ஒரு சிறுமியின் மரணம்

ஒக்ரோபர் 14, 2017

எங்கோ நடக்கும் மரணங்களைக் குறித்து ஆவேசமாகப் பொங்கும் மனம் விரைவில் வேறு செயல்களில் ஈடுபட்டுவிடுகிறது. அருகில் நிகழும் மரணம் விளைவிக்கும் குற்றவுணர்வு எத்தனை திசைதிருப்பல்களுக்குப் பின்னும் அகல மறுக்கிறது.

இவ்வாரம், பத்தாவது படிக்கும் மாணவியான நித்யா எங்கள் கிராமத்தில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். பள்ளியில் ஆசிரியர் அடித்திருக்கிறார் என்பதுதான் ஊரில் பேச்சு. பத்து நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் கைக்காயத்துக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டதாகக்கூட கூறுகிறார்கள். சரியாகப் படிக்காததால், ஆசிரியர் பெற்றோரை அழைத்துவரச் சொல்லிக் கட்டாயப் படுத்தியிருக்கிறார். கூலி வேலை செய்யும் பெற்றோர் வேலைப் பளுவாலோ, அறியாமையாலோ அசட்டையாலோ பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கின்றனர். ஆசிரியர் தொடர்ந்து கண்டித்தும் எச்சரித்தும் வந்திருக்கிறார். அந்த நாளில், பள்ளிக்குக் கிளம்பி விட்டு, தலைசீவி, பேருந்துக்குக் காசு வாங்கிவிட்டு, பையை வீட்டிலேயே விட்டுவிட்டு அந்தக் கிணற்றில் விழுந்திருக்கிறாள். புதர் மண்டி, அது நாள் வரையில் வற்றிக் கிடந்த கிணற்றில் இந்த வாரம் தான் ஆழ்குழாய்க்குழியிலிருந்து நீர் நிரப்பியிருக்கிறார்கள். அந்த தோட்டத்துக்குச் செல்வதைக் கூட நாங்கள் குடியிருக்கும் தோட்டத்தில் வேலை செய்பவர் பார்த்திருக்கிறார். காலைக் கடன்களுக்காகச் செல்லலாம் என்று நினைத்து ஏதும் கேட்காமல் இருந்திருக்கிறார். பெற்றோர் ரேசன் கடை வரிசையில் நின்றிருந்துவிட்டு, அவளது பையையும் செருப்பையும் வீட்டில் பார்த்ததால், மகளைக் காணோம் என்று எல்லா இடங்களிலுல் தேடியிருக்கிறார்கள். எதேச்சையாக அந்தக் கிணற்றில் எட்டிப் பார்த்த யாருக்கோ பள்ளிச் சீருடை தெரிந்திருக்கிறது. பின் ஊரே கூடிவிட்டிருக்கிறது.

இது எதுவும் தெரியாமல் நாங்கள் ஊரைவிட்டுத் தள்ளியிருக்கும் எங்கள் தோப்பில் இருந்தோம். மாலை அந்தச் சிறுமியின் பிணம் அடக்கம் செய்யப்படும் போதுதான் செய்தி கேள்விப்பட்டு வந்து சேர்ந்தோம்.

‘நாங்களா இருந்திருந்தா வாத்தியாரத் தூக்கிட்டுவந்து வெட்டிப்போட்டிருப்போம்,’ என்கிறார்கள் சில மலையாளிகள்.
‘படிப்பு வரலைன்னா வாத்தியார் அடிக்காம என்ன பண்ணுவாங்க? அதுக்காக இந்தப் பொண்ணு இப்படிப் பண்றதா?’
‘யாரைச் சொல்லி என்ன பண்றது? இவங்க அப்பா அம்மா ஸ்கூலுக்குப் போயிருக்கணுமில்ல? போறதுக்குப் பயந்திட்டு இதுக பாட்டுக்கு வீட்டிலையோ உக்காந்துட்டா என்ன செய்யறது?’
‘ஒண்ணும் இல்லாதவங்கங்கிறாதால ஒண்ணும் செய்யாம விட்டுட்டாங்க. வசதியான குடும்பமா இருந்திருந்தா பெரியா ரகளை ஆயிருக்கும்.’
‘இதுவே எஸ்.சி. பொண்ணா இருந்திருந்தா சும்மா விட்டிருக்க மாட்டாங்க. நடந்திருக்கிறதே வேற.’

எத்தனையோ பேச்சுகள். மரணத்தை நோக்கித்தள்ளும் அளவிற்குப் பள்ளியில் ஏதோ நடந்திருக்கிறது. குழந்தையைக் குறைகூறுவதில் நியாயமில்லை. பெற்றோரைக் குறை சொல்வதிலும் பயனில்லை. நித்யா அமைதியான பெண் என்றும் பயந்த சுபாவம் என்றுமே எல்லாரும் கூறக்கேட்கிறேன். நித்யாவின் அண்ணனும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருக்கிறான்.

காவல்துறை விசாரணையில், ஆசிரியர் கண்டித்திருக்கிறார்/அறிவுறுத்தியிருக்கிறார் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள் போலும். அடுத்த நாள் செய்தித்தாள்களில் அவ்வாறே வந்தது.

அடுத்த நடவடிக்கை குறித்து நான் உரையாட முனைந்தபோது, பெற்றோரும் ஊர்ப்பெரியவர்களும் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

ஆசிரியருக்குத் தண்டனை வாங்கித்தந்தாக வேண்டும் என்பதில் ஏனோ எனக்கும் பெரிய வெறி இல்லை. தண்டனைகளில் எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை என்பதால் இருக்கலாம். மனமாற்றம் தான் இங்கு அவசியம். இது ஒருவரிடமுள்ள பிரச்சனையல்ல. இன்றும் பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளை அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பல பெற்றோர்களே அடிப்பதை ஊக்குவிக்கிறார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல முடிவுகள் வரவேண்டும் என்கிற அழுத்தம் இன்று அரசுப் பள்ளிகளையும் நெருக்கத்தொடங்கிவிட்டது. நன்றாகப் படிக்காத குழந்தைகள், முன்பே வடிகட்டப்பட்டிருக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள். அவர்களைப் பெரும் சுமையாகக் கருதுகிறார்கள்.

எனக்கு நானே என்னென்னவோ சால்சாப்புகளைச் சொல்லிக்கொள்கிறேன்.

இது இன்னொரு குழந்தைக்கு மறுபடி நேர்ந்துவிடக்கூடாது. எவரும் தட்டிக்கேட்க மாட்டார்கள் என்கிற எண்ணம் ஆசிரியர்களுக்கு வந்துவிடக்கூடாது.

அடுத்த வாரம் இன்னொரு நண்பருடன் அந்தப் பள்ளிக்குச் செல்ல இருக்கிறேன். ஆசிரியர்களோடு கலந்துரையாடல், கவுன்சலிங் என்று என்னால் இயன்ற செயல்களைச் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ள முனையவிருக்கிறேன்.

எங்கள் தோட்டம் இக்கிராமத்தில் இருந்தாலும், இதுவரை பக்கத்து கிராமத்தில்தான் குடியிருந்தோம். இதே கிராமத்துக்குக் குடிபெயர்ந்து ஒன்றரை மாதங்கள்தான் ஆகின்றன. குழந்தைகளோடு கூடுவதற்கு இங்கு இடம் அமையாததால், இன்னும் பயிலகம் தொடங்கவில்லை. குழந்தைகளோடு பணியாற்றத் தொடங்கவில்லை. ஒருவேளை இந்தத் தாமதத்தைத் தவிர்த்திருந்தால், இந்த மரணத்தைக்கூடத் தவிர்த்திருக்க முடியுமோ என்னவோ? என் தெளிவின்மையும் போதாமைகளும் பெரும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

எங்கள் வீட்டுச் சன்னல்களிலிருந்து பார்த்தால் அந்தக் கிணறு இருக்கும் இடம் தெரிகிறது. அங்கு கிணறு இருப்பதை இதுநாள்வரை நாங்கள் அறியவில்லை. நித்யாவை நாங்கள் சந்தித்ததில்லை. ஆனால், அவள் அந்தக் கிணற்றினை நோக்கிப் பதுங்கிச் சென்று, புதர்களில் சரிந்து விழுந்தபோது நாங்கள் நூறடி தொலைவில் தான் இருந்திருக்கிறோம். அங்கு பார்வை திரும்பியிருந்தால், அவளைக் கண்டிருக்கக்கூடும். அவள் அலறியிருந்தால் கேட்டிருக்கக்கூடும். எங்கள் தோட்டத்துக்குச் செல்லும் வழியில்தான் அவளுக்கு எழுப்பப்பட்ட மண் சமாதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. அந்தச் சமாதி இனிவரும் மழையில் தரையோடு சமனாகிவிடும். என் மனம் ஒருபோதும் சமாதனமாகப் போவதில்லை.

ஒவ்வொரு முறை ஒரு குழந்தையை நோக்கிக் கையை உயர்த்தும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனது கைகளில் கொலைக்கயிறு இருக்கக்கூடும் என்கிற உணர்வு எழட்டும். அவர்கள் உதிர்க்கும் வசைச் சொற்கள், கொடுக்கும் தண்டனைகள் உயிரைக் குடிக்கக்கூடும் என்பதை உணரட்டும். அன்பை மட்டுமே விதையுங்கள். கல்வி, மதிப்பெண்கள், உங்கள் ஊதியம் எல்லாமே இரண்டாம்பட்சம். நித்யா தேர்வில் தோல்வியடைந்திருந்தால் அடைந்திருக்கட்டுமே. மரணம் எல்லாவற்றையும் அர்த்தமற்றதாக்குகிறது. கல்வி, கல்விமுறை, குழந்தைகள் குறித்து நமது பார்வைகளில், புரிதல்களில் பெருமாற்றங்கள் வந்தாகவேண்டும் – இன்னொரு அனிதாவையோ நித்யாவையோ இழப்பதற்குமுன்.