மகள் மகிழ்மலர் ஒரு திருவாசகப் பதிகம் பாடிக்கொண்டிருந்தாள். பெரும்பாலான திருவாசகப் பாடல்களை மோகனத்தில்தான் (முல்லைப்பண்) பாடுவார்கள். இப்பாடல் அவளுக்குப் புதிய ராகமான ஹம்சநாதத்தில் அமைந்துள்ளது.
போற்றிஎன் போலும் பொய்யர்
தம்மைஆட் கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
நாதனே போற்றிபோற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
புதுமதுப் புவனம் நீர்தீக்
காற்று இயமானன் வானம்
இருசுடர்க் கடவு ளானே
(திருவாசகம் – திருச்சதகம், 7: 62-63)
இதில் வந்த இயமானன் என்ற சொல் அடிக்கடி கேட்டுப் பழகியதென்றாலும் வேறு எங்கு வருகிறது என்பது உடனே இருவருக்கும் பிடிபடவில்லை. சிறிது ஆராய்ச்சிக்குப்பின் திருவாசகத்திலேயே சிவபுராணத்திலும் ‘வெய்யாய்! தணியாய்! இயமானனாம் விமலா’ என்ற வரி உண்டு என்பது நினைவுக்கு வந்தது. ‘பொய்யாயின வெல்லாம் போயகல வந்தருளி,’ என்று மகிழ் பாடலைத் தொடர்ந்தாள். [பாடும்போது ஏனோ இயம்+ஆன+நாம் என்று பிரித்து மனதில் பதித்திருந்ததால் சட்டென்று நினைவு வரவில்லை என்றாள்.]
இச்சொல்லுக்குப் பொருள் தேடிச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக்குச் சென்ற போது, அதற்கு ஆன்மா, உயிர், யாகத்தலைவன் ஆகிய பொருள்கள் தரப்பட்டிருந்தன. இயமானனாம் விமலா என்று தொடரில் இச்சொல்லுக்கு யாகத்தலைவன் என்ற பொருளைப் பேரகராதியில் தருகிறார்கள். பேரகராதியில் இயமானனுக்கு வேர்ச்சொல் வடமொழியின் எஜமான என்றும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் எஜமானவின் வேர்ச்சொல் இயமானன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு பதிகங்களுக்கும் thevaaram.org பொழிப்புரையில் இயமாமனுக்கு ஆன்மா என்ற பொருளையே கொண்டுள்ளனர்.
பேரகராதியில் மணிமேகலையிலுள்ள ஒரு சொற்றொடரும் சுட்டப்பட்டிருக்கவே, கைவசமிருந்த மணிமேகலை நூலில் தேடியதில் ஒரு நெருங்கிய தொடர்பு தென்பட்டது.
இறைவன் ஈசனென
நின்ற சைவ வாதிநேர் படுதலும்
‘பரசும்நின் தெய்வம் எப்படித்து?’ என்ன –
இருசுடரோடு இயமானன் ஐம்பூத மென்று
எட்டு வகையும், உயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனும்….
(மணிமேகலை; 27: 89).
சாத்தனாரின் சொல்லாட்சியான ’இருசுடரொடு இயமானன்’ திருவாசகத்திலும் அதே சூழலில் எடுத்தாளப்பட்டுள்ளது – ‘காற்று இயமானன் வானம் இருசுடர்க் கடவு ளானே’. இயமானன், இருசுடரான சூரியன், சந்திரன், ஐம்பூதங்கள் ஆகிய எட்டு மூர்த்திகளாக உள்ளாய் என்பதே இதில் பொதிந்துள்ள கருத்து.
‘நின் கருணை வெள்ளப் புதுமது’ என்ற உவமையும் அதன் சொற்சுவையும் சொக்கவைக்கின்றன.
திருமுறையின் பிற இடங்களிலும் இயமானன் இதே சூழலில் பயன்படுத்தப்படுகிறது. சைவத்தில் இது முக்கியமானதொரு கருத்தாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மணிமேகலையில் சைவவாதியின் கூற்றாகவே இது வருதலால் அதற்கு முந்தைய நூல்களிலும் இச்சொற்சேர்க்கை வந்திருக்கக்கூடும்.
அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல் காற் றாவான் – அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.
(காரைக்கால் அம்மையார், 11ம் திருமுறை: 004 அற்புதத் திருவந்தாதி பாடல் 21)
தேவார மூவருக்கும் முன்னே இருந்த காரைக்கால் அம்மையாரின் காலம் மணிமேகலைக்கு முந்தையதாக இருக்ககூடும். (தேவாரம் இணையதளத்தில் வி. சா. குருசாமி தேசிகர், ஞானசம்பந்தர் காரைக்கால் அம்மையாரைப் பாடியிருப்பதைச் சுட்டி, இவரது காலம் ‘கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்’ என்கிறார். மணிமேகலை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.)
அப்பர், சுந்ததரர் ஆகியோரும் ஒருவரையொருவர் விஞ்சும் அழகான பாடல்களில் இயமானனைக் கையாண்டுள்ளனர்.
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே
.
(திருநாவுக்கரசர் தேவாரம், ஆறாம் திருமுறை, 94: பாடல் 1)
தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்
சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே
(சுந்தரர் தேவாரம், ஏழாம் திருமுறை, 9:பாடல் 3)
சுந்தரர் ஞாயிற்றுக்கு சவிதா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும் முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை’ என்பது எத்தனை எழில்மிகு வரிகள். [கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும், ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து, கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரை]
எமக்கெம் பெரும
இருநிலந் தீநீர் இயமானன் காலெனும்
பெருநிலைத் தாண்டவம் பெருமாற் கிலாதலின்
(அருணந்தி சிவாசாரியார், மூன்றாம் திருநெறி, பதிகம் 3-இருபா இருபது 2:14-15)
ஒரு சொல்லுக்குப் பின்னான பயணத்துக்குப்பின்னர், மகிழ்மலர் நன்கறிந்த நாஞ்சில் நாடன் போன்ற அறிஞர்கள் ஒவ்வொரு சொல்லைத் தேடியும் எத்தனை முனைப்புடன் உழைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள தமிழினியில் ‘யானைபோம் வழியில் வாலும் போம்’ என்ற கட்டுரையைப் படிக்கக் கொடுத்தேன். நாஞ்சில் நாடன் பெரிதும் அச்சுப்பிரதிகளைச் சார்ந்திருப்பவர். விசைப்பலகையின் ஒற்றைத் தட்டில் நமக்குப் பல செய்திகள் இணையத்திலிருந்து வந்துவிழுகின்றன. அச்சுப்பிரதிகள்கூட இல்லாத காலத்தில் நிகண்டுகளையும் அகராதிகளையும் தொகுத்தவர்களை நினைக்க மலைப்பாகத்தான் இருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்த இளையராஜாவின் பாடல்களில் ஒன்றான ‘இசையில் தொடங்குதம்மா’வும் ஹம்சநாதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதாம். தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன் என்ற அப்பரின் சொற்றொடரும் மனதில் எழுந்தது.