இடுக்கில் நுழைதல்

நவம்பர் 7, 2019

உலகம் திருக்குறளைப் பொதுமறையாக ஒப்புக்கொள்கிறதோ இல்லையோ, தமிழர்கள் திருக்குறளைப் பொதுமறையாகத்தான் கொண்டாடிவந்துள்ளார்கள். மதம் தாண்டி, ஒரு மொழியின், அம்மொழிபேசும் மக்களின் பொது அடையாளமாகக் குறள் கருதப்பட்டுவந்துள்ளது. இது ஏதோ திராவிடக் கட்சியினரின் சதியோ சாதனையோ அல்ல. அவர்களுக்கு முன்பே திருக்குறள் பல அறிஞர்களாலும் பொதுமறையாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. பரிமேலழகர் உரையை விளக்கவுரையுடன் பதிப்பித்த வை.மு.கோ. அவ்வாறுதான் கூறுகிறார். சைவ மடமான திருப்பனந்தாள் காசி மடத்தின் உரைக்கொத்துப் பதிப்புகளிலேயே கூட இதைக்காணலாம். ராமக்கிருஷ்ண மடம் பதிப்பித்த கி.வ.ஜ. ஆய்வுரையிலும் இதே முடிவுக்கே வருகிறார்கள்.

வள்ளுவர் இன்ன மதம் என்று எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளும் உரிமை பாஜகவுக்கும் உண்டு. ஆனால் திடீரென்று அவருக்கு ஆதாரமற்ற சமயச்சாயம் பூசுவதிலுள்ள அரசியல் கணக்குகள் ஆபத்தானவை. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் ஒரு முக்கியமான சரடினை அறுக்கும் முயற்சி இது. ஒருவகையில் இது இவர்கள் இந்துத்துவக் கட்டமைப்பில் உள்ளடக்கியிருக்கும் சமணர்களையும் அந்நியப்படுத்தக்கூடும். தமிழின் முக்கியமான சமண, பௌத்தப் படைப்புகளை அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் வழக்கமே உ.வே.சா. காலம் தொடங்கி இங்குண்டு.

குறள் சைவ நூல் அல்ல என்று சொல்பவர்கள் எல்லாரும் சைவ எதிர்ப்பாளர்களோ, இந்துமத எதிர்ப்பாளர்களோ அல்லர். சைவ நூல் என்பதால் திருவாசகத்துக்கு உருகாமலோ போய்விட்டோம். உண்மையில் என் மகள் திருமுறையிசை கற்றுக்கொள்ளத்தொடங்கிய கடந்த ஐந்தாண்டுகளில், திருக்குறளை விடவும் தேவாரமும் திருவாசகமுமே என் காதில் அதிகம் விழுந்துகொண்டிருக்கின்றன. திருக்குறள் சைவ நூலாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம் இருக்கமுடியும்.

திருக்குறள் பரிமேலழகர் உரைப் பதிப்பில் (உமா பதிப்பகம்) வை.மு.கோபாலக்கிருஷ்ணமாச்சாரியார் வள்ளுவர் வைதிகக் கொள்கையினர் என்று கொண்டாலுமே இன்ன மதத்தவர் என்று கூறமுடியாது என்று எழுதுகிறார்:

/இவரது மதம் இன்னதென்று எவ்விதத்திலும் நன்கு விளங்கவில்லை. இவர் இந்நூலின் முதலிற் கூறிய கடவுள் வாழ்த்தும், பல சமயங்கட்கும் பொதுவாகவே உள்ளது; மற்ற விஷயங்களும் பெரும்பாலும் இப்படியே. இவரைச் சைவரென்றாவது வைஷ்ணவரென்றாவது ஒருசார்பாகக் கூறி யாவரும் ஒத்துக்கொள்ளும்படி நிறைநிறுத்துதற்குத் தக்க ஆதாரமொன்றுமில்லை. இவர்க்கு நாயனாரென்று வழங்குகிற பெயர் மாத்திரத்தைக் கொண்டு அவரைச் சைவரென்று சாதிக்கலாகாது; நாயனாரென்னும் அச்சொல் சைவசமயத்தில் மாத்திரமேயன்றி வைஷ்ணவ சமயத்திலும் ஜைந சமயத்திலும் கடவுளுக்கும் அடியார்கட்கும் பெயராக வழங்குதல் உணர்க. […]

இது நிற்க: இவரது மதம் ஜைனமாயிருக்கலாமென்று சிலர் ஊகிக்கிறார்கள்; […] ஜைநர்க்குச் சிறப்பாகவுள்ள புலால்மறுத்தல், கொல்லாமை என்ற ஒழுக்கங்களை மிக வற்புறுத்திக் கூறுதலும், அதிலும் “அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமை நன்று” என யாகத்தை மறுத்தலும் முதலிய என்ப. அந்தத் திருக்குறளில் “உலகியற்றியான்”, “அந்தணர் நூல்”, “மறப்பினுமோத்துக் கொளலாகும் பார்ப்பான்”, “பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”, “அறுதொழிலோர் நூன்மறுப்பர்”, “அவியுணவி னான்றோர்” என்பவை முதலாகக் கூறியன கொண்டு இக்கொள்கை மறுக்கப்படும். இவர் வேதம், கடவுள், உயிர், பூதமைந்து, புலால்மறுத்தல், தவம் முதலியன கொண்டிருத்தலால், பௌத்தருமாகார். இனி, “மடியிலா மன்னவனெய்தும் அடியளந்தான், தாஅயத்தெல்லாம் ஒருங்கு” என்று கூறியிருத்தலாலும், “தாம்வீழ்வார் மென்தோட்டுயிலினினிதுகொல் தாமரைக்கண்ணானுலகு”, என்று சிற்றின்பத்தை எல்லாவற்றினுஞ் சிறந்த மோட்சலோகத்துப் பேரின்பத்தினும் சிறந்தது என்று சொல்ல வேண்டிய விடத்துத் தாமரைக் கண்ணானுலகு என்று திருமாலினது ஸ்ரீ வைகுண்ட லோகத்து இன்பத்தையே குறித்தலாலும், இவ்வுலகமாகிய லீலாவிபூதிக்கும் ஸ்ரீவைகுண்டமென்கிற நித்திய விபூதிக்கும் இறைவன் திருமாலேயென்று தெரிவித்த ஆசிரியர் திருமாலுக்கு உரிய அகாரத்தையே முதன்மொழியாகத் தொடங்கினாலும், இங்ஙன் அகச்சான்று பல இருத்தலால் இவரை வைஷ்ணவர், தம்மதத்தவரென்று சாதிக்கலாம். ஆயினும், தாமரைக்கண்ணானென்பது “மலர்மிலசையேகினான்” என்றாற்போன்று அடியார்களின் இதய கமலத்தின்கணுள்ளானென்ற பொருளைக் காட்டலாமாதலால் திருமாலையே சிறப்பாகக் காட்டுவதென்று கொள்ளவேண்டியதில்லை யென்றும், “அடியளந்தான் தாஅயது” என்று கூறியமாத்திரத்தானே திருமாலினிடத்துப் பக்தியினாற்றான் கூறினாரென்று கொள்ள முடியாதென்றும், பாணினி பகவான் “அ இ உண்” என்று தொடங்கினாற்போல இந்நூலாசிரியர் மங்களவெழுத்தாக அகரத்தைத் தொடங்கியிருக்கலாமென்றும், ஆகவே, இந்த அகச்சான்றுகள் இவரை வைணவரென்று நிலைநாட்டப்போதா என்று வைணவர் கூறுவதற்கு மறுப்புக் கூறவியலும்: இங்கனிருத்தலால், இந்த நூலாசிரியரை வேதவேள்விகளையும் சாதிகளையும் உடன்பட்ட வைதிகக் கொள்கையினரென்று சொல்லலாவதன்றி, இன்ன மதத்தவர்தாம் என்று உறுதியாகச் சொல்லி நாட்டுதற்கு ஏற்ற சிறந்த ஏது ஒன்றும் காணப்பட்டிலது. இங்ஙன் இருப்பது கருதியே திருவள்ளுவரின் திருக்குறளைப்பற்றி

“ஒன்றே பொருளெனின்வேறென்ப வேறெனின்,
அன்றென்ப வாறுசமயத்தார் – நன்றென்ன,
எப்பாலவரு மியைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி”

என்று கூறியதுமென்க./

திருப்பனந்தாள் காசிமடம் பதிப்பித்த திருக்குறள் உரைக்கொத்து நூலின் பதிப்புரையில் இவ்வாறு கூறுகிறார்கள்:
“திருக்குறள் எனும் தமிழ்மறை ஓர் ஒப்பற்ற நூலாகும். […] எல்லா மதத்தினரும் எல்லாத் துறையினரும் உரிமை கொண்டாடும் சிறப்புடையது.”

இவர்களே இவர்களது பதிப்பில் (2002) சமய அடையாளமற்ற திருவள்ளுவரின் படத்தையே போட்டிருக்கிறார்கள்.

திரு.வி.க. திருக்குறளைப் பொதுநெறி, அருநெறி என்றும், தமது தமதென்று இடுக்கில் நுழைதல் கூடாது என்றும் கூறுகிறார். ( திருக்குறள் பன்முக வாசிப்பு – பதிப்பு: மாற்று/வெ.பிரகாஷ்)

“திருவள்ளுவர், நாயன்மார் ஆழ்வார்கட்கு முற்பட்டவர். அவர் அருளிய திருக்குறளோ மன்பதைக்குரிய அருள் மறை; பொது மறை. அத்தகைய ஒருவர் திருவுருவம் சைவ வைணவக் கோயில்களில் ஏன் அமைக்கப்படுவதில்லை? சைவ வைணவ நூல்களில் அடியவர் வாழ்த்தில் அவர் ஏன் சேர்க்கப்படவில்லை? அவர் நூல் பூசைக்காலங்களில் ஏன் ஓதப்படுவதில்லை? அன்பவர்கள் உன்னுவார்களாக. முன்னாளில் திருவள்ளுவர் ஜைநர் என்று கொள்ளப்பட்ட வழக்கே, அவரைச் சைவ வைணவக் கோயில்களும், நூல்களும், சம்பிரதாயமும் புறக்கணிக்கக் காரணமாக நின்றிருக்கலாம் என்று எவரும் ஊகிக்கக் கூடும். பின்னே போந்த சைவ வைணவ அறிஞர்கள், திருவள்ளுவர் அறிவுறுத்திய அருணெறியின் பெற்றியுணர்து, அவரை ஏற்றுப் போற்றுவதோடு, அவரைத் தம்மவர் தம்மவர் என்று கொள்ளச் சொற்போரும் நிகழ்த்தலானார்கள்.

திருவள்ளுவர் அறிவுறுத்தியது பொதுநெறி – அருணெறி. ஜீவகாருண்ய ஒழுக்கம். அந்நெறியை எவர் எப்பெயரிட்டழைப்பினும் அழைக்க. திருவள்ளுவரைச் சைவரெனில், வைணவரெனில், பிறரெனில், அவரது சைவமும் வைணவமும் பிறவும் அருகதேவர் கண்ட அருணெறியின்பாற் பட்டனவென்க. அருகர் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தார்க்கு மட்டும் உரியவரல்லர். அவர் உலகிற்கே உரியர். அருணெறியோம்பப் போந்த ஆசிரியர் பலரும் உலகிற்குரியராவர். அவரைச் சமயவாதிகள் தங்கள் தங்களுக்கே உரியர் என்று கருதிக் கொள்கிறார்கள். அச்சுட்டறிவு பொது உணர்விற்கே கேடு சூழ்கிறது. சுட்டி இடுக்கில் நுழைதல் கூடாது. இடுக்கு இடுக்கணுறுத்தல் இயல்பு. பரந்த பொது வெளியில் உலவ முயல்வதே அறிவுடைமை. அவ்வறிவு சிறப்பளிக்கும்.”


உடுக்கை மாறிய வள்ளுவன்

நவம்பர் 7, 2019

உடுக்கை மாறிய வள்ளுவனுக்கு வந்த இடுக்கண் களையக் களத்தில் இறங்காவிட்டால் அவருடனான நட்புக்கொன்றும் களங்கம் வந்துவிடாதுதான். தற்காத்துத் தன்னைப் பேணிக்கொள்ளும் தகைமை அவர் எழுத்துக்குண்டு. இருப்பினும்…

வள்ளுவன் இனிய உளவாக மட்டுமே கூறியவரில்லை. கடும்சொற்களையும் அவ்வப்போது அள்ளி வீசுவார். தன்னை வியந்து அணியும் சிறுமை கண்டு பொங்குவார்.

பேதைமை, புல்லறிவாண்மை, இகல், கயமை போன்ற அதிகாரங்களில் புகுந்து விளையாடியிருப்பார்.

‘மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்.’

என்று நக்கலாகவும் அதிரடித் தாக்குதல் நிகழ்த்துவார். முதலில் வள்ளுவனது வெண்தாடியைக் களைந்தால்தான் அவனைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும். மழித்தலா, நீட்டலா, பட்டையா, நெட்டையா என்பதெல்லாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். ஔவையும் பாட்டியல்லள், ஐயனும் கிழவனல்லன் என்பது என் துணிபு.

இந்த முகநூல் யுகத்துக்கு மிகவும் தேவையான அதிகாரங்கள் நட்பு குறித்தவை. நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீநட்பு, கூடாநட்பு என்று ஐந்து அதிகாரங்கள் எழுதியிருக்கிறார். படித்துப் பயன்பெறுங்கள். யாருடைய நட்பு அழைப்பை ஏற்கலாம், யாரைத் தொடர்வதை நிறுத்தவேண்டும் (unfollow), யாரை நட்புநீக்கம் செய்யவேண்டும் (unfriend), யாரை block செய்யவேண்டும், எவரிடம் அகலாது அணுகாது இருக்கவேண்டும் என்பதையெல்லாம் வள்ளுவனைப் படித்துத் தெளிவுறலாம்.

‘ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.’


கிரிக்கெட் பற்றிய காவியம்

செப்ரெம்பர் 2, 2008

C.L.R. James எழுதிய Beyond the Boundary படிக்க நேர்ந்தது. விளையாட்டினைக் குறித்து இவ்வளவு அழகாக, ஆழமாக எழுத முடியுமா என்ற வியப்பு எழுந்தது. ஏனோ, தமிழில் இத்தகைய முயற்சிகள் நடைபெறுவதில்லை. இந்திய ஆங்கில இதழ் எழுத்தாளர்களில்  ராமச்சந்திர குகா, நிர்மல் சேகர், ஆர்.மோகன், ப்ரேம் பணிக்கர் போன்றவர்களின் எழுத்துகளைப் பெரிதும் சுவைத்திருக்கிறேன். தமிழில் இவர்களுக்கு இணையான பெயர் இதுவரை இல்லை.

விளையாட்டுகளைக் கண்டு களிப்பதில் நமக்கு இருக்கிற ஆர்வம் ஏன் விளையாட்டு விமர்சன எழுத்தில் இல்லை? ஜேம்ஸின் இந்தப் பழைய புத்தகம் என்னுள் இந்தக் கேள்வியை எழுப்புகிறது. விளையாட்டை ஒரு கலையாக – ஓவியம், நாடகம், இசைக்கு இணையான கலையாக, நிறுவுகிறார் ஜேம்ஸ். அத்தோடு நிற்கவில்லை. கிரிக்கெட், இனவெறி, மனித உணர்வுகள், கலாச்சாரம், இலக்கியம் இவற்றிற்கெல்லாம் உள்ள நுண்ணிய இணைப்புகளைக் கண்டறிந்து வெளிச்சம் போடுகிறார்.

விளையாட்டை நாம் வெறும் விளையாட்டாக மட்டும் பார்ப்பதால் நம்மிடம் விளையாட்டு இலக்கியம் இல்லை; அதில் இழையோடுகிற மற்ற undercurrents நம் கண்ணில் படுவதில்லை; நாடகத்தை விடவும் விளையாட்டால் வாழ்க்கையை அதிக துல்லியமாய், நாம் எதிர்பாராத விதங்களில், சித்தரிக்க முடியும் என்பதை நாம் உணர்வதில்லை. விளையாட்டு வெற்றிகளும் அதனால் தான் குறைவோ? இத்தனை நாட்களில் ஒரே ஒரு அபிநவ் பிந்திரா. ஆனால் விளையாட்டு ரசனை, ஏன், வெறி கூட நம்முள் உண்டு. தமிழகத்தற்கென்று தனி விளையாட்டுக் கலாச்சாரம் உண்டோ இல்லையோ, தனி விளையாட்டு ரசனைக் கலாச்சாரம் உண்டு. சில ஆண்டுகளுக்குமுன், டெண்டுல்கர் தன்னுடைய முதுகு வலிக்கும், பாக்கிஸ்தானுக்கும் எதிராகத், தனியாய், ஓர் அசாத்தியப் போராட்டம் நடத்தி, இறுதியில் தோல்வியைத் தழுவிய பின் பாக்கிஸ்தான் அணிக்குக் கிடைத்த கரவொலி, மரியாதை, இந்தியாவில் வேறு எங்கும் நிகழ வாய்ப்பில்லை. இது – விளையாட்டு ரசனையில் மட்டுமல்ல – நமக்கென உள்ள தனி விருந்தோமல் மரபு.  விளையாட்டில் வள்ளுவன் தாக்கம். இதை இன்னும் ஆழமாய் அலச வேண்டும்.

விளையாட்டிற்கு இலக்கிய அங்கீகாரம் கிடைத்தால், இன்னும் நிறைய விளையாட்டு வெற்றிகளை நாம் குவிக்க முடியும். வாழ்க்கையை வேறு விதங்களில் அணுகிப் பழக முடியும்.