறுத்த ஸ்டீவ் வா போன்றோரைக்கூட அசாத்திய திருப்பம். ஊழையும் உப்பக்கம் காண முடியும் என்பதற்கு அத்தாட்சி.

முந்தைய வீழ்ச்சி ஓரளவு சரியான காரணங்களுக்காக நிகழ்ந்தது என்றாலும், மறுபடி அவர் ஓரம்கட்டப்படுவது உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் வந்த சோதனை. வயதைக் காரணம் காட்டித் திறமையை, முயற்சியை, நல்ல பங்களிப்பை நிராகரிப்பது நியாயமான வாதமாய் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

கங்குலி உழைவின்றி மறுபடியும் ஊழை உப்பக்கம் காண்பாரா, இல்லை ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.