பழையன கழிதல்

நவம்பர் 10, 2011

‘அப்பா! இன்னிக்கு நீ பேசனும்’

கடந்த சில வாரங்களாய்

மகளைப் பள்ளியில்விடச்

செல்லும்போது தினமும்

கேட்கும் வாசகம்.

ப்ளேஃக்ரூப்பில் இருந்தவளை

​நர்சரி வகுப்புக்கு மாற்றியிருந்தோம்.

பழைய வகுப்புக்கே செல்லவேண்டுமாம்,

அதுகுறித்து ஆசிரியையிடம்

நான் பேசவேண்டுமாம்.

‘சரிடா! நான் பேசறேன்.

ஆனா நர்சரிலமாதிரி

ப்ளேஃக்ரூப்பில நிறைய விளையாட்டிருக்காது,

பரவால்லையா?’

‘பரவால்லப்பா, எனக்கு

ப்ளேஃக்ரூப்தான் பிடிக்கும்’

எப்போதும் போல் சரியென்றேன்.

கார் பள்ளியை நெருங்கியது.

‘அப்பா, இன்னிக்கு நீ பேசவேண்டாம்.

நான் குட்கேர்ளா அவங்க

எங்க அனுப்பறாங்களோ

அங்கயே போயிக்கிறேன்.’

​மறுநாள் காலை.

‘அப்பா! இன்னிக்கு நீ பேசனும்’


உதைத்தாலும் உதறினாலும்

ஜூலை 30, 2011

அவளுக்கென்று வாங்கிய
சிறுபோர்வை எடுத்துப்
போர்த்தி விடுகிறேன்.
நான் உறங்கி இமைமூடுமுன்
உதைத்தும் உருண்டும்
உதறிவிடுவாள் என்றறிவேன்.
ஆனாலும்
போர்த்தாமலிருக்கமுடிகிறதா?


திட்டு

ஜூன் 29, 2011

வீட்டுக்குள்

சைக்கில் ஓட்டும்போது

எச்சில் துப்பினாள்

புதிதாய் பள்ளிசெல்லத்

துவங்கியிருக்கும் மகள்.

“என்ன பழக்கமிது?”

கோபமும் செல்லமுமாய்

எப்போதையும்விடக் கடினமாய்க்

கடிந்து கொண்டேன்.

அலுவலக அலுப்பு.

பாவம்,வீறிட்டழுதாள்.

“அம்மா! அப்பா திட்றாங்க.

சைக்கில் ஓட்டறேன்னு…”


மகிழ்மலர் – ஓர் அரும்பெயரின் சிறுபயணம்

ஜூன் 20, 2011

‘மகிழ்மலர்’ என்று பெயர் வைத்ததென்னவோ வைத்துவிட்டோம். அவள் பிறந்தவுடன், ‘அவள்’ என்றறிந்தவுடன்.
பின் எத்தனை கேள்விக்குறிகள், ஆச்சர்யக் குறிகள்!
பெயர் கேட்டு நான் சொன்னவுடன், “oh, what else should I have expected from you”, என்றான் நீண்ட நாட்களுக்குப்பின் சந்தித்த தமிழ் நண்பன்.
பொருள் கேட்டு நான் சொன்னவுடன், அற்புதம் என்றனர் தமிழறியாத நிறைய நண்பர்கள்.
“ஏதோ சமஸ்கிருதச் சொல்லோடு ‘ழ’ சேர்த்து தமிழாக்கியாக்கியிருக்கிறார்கள்” என்று ஆணித்தரமாய் அடித்துச்சொன்னார் ஒரு மலையாள நண்பனின் தந்தை.
“After growing up, she is going to curse you for keeping such a complex name”, என்றனர் பெயரை உச்சரிக்கமுடியாத சில நண்பர்கள்.

இத்தனைக்கிடையிலும், ஆனந்தம் தருவன:

என் இரண்டரை வயது மகளிடமிருந்து வரும் இந்தச் சொற்கள்:
“My name is Mahirl Malar KN”.  (”zh’ என்பது ‘ழ்’ என்பது யாருக்குப் புரியும்?)

“உன்னை மகிழ்னு கூப்பிடலாமா, வேறபேரு வைச்சுக் கூப்பிடலாமா?”
என்ற கேள்விக்கு, அவள் கோபமாய்த்தரும் பதில்:
“இல்லம்மா! மகிழ்னே வைச்சுக்கலாம்”.

மலர் மலர் என்றழைத்துக்கொண்டிருந்த
அவளது பஞ்சாபித் தோழி,
(அவள் அன்னைக்கு வாயில் நுழையாததால்)
ஒரு நாள் நாவை மடித்து ‘மகிழ்’ என்றழைத்தபோது.

அவளது பள்ளிப்பையில் அவள் பெயருக்கருகில் smiley போட்டு மலர் போட்டதும்
அவளால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தபோது.

சமஸ்கிருத அகராதியில் மகிழ் என்ற சொல்லுக்கான வேர்கள் எதுவும் இல்லாததைக் கண்ட போது.


காற்றடைத்த பலூன்

ஏப்ரல் 20, 2011

என் மகளுக்கு பலூன் மிகப்பிடிக்கும்.

காற்று நிரப்பிப் பெரிதாய் ஊதிக்கொடுத்தேன்.

உருட்டியும், விரட்டியும், தாவியும் ஓடியும்

பரவசமாய் விளையாடினாள்.

பட்டென்று வெடித்தது.

வீலென்று கத்தினாள். ஓவென்று அழுதாள்.

சே! இப்படி ஏமாற்றமடைகிறாளே.

இனி இவளுக்கு பலூன் ஆசையே காட்டக்கூடாது.

கண்ணீர் காயுமுன் வேறென்னவோ வேடிக்கை.

ஓடிவிட்டாள்.

மறுநாளே,

அப்பா! எனக்கு பிங்க் பலூஊன் வேணும்.

ஆசையாய் ஓடிவந்தாள்.

மறுபடியும் வெடிக்கும். மறுபடியும் அழுவாய்.

இல்லப்பாஆ, வெடிக்காஆது.

வெடிச்சா,

நாளைக்கு யெல்லோஓ பலூஊன் ஊதிக்கலாம்.

​காற்று நிரப்பிப் பெரிதாய் ஊதிக்கொடுத்தேன்.

உருட்டியும், விரட்டியும், தாவியும் ஓடியும்

பரவசமாய் விளையாடுகிறாள்.


இந்த ஞானம் வந்தாற்பின் வேறெது வேண்டும்

பிப்ரவரி 1, 2011

தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ சிறுகதைத் தொகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

வெளியே ஏதோ சத்தம் கேட்கவும், என் மகளை எடுத்துக்கொண்டு பால்கனியிலிருந்து வேடிக்கைக் காண்பிக்கச் சென்றேன். குடியரசு தினப் போட்டிகள் நடந்துகொண்டிருந்தன. பெரியவர்களும் குழந்தைகளும் நடந்தும் ஓடியும் கலந்துகொண்டிருந்தனர்.

“மகிழ்குட்டி! யாருடா ஜெயிப்பாங்க, அஜினி அக்காவா, ராதிகா அக்காவா? யாரு ஜெயிப்பாங்க?’ என்றேன்.

“எல்லாரும் ஜெயிப்பாங்க அப்பா” என்றாள். “அஜினி அக்கா, ராதிகா அக்கா, ஸ்ருதி அக்கா, ஜான்வி அக்கா எல்லாரும் ஜெயிப்பாங்க’.

இவளுக்கு நான் இனி என்ன சொல்லித்தருவது? இதெல்லாம் இரண்டு வயதில் தெரியக்கூடாது,  இன்னும் அறுபது ஆண்டுகள் ஆகவேண்டும் என்றா? பள்ளிக்குச் சென்று பாடம் கற்கத்தான் வேண்டுமா? அழகிய வெள்ளைத்தாளில் கறுப்புப் பென்சில் கிறுக்கப்போகிறது.

பின் தலைப்புக் கதை படித்தபோது,  சிலிர்த்தது.


முத்த மறுப்பு

ஜூலை 12, 2010

மெத்த மகிழ்ச்சியுற்றேன் –

அலுவலகம் செல்லும்முன்

முத்தமொன்று கேட்டு, அவள்

முடியாதென்ற போது.

வாயில் கைவைத்து,

அப்பா தயிர் என்றாள்,

வெண்திட்டாய்ப் படிந்திருந்த

உணவின் மிச்சத்தை.