தமிழன் அசாத்திய பொறுமைசாலி

ஜனவரி 10, 2008

எழுபது ஆண்டுகளாய் சினிமாவாலும், பத்திரிக்கைகளாலும் நிகழ்த்தமுடிந்த கலாச்சார, சிந்தனைச் சீர்கேட்டைவிட பன்மடங்கு அதிகமாய் தொலைக்காட்சியால் முடிந்திருக்கிறது. கலாச்சார, சமுதாய மாற்றங்களுக்கு எதிரானவனல்ல நான். ஆனால் மாற்றம் முன்னோக்கி நிகழவேண்டுமேயன்றி பின்னோக்கியல்ல.

சினிமா பார்த்து இளைஞர்கள் கெட்டுப்போவார்கள் என்று பெற்றோர்கள் வருந்திய காலம் மாறி, தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து பெரியவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ என்று இளைஞர்கள் பொறுமுகிற காலம் வந்துவிட்டது. இந்த நீள்தொடர்கள் சமுதாயத்தில் விதைக்கிற வக்கிரத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எப்படி இவ்வளவு கீழ்த்தரமான வசனங்களையும், கதாபாத்திரங்களையும், காட்சியமைப்புகளையும் நம்மவர்களால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. இதுவும் ஒருவித போதைப்பொருளாகவே எனக்குத் தென்படுகிறது.

ஒரு புறம் சிந்தனைச் சீர்கேடு என்றால் மறுபுறம் மொழிச் சீர்குலைப்பு.  அரசுத் தொலைக்காட்சி மட்டுமே இருந்தபோது தமிழை வளர்க்க, வளரவிட மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினோம். இன்று தமிழ் தொலைக்காட்சியில் தமிழை வலைவீசித் தேடவேண்டியுள்ளது. தமிழே பேசத் தெரியாதவர்களை நடிக்கவைத்தார்கள், ஏற்றுக்கொண்டோம் – பின்னனி பேசியவருக்காவது தமிழ் தெரிந்தது என்பதால். ஆனால் தமிழே தெரியாதவர்களை நிகழ்ச்சித் தொகுப்பாளராய் நியமிப்பது குதர்க்கமானது. நம் அறிவை அவமதிக்கற செயல்.

சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.