கழிப்பறை முதல் காற்றாலை வரை – டென்மார்க் பசுமைப் பாடம்

ஓகஸ்ட் 12, 2008

பசுமை நிறைந்த எதிர்காலம் குறித்த என் முந்தைய பதிப்பை எழுதியதும் தான் தெரிந்தது, என் ஏக்கம் ஏற்கனவே டென்மார்க் மக்களால் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட்டிருக்கிறது.

எரிபொருள் தட்டுப்பாட்டினை எவ்வளவு ஆக்கப்பூர்வமாய் அணுக முடியும் என்பதற்கு அழகிய எடுத்துக்காட்டு டென்மார்க். பற்றாக்குறையை, வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாக அவர்கள் மாற்றிய விதம் வியக்கவைக்கிறது. காற்றாலை இயந்திரங்களின் ஏற்றுமதி இன்று டென்மார்க் பொருளாதார வளத்தின் அடித்தளங்களில் ஒன்று. நகரங்களின் குப்பைகளைக்கூட ஓரிடத்தில் குவித்து எரிபொருளாக்கி மின்சாராமாக்குகிறார்கள்.

நாம் பின்பற்ற வேண்டிய பாதை இதுதான் என்று திண்ணமாய்த் தெரிகிறது. ‘World is Flat’ புகழ் தாமஸ் ஃபரைட்மேன் (Thomas Friedman)  இதை அழகாய் விளக்கியிருக்கிறார். பெட்ரோல் மாதிரி எரிபொருள்களின் விலையை இன்னும் உயர்த்துவதன் மூலம் தான், அவற்றின் ஆதிக்கத்திலிருந்து மீளமுடியும் என்று ஒலிக்கற, டென்மார்க் பிரதமரின் எதிர்மறைக் கருத்து ஆழமானது. Two-gear toilet பற்றி நான் அடிக்கடி சிந்தித்ததுண்டு – மணிக்கணக்காய் குடத்தை இடுப்பிலேந்தி நடந்து நீர் எடுக்கிற பெண்களின் நினைவு மேலோங்க, கழிப்பிடத்தில் நாம் எவ்வளவு நீரை விரையப்படுத்துகிறோம் என்கிற குற்ற உணர்வோடு.

ஒரு புறம் அணு ஒப்பந்தத்தையும், டாடா நேனோவையும் வேறு காரணங்களுக்காக நான் வரவேற்றாலும் கூட, அவை இல்லாமலே போனால், ஓர் அதிர்ச்சி வைத்தியமாகி அது நம்மை உலுக்கி எழுப்புமோ; வளர்ந்த உலகின் உலுத்துப்போன பழைய பாதையை விட்டு விலகி, புத்தம் புதிய பாதை அமைக்க உந்துதலாகுமோ என்று தோன்றுகிறது. 

உலகம் விரைவாக விழித்துக்கொண்டிருக்கிறது. நம் வாய்ப்பு நாம் கைப்பற்றும் வரை காத்திருக்கப் போவதில்லை.


பசுமை நிறைந்த எதிர்காலம்

ஓகஸ்ட் 4, 2008

Go green என்று உலகம் சொல்லளவில் நின்று தவித்துக்கொண்டிருக்கையில், இந்தியா ஏன் பசுமையை அரவணைக்கக் கூடாது என்று உலகுக்கு நியாயப் படுத்திக்கொண்டிருக்கையில், நம் முன் எழுவது நாளை உலகம் எப்படி பாதுகாக்கப்படும் என்கிற மலைப்பு. அந்த மலைப்பையும், தவிப்பையும் தள்ளிவைத்து ஆராய்ந்தால் கண்முன் விரிவது ஒரு மாபெரும் வாய்ப்பு.

 நீராவியின் உந்துதலில் வளர்ந்தது ஐரோப்பா. பெட்ரோல் இயந்திரங்களின் உந்துதலில் வளர்ந்தன அமெரிக்கா, ஜப்பான், வளைகுடா. நம் முன் அப்படியொரு வாய்ப்பு இப்போது கிடக்கிறது.

உலகப் பொருளாதரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை, தலைமை நிலையை நிர்ணயிக்கப்போவது ‘பசுமை’ தொழில்நுட்பங்கள். நிலக்கரியோ, பெட்ரோலோ, அணுசக்தியோ பெருமளவு நம்மிடம் இல்லாத இயற்கைவளங்கள். ஆனால் பசுமைத் தொழில்நுட்பங்கள் இயற்கை வளங்களை அழிக்காமல் உருவாக வேண்டியவை என்கிற காரணத்தாலேயே, ஒளியையும், காற்றையும் இதுவரை பயன்படுத்தாத இன்னபிறவற்றையும் கட்டுப்படுத்தத் தெரிந்த எவர் வேண்டுமானாலும் இத்துறைகளில் முன்னேறலாம். நாமும் தான்.

இத்துறைகளில் வளர்ந்த நாடுகள் இன்னமும் பெருவளர்ச்சி அடையவில்லை. பெருமளவு பணம் இன்னும் முதலீடு செய்யப்படவில்லை. ஓரளவு எல்லோரும் சம அளவு வளர்ச்சி(யின்மை)யில் தான் இருக்கிறோம். யார் முதலடி எடுப்பது என்று போராடிக்கொண்டிருக்கற மற்றவர்களுக்கு முன்னர் நம் முழுக் கவனமும் இங்கே திரும்பினால், நாளை உலகம் நமது கைகளில்.

பசுமையான கனவுகள் கண்டுதான் பார்ப்போமே. அணுசக்தித் தீண்டாமையிலிருந்து மீளப்போகிறோம். உலகிலேயே மலிவான பெட்ரோல் வாகனங்கள் செய்ய முயற்சித்து ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டோம்.  இவற்றோடு, அல்லது இவற்றிற்குப் பதிலாக, உலகிலேயே மலிவான (சூரியஒளி மாதிரி) மாற்றுசக்தி வாகனங்கள் செய்து பார்ப்போமே! மாற்று முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்து பார்ப்போமே. வெற்றிபெற்றால் உலகம் நம்மைப் பின்பற்றும். இதைவிடப் பெரிய பொருளாதார வாய்ப்பு நமக்குக் கிட்டாது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்கா இருந்த நிலையில் இன்று நாம் நிற்க முடியும் – அரசும், தனியார் நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் முனைப்போடு மனம் வைத்தால். 21ம் நூற்றாண்டின் ஹென்றி ஃபோர்ட் நம்மிடையே எங்கோ உலவிக்கொண்டிருக்கக்கூடும்; அவரை வளர விடுவோம்.