மார்கழித் திங்கள் குளிர்குறை இந்நாள்

ஜனவரி 17, 2020

(2-ஜனவரி-2020)

மார்கழி மாதத்தின் இருள்விலகாத அதிகாலையில் வியர்த்துப்போய் எழுந்தேன். கொடுங்கனவொன்றும் கண்டுவிடவில்லை. புழுக்கமாக இருந்தது. எழுந்து வெளியே சென்றேன். விண்மீன்களைப் பார்த்தபடி திரும்பும்போது மூன்றடி முன்னால் ஒரு கட்டுவிரியன் நெளிந்து சென்று ஒரு மூலையில் ஒடுங்கியது. அதன்மீது மின்பந்தத்தின் ஒளிபாய்ச்சி ஒரு பாதுகாப்பான தூரத்துக்கு வழியனுப்பிவிட்டு வந்து மின்விசிறியைச் சுழலவிட்டுப் படுத்தேன்.

அந்நாளின் இறுதியில் இரவு எட்டு மணிக்குமேல் மகள் தலை நீராடி மீதம் வைத்த அரப்புப்போட்டுக் குளிர்ந்த நீரில் குளித்தேன். சற்றும் நடுங்கவில்லை. எப்போதும் தண்ணீரில் குளிப்பது வழக்கம்தானெனினும், நாற்பதைக் கடந்தபின் வரும் முன்பனிக்காலங்களில் குளியலறையில் கனன்றுகொண்டிருக்கும் கொதிகலனின் வெந்நீர் சபலத்தைக் கிளப்பும். ஒன்றிரண்டு போசி வெந்நீர் எடுத்துவிடவைக்கும். ஆனால் இவ்வாண்டு அச்சபலம் எட்டிப்பார்க்கவில்லை. நாங்கள் இக்கிராமத்துக்கு வந்தபின், கடந்த ஐந்து வருடங்களில் மார்கழி மாதம் இந்த அளவுக்கு குளிரும் பனியும் அற்றிருந்ததில்லை. ஓட்டுவீட்டில் கசிந்திறங்கும் குளிர் தாளாமல் கம்பளியும் சுவெட்டரும் குல்லாவும் முதல் ஆட்களாய் அணிந்துவிடும் மனைவியும் மகளும், இன்னும் அவற்றை வெளியில் கூட எடுக்கவில்லை.

“மார்கழி மாசம் ஃபேனே போடமுடியாது. இத்தனை உப்புசமா இருந்ததே இல்லை. திண்ணைக்கு வரலாம்னா கொசு ஜாஸ்தியா இருக்கு. க்ளைமேட் ரொம்பத்தான் மாறிப்போச்சு,” என்றார் பக்கத்துவீட்டுப் பாட்டி.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலையாவதுபோல் ஆறு காலங்களும் தம்மியல்பு இழந்து திரிவதற்கு ஏதேனும் பெயர் உண்டா? பருவச்சூழல் நெருக்கடிநிலையின் வெளிப்பாடுதானா இது?
பொள்ளாச்சியின் ஒற்றை கிராமத்தின் ஒற்றைத் திங்களைக் கொண்டு பூமி வெப்பமடைந்துவிட்டதாக உறுதிப்படுத்திவிடமுடியாதுதான். எனினும் அடுத்த பத்தாண்டுகளில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நாம் நம் அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான உலகை விட்டுச்செல்கிறோம் என்பதை முடிவு செய்யும். இதுவே நம் காலத்தின் மிக முக்கியமான அக்கறையாக இருக்கவேண்டும். ஆனால் நம் கவனத்தைக் கட்டுவிரியன்கள் களவாடிக்கொண்டிருக்கின்றன.