(4-அக்டோபர்-2019)
ஆண்டுதோறும், மாற்றுக்கல்வி சார்ந்து செயல்பட்டுவரும் சில நண்பர்கள் கூடிவருகிறார்கள். அதில் எப்படியோ எங்கள்மீதுள்ள பிரியத்தால் எங்களையும் சேர்த்துக்கொண்டார்கள். சென்ற வாரம் நாகப்பட்டினம் சிக்கல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ‘வானவில்’ பள்ளியில் சந்தித்தோம். மூன்று நாட்கள் பள்ளியிலேயே தங்கியிருந்தேன்.
வானவில் பள்ளியைத் தொடங்கியவர் பிரேமா ரேவதி. இவர், சுனாமியின் பேரழிவுக்குப் பின் அங்கு மீட்புப்பணிகளுக்காகச் சென்றபோது அங்கு மிகவும் பாதிக்கப்பட்டிருந்த பிச்சையெடுக்கும் நாடோடிச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளோடு ஒரு குடிசையில் பணியாற்றத் தொடங்கினார். அது இன்று விரிவடைந்து ஓர் அழகான ஆரம்பப் பள்ளியாக வளர்ந்துள்ளது. அங்கேயே குழந்தைகள் தங்குவதற்கு விடுதியும் உணவும் அளிக்கப்படுகிறது. உயர் வகுப்புகளுக்குச் செல்லும் குழந்தைக்களுக்கும் இவர்கள் தொடர்ந்து உதவி வருகிறார்கள். தரமான கல்வியை, குழந்தைகளை மையப்படுத்தும் நவீன முறைகளில் வழங்கிவருகிறார்கள்.
பிரேமா ரேவதி-நடராஜன் இணையர் இப்பள்ளியைத் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். அடித்தட்டுக் குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்குக் கல்வியின் மீது நாட்டம் ஏற்படுத்தும் வகையில் பயிற்றுவிக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, பெற்றோர்களோடு தொடர்ந்து உரையாடுகிறார்கள். அவர்கள் ஒரு சமூகமாக இணைந்து வலுப்பெறவும் உதவுகிறார்கள். குழந்தைகள் மூலம் வரக்கூடிய வருமானத்தைத் துறந்து அவர்களைப் பள்ளிக்குச் செல்லப் பெற்றோர்களை அனுமதிக்கச் செய்வது பெரிய சவால்.
இப்பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் பேசுவதைக் கேட்டோம். அவர்கள் அனைவருமே பள்ளிகளில் மழைக்குக்கூட ஒதுங்கியதில்லையென்றும், பள்ளிகளின் நிழலைக்கூட மிதித்ததில்லை என்றுமே கூறினர். ஆனால். இன்றைக்கு அவர்களது குழந்தைகள் பலர் பட்டதாரிகளாகி வேறு பணிகளுக்குச் சென்றுள்ளனர்.
பிரேமா ரேவதி திரைப்படங்களில் துணை இயக்குனராக இருந்தவர்; எழுத்தாளர். அருந்ததி ராய் எழுதிய அறிமுகத்துடன் வந்த அம்பேத்கரின் சாதியை அழித்தொழித்தல், அம்பேத்கர் அருகிருந்து ஆகிய புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நடராஜன் ஒரு சிற்பி; ஓவியர். ஆரம்பத்தில் சென்னையில் இருந்து அடிக்கடி பயணித்தவாறு செயல்பட்டுவந்தவர்கள், பின்னர் நாகப்பட்டினத்துக்கே குடிபெயர்ந்துவிட்டனர். இருவருக்கும் அம்பேத்கர் பெரும் உந்துதலாக இருக்கிறார். நாங்கள் காந்தி குறித்துப் பலவாறு முரண்பட்டு விவாதித்துள்ளோம். ஆனால், ஓர் அரிய அர்ப்பணிப்புடனும் மனிதநேயத்துடனும் செய்யப்படும் களப்பணியைக் கண்டு வியப்பதற்கு எந்த முரண்களும் தடையாக வருவதில்லை.
வெள்ளம், புயல் என்று பல பேரிடர்களின் போது பலரும் தம்மால் இயன்றதைச் செய்கிறார்கள். ஆனால், இப்படியொரு நிரந்தர அமைப்பை ஏற்படுத்தி அங்கேயே தங்கி, நீண்டகால நோக்கில் பணிசெய்பவர்கள் அரிதிலும் அரிதானவர்கள். இம்முறை கஜா புயலின்போதும் ஒருங்கிணைப்புப் பணிகளில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியமானது.
இப்படியொரு பள்ளியை நடத்த, அரசாங்கத்தோடு, பெற்றோர்களோடு, உள்ளூர் மக்களோடு என்று பல்முனைப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். மிகுந்த பணத்தேவை இருக்கும். நினைத்துப்பார்க்க முடியாத பொறுமை தேவைப்படும்.
கடைசி நாளன்று பதினொன்றாவது படிக்கும் ஒரு சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவள் அங்கேதான் தங்கியிருக்கிறாளா என்று கேட்டேன். மேல் வகுப்புக்குச் சென்றுவிட்டதால், வேறு விடுதியில் தங்கி அரசுப்பள்ளியில் படிப்தாகவும், விடுமுறை விட்டால் இங்கு வந்துவிடுவதாகவும் சொன்னாள். ‘இது எனக்குத் தாய்வீடு மாதிரி’ என்றாள். இதுமாதிரி ஒரு குழந்தையேனும் நம்மைப்பற்றி நினைத்துவிட்டால், வாழ்வில் வேறென்ன வேண்டும்.